இலக்கியம்கவிதைகள்

காந்தி தாத்தா!

 

பாகம்பிரியாள்

கண்ணான தலைவராம் என புகழப்படும்    
காந்தியிடமிருந்து எல்லோரும், தனக்கு
வேண்டியதெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். .

அவரின் வாழ்க்கை சரிதத்தை
வெள்ளைக்காரன் படமாய் எடுத்தான்.
வாரிக் கொட்டியது பணமும் பெயரும்!

அரைக்கால் தெரியும் வெள்ளை ஆடையை
அனைத்து ஏழைகளும் பாரபட்சமின்றி
தனது உடையாய்  எடுத்துக் கொண்டனர்.

அவரின் ஒத்துழையாமை கொள்கையை
எல்லா கட்சி  அரசியல்வாதிகளும்
அவரவர் கையில் ஆயுதமாய் எடுத்துக் கொண்டனர்.

கம்பி போட்ட சிறைச்சாலையும்,  
கண்ணைக் கட்டி இருக்கும்  நீதித்துறையும்
களையான அவர் படத்தை எடுத்துக் கொண்டன.

சுண்டியிழுக்கும்  அவரின்  நல்ல பெயரை,
சுறுசுறுப்பான அங்காடிகளும், தெருக்களும்,
சிறார்களின்  பள்ளிகளும் எடுத்துக் கொண்டன.

அகலமாய்  சிரிப்பை சிந்தும் அவர்  முகம்
அழகாய் காட்சியளிக்கும்  ரூபாய்  நோட்டுக்களை  
 அச்சடிக்கும் பணியையோ அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
 
அனைத்தையும் பங்கு போட்டுக் கொண்டவர்கள்
அவசியமில்லை என்று விட்டுச் சென்ற உண்மையும்,
அஹிம்சையும்  எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை  

அதனை மீட்கவே, காந்தி தாத்தா தடி ஊன்றியே   
ஓய்விலாது செல்கிறார் வீதி தோறும்,
எங்கேனும் ஓரிடத்திலாவது காண முடியுமென்றே!
 
 
படத்துக்கு நன்றி

http://oxmedia.oxford.emory.edu/studentwiki/index.php/Durga

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

 1. Avatar

  காந்திஜி கவிதை நள்று..
  கள்ளநோட்டிலும் மாறாததுதான்
  காந்தியின் புன்னகை…!

                -செண்பக ஜெகதீசன்…

 2. Avatar

  காந்தியின் புன்னகைக்கு பொன்னகையாய் பின்னூட்டம் தந்த திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு ந்ன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க