நிலவொளியில் ஒரு குளியல் – 24
ஸ்ரீஜா வெங்கடேஷ்
குழந்தைகளின் இறுதித் தேர்வு அநேகமாக அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்துவிட்டது. ஒரு சில பள்ளிகள் மாத்திரம் தேர்தலுக்குப் பிறகு தான் தேர்வு என்று தள்ளி வைத்துள்ளனர். தேர்தல் திருவிழாவும் தேர்வுச் சோதனையும் இம்முறை சேர்ந்து வந்தது ஓர் இடைஞ்சல் என்றால் உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்தது ஒரு மாபெரும் இடைஞ்சல். ஆனால் இந்த எல்லாச் சோதனைகளையும் தாண்டி, நம் குழந்தைகள் வெற்றி நடை போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சில வீடுகளில் பையனுடைய இறுதித் தேர்வுக்கு அம்மாவும் அப்பாவும் பாடங்களைக் கரைத்து குடித்துக் கொண்டிருப்பார்கள். (அவர்களுடைய பள்ளி நாட்களில் செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்). பையன் ஹாயாக உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். கேட்டால் பிறகு அவன் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து கேட்டே மனப்பாடம் செய்து விடுவான் என்று கூறுவார்கள். “கற்றலின் கேட்டல் நன்று” என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் போலும்.
ஒரு சில பள்ளிகளில், ஃபிப்ரவரி மாதமே ஒன்பதாம் வகுப்புக்கான பாடங்களை முடித்து மூட்டை கட்டி வைத்து விட்டு பத்தாம் வகுப்புக்கான பாடங்களைத் தொடங்கிவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வருடம் அப்படிச் செய்ய முடியாது என்பது என் எண்ணமாக இருந்தது. ஏனெனில் வரும் கல்வியாண்டிலிருந்து எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படப் போகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் என் எண்ணம் பொய்த்துப் போனது.
எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டிலிருக்கும் என் தோழி சொன்னார், அவர்களுடைய உறவினனான ஒரு பையன் “வரும் வருடம் பத்தாம் வகுப்புக்குப் போகிறான். ஆனால் இரண்டு மாதம் முன்பிருந்தே அவனுக்கு பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன” என்றார்.
“இது எப்படி சாத்தியம்? இன்னும் புத்தகங்களே வரவில்லையே?” என்று கேட்டதற்கு இணையத் தளத்தில் சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வைத்து இவர்களாகப் புத்தகங்கள் தயாரித்து, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள் என்ற பதில் கிடைத்தது.
எதற்காக இந்தக் கடும் பயிற்சி? விடுமுறை நாட்களைக் கூட அவர்களால் அநுபவிக்க முடிவதில்லை. அப்படியாவது பிள்ளைகளுக்கு அறிவு வளர்கிறதா என்று பார்த்தால் சுத்தமாகக் கிடையாது. வெறும் மனப்பாடம் செய்யும் திறமையே வளர்க்கப்படுகிறது. பள்ளிகளின் சாதனைகளுக்காகவும் தனிப்பட்ட ஆசிரியர்களின் சாதனைகளுக்காகவும் மிகவும் நன்றாக மனப்பாடம் செய்யும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, சிறப்புப் பயிற்சி அளிக்கிறார்கள்.
இவையெல்லாம் குழந்தைகள் மனத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வைக் குறித்த தேவையற்ற பயத்தையும் வெறுப்பையும் உண்டாக்குகின்றன. இன்னும் சில வீடுகளில் அவர்கள் மகன் / மகள் பத்தாம் வகுப்பு வந்தவுடன் கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்து விடுவதுடன் வீட்டிற்கு வருபவர்களிடமெல்லாம் “எங்க வீட்டுல இப்போ கேபிள் இல்லை. என்ன செய்ய என் பையன் / பொண்ணு டென்த் ஆச்சே? நாமளும் கொஞ்சம் தியாகம் (?) செய்தால்தானே அவங்க நல்லாப் படிப்பாங்க?” என்று பெருமை பேசுவார்கள்.
இவை அந்தச் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் சிறு மனத்தில் எத்தகைய பாதிப்பை உண்டு பண்ணும் என்று நினைக்க மறந்து விடுகிறார்கள். சிறு வயதிலிருந்து தொலைக்காட்சி பார்த்தே வளர்ந்த குழந்தைகளைத் திடீரென்று ஒரு நாள் அவன் / அவள் பத்தாம் வகுப்பு என்ற காரணத்தாலே அவையெல்லாம் மறுக்கப்படும் போது கோபமும் படிப்பின் மீது வெறுப்பும் கொள்ளும் தானே? விதைக்க வேண்டிய காலத்தில் சும்மா இருந்து விட்டு அறுவடை செய்யும் நேரம் விதைத்தால் என்ன பயன் கிட்டும்?
பத்தாம் வகுப்புக்கே இப்படியென்றால் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீடுகள் தவச் சாலைகள் போலாகி விடுகின்றன. அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது. பள்ளி, அது முடிந்தவுடன் டியூஷன், அது முடிந்தவுடன் வீட்டுப் பாடம், பிறகு படித்தல் என்று பிளஸ் டூ படிக்கும் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை மூச்சு முட்ட வைக்கிறது. இதில் சிரிப்பிற்கோ, விளையாட்டுக்கோ நேரம் ஏது?
ஏற்கெனவே பள்ளி அணிகளில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் கூட அவற்றிலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பிளஸ் டூ. விருந்தினர் வருகையோ, பொது நிகழ்ச்சிகள் எதிலுமோ அந்தக் குழந்தைகள் கலந்துகொள்ள அநுமதிக்கப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பிளஸ் டூ. எப்படி ஒரு குழந்தையால் இருபத்து நான்கு மணி நேரமும் படித்துக்கொண்டேயிருக்க முடியும்?
அதனால் அக்குழந்தைகள் பலியாடுகள் போல ஆட்டு விழி விழித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் படித்துக்கொண்டு, வேறு எந்தச் சிந்தனையும் வேறு எதிலும் ஆர்வமே இல்லாத குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறுபான்மைதான். பெரும்பாலான குழந்தைகள் பல விஷயங்களில் ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அக்குழந்தைகளுக்கு அந்த வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்களையும் மனப்பாடம் செய்யும் எந்திரமாகவே நம் கல்வித் திட்டம் ஆக்கி வைத்திருக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்ன என்று பார்த்தால் பெற்றோர்களின் மன நிலையை ஒரு காரணமாகக் கூறலாம். எல்லாப் பெற்றோர்களும் தன் குழந்தையை டாக்டராக அல்லது இஞ்சினியராக ஆக்கிவிட வேண்டும் என்று முனைந்து செயல்படுகிறார்கள். டாக்டரை விட இஞ்சினியர் கூடுதல் சிறப்பு. ஏனென்றால் நான்கு வருடப் படிப்பு முடிந்ததும் ஏதாவது ஒரு IT கம்பெனியில் எடுத்த எடுப்பிலேயே ஐந்து இலக்கச் சம்பளம், அதிருஷ்டம் இருந்தால் வெளிநாடு செல்ல வாய்ப்பு. இன்னும் வசதியான பெற்றோர் என்றால் வெளிநாட்டில் சென்று படித்து, அங்கேயே தங்கிவிடுவது என்று வாழ்க்கைப் பந்தயத்தில் முதலிடம் பிடிக்கப் போராடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் நான் குறை கூறவில்லை. அவரவர் மனநிலைக்கேற்ப, செயல்படட்டும். ஆனால் ஏன் குழந்தைகளை பயமுறுத்த வேண்டும்? கல்வி என்றாலே பரீட்சை, பரீட்சை என்றாலே பயம் என்று குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிச் செய்யாமல் கல்வியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக, பரீட்சையைத் தன் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக கருதும் குணத்துடன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். புத்தகங்களை அவர்கள் ஆசையோடு படிக்கும் நிலையை உருவாக்கித் தர வேண்டும். பிள்ளைகள் அவர்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற வேண்டும்.
இவற்றையெல்லாம் எழுதும்போது நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது அடித்த கூத்து ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. என் அம்மா ஒரு ஆசிரியை. பத்தாம் வகுப்புக்குக் கணக்கு சொல்லித் தருவார். எங்களுக்கு எப்போது கணக்குப் பரீட்சை நடந்தாலும் அவர் கேள்விக்கான விடைகளைக் கேள்வித் தாளில் எழுதி வருமாறு வற்புறுத்துவார். எனக்கு அப்படிச் செய்வதென்றால் ஒரே எரிச்சல். ஏனென்றால் நான் எழுதிக்கொண்டு வரும் விடைகளைச் சரியா, தவறா என்று பார்த்து நிறையத் தவறென்றால் முதுகில் மத்தளம் வாசித்து விடுவார். விடைத்தாள் கிடைக்கும் நாளில் எப்படியும் அடி வாங்கப் போகிறோம், முன்னமேயே எதற்கு வாங்குவானேன் என்று நான் எழுதிக்கொண்டு வர மாட்டேன்.
என் அண்ணன் இருக்கிறானே, அவன், தாய்ச் சொல் காத்த தனயன். என் அம்மா சொல்வதை வார்த்தை பிசகாமல் அப்படியே செய்வான். அதனால் எனக்குக் கூடுதல் மொத்து கிடைக்கும். ஒரு முறை நான் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். முழுவாண்டுத் தேர்வு. கடைசிப் பரீட்சை, கணக்கு. என் அம்மா வழக்கம் போல் விடை எழுதிக்கொண்டு வரும்படியும் இல்லையென்றால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்து அனுப்பினார்.
அன்று எனக்கு என்ன ஆனதோ, தெரியவில்லை நான் எல்லாக் கணக்கும் போட்டு முடிக்க, வெகுநேரம் ஆகி விட்டது. விடைத்தாள்களை ஆசிரியர்கள் வாங்கத் தொடங்கியிருந்தனர். இதில் நான் எங்கிருந்து கேள்வித் தாளில் விடையெழுத? மின்னலடிக்கும் நேரத்தில் ஒரு யோசனை வந்து அதைச் செயல்படுத்தியும் விட்டேன். தாள்களை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு வெற்றி நடை போட்டு வீட்டை அடைந்தேன்.
வழக்கம் போல என் அம்மா வீட்டிற்குள் நுழைந்ததுமே கேள்வித் தாளை வாங்கிப் பார்த்தார்கள். அதில் விடைகள் ஏதும் இல்லை. எனவே என்னைத் திட்ட ஆயத்தமாகும் போது நான் இடை மறித்து, “நீங்க திட்டுவீங்கன்னு பயந்து தான் நான் இதையே கொண்டு வந்துட்டேன். பாத்தீங்களா? இப்போ நீங்களே பாத்துக்குங்க. நான் எல்லாக் கணக்கும் சரியாப் போட்டுருக்கேனான்னு” என்று சொல்லி பரீட்சை எழுதிய விடைத்தாள்களை! ஆம்! விடைத்தாள்களையேதான் என் அம்மா கையில் கொடுத்து விட்டேன். பிறகு நான் என்ன செய்ய? எனக்கு நேரமில்லையே? வேறொரு வெற்றுத் தாளில் என் பெயர் எழுதி ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
என் அம்மா அதைப் பார்த்ததும் பதறிப் போனார்கள் . என்னைத் திட்டவோ, அதட்டவோ நேரமில்லை. என் பள்ளியை நோக்கி ஓடினார்கள் கூடவே என் அண்ணனும். அங்கு என்ன நடந்தது? அவர்கள் எப்படி என் விடைத்தாளை வாங்கிக்கொண்டார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மொத்தத்தில் என் அம்மா நிறையப் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். வீட்டிற்கு வந்த என் அம்மா என்னை எதுவும் சொல்லாமல் சிரித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு நான் ஒவ்வொரு முறை தேர்வுக்குச் செல்லும் போதும் என் அம்மா “விடைத்தாளை நினைவாகக் கொடுத்து விட்டு வா” என்று சொல்லத் தவறியதில்லை. பல வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் என் அண்ணன் என்னை அந்தச் சம்பவத்தைச் சொல்லி, கேலி செய்கிறான். நானும் கூடச் சேர்ந்து சிரிப்பேன். வேறு என்ன செய்ய?
கல்வி மேல் ஆசையுள்ள மாணவர்களும் வெறும் மனப்பாடத் திறமையை மட்டுமே சோதிக்காத பாடத் திட்டங்களும் எல்லாத் துறைகளையும் மதிக்கும் மக்களும் முக்கியமாக எல்லாத் துறைகளுக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசாங்கமும் இனி வரும் நாட்களில் தோன்ற வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு நிலவோளியில் ஒரு குளியல்.
========================================
படங்களுக்கு நன்றி: http://www.associatedcontent.com, http://iit-jee-world.blogspot.com, http://www.kandle.ie
Very interesting topic which is the need of the hour. We should ensure that the child studies and at the same time it gets time for relaxation also.
Definitely any parent would like to become their child either as a doctor or engineer or Chartered Accountant. But at the same time we should also take into consideration the mental maturity of the child and their psycology. There is a English proverb which says that “all work and no play makes jack a dull boy”. So we should also allow the child to indulge in games thereby giving them a mind change for some time and also at the same time this will keep them physically fit.
I am not against the child viewing the television as an alternative for relaxing but we have to ensure that they watch only good programmes and events so that their mind will be free when they sit and read. In case the child happens to see some violent incident or similar type they may be disturbed.
Let us all start respecting our children’s psycology and give them some pleasure time in between their studies.
“My heart leaps up when I behold
A rainbow in the sky:
So was it when my life began;
So is it now I am a man;
So be it when I shall grow old,
Or let me die!
The Child is father of the Man;
I could wish my days to be
Bound each to each by natural piety.
– William Wordsworth
குழந்தைகளுக்கு திறந்த மனம் ஒரு பெரும்பாக்கியம். என் தங்கை ஸ்லேட்டில் எழுதின மார்க்கை, அப்பாவுக்கு காண்பித்தாள். ‘எத்த்னைக்கு’ என்று அவர் கேட்டார். அவள்: ‘அப்பா! மார்க் எல்லாம் காசுக்கு இல்லை. ஃப்ரீ.’
Article is good. Though I am working as a Teacher in a Pvt School, I used to give equal importance to both curriculam as well as extra-curricular activities like drawings,paintings and sports etc.. Then only child will shine.
Thank you mam
Saradha Sridharan-Srirangam
Really superb! As a father of two children, I also support your views and opinions. Children are pillars of future. So they should have both physical as well as mental development. For this equal importance to games and sports should be given at the school level.
Good and Thank you
Trichy Sridharan
Very good article madam. As i am a grand father of three, I know that this world is very competitive. And in order to make their children shine in this competition, parents harress their children. Good work.
Very nice article. Parents should take care that their children don’t hate their studies. Parents should also stop comparing their children with others as this makes them jealous. Parents should not always talk about studies. Parents should also support the children by boosting their confidence escpecially during exams.