மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தமிழரசுக் கட்சித் தலைவர்களுள் ஒருவர் வன்னியசிங்கம். தமிழ்நாட்டு ஆதரவு ஈழத் தமிழருக்கு அவசியம் எனக் கருதினார். மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதனைச் சென்னைக்கு அனுப்பினார்.

1950களின் பிற்பகுதியில் பத்மநாதன் சென்னையில் தங்கியிருந்தார். கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். காமராசர் முதலமைச்சர். எதிர்க் கட்சியாகத் திமுக. அக்காலத்தில் சிதம்பரத்தில் திமுக மாநாட்டுத் தீர்மானம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வந்தது.

இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தில்லியில் தீர்மானிக்கிறார்கள். அது மாநில அதிகாரத்துள் இல்லை. தில்லிக்குச் செல்லுங்கள் என்றார் காமராசர்.
அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், மூதறிஞர் இராசாசி, பொதுவுடைமைக் கட்சி சீவானந்தம், மபொசி ஆகிய தலைவர்களை அடிக்கடி சந்தித்தபொழுது அவர்கள் ஆதரவுடன் பேசினார்கள். அறிக்கைகள் வெளியிட்டார்கள். ஐநா தலையிட்டுத் தீர்மானிக்கவேண்டும் என இராசாசி அப்பொழுது எழுதினார்.
இங்கிருந்து போனவர்கள் அங்கே போய் உரிமைகளைக் கேட்பதா? விட்டுக்கொடுத்துப் போங்கள் எனச் சொன்ன மபொசி போன்றவர்களும் உண்டு. பொதுமக்கள் பலரின் கருத்தும் அவ்வாறிருந்தது.

கூட்டாட்சி அமைப்புக்குள் சிங்களவரோடு இணைந்து வாழ்தல், மலையகத் தமிழருக்குக் குடியுரிமை என்பன அக்கால இலங்கைத் தமிழரின் கோரிக்கைகள்.

1952, 1956, 1958, 1961 எனத் தொடர்ச்சியாக அலை, அலையாகச் சிங்களத் தாக்குதல்கள் தமிழர் மீது நிகழ்ந்தபொழுது, அறவழியில் அத்தாக்குதல்களை ஈழத் தமிழர் எதிர்கொண்ட காலங்களில் தமிழகம் தில்லிக்கும் ஐநாவுக்கும் கைகாட்டியதே அன்றி, தாமாக ஈழத் தமிழர் சிக்கலையோ, மலையகத் தமிழர் சிக்கலையோ தீர்க்கும் கருத்தோட்டத்தைத் தமிழகத்தின் கருத்தோட்டமாகக் கொள்ளவில்லை.

1961 அறப்போர் ஈழத் தமிழர் தாயகத்தில் நடந்த காலங்களில் தமிழகத்தில் திமுகவின் தூத்துக்குடித் தீர்மானம் வந்தது. அறிஞர் அண்ணா தலைமையில் மரீனாக் கடற்கரையில் ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டச் செலவை ஏற்றவர்கள் அக்காலத்தில் சென்னையில் படித்த ஈழத் தமிழ் மாணவர்.

1964இல் காமராசர் தெரிவில் வந்த பிரதமர் சாத்திரியார் நான்கரை இலட்சம் மலையகத் தமிழரை அவர்கள் ஒப்புதல் கேட்காமலே இந்தியாவுக்கு நாடுகடத்த ஒப்பியபொழுது, தமிழகம் வாளாவிருந்தது. அந்த உடன்பாட்டில் கையொப்பமிடச் சென்னை வழி தில்லி சென்ற பிரதமர் சிறீமாவோவுக்குச் சென்னை விமான நிலையத்தில் கறுப்புக் கொடி காட்டியோரில் பெரும்பான்மையினர் சென்னையில் படித்துக் கொண்டிருந்த ஈழத் தமிழ் மாணவர்.

1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் தமிழகத்தில் எவ்வித உணர்வலைகளையும் உசுப்பவில்லை. அடிமைகளான நாங்கள் உங்களுக்காக அழத்தான் முடியும் எனத் தந்தை பெரியார் தன்னைச் சந்திக்க 1970களின் தொடக்கங்களில் சென்னையில் தந்தை செல்வநாயகத்திடம் கூறினார்.

1977 ஆவணியில் இலங்கைத் தீவெங்கும் தமிழர் மீது தாக்குதலால் உயிர்கள் பலியாகின, வீடுகள் எரிந்தன. வணிக நிறுவனங்கள் சிதைந்தன. திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் சிங்கள எதிர்ப்பலைகள். பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், முழக்கங்கள். சட்டசபை, மக்களவை உரைவீச்சுகள். தில்லியை உசுப்ப அதற்குமேல் எதையும் செய்யவில்லை.

1981இல் யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழர் மீதான தாக்குதல்கள், தமிழகத்தில் ஒருசில உணர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழகப் பதிப்பாளர்களின் 30% விற்பனைக் களமாக இலங்கை இருந்த காலத்தில், தமிழகம் மனம் கொண்டிருப்பின் ஒரே ஆண்டில் அந்நூலகத்தைப் புதுப்பித்திருக்கலாம். எரிந்தது தமிழ் அல்லவா?

1983 இல் இலங்கை முழுவதும் தமிழர் பலியாகி, சொத்திழந்து, ஏதிலிகளாகிய நிலையில் தமிழகம் விழித்தது. செயவர்த்தானா கொடும்பாவியானார். அக்காலத்தில் தமிழகம் கொண்ட கோலம், தமிழீழத்தை இந்தியா ஏற்குமளவு மனோநிலை கொண்டது.

பிரதமரான இந்திரா காந்தியிடம் தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தும் நிலையில் தமிழகம் இருந்தது. அனுதாப அலைகள், ஆதரவு நிலைகள், அன்புப் பகிரல்கள், சிங்கள எதிர்ப்புணர்வுகள் மட்டுமே எஞ்சின.

  இலங்கையில் மலையகத் தமிழருக்கு வாக்குரிமை, ஈழத் தமிழர் தாயகத்தில் சுயாட்சி அல்லது தனி ஆட்சி எனத் தமிழகம் வலியுறுத்தி இருந்தால், தில்லியில் இந்திரா காந்தியும் நரசிம்மராவும் கொழும்பைக் கடுமையாக வலியுறுத்தி இருப்பர். இந்திரா காந்தியால் அரசியல் தீர்வுக்கு உந்தியிருக்க முடியும். அந்த ஒரே ஒரு வாய்ப்பும் தவறியது.

 1984, 1985 1986 கொடுமைகள் ஈழத்தமிழரை உலகெங்கும் விரட்டின. தமிழகம் விழிப்பாயிருந்தும், தில்லி தீவிரமாக முயன்றும் ஈழத் தமிழரின் கண்ணோட்டங்களால் அரசியல் சறுக்கல்களே மிஞ்சின.

1991 தொடக்கம் தமிழகச் சட்டசபைத் தீர்மானங்கள், தமிழக உளப்பாங்கைக் காட்டின. 1994 தொடக்கம் 2009 தமிழகக் கண்ணோட்டம், தேர்தலில் வாக்களிக்கும் போக்கு யாவும் ஈழத் தமிழரின் நலனைக் கண்கொண்டவையல்ல. ஈழத்தமிழர் இழப்புகள் கவனத்தில் வரவில்லை.

2009 மே மாத மக்களவைத் தேர்தல் முடிவுகள், ஈழத் தமிழர் சுடலையை நோக்கிய காலத்தவை. தேர்தல் முடிந்தபின் 2009 மே 19க்குப்பின், தமிழகம் கொண்டிருக்கும் கண்ணோட்டம் சுடலை ஞானமே.

எஞ்சியிருக்கும் ஈழத்தமிழரின் பாதுகாப்பும் எதிர்காலமும் தமிழகத்தின் கண்ணோட்டமாகவேண்டும். பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பவர்கள், பாதுகாப்பாற்ற மக்களை மேலும் பாதுகாப்பற்றவராக்கலாமா?

1948,1952, 1956, 1958, 1961, 1964, 1972, 1974, 1977, 1981, 1983, 1986, 1995, 1999 எனத் தொடர்ச்சியான இழப்புகள். இலங்கைத் தமிழருக்குக் கடும் இழப்புகள். இந்த இழப்புகளையெல்லாம் தாங்கி, உரிமைகளை மீட்டெடுக்க விடாது முயற்சி செய்த மலையகத் தமிழர், ஈழத் தமிழர் 2009க்குப் பின் சோர்ந்துளர். மேலும் இழப்பைத் தவிர்க்கும் முயற்சியில் உளர்.

மலையகத்திலும் ஈழத்திலும் உள்ள பொது மக்கள் அமைப்பாகில் என், அரசியல் கட்சிகளாயில் என், ஒருமித்த கருத்துணர்வுடன் விடிவை நோக்கிக் காத்திருக்கின்றனர். மேலும் சுடலைகளைக் காண விழையாதவர்.

இந்தியத் துடுப்பெடுத்தாடும் அணி இலங்கையை வென்ற நாளில் மலையகத் தமிழர் தாக்குதலுக்காயினர். காப்பதற்குத் தமிழகம் திரளவில்லை, குரல் கேட்கவில்லை, இந்திய அரசு வாளாவிருந்தது. தம் துடுப்பணியின் தோல்வியே தமிழரைத் தாக்கக் காரணமாயின், தமிழகத்தின் சிங்கள எதிர்ப்பலை மலையகத் தமிழரைப் பகடைக் காயாக்கும். ஈழத்தமிழர் மாயமாய் மறைந்துவிடுவர், காத்திருக்கிறார்கள், மறக்காதீர்கள்.

தமிழகத்தின் சிங்கள எதிர்ப்பலைகள் மலையக மற்றும் ஈழத்தமிழரின் பாதுகாப்புக்குக் குந்தகமானவை. மோதல் போக்கு அரசியாலால் பாதுகாப்புக்குக் குந்தகம் என ஈழத்து, மலையகத்து அரசியல் கட்சித் தலைமைகள் தத்தம் வாக்கு வங்கியை, ஆதரவாளரை, மையமாக வைத்துக் கருத்துரைக்கின்றன. சுடலை ஞானத்தார் கவனத்தில் கொள்வார்களாக.

படத்திற்கு நன்றி :

http://www.srilanka.com/photogallery/pgenlargedimage.php?id=PL00041&catid=PC00007

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *