இந்த வார வல்லமையாளர்

திவாகர்

முதன்முதலில் பத்ராசலம் பயணம் சென்றது (1980) எங்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்துவிட்டது. காரணம் பத்ராசலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் வடக்கே பர்ணசாலா எனும் ஊருக்கு அழைத்துச் சென்றனர். அந்த ஊர் தாண்டினால் காடுகள்தாம். இங்கேதான் ராமர் சீதையுடனும் லக்ஷ்மணனுடன் தங்கினார் என்றும், ஒரு சின்ன ஓடையைக் காண்பித்து இதுதான் சீதை குளித்த இடம் என்றும், அதன் பக்கத்தே உள்ள பாறையில் ஒரு அரையடி அகலத்துக்கு கார் டயர் பதிப்பித்ததுபோல ஒரு செதுக்கல், அந்த டிசைன் அப்படியே நீண்டு ஒரு 50 அடி வரை போய்க்கொண்டே இருந்தது.

எங்களுடன் கூட வந்த அந்த ஊர் ‘கைட்’ அந்த  செதுக்கப்பட்ட பாறையை காண்பித்து அது சீதையின் புடவையின் பார்டர் என்றும் குளித்ததும் இந்தப் பாறையில்தான் புடவையை காயப்போடுவாள் என்றும் அப்படி தினம் புடவை காயப்போட்டதால் அந்த பார்டர் மட்டும் அப்படியே பதிந்து விட்டது’ என்றும் கதை கட்டிக் கொண்டிருந்தான். இந்தக் கதையைக் கேட்டதும்தான் எங்களுக்குக் கோபம் வந்தது. உடனே அவனைத் திரும்பக் கேட்டும் விட்டேன்.. ‘சீதை எப்படியப்பா புடவை கட்டியதாகச் சொல்கிறாய். அவளும் ராமனும் கட்டிக் கொண்டது மரவுரி எனும் மான் தோல் உடை எனச் சொல்வார்களே.. மேலும் அந்தக் காலத்தில் இவ்வளவு நீளமான புடவை, அதுவும் இப்படி பார்டர் போட்டது கிடைக்குமா, உனக்குத் தெரியாதோ..’ என்று கேட்டதும், அவன் உடனே சிரித்து விட்டான்.

‘ சார்.. இது வழி வழியாய் நாங்கள் கேட்டு வரும் கதையைத்தான் சொல்கிறேன்.. என்னமோ எங்க ஐய்யமாருங்க சொன்னாங்க.. நானும் அதைச் சொல்லறேன்..’ என்றும் மழுப்பி விட்டான். அதே போல அங்கு பட்டுப் போன ஒரு காய்ந்த மரத்தைக் காட்டி, ‘இதுதான் சூர்ப்பனகை மரம்’  என்றும் இங்கிருந்துதான் அவள் ராமனுக்கு காதல் வலை போட்டதாகவும்,  இதுதான் லக்ஷ்மணனால் சூர்ப்பனகை மூக்கு அரிபட்ட இடம் என்றும் ‘கைட்’ கதை அளந்து விட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களுடன் கூட வந்திருந்த தெலுங்கு மகா ஜனங்கள் இவை எல்லாவற்றையும் இண்ட்ரெஸ்டிங்காக கேட்டுக்கொண்டிருந்ததுதான்.. சொல்லிய கைடுக்கு காசும் சற்று அளவுக்கு அதிகமாகவே கொடுத்தார்கள்.  இப்போதும் கூட பத்ராசலம் செல்பவர்கள் பர்ணசாலை செல்லாமல் வரமுடியாது.. அதே போல பர்ணசாலை செல்பவர்கள் நான் குறிப்பிட்ட கதையை வேறு எந்த கைட் வாய் மூலமாகக் கேட்காமல் வரமுடியாதுதான்.. இது தொடரும் கதைதான்..

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு உல்லாசத்தலத்துக்கோ, புண்ணியத் தலத்துக்கோ பயணம் செல்கிறோம் என்றால் இந்த ‘கைட்’களின் தொல்லை தாங்கமுடியாதுதான்.. ஒவ்வொரு ஊரிலும் சுவையான அல்லது கசப்பான அனுபவங்கள் இவர்களால் நிறையவே கிடைக்கும். அந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டு வரும்போது அதைப் படிப்பவர்கள் ஒருவேளை அந்த இடங்களுக்குச் சென்றால் இந்த கசப்பு, இனிப்பு அனுபவங்களையும் நினைவில் கொள்வர்.

அப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்த ஒரு பயணக் கட்டுரையை சிங்கப்பூர் விஜயகுமார் அவர்கள் வழங்கி வருகிறார். அவருக்கும் ஒரு கைட் இப்படித்தான் மாட்டினான்.. ஆனால் அவன் உண்மையான விவரங்கள் தெரிந்த கைட் என்றாலும் நம்ம ஆள் பட்ட பாட்டை அவர் எழுத்தில் படித்தால்தான் சுவைக்கும

மணி நாலு ஆகியது. முன்னர் பக்கத்தில் செடி கொடி, மரம் காலுக்கு அடியில் கொஞ்சம் மணல் என்று இருந்ததெலாம் மாறி எங்கும் ஒரே பாறை. சுமார் எழுவது டிகிரி செங்குத்து – கீழே ஒரு தடிமனான வேலிக்கயிறு போடப்பட்டு இருந்தது. அதைத் தலையில் கட்டிய டார்ச்சின் வெளிச்சத்தில் வைத்துக்கொண்டே ஏறினோம். சில இடங்களில் அதைப் பிடித்துக் கொண்டு செங்குத்தாக ஏற வேண்டும் – மூன்று மணி நேரம் அந்தக் குளிரில் விடாமல் விரட்டி விரட்டி ஏறச் சொன்னான் மௌன்டைன் கைடு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துத் தாமதமாகப் போனால்தான் என்ன? படம் நியூஸ் ரீல் போடும் போதில் இருந்து பார்ப்பதைப் போல – சிகரத்தைக் கண்டிப்பாக ஆறு மணிக்குள் சென்றடைய வேண்டும் என்பது என்ன அரச ஆணையோ? அப்படி இல்லை, சிகரத்தில் ஆதவனின் முதல் கிரணங்கள் படுவது ஸ்பெஷல், மேலும் எட்டு மணிக்கு மேலே அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டு மளமளவெனச் சென்று விட்டான்.
https://www.vallamai.com/paragraphs/26459/

இந்தப் பயணத்தொடரை ஹாஸ்யமாகவும் சில சமயம் த்ரில்லிங்’காகவும் எழுதி நம்மையும் அவர் கூடவே அந்தந்த இடங்களுக்கு செலவில்லாமல் அழைத்துச் சென்ற திரு விஜயகுமார் அவர்கள இந்த வாரத்தின் வல்லமையாளராக  வல்லமைக் குழு சார்பாகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். திரு விஜயகுமாரின் ‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்’ (www.poetryinstone.in) வலைப் பூவை அனைவரும் கண்டு களித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அவர் மேலும் பல நல்ல நூல்கள் படைக்க அவருக்கு நம் வாழ்த்துகள் என்றும் உண்டு.

இந்த வாரக் கடைசி பாராவில் வருபவர் செண்பக ஜெகதீசன்.

மலைச்சாரலில்
மந்தையாய் ஆடுகள்,
முட்டி மோதி
மேய்கின்றன புல்லை..

அந்தப் புல்லும்
அதை மேயும் ஆடும்,
அடித்து
அதைத் தின்னும் மனிதனும்
அழிந்து போகிறார்கள்..

அந்த
மலையும் மலைச்சாரலும்
அங்கேதான் இருக்கின்றன-
அடுத்த தலைமுறை
ஆடுகளையும் மனிதனையும்
ஏதிர்நோக்கி…!

செண்பக ஜெகதீசனின் சிந்தனையை மகிழ்வாக ஏற்கிறோம். ஒவ்வொரு சமயம் அந்த மலையும் மலைச்சாரலும் கூட நிரந்தரம்தானா என்ற சிந்தனையையும் கூடவே கிளப்பிவிட்ட கவிதை இது. அவருக்கு நம் பாராட்டுகள்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வல்லமையாளர்!

  1. சிங்கபூர் விஜய்குமார் என் நண்பர். அவரின் இணைய தளம் மூலமும், நேராகவும், நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது நிறைய. அவர் போன்ற நமது பாரம்பரியத்தில் ஆழ்ந்த ஆர்வமும், அறிவும் கொண்டவர்கள் மிகக்குறைவு. அவரை சித்தரித்ததற்கு மிகுந்த நன்றி. விஜயகுமாரின் பணி தொடரட்டும் – குறைந்தது அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்காவது!

  2. இந்தவார வல்லமையாளர்
    கடைசி பாராவில் என்
    கவிதையைப் பாராட்டிய
    திவாகர் அவர்களுக்கு என் நன்றி…!
                        -செண்பக ஜெகதீசன்…

  3. இன்று என் நண்பர்களுக்கு முன், சிற்பங்கள் பற்றி தெரிந்த ஒரு அறிவார்ந்த நபர் போல் கண்துடைப்பு செய்ய முடிகிறது என்றால், அது விஜய் இடமிருந்து பெற்றது தான். சிற்பங்கள் மூலமாக எனக்கு ஒரு புதிய உலகை திறந்து காட்டியவர். நான் இன்று ஒவ்வொரு சிற்பம் முன் நின்று நம் இந்திய பாரம்பரியத்தை பெருமையுடன் பார்க்க வைத்ததற்கு விஜய், உங்களுக்கு என் நன்றி ….

    என்னை போன்ற பெரியவர்களுக்கு மட்டுமல்லாது நம் அடுத்த தலைமுறையினருக்கும் இந்திய பாரம்பரியத்தை எடுத்துச் செல்லும் ஜோதியாக திகழும் அவருக்கு என் பலகோடி வணக்கங்கள், மரியாதைகள்!

    கடவுள் விஜய், உங்களை ஆசீர்வதிக்கட்டும், மேலும் பற்பல ஆண்டுகளாக உங்கள் சேவை தொடரட்டும் …!

  4. ஜெய் ஸ்ரீ ஸீதாராம்
    வல்லமை தேவைதான். ஆனால் புராதன உண்மைகளை எந்த ஒரு வழிகாட்டி மூலமாகவும் நாம் உண்மையாக அறிந்துகொள்ள முடியாது என்பதையும் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப் ப்டுபவர்களும் புரிந்துகொண்டு செயல்படுவது கிடைத்தற்கறிய மனிதப் பிறவியை சீராக செயல்படுத்த உதவும்.
    “நம்பிக்கை” என்னும் பேராயுதம் மழுங்கி விட்டால் வல்லமைக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
    இவ்வுலகில் எத்தனை ஜீவராசிகள் உள்ளனவோ(மனிதனுட்பட) அத்தனையுய்ம் தனித்தன்மை வாய்ந்தவை. அத் தனித்தன்மையை மாற்றுவது அல்லது மாற்ற முயற்சிப்பது குதிரைக் கொம்பைத் தேடுவதுபோல்.
    எந்த ஒரு ஜீவராசியும் தனக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கோ உயிருக்கோ ஊறு விளைவிக்காம்ல் ஒத்தும் உதவியும் வாழ்ந்து தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள ஜீவராசிகளையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் வல்லமை. அத்தகைய வல்லமையை ஆறாம் அறிவைக் கொடுக்கப்பட்ட மனதி ஜீவராசியால் மட்டுமே முடியும். ஆறாம் அறிவு ஆக்கத்துறையில் செலுத்தி ஊக்கமுடன் உழைத்து உயர்வைப் பெறவேண்டித்தானே ஒழிய யார் உயர்ந்தவர், யார் தழ்ந்தவர் என்ற பட்டிமன்ற ஆராய்ச்சிக்காக அல்ல. செந்திப்போம், செயல்படுவோம், மனித நேயத்தைப் பண்படுத்துவோம்.
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.