நான் அறிந்த சிலம்பு – 38
மலர்சபா
புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
கடவுளர் திருவிழா
நால்வகைத் தேவருக்கும்
மூவாறு பதினெட்டுவகைக் கணங்களுக்கும்
வேற்றுமைகள் பிரிவுகள் அறிந்து கொண்டு
வகுக்கப்பட்ட வெவ்வேறு தோற்றமுடைய
தனித்தனிக் கடவுளர் பலர்க்கும்
மற்றொரு புறத்தில்
சிறப்பாக விழா எடுக்கப்பட்டது.
நால்வகைத்தேவர்: வசுக்கள் – 8; ஆதித்தர் – 12; உருத்திரர் – 11; மருத்துவர் – 2
நால்வகைப்பட்ட முப்பத்து மூன்று தேவர்.
பதினெட்டுவகைக்கணங்கள்: தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போக பூமியோர்
அறவுரை பகர்தல்
அறவோர் பள்ளியாகிய புத்தர் பள்ளிகளிலும்
அறத்தினைக் காக்கும் அறச்சாலைகளிலும்
மதிற்புறங்களில் உள்ள புண்ணியத்தலங்களிலும்
அறத்தின் கூறுபாடுகள் நன்கறிந்த
சான்றோர் நவிலும் அறவுரைகள்
ஒரு புறத்தில் சிறப்பாக நடைபெற்றன.
சிறைவீடு செய்தல்
கொடியணிந்த தேரினையுடைய
சோழ அரசனுக்குப் பகையாகிச்
சிறைப்படுத்தப்பட்ட அரசர்களின்
கைவிலங்குகளை அகற்றி
அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்த
கருணைச்செயல் ஒரு புறம் நிகழ்ந்தது.
இசை முழக்கம்
கூத்தருடன் குயிலுவக் கருவியாளரும்
பண்ணமைத்து யாழ் இசைக்கவல்ல
புலவருடன் இசைபாடும் பாணரும்…..
இவர்களின் அளந்து கூறுவதற்கியலாத
சிறப்பினையுடைய இசைநிகழ்ச்சிகள்
ஒரு புறம் நடந்தேறின.
விழா மகிழ்ச்சி
இரவும் பகலும் இடைவிடாது
தொடர்ந்து நடந்த விழா நிகழ்வுகளால்
முரசுகளும் கூடக் கண்துயிலாது
மாறி மாறி ஒலித்தன.
இங்ஙனம்
குறுந்தெருக்களிலும் பெருவீதிகளிலும்
விழாமகிழ்வில் களித்துத் திளைத்தது
அகன்ற ஊராம் புகார் நகரம்.
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 176 – 188
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram13.html
படத்துக்கு நன்றி: http://thanjavure.blogspot.in/2008/03/blog-post_22.html