நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-17

4

பெருவை பார்த்தசாரதி

இன்று நாட்டில் நிலவும் பயங்கரமான நிகழ்ச்சிகளை அன்றாடம் செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் அவ்வப்போது அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிகழ்ச்சிகளைப் பற்றிப் படிக்கும் போது, ஒவ்வொரு மனிதனும், அந்த நேரத்தில் சற்று நேரமாவது, இதைப் பற்றிச் சிந்திக்கத் தவறுவதில்லை. சிந்திக்கின்ற சிறிது நேரம் மட்டும் மனம் பதைபதைக்கிறது. பிறகு?.. ..

இம்மாதிரிக் கொடுமைகள் ஏன்?.. நிகழ்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் யாது?.. ,
இவற்றையெல்லாம் அகற்றத் தேவையான நன்னெறிப் படைகலன்கள் எவை?.. .

என்றெல்லாம் அன்றாடம் விவாதிப்பதில் நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல, அந்த நேரத்திற்கு மட்டும் இவ்விஷயம் விவாதத்துக்குரியதாகி, பின்பு எல்லோர் மனதிலிருந்தும் சட்டென்று மறைந்து விடுகிறது. அலுவலகத்திலோ, ஆலயங்களிலோ வேறு எங்காவது மனிதர்கள் கூடுகின்ற இடங்களில், உணவு இடைவெளிக்குப் பிறகு, அன்றைய பத்திரிகைச் செய்திகளை அலசுகிறபோது, இத்தகைய விவாதங்கள் இடம் பெறுகின்றன. அப்போது, விவாதம் செய்பவர்கள் ஒவ்வொருவரும் தனது கருத்தைக்கூறி இந்நாட்டைத் திருத்தப் பல வழிகள் சொல்வார்களே அன்றி, அதே கருத்தைத் தாம் பின்பற்றுகிறோமா? என்பதை மறந்து விடுவார்கள்.

மக்களிடத்தில் வெகுவாகக் குறைந்து போயிருக்கும், ஒழுக்கம், நேர்மை, பகுத்தறிவு, விழிப்புணர்வு, சகிப்புத் தன்மை, வாய்மை போன்ற பல காரணங்களை இக்கொடுமை நிகழ்ச்சிகளுக்கு முன்னால் வைக்க முடியும். இந்த நற்பண்புகள் எல்லாவற்றையும் ஒரே நாளில் கடையில் விலை கொடுத்து வாங்க முடியுமா?.. என்ற கேள்விக்கு.. படிப்படியாகச் சிறார் முதலே நன்னெறிகளைக் கடைப்பிடிப்பதின் மூலம்’ ஒரு புதிய அப்பழுக்கற்ற சமுதாயத்தை நாம் அடைந்து விட முடியும் என்பதே ஆன்றோர்களின் கருத்து. காலம் கடந்து முதுமைப் பருவத்தில் கூட இந்த ஞானத்தை அடைய பலர் முற்படுவதை இன்றும் நாம் காண முடிகிறது. வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், குழந்தை முதல் பெரியவர் வரை எதையாவது ஒரு நல்லொழுக்கத்தைப் பற்றிக்கொண்டு கடைத்தேற, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.  படரும் கொடிக்கு ஒரு கொழுகொம்பு தேவைப்படுவதைப் போல, நாமும் சரியான முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து முன்னேற எதையாவதொன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்த இந்தத் தேடுதலின் முடிவில், அனுபவம் மிகுந்த ஒருவரது ஆலோசனை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறது என்பதை இன்று வரை இடம் பெற்ற தொடர்களில் பல்வேறு சந்தர்ப்பங்களின் மூலம் அறிந்து கொண்டோம். குழந்தைகளின் படிப்பு, திருமணம், இத்யாதிகள் போன்ற குடும்பப் பொறுப்புகளை எல்லாம் முடித்து விட்ட ஒரு குடும்பத்தலைவன், ‘நான் என்னுடைய கடைமைகளை எல்லாவற்றையும் முடித்து விட்டேன்’ என்று சொல்லி விட்டு மீதமுள்ள காலத்தை வீணே கழிக்க விரும்புவதில்லை. மறுபடி ஏதாவதொரு வேலையில், கடமையில், நற்பொழுது போக்குகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, மேன்மேலும் நல்வாழ்க்கை வாழவே விரும்புகிறான். இந்தக் காலக்கட்டத்தில்தான், சரியான பாதையை வகுத்துக் கொடுக்க, ஒரு ஆசான் அதாவது ‘குரு’ என்பவர் அவனுக்குத் தேவைப் படுகிறார்.

இன்றய காலகட்டத்தில், நாம் ஒவ்வொரு காரியத்தையும் சிறப்பாகச் செய்ய எண்ணும்போது, அதற்குரிய ஆலோசனையும் அத்தியாவசியமாகி விடுகிறது. உதாரணமாகக் குடும்ப வக்கீல், குடும்ப டாக்டர், குடும்ப நண்பர் போன்று குடும்ப ஆலோசகர் ஒருவர் அனைத்துக் காரியங்களையும் முன்னின்று நடத்தி வைப்பதோடு, ஆலோசனையும் சொல்லி அவரது குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்ல துணைபுரிகிறார். அவரை, “இவர்தான் எங்கள் குரு” என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருக்கிறோம் அல்லவா!.. .

வாழ்க்கையில் பல இன்னல்களைக் கடந்து, தொடர்ந்து உழைத்து உலகறிய ஏதாவதொரு துறையில் சிறந்து விளங்கும் ஒருவரைச் சிறப்பிக்கும் தருணத்தில், அவரை நேர்காணல் செய்யும்போது, அவரிடம் தங்களின் சாதனைகளுக்கு யார் வழிகாட்டி?.. .உங்கள் குரு யார்? என்ற கேள்வியும், நேர்காணல் செய்பவரது கேள்விகளில் ஒன்றாக இடம் பெறுவது வழக்கம். கடந்த ஆகஸ்டு 10 ஆம் திகதி, வல்லமை இதழில் வெளியான “மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்” என்ற சிறப்பு நேர்காணலில் ஆசிரியரின் கேள்விக்கு சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க.சி (தி.க. சிவசங்கரன்) அவர்கள் அளித்த பதிலை இங்கே வாசகர்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.

கேள்வி: தங்களுடைய பதினேழாவது வயதில் ஆரம்பித்த இலக்கியப் பணிகள் பற்றி..?
தி.க.சி. : (மகிழ்ச்சி பொங்க குழந்தையாய் மலர்கிறார்) ஆமாம். என்னுடைய முதல் சிறுகதை பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த, ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிவந்தது. திருவள்ளுவரும், பாரதியாரும், பாரதிதாசனும் எம்முடைய வழிகாட்டிகள். ஒவ்வொரு தமிழனுக்கும் இவர்கள்தானே வழியாட்டியாக இருக்க முடியும்? என் படைப்புத் தொழிலுக்கு ஊக்கம் கொடுத்து எனக்கு குருவாக இருந்தவர் வல்லிக்கண்ணன். அவரில்லையென்றால் இன்று இந்த தி.க.சி. இல்லை.

இப்படிச் சாதனை படைத்தவர்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்குக் கூட ‘குரு’ என்பவர் வாழ்க்கையை நல் வழியில் நடத்திச் செல்ல அவசியமாகி விடுகிறார். இந்தக் குருவானவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுருக்கமாக தெரிந்து கொண்டு, மேலே தொடருவோம்.

குடும்ப விஷயங்களுக்குக் குருவாக இருப்பவர் எப்படி இருக்க வேண்டும். அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதே சமயத்தில் அனுபவத்தில் முதிர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண் பெண் பாகுபாடு கிடையாது. நம்மைவிட வயதில் மூத்தவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அவருடன் பழகுபவரிடத்தில் எழும் சந்தேகங்களைக் களையும் வகையில் அவருக்கு எளிதாக நல்ல தீர்வுகளை தெளிவுபட விளக்கத் தெரிந்திருக்க வேண்டும். தன்னிடத்தில் அறிவுரை கேட்டு வருபவர்களுடைய திறமையையும் அறிந்து கொள்ளும் திறன் அவருக்கு இயல்பாக அமைந்திருக்க வேண்டும். உள்ளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் திறனை வெளிக்கொண்டு வருகின்ற உத்தியைக் கையாளுகின்ற திறமை இருந்தால், நிச்சயமாக அவர் ஒரு நல்ல குருவாக எல்லாரோராலும் ஏற்றுக் கொள்ளப்படுவார். ஒரு சிலரது குடும்பத்தில் இளைஞர்கள், தவறான பாதையில் செல்லும்போது அதைத் தடுக்க முடியாமல் அல்லல்படும்போது, தனது குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குடும்பத்துக்கு ஆதரவாகச் செயல்படும் குருவினிடத்தில் அறிவுரை கேட்க அழைத்துச் செல்வர். அவரும் அந்த இளைஞரிடம் என்ன கோளாறு உள்ளது என்பதைக் கேட்டு அறிந்து கொண்டு, அந்த இளைஞனிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திறமையை பெற்றோர் அறிய முடியாத பட்சத்தில், அந்த இளைஞனை வேறு பாதையில் திசை திருப்பி அவனை நல்வழிப்படுத்துவதை நாம் அறிவோம். இந்த வாலிபப் பருவத்தில் தான் அவனுக்கு, குடும்பம் அல்லாத வேறு ஒருவருடைய சரியான வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைத்துப் பெற்றோர்களும் அறிவர்.

படிப்பறிவில்லாதவன் உலகில் எப்படி வாழ முடியும்?.. ஒருவர் தனது பிள்ளைக்குப் படிப்பில் நாட்டமில்லை என்று சொல்லி ஒரு குருவிடம் உபதேசம் பெறுவதற்காக அழைத்துச் சென்றார். அவனுடைய பெற்றோர்களுக்கு, அவனுடைய குறைகளை மட்டுமே கண்ணுற்றனர், அவனிடத்தில் இருக்கும் மற்ற திறமைகளை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை அறிந்த அந்த முனிவர், அவனைத் தன் பொறுப்பில் விட்டு விட்டு, ஒரு வருடம் கழித்துத் திரும்பி வருமாறு பெற்றோர்களைத் திருப்பி அனுப்பி விட்டார். பிறகு அந்த இளஞனை நன்கு சோதித்துப் பார்த்ததில், அசாத்தியமான மனோவலிமையும், உடல் வலிமையையும் அவன் பெற்றிருக்கிறான் என்று அறிந்து கொண்டார். அவனுக்கு ஒரு சில பயிற்சிகளை அனுதினமும் கொடுத்து, எந்த வேலையைக் கொடுத்தாலும் அதனைத் திறம்படச் செய்வதற்கு அந்த இளைஞனைத் தயார் படுத்தி விட்டார். படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை இல்லை என்பதை அவனுக்குப் பாடம் புகட்டினார். மற்றவர்கள் பயந்து நடுங்கிச் செய்ய முடியாது என்று ஒதுங்கி விடுகிற எந்த ஒரு காரியத்தையும் செய்யும் வலிமையை அவன் பெற்று விட்டதை அறிந்து கொண்ட அந்த குரு, அவனது திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்நாட்டு மன்னன், வீரர்களுக்குச் சவால் விடும் ஒரு போட்டியை அறிவித்து இருந்தான். வீரதீரப் போட்டிகளைக் கண்டு களித்தால், மேன்மேலும் அந்த இளைஞனை உற்சாகப் படுத்தி அவனையும் ஒரு வீரனாக்க தன்னால் முடியும் என்று எண்ணம் கொண்டிருந்தார் குரு.

போட்டி யாதெனில், மைதானத்தின் நடுவே ஒரு கிணறு இருக்கிறது. மன்னர் தனது விரல்களில் அணிந்திருக்கும் முத்து மோதிரத்தைக் கழட்டி, அந்தக் கிணற்றுக்குள் வீசி எறிவார். போட்டியாளர்கள் கிணற்றுக்குள் மூழ்கி அந்த முத்து மோதிரத்தை எடுத்து வரவேண்டும் என்பதே. “சே, இது சாதாரணப் போட்டி, இதில் வெல்வது ஒன்றும் அவ்வளவு கடினமில்லையே” என்று போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், இன்னொரு அறிவிப்பை வெளியிடுகிறார், மன்னர். அதாவது, கிணறு 80 அடி ஆழம் கொண்டது, நான்கு நிமிடத்திற்குள் மோதிரத்தை எடுத்துக் கொண்டு மேலே வந்து விட வேண்டும், மோதிரத்துடன் வராவிட்டால், ஆயுதம் ஏந்தி கிணற்றுக்கறுகே நிற்கும் காவலர்கள் உங்கள் தலையை அங்கேயே வெட்டி வீழ்த்தி விடுவார்கள் என்ற கடும் நிபந்தனையைக் கேட்டதும், அனைத்து இளைஞர்களும் பதறுகிறார்கள்.

அடுத்த பத்து நிமிடங்களில், போட்டியில் பங்கேற்க வந்த இளைஞர்கள் ஒவ்வொருவராகப் பந்தய மைதானத்தை விட்டு வெளியேறுகின்றனர். கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் கூட முன்வரவில்லை. மன்னருக்கும், மக்களுக்கும் ஒரே வருத்தம்,

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள, இந்நாட்டு இளைஞர் ஒருவருக்குக் கூட தைரியமில்லையா?.. .
இங்கு வந்திருந்த அனைவரும் கோழையா?.. ..
இவர்கள் இந்நாட்டை எப்படிக் காக்க முடியும்?.. ..
கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கும் போதே, அங்கு பார்வையாளராக வந்திருந்த இளைஞன் தனது குருவைப் பார்க்கிறான். குருவின் பார்வை “உன்னால் முடியும்” என்ற ஆசியை வழங்குகிறது, மன்னர் பாதம் பணிந்து, போட்டிக்குச் சவால் விடுகிறான். போட்டியை காண வந்திருந்த அவன் பெற்றோர்களுக்கு ஒரே ஆச்சர்யம், தாம் பெற்ற பிள்ளை இவ்வளவு தைரியமானவனா?.. கட்டிளம் காளையாக, உயிருக்குச் சவால் விடும் போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில் அவனைத் தயார்படுத்திய பெருமை அந்தக் குருவையே சாரும்.

போட்டி துவங்கும் மணி அடித்தாகி விட்டது, எல்லோரது கண்களும் அந்த இளைஞன் மேல் பதிந்து இருக்க, சட்டென்று கிணற்றில் குதிக்கிறான், ஒன்று, இரண்டு, மூன்று நிமிடம் முடிந்து விட்டது, சரியாக நான்காவது நிமிடம் மோதிரத்தோடு, தன் கையை கிணற்றுக்கு மேலே நீட்டுகிறான். எல்லோரும் ஆர்ப்பரித்து அவனைக் கட்டித் தழுவுகின்றனர்.

இனி இந்த இளைஞன்தான் இனி இந்நாட்டின் போர்த்தளபதி, என்று மன்னர் பரிசினை அறிவிக்கிறார்.

எப்படி உன்னால் முடிந்தது, அனைவரின் கேள்விக்கும் பொறுமையாகப் பதிலளிக்கிறான், இளைஞன்.. என்னுடைய மனதில், கிணற்றின் ஆழம் தெரியவில்லை, ‘முத்து மோதிரம்’ ஒன்றுதான் நினைவில் இருந்தது, கிணற்றுக்குள் குதித்தபோதுதான், கிணறு வெறும் 8 அடி ஆழம்தான் என்பதை உணர்ந்தேன். என்னுடைய திறமைக்கும், மனவலிமைக்கும், வெற்றிக்கும் காரணம் என் குருவின் வழிகாட்டுதல்தான் என்பதை உணருகிறேன், சொல்லி முடித்தான் இளைஞன்.

இது ஒரு கற்பனை போல் இருந்தாலும், இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையும், மன உறுதியையும், படிப்பறிவை ஊட்டும் விதமாகவும் அமைத்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தாம் பெற்ற பிள்ளையின் திறமை அறியாத அவனது பெற்றோர்கள், அந்த இளஞனை, ஒரு தேர்ந்த அறிவு படைத்த அனுபவம் மிக்க ஒருவரது பொறுப்பில் விடும்போது, அவனுக்குள் இருக்கும் திறமையை அறிந்து அதை வெளிக்கொணர்ந்த ஒருவரே அவனை அந்த நாட்டின் போர்த் தளபதியாக்கியது.

எண்ணற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பலர், வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற ‘குரு’ பற்றிய விவாதத்தை நம் முன் வைத்திருக்கின்றனர். ரசனை மிகுந்த சில மனிதர்களுக்கு காடு, மலை, காற்று, ஆகாயம் இவைகள் கூட குருவாவதுண்டு என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் கூறுவார். மனிதர்கள் அனைவரும், தொடர்ந்து ‘குருவைத்’ தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உலகத்தில் இதுவும் ஒரு முடிவற்ற தேடுதலாகவே உள்ளது என்ற பதிலை வாசகரின் கேள்விக்கு முன்பாக அழகாக எடுத்துரைத்ததை இங்கே தலைப்புக்குப் பொருந்துமாறு வாசகர்களின் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி குருவை மூன்றாம் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதே. குரு முக்கியமில்லையா?

நீங்கள் இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது உங்களுக்குப் பாலூட்ட தாய் தேவைப்படுகிறாள். சுத்தம் செய்து, சுமந்து, வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் காப்பாற்றி உங்களை ஆசுவாசப்படுத்த தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது. உங்களை ஆசுவாசப்படுத்தி, நல்ல உணவு கொடுத்து, நன்கு வளர்ப்பதற்காக அந்தத் தாயின் பக்கபலமாக, பின்பலமாகத் தந்தை தேவைப்படுகிறார். உங்களுடைய நான்காவது, ஐந்தாவது வயதில் நீங்கள் போடுகின்ற ஆட்டமும், பேச்சும், சிரிப்பும், உங்களை மேலும் பலப்படுத்த தந்தை உதவியாய் இருக்கிறார். ஆனால் பதினாறு வயதில் உலகம் பற்றிய ஞானத்தை தேடுகின்றவனாய், வாழ்வு குறித்த கேள்விகள் உள்ளவனாய் நீங்கள் வாலிபனாய் நிற்கிறபோது உங்களுக்கு குரு என்பவரே மாதா. குரு என்பவரே பிதாவாக இருந்து தெய்வத்திடம் அழைத்துப் போகக் கூடியவராக இருக்கிறார். தாயும் தந்தையுமாகி நிற்கின்ற குரு நீங்கள் வளர்ந்த பிறகு உதவி செய்பவர். உங்கள் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்துகிறவர். உங்களை வழி நடத்துகிறவர். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறும் வரை குரு என்பவர் உங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் வாலிபமான பிறகு குரு என்பவர் இல்லாது வாழ்க்கை இல்லை. குரு என்பவருக்குள் மாதா, பிதாவும் ஏன் கடவுளும் அடக்கம்.

வாழ்க்கையில் தவறு செய்ய முனைந்து அதைச் செய்யாமல் விட்டவர்கள் அல்லது தவறு செய்து பின்னால் திருந்தியவர்கள் இவர்கள் சொல்வது என்ன?.. “இவரால்தான் இன்று என்னால் வாழ முடிகிறது” என்று ஒருவரைச் சுட்டிக் காட்டுவதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆக, அரசியல், சினிமா, ஊடகங்கள், கலை, இலக்கியம் இப்படி ஒவ்வொரு துறையிலும், தனிப்பட்ட முறையில் சிறந்து விளங்குகின்ற ஒரு திறமையாளர், தன்னை நாடி வருபவர்களுக்கு அல்லது தனது வெற்றிப் பாதையைப் பின்பற்றுபவர்களுக்கு, அறிந்தோ அறியாமலோ, தான் ஒரு காரணகர்த்தாவாக (குருவாக) அமைந்து விடுகிறார் என்பதில் ஐயமில்லை.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-17

  1. நண்பர் பெருவை பார்த்தசாரதி அவர்கள் எடுத்துக் காட்டும் உதாரணங்கள், திறமையான இளைஞர்களுக்கு, ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய திறமையை தானே அறியாத பட்சத்தில், அதைப் பிறர் அறியச் செய்வது குருவின் கடமை அல்லவா?…

  2. பெருவை சாரதி பெருமைக்குரிய குருவின் அருளினை அருமையாக அவருக்கே உரிய பாணியில் எடுத்து காட்டியுள்ளார். இருப்பினும் தன் குருவினை சில வரிகளில் சொல்லியிருந்தால் இன்னமும் அதிக வல்லமையுடன் பொலிவு பெற்று விளங்கி இருக்கும்.
    அன்பன்
    வடகரை நா. விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *