விசாலம்

ஹனுமானின் தாகம் தீர்த்த முருகன்!!

 

இலக்குமணன் மயக்கமடைந்து கிடக்கிறார் .ராம   ராவண யுத்தம் தான் .எல்லோர் முகத்திலும் கவலையும் வேதனையும் நிறைந்திருக்க விபீஷணர் எப்படியும்  ஸ்ரீராமரின் சகோதரரைக்காப்பாற்ற துடிக்கிறார் பின் ஜாம்பவானிடம் கலந்தாலோசிக்கிறார் . இப்போது ஜாம்பவான் பேசுகிறார் “கவலைப்படாதீர்கள் இமயமலைப்பகுதியிலிருந்து  சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து முகரவைத்தாலே மயக்கமடைந்தவர் எழுந்து விடுவார் .  யோசிக்க  அவகாசமில்லை உடனே யாராவது போய் அந்த மூலிகையைக் கொண்டு வரவேண்டும் .”

இதோ அனுமான்   எழுந்து நிற்கிறார்  ” நான் போய் அந்த மூலிகையக் கொண்டுவருகிறேன்” என்றபடி விர்ரென்று கிளம்புகிறார். இதோ   சஞ்சீவினி மலை அருகே வந்தாயிற்று . எது மிருத சஞ்சீவினி என யோசிக்க நேரமில்லாததால் அந்தப் பர்வதத்தையே  அலாக்காகத் தூக்கி பறந்து வருகிறார்..அவரது நாக்கு வரண்டு போகிறது .தாகம் தாங்கவில்லை .அப்படியே ஒரு குன்றின் மேல் நின்றபடி தாகத்திற்குத் தண்ணீர் தேடுகிறார் . கண்களை மூடியபடி முருகப் பெருமானைத் தியானம் செய்கிறார். . அடுத்த வினாடியே அங்கு அழகன்   புன்னகை முகத்துடன் நிற்கிறான் .கூடவே தெய்வானையும் நிற்க சுபிரமண்யர்  தன் வேலை எடுத்து அந்தக் குன்றின் இடுக்கில்   பாய்ச்ச அப்படியே   நீர்   கசிந்து  பின் வேகமாக வர அனுமானும்  பக்தியால் கண்கலங்கி  முருகனை வணங்கி தாகச்சாந்தி செய்து கொள்கிறார் . பின் இலக்குமணனைக் காப்பாற்ற பறக்கிறார்

இந்தப் புனிதமான இடத்திற்குப் போகும் பாக்கியம் எனக்கு சமீபத்தில் கிட்டியது இந்த இடத்தின் பெயர் அனுவாவி  . அனுமன் பெயரால் வந்த குளம் என்ற பொருள் இருக்கலாம் . கனுவாய் , ஆனைக்கட்டி, போகும் ரூட்டில் இந்தக் கோயில் வருகிறது பெரிய தடாகம் என்ற   இடத்தில் அமைந்திருக்கிறது, இக்கோயில். .இந்தகோயிலுக்குப்போகும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையும் நம்மைத் தொடர்ந்து வாருங்கள் என்று  அழகாக   தன் கைகளை நீட்டி வரவேற்பது போன்ற தோற்றம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. சுற்றுப்புரத்தில் காடு இருப்பது தெரிகிறது அடிக்கடி யானைகளும் நீர் குடிக்க இங்கு வருவதாக இங்கு இருப்பவர்கள் சொன்னார்கள் .   விவசாயமும்  செங்கல் செய்வதும் இந்த கிராம மக்களின் தொழில்  என்று  தெரிய வந்தது

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சரியாகத்தான் இருக்கிறது மருதமலை ஆகட்டும் .ரத்னகிரி ஆகட்டும்  இந்த முருகன் ஏன் ஒருவரது சௌகரியமும் பார்க்காமல்  மேலே போய் அமர்ந்து விடுகிறார்?

. வயதானவர்களெல்லாம் எப்படி ஏறி தன்னை வந்து பார்ப்பார் என்று கொஞ்சமாவது யோசிக்கிறாரா? இப்படி உச்சியில் போய் கோயில் கொண்டு  விடுகிறாரே !ஒரு சமயம் “என்னால் முடியும் என்ற எண்ணமும் “எல்லாம்முருகன் பார்த்துப்பான்” என்ற சரணாகதியும்  ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி குன்றின் மேல் போய் அமர்ந்து விடுகிறாரோ என்னமோ ! உயரத்தைப் பார்க்க எனக்கும்  எப்படி ஏறப் போகிறோம் என்ற  பயம் இருந்தது . என் கூட வந்தவர்கள சுமார் 550 படிகளாவது  ஏற வேண்டும் என்று சொல்லுகையில்    உள்ளூர ஒரு கலக்கம் …..எப்படியும் ஏறித்தான் போகவேண்டும் .முருகன் தரிசனம் என்றால் சும்மாவா என்று என் மனம் எண்ண, என்னைச் சுற்றி முருகனின் ஒளியை ஒரு பாதுகாப்பு வட்டம் போல் கற்பனை செய்து கொண்டேன் , எப்போதுமே நான் எதை வாங்குகிறேனோ இல்லையோ தவறாமல் மூச்சு என்னை வாங்கும் அதுவும் மேலே ஏற ஏற .. கழுத்தில் இருக்கும் குழி உள்ளே போய்விட்டு .போய்விட்டு வரும் ஆனாலும் இந்த அனுமானுக்கு அருளிய முருகனை எப்படியும் பார்த்தே தீரவேண்டும் என்ற தாகம் ……..அனுமனுக்கு ஏற்பட்ட தாகத்தை விட அதிகமாக இருந்தது ஆயிற்று கோயில் வாசல் வந்தாயிற்று .  அழகாக  வெல்கம் ஆர்ச் என்பது போல் பாதி வளைந்த வட்டத்துடன் முகப்பு  எங்களை வரவேற்றது ,அதில் சிற்பக் கலையின் நுணுக்கங்களைப் பார்க்க முடிந்தது

சிறிது தூரம் வந்தவுடன் ஒரு பெரிய கணபதி அங்கு அமர்ந்திருக்க பலர் அவருக்கு தீபமும் கற்பூரமும் ஏற்றுகின்றனர்  நானும் சுறுசுறுப்பாக  ஒரு 200 படிகள்: ஏறிவிட்டேன் அதன் பின் தான் எனக்கு முச்சு விட சிரமம் ஏற்பட்டது . என் கூட வந்த இரு பெண்மணிகள்  ” நாங்கள் இங்கேயே ஒரு மேடையில்
உட்க்கார்ந்திருக்கிறோம் நீங்கள் போய் வாருங்கள் “என கழண்டு கொண்டனர்

.நான் மலேசியாவில் இருக்கும் முருகனை அத்தனை படிகள் ஏறிப் பார்த்தேனே இங்கு பார்க்கமாட்டேனா என்ற வில் பவர் .என்னை மேலே ஏற ஊக்கிவித்தது, தவிர முருகன் வழிகாட்டுவான் என அசைக்க முடியாத நம்பிக்கை ஓம் சரவணபவ என்றபடியே மேலே ஏறத் தொடங்கினேன் .இப்போது கடைசி ஐம்பது படிகள் இருக்க   என்  தலைச்சுற்றுவதுபோல் தோன்றி என்  உடம்பை என்னவோ செய்தது    “முருகா  என்னை அழைத்துப்போ ,இன்னும் கொஞ்சம் படிகள் தான் பாக்கி “என்று என் வாய் சொல்ல திடீரென்று உடலில் ஒரு புத்துணர்ச்சி   ஏற்பட்டது அவ்வளவுதான் .ஒரு படியிலும் ரெஸ்ட் எடுக்காமல் நேரே மேலே ஏறிவிட்டேன் , இது  என் முருகன் அருளால் தான் ஏற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை .முருகா  இப்படியும் உன் கருணையா என்றபடி  கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து  மள மளவென்று தண்ணீர் குடித்தேன் ,

உள்ளே கர்ப்பகிரஹத்தில் சுப்பிரமண்யன் தேவ்யானை  ,வள்ளியுடன்  நின்று புன்னகைத்தபடி அருள் புரிகிறார் பார்க்கப் பார்க்க அத்தனை அழகு.அழகான வடிவம்  .அவனது   கண்கள் நம்மையே பார்ப்பது போன்று தோற்றம் அளிக்க இருகைகளைக்கூப்பியபடி  அவனையே பார்த்து நின்றேன்அப்படி  நின்றதில் கிடைத்த ஆனந்தத்தை   சொல்லி இயலாது அதன் அருகில் அடுத்த பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும்  கம்பீரமாக கைகளில் சஞ்சீவனி மலையைத்தூக்கியபடி காட்சி அளிக்கிறார் .முருகன் கோயிலில் ஆஞ்சநேயர் இருப்பது அபூர்வமாகவும் விசேஷமாகவும் இருக்கிறது முருகன் தன் வேலால் உண்டாக்கிய அனுவாவி சுனை மருத்துவ குணம் கொண்டது அந்தச் சுனையின் நீரை பக்தி சிரத்தையோடு அருந்த எந்த விதமான நோயும் சரியாகிவிடுகிறதாம் சுனையின் நீரும் மிகவும் ருசியாக இருக்கிறது

வெளிப்பக்கத்தில் மரத்தால் ஆன ரதமும் வைக்கப்பட்டிருக்கிறது தைப்பூசம்,வைகாசி விசாகம் சஷ்டி கிருத்திகைப்போன்ற நாட்களில் இந்த மர ரதத்தில்  முருகன் இரு மனைவியர்களுடன் உலா வருவாராம், இடும்பனுக்கும்  ஸ்பெஷல் இடம்  உண்டு .இந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த முருகன் தான் குலதெய்வமாம் .முருகன் வேலால் குத்தி வரவழைத்த நீரைத் தான் இந்த கிராம மக்கள் உபயோகப்படுத்துகின்றனர்   இந்த முருகனுக்குப்பூஜை செய்ய வருபவரும் இந்த கிராமத்தைச்சேர்ந்தவர் தான் என்று அங்கு இருந்த ஒருவர் கூறினார் . அந்த ஊர் மக்கள் எத்தனை வயதானாலும் அபிஷேகத்திற்கான பொருட்களைத்தூக்கியபடி அத்தனைப்படிகளையும் ஏறி மேலே வந்து பிரார்த்தனைகள்  செலுத்த வருகின்றனர்  நான் அங்கு இருந்த போது கூட ஒரு வயதானவர் தன் கையில் பெரிய பூமாலை, .பால் நிரம்பிய பாத்திரம்   என்று இரு கையிலும் பல சாமான்களுடன் படிகளைக்கடந்து வந்துக்கொண்டிருந்தார் .  அது அவரது குல தெய்வமாதலால் மிகுந்த சிரத்தையுடன் பூஜைகளை நடத்தினார் .பின் சஷ்டிகவசம் படிக்க ஆரம்பித்தார் .. நாங்களும் அவருடன் சஷ்டி கவசம்
ஓத அன்றைய தினம் மறக்கமுடியாத தினமாக நினைவில் நின்றது

இங்கு   வைகாசி விசாகம் .ஆடி கிருத்திகை .தைப்பூசம் போன்ற முருகனின திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர் .ஆனால் சூரசம்ஹாரம் இங்கு நடப்பதில்லை என நினைக்கிறேன் திருத்தணி போல் இங்கும் சுப்பிரமண்யன் வள்ளி தேவானையுடன்  சேர்ந்து  நாடி வந்த பக்தர்களுக்கெல்லாம் அருள் புரிகிறார் . மேற்குதொடர்ச்சி மலையின் சூழலில் அதிரம்யமான இயற்கையின் நடுவே அவர் அமைதியுடன் ஆனந்தமாக இருப்பதைப்பார்த்தாலே நம் வாழ்க்கையிலும் பேரானந்தம் தான் என்று நமக்கும்  ஏதோ ஒரு புல்லரிப்பு உண்டாகிறது ,

ஓம் சரவணபவ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *