தமிழ்க் கவிதைப் பரம்பரையில் தலை நிற்கும் புதுவயல் செல்லப்பனார்
முனைவர் மு. பழனியப்பன்
பரம்பரைச் சொத்து என்பது வெறும் பணம், காசு, வீடு, காடு, நிலம் என்பது மட்டுமல்ல. தமிழும், தமிழ்ப்பணியும் நிலையான பரம்பரைச் சொத்து என்றால் அது மிகையில்லை. தமிழ்க் கவிதைப் பரம்பரையில் வந்த படைப்பாளர் புதுவயல் செல்லப்பன் ஆவார். பல்வகை மரபு சார்ந்த பாடல்களையும் உணர்வு பொங்க இவர் எழுதும் எழுத்துகள் இவரின் பரம்பரைக்கு இனிய சொத்து ஆகும். நல்ல தமிழுக்கும் இவரின் கவிதைகள் இனிய சொத்து என்றால் அது தமிழுக்குப் பெருமையாகும்.
எண்பது வயதை நெருங்கிடும் இந்த மரபு சார்ந்த படைப்பாளர் நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நீதி, நேர்மை, நியாயம் இவையெல்லாம் இவரின் சொத்துகள். புதுவயல் என்ற தன் தாய் மண்ணின்மீது ஆறாக் காதல் கொண்டதால் அப்பெயரைத் தன்னுடன் இணைத்துப் புதுவயல் செல்லப்பன் என்று முத்திரையிட்டுக் கொண்டு சரம் சரமாயக் கவிதை படைத்திடுபவர் இக்கவிஞர் ஆவார். இக்கவிதைகளை வெளியிட இவர் அமைத்துக் கொண்ட வெளியீட்டு நிறுவனத்தின் பெயரும் புதுவயல் பதிப்பகம் என்றால் இவரின் தாய்மண் மீதான அன்பு தெரியவரும்.
இவரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்காங்கே தொட்டுச் செல்லும் இவரின் இரு கவிதைத் தொகுதிகள் ~~எண்ணச் சிலைகள் ( 1999), மனத்தின் மகரந்தங்கள்|| (2000) ஆகியனவாகும். இத்தொகுதிகளில் இவர் சான்றோர்களைப் பாராட்டுகின்றார். தன் வாழ்க்கைச் சூழுலைப் பாடுகின்றார். சமுதாயத்திற்கு உரிய நல்லறம் காட்டுகின்றார்.
படிப்புக் கேற்ற பணியினைப் பெற்றேன்
பிடிப்புடன் அதையே பெரிதாய்க் கருதிக்
கறையிலா வகையில் காலம் முழுதும்
குறைவிலா துழைத்தேன்! குமுறிய வயிறு
பாதி அடங்கும் படியாய் மட்டுமே
ஊதியம் என்பதாய் ஒரு தொகை கிடைத்தது
நேர்மை களைந்த நெஞ்சொடு வஞ்சகப்
போர்வை அணிந்து புவியினர் தம்பால்
இன்னும் கொஞ்சம் இனிப்பைக் கலந்து
வன்னச் சொற்களை வழங்கியிருந்தால்
நன்னயம் ஆயிரம் நயந்தெனை அடைய
பொன்னும் பொருளும் பொற்கோட்டிமயமாய்
மின்னி மிளிர மேன்மையுற்றிருப்பேன்
என்ன செய்வது என் விதி இப்படி
( எண்ணச் சிலைகள், ப.161-162)
என்று தன் வாழ்வின் ஏற்ற இறக்கத்தை நீதிபதியாய் நின்று சீர் தூக்கிப் பார்க்கின்றார் புதுவயல் செல்லப்பனார். நேர்மையின் வார்த்தையன்றி பிறவார்த்தை பேசாத அவருலகமும், அவருக்கு முரணான பொய் உலகமும் போட்டியிட்டுக் கொண்டாலும் நேர்மை வென்று நிலையான அனுபவக் கவிஞரை இந்த உலகிற்கு அளித்துள்ளது.
சொற்களைத் தேடாமல் எதுகை மோனைகளை இறக்குமதி செய்யாமல் வளமான கவிதைகளை வார்க்கும் இவரிடம் ஆணவம் வந்த நிகழ்வை அழகான கவிதையாய் வடித்துத் தந்துள்ளார்.
எழுதுகோல் எடுத்தின் றெழுதிட அமர்ந்தேன்
ஏனோ என்னால் இயலவே இல்லை
செழுமையில் திகழ்ந்து தீந்தமிழ் பொழிந்த
சிந்தனைச் சுரங்கக் கதவுகள் திறந்தில
பழுதது நேர்ந்தரும் பைந்தமிழ் மறையப
பண்ணிய பாவமென்? எண்ணிய துள்ளம்!
அழிவுக் கடிப்படை ஆணவம் தானோ?
அன்னை மறுத்திடக் காரணம் அதுவோ?
( எண்ணச்சிலைகள் ப. 157)
அன்னை மறுத்திடக் காரணம் அதுவோ என்ற வரிக்குள் கவிதையை அன்னையாய்ப் பாவிக்கும் அவரின் மகனுள்ளம் தெரியவருகிறது. பண்ணிய பாவமெலாம் பரிதிமுன் பனியே போல ஓடச் சொன்ன பாரதியின்வழி இக்கவிதையின் மூன்றாம் வரிக்குள் புதைந்துகிடக்கின்றது. பாரதியைக் கைப்பிடித்து, காந்தியக் கொள்கையின் தடம் பார்த்து வளருகின்ற இவரின் கவிதைகள் தற்காலத்திற்குத் தேவையான சமூகச் சிந்தனைகளையும் உள்ளடக்கி நிற்கின்றன.
~~மாப்பிள்ளை பெற்றெடுத்த மாமிகளே – இலட்சங்கள்
கேட்பதென்ன? உங்களுக்குக் கீழ்த்தரமாய்ப் படவிலையா?
பிள்ளை பெற்ற தெதற்காக? பெரும்விலையில் விற்பதற்கா?
கொள்ளை அடித்துத்தான் கோபுரத்தில் வாழுவதா?
ஒருபெண்ணைப் பெற்றாலும் ஓயா தழும் நிலையைக்
கருணையின்றி இம்மண்ணில் காலூன்ற விடலாமா?
நீங்களுமே பெண்கள்தாம் நீதியின்றி நெஞ்சமின்றி
வாங்க நினைப்பதனால் வரும் துயரம் அறியீரோ?
பணம் வேண்டும் என்றுங்கள் பையன்கள் கேட்டாலும்
குணம் வேண்டும் எனக்கற்றுக் கொடுப்பதற்கு ஏன் தயக்கம்?
(மனத்தின் மகரந்தங்கள்- ப.143)
பணம் வேண்டும் என்று பையன் கேட்டாலும் குணம் வேண்டும் என்றுக் கற்றுக் கொடுப்பதற்கு ஏன் தயக்கம் என்ற கவியடிகள் ஆழமானவை. ஒரு சமுதாய இழிவையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை மிக்கவை. இவ்வரிகள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு, மனங்களுக்குச் சென்று சேர்த்தால் அதன் நன்மை பன்மடங்காகும். இவ்வரிகளைச் சென்று சேர்க்க வேண்டிய வேலையைச் செய்யப்போவது யார் என்பதுதான் இப்போதைய தேடுதலாகும்.
சாதியசுரன், போதையசுரன், இலஞ்சேஸ்வரன், சூதாசுரன் என்று சமுதாயத்தைக் கெடுக்கும் இன்றைய நரகாசுரர்களின் பட்டியலைத் தருகிறார் புதுவயல் கவிமாமணி செல்லப்பன் அவர்கள். இந்நரகாசுரர்களைத் தீய்க்கும் தீபாவளி வெடிச்சரம் இவரின் கவிதைகள்.
வேளா வேளைக்கு வேட்கையைத் தருவான்
புகையாய்க் கிளம்புவான், புத்தியைக் கெடுப்பான்,
ஊசி மருந்தாய் உள்ளே புகுவான்
நாசம் அனைத்தும் நண்ணிட வைப்பான்
மாத்திரையாகி மக்களை நெடிய
யாத்திரை போக அடிகோலிடுவான்
மலைபொல் விலையில் மட்டுமல்லாமல்
மலிவுவிலையிலும் மனிதரை அடைவான்
( மனத்தின் மகரந்தங்கள்- ப 170)
என்று அவர் விரிக்கும் போதை அசுரனைப் பற்றிய கவிதை வலை அவனைப் பிடித்து இருட்டறைக்குள் அடைக்கும் எண்ண அலையாகும். மலிவு விலை மதுவால் இன்றைய தமிழகம் விழிகெட்டு அலைவதைக் காணுகையில் புதுவயல் செல்லப்பனாரின் கவிதைகள் தீர்க்கம் மிக்கனவாக ஒளிர்வது புலனாகும்.
கவிதை எனும் போர்வாளைக் கவனமாக எடுத்துக் கூர்தீட்டிச் சமுதாயத்தைத் திருத்த முனையும் இனிய கவிதைக்காரர் புதுவயல் செல்லப்பன் என்பதை அவரின் பின்வரும் கவிதை நிலைநாட்டும்.
~~நீ ஒரு கவிஞன்! நினைத்ததை உடனே
தூய வழியிலே தொடங்கி முடிப்பவன்
உன்றன் எழுதுகோல் உண்மையில் எதனையும்
வென்றுவிடுகிற வலிமை மிக்கது
இணையிலா வகையில் இயங்கிடுகின்ற
அணுவாயுதத்தினும் ஆற்றல் உடையது.
இந்தக் கணமே எடுத்துநீ அதனைச்
சிந்தனை மையில் சிறிது நனைத்து
மனித இனத்தின் மனத்துத் தாளிலே
புனிதக் கவிதை பொற்புற எழுது
விடலை வாமனன் விக்ரமன் ஆகி
அழகள் மூன்றினால் யாவும் அளந்தபோல்
அந்தக் கவிதையுள் அடங்கிய தீப்பொறி
இந்தத் தேயம் எங்கும் பரவி
வாட்டும் தீமையை வாட்டி எரித்து
மீட்டும் நல்லொளி மெத்தப் பரப்பும்
( எண்ணச் சிலைகள். ப.167-68)
இக்கவிதையில் கவிஞனாய்த் தான் இருப்பதில் நிலைகொள்ளும், பெருமை கொள்ளும் அவரின் கவியுள்ளம் தெரிய வருகின்றது. கவிதை சிறிதே ஆனாலும் அதன் முயற்சி திரிவிக்கிரம அவதாரத்தைப் போல உலகை அளக்கத் தக்கது என்ற பேரூக்கம் அவருள் புகுந்து அவரை அவரின் படைப்புகள் என்றைக்கும் இளமையாய் கவிதையாய் இருக்க வைக்கின்றது என்பதை உணர்ந்து மகிழ முடிகின்றது.
இட்டலியைப் பற்றியும் கத்தரிக்காய் கூட்டு பற்றியும் அவர் படைத்துள்ள வெண்பாக்கள் நகைச்சுவைமிக்கனவாக உள்ளன. முதுமை பற்றி இவர் பாடுகையில் இளிவரல் சுவை இவரின் கவிதைகளில் விஞ்சி நிற்கின்றது.
இளைமையுடன் முதுமையுமே உற்று நோக்கில்
எதிர்நிற்கும் உருவத்தைப் பொறுத்த தல்ல
உளமதிலே துடிப்புளதா ஆர்வம் பொங்க
ஒரு செயலை முடிக்கின்ற உறுதி உண்டோ
வளமையினைக் கொண்டுதரும் சக்தி உண்டா
வாய்த்துவிடில் வயதொரு நூறானபோதும்
இளைஞரவர் கிழவரலர் என்று போற்றி
இவ்வுலகம் கொண்டாடும் வாழ்த்துக் கூறும்
என்ற கவிதையில் முதுமையைப் புறம் தள்ளிக் கடமை பலவற்றைச் செய்யக் காத்திருக்கும் இவரின் வாழ்க்கைச்சூழல் கவிதைப் பணி அனைத்திற்கும் இக்கவிதை இனிய எடுத்துக்காட்டு ஆகும்.
நூறாண்டு கண்டு கவிதைக் கற்கண்டின் சுவை புதிதாக்கித் தந்திடும் இனிய பணியைப் புதுவயல் செல்லப்பனார் தொடர்ந்து செய்வது தமிழ்பரம்பரைக்கு வளமை பல சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
இனிய இக்கவிஞரின் இருப்பிட முகவரி
புதுவயல் செல்லப்பன், 4. விக்னேஷ் பிளாட்ஸ், விவேகானந்தர் தெரு, நிலமங்கை நகர், ஆதம்பாக்கம், சென்னை, 600 088
muppalam2006@gmail.com
manidal.blogspot.com