எங்க வைக்க?
விளம்பரத்தில் வெய்யிலை எளிதாய்
வழுவழு சோப்புக்குள் வைக்கும் ,
வித்தை காட்டி வியக்க வைக்கிறார்கள்.
ஆனால் காதலை ?
வார்த்தையில் பொதித்து வைத்தால்,
வந்து விழும் கவிதைக் குழந்தை
வேண்டாத தருணங்களில் காட்டிக் கொடுக்க
புத்தகத்தில் பதுக்கி வைத்திருந்தாலோ,
வார்த்தைகளைத் தின்று தின்று அவை
வரம்பு மீறி வளரத் தொடங்கி விடுகின்றன
உணவில் ஒளித்து வைத்து விட்டாலோ,
ஓயாமல் உண்டுவிட்டும் அடங்காது ,
ஓங்கி வளர்கிறது காயசண்டிகைப் பசியாய்
காதலைக் காவியத்தில் கட்டிவைத்தால்,
காலத்தின் கணக்கால், கட்டுப்பட்டு,
கரைந்து போகிறது, காலடி ஓசையாய்.
காதலர் நடுவே உருட்டி விட்டால்,
கண்பார்த்து, கை கோர்த்து பின் ,
கல்யாண மாலைக்குள் அடங்கிவிடுகிறது.
காதலை அன்புக்குள் போட்டுவிட்டால்,
கச்சிதமாய் பொருந்திவிடும் -ஆனால் இதை
கடைபிடிக்கத்தான் இங்கு யாரும் இல்லை.
ஆகவே
அவரவர்க்கு தெரிந்த வழியிலும், மொழியிலும்,
காதலை வைக்க ஓர் இடத்தைத் தேடிக்
களைத்தும், ஓடிக்கொண்டிருக்கின்றன பல கால்கள்!
படத்திற்கு நன்றி
http://flashyfiction.blogspot.in/2012/07/how-many-feet-are-in-yard.html
காதலை ஒளித்துவைக்க இடம்தேடும்
கவிதைக் குழந்தை நன்று…!
-செண்பக ஜெகதீசன்…
ஆகா… அற்புதம் பாகம்பிரியாள். என்ன சொல்ல.. உள்ளம் கரைந்து விட்டது.
அன்புடன்
பவள சங்கரி
அருமையான கவிதை.. எத்தனை ஒளித்து வைத்தாலும் தாழம்பூ வாசமாய்த் தன்னை வெளிப்படுத்தியே தீரும் இந்தக்காதல்.
திருசெண்பக ஜெகதீசன் அவர்களின் பாராட்டு, என் கவிதைக் குழந்தைக்கு நல்ல ஊட்டமாய் உள்ளது. நன்றி
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”ன்னு சும்மாவா சொன்னாங்க?
நிறைந்த பாராட்டினை அளித்த அன்பு சகோதரி பவள சங்கரி அவர்களுக்கும், அமைதி சாரல் அவர்களின் மணம் செறிந்த பாராட்டுக்கும் நன்றிகள் பல.
முத்தான பாராட்டுக்கும், முகில் தினகரன் அவர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புதானோ? நன்றி திரு. தினகரன் அவர்களே.