என். சுவாமிநாதன்

காலையில் கண்விழிக்குமுன் அந்த உரையாடல் என் காதில் கேட்டது.

என் மனைவியும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“எங்கடி உன் கத்திரிக்கோல் ? அப்பாக்குத் தலையில முடி வளர்ந்து அசிங்கமா இருக்கு. நாமளே வெட்டி விடலாம். இல்லாட்டி கடைக்குப்
போயி ஏகப்பட்ட காசு செலவழிச்சு வெட்டிண்டு வருவார்”

“அம்மா. கத்திரிக்கோல் ஸ்கூல் காபினெட்ல இருக்கு. அது முடி வெட்டற கத்திரிக்கோல் இல்ல. பேப்பர்தான் வெட்டும்”

“அது போறும் உங்கப்பாக்கு முடி வெட்ட. நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வரச்சே எடுத்துண்டு வா”

இதைக் கேட்டவுடனே எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. “பாவிகளா, என் தலைதான் கிடச்சுதா உங்களுக்கு. நீங்க அம்பது, நூறுன்னு செலவழிச்சு ஹேர்டிரஸ்ஸிங் பண்றது தெரியல. நான் வருஷத்துக்கு ரெண்டு தடவை சலூனுக்கு போனா உறுத்தறதா”.. சொல்லத்தான் நினைத்தேன், ஆனால் வெளியே சொல்லவில்லை.

அன்றே காலையே நான் வழக்கமாகப் போகும் மரியாவின் சன் சலூனுக்கு போய்விட்டேன்.

சலூனில் மரியா ஒரு ஜப்பானியக் கிழவருக்கு முடி திருத்திக் கொண்டிருந்தாள்.
 
என்னைப் பார்த்து, ”குட் மார்னிங். கம். ஸிட் டவுன். யு ஆர் நெக்ஸ்ட்” என்றாள்.

சோபாவில் அமர்ந்து அங்கிருந்த ஸ்பானிஷ் பத்திரிக்கைகளைப் புரட்டினேன். மரியா ஸ்பானிஷ்காரி. ஆங்கிலம் கொஞ்சம் பேசுவாள். ஸ்பானிஷும் இங்கிலீஷும் கலந்து அவள் பேசுவதில் பாதி புரியாது. ஆனால் தொழிலில் கெட்டிக்காரி.

அரைமணி ஆச்சு. இன்னமும் சிரத்தையாக திருத்திக் கொண்டிருந்தாள்.

அவள் முடி வெட்டிக் கொண்டிருந்த ஆளுக்கு தலையில் மிகக் கொஞ்சமே முடி இருந்தது. கவுண்டமணி மாதிரி அந்த ஆள் மீது பாய்ந்து இருக்கிற முடியைப் பிடுங்கி கையில் கொடுத்து முடி வெட்டியாச்சு, இந்த இடத்தை விட்டு ஓடுடா என்று சொல்லலாமா என்று தோன்றியது.

அப்பொழுது எனக்கு பீட்டர் நினைவு வந்தது.

”மரியா.. நேரமாகுமா.. உன் தம்பி பீட்டர் இருக்கானா ? வருவானா?” என்றேன்.

“பீட்டர்…நோ கம் ”….

மொட்டையா இப்படிச் சொன்னது எனக்கு புரியவில்லை.

லீவு எடுத்துவிட்டானோ இல்லா லேட்டா வருவானோ..

ஆறுமாசம் முன்னால் வந்தபோது மரியா ஒரு சிறுவனுக்கு முடி வெட்டிக் கொண்டிருந்ததால், பீட்டரைத்தான் எனக்கு முடி வெட்டச் சொன்னாள். ”பீட்டர் என் தம்பி, மெக்சிகோவிலிருந்து வந்திருக்கிறான்” என்று விளக்கினாள்.

பீட்டர் வந்து எனக்கு வணக்கம் சொன்னான். நாற்காலியில் அமர வைத்தான். என் மூக்குக் கண்ணாடியை வாங்கி மேசைமீது வைத்தான். என்னை கழுத்தைத் துணியால் போர்த்தினான்.

தலை முழுவதும் தபலா வாசிப்பது போல விரலால் தட்டி, “ லாங் ?மீடியம் ? ஷார்ட் ?” என்று வினவினான்.

மரியா இப்படிக் கேட்கமாட்டாள். அவளுக்கு ஷார்ட் என்று சொல்ல வராது. ஷாட் என்றே சொல்வாள். “ஷாட், நோ ஷாட்” என்பாள்.   ஷாட் என்றாள் முடியைச் சின்னதாக வெட்டிவிடுவாள், நோ ஷாட் என்றால் தலை மொட்டையாகும்.

மையமாக “மீடியம் லாங்” என்றேன்.

இது புரியாமல் மரியாவிடம் அவன் ஏதோ கேட்க, அவளுக்கும் இவனுக்கும் ஸ்பானிஷில் ஒரு வாக்குவாதம்  நடந்தது. கடைசியில் மரியா பீட்டரிடம் ஒரு கத்திரிக்கோலை எடுத்துக் கொடுத்தாள். அவளிடம் பலமுறை கேட்டு பற்பல கத்திரிக்கோல்களால் வெட்டினான். என் தலை ஒரு முடி வெட்டலில் அவ்வளவு தினுசு கத்திரிக்கோல்கள் கண்டதில்லை. எனக்கு முன்னும் பின்னாலும் ஒரடி தள்ளிநின்று ஏதோ பார்ப்பான். பிறகு பாய்ந்து வந்து வெட்டுவான். அவனிடம் ஒரு சிற்பக் கலைஞனின் நேர்த்தியும், கவனமும் இருந்தன.

அவனுக்கு திருப்தி ஏற்பட்டதும் ஒரு கத்தியைத் தீட்டி என் முகத்தில் சோப்புத் தடவி மழிக்க ஆரம்பித்தான்.

திடீரென்று “ஃபிரம் இண்டியா?” என்றான்.

நான் தலையசைக்க, “நேற்றிரவு ஒரு இண்டியா படம் பார்த்தேன். பாட்டு சூப்பர். டான்ஸும் சூப்பர்” என்றான்.

என்ன படம் என்று கேட்டதற்கு அவனால் சொல்ல முடியவில்லை. மரியாவைக் கேட்க அவளுக்கும் சொல்ல முடியவில்லை. ”அந்தக் கதநாயகி அழகாக இருந்தாள். பெயர் தெரியவில்லை. இப்படி இருப்பாள்” என்று கைக் கத்தியால் காற்றில் ஒரு படம் வரைந்தான். அளவுகளைப் பார்த்தால் நமீதா அல்லது மல்லிகா ஷெராவத் என்று தோன்றியது.

கொஞ்ச நேரம் முக மழிப்புக்குப்பின் “ அந்தப் படத்துல எனக்கு ஒண்ணு புரியல. கதாநாயகியும் கதாநாயகனும் ஏழைங்க. எப்படி அவங்களுக்கு பிரான்ஸுலயும், கனடாவிலயும் போய் டான்ஸ் ஆடமுடியுது? காசு ஏது ?” என்றான்.

எனக்கும்தான் அது புரியவில்லை. ”அது கனவு சீன்தான். காசு செலவு இருந்திருக்காது” என்று ஏதோ சொன்னேன்.

“இன்னொரு விஷயம். அவள் அழகா இருக்கா. அவளோட பாய்ஃபிரண்டும் நல்லா இருக்கான். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கு. ஏன் அவள் அப்பன் அவர்கள் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை ?” என்றான்.

”எல்லா இந்தியப் படத்தோட கதையும் இதான். ஜாதி, மத, அந்தஸ்து வித்யாசத்தால் இப்படித்தான் ஆகிறது” என்றேன்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “பிராடஸ்டெண்ட், கத்தோலிக் போலவா” என்றான்.

”அது போலத்தான்”

“இருக்கட்டுமே. அவள் அப்பனுக்கு என்ன வந்தது ? பொண்ணு செய்யற முடிவை இவன் ஏன் தடுக்கணும் ? இது அனியாயம் இல்லியா ?”
என்று என் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வினவினபோது, உலகத்துக் காதல் கல்யாணங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல் நானே முன்னின்று நடத்தி வைக்கத்தயாராய் இருப்பதைச் சொன்னேன்.

“குட்” என்று சொல்லிக் கத்தியைக் கீழே வைத்தான்.

நாற்காலியை ஒரு முறை சுழற்றி என் தலையை பல கோணங்களில் பார்த்து இறுதியாக சிறு திருத்தங்கள் செய்து, வெட்டிய முடித் துண்டுகளை வாக்வம் கிளீனரால் விலக்கி, தலையில் எண்ணெய் போட்டு படிய வாரி கழுத்தையும் இதமாய்த் திருகிவிட்டான்.

நான் அவனுக்கு கூடுதலாய் இரண்டு டாலர் டிப்ஸ் கொடுத்தேன்.

இன்று அவன் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது.

மரியா கிழவருக்கு முடிதிருத்தி முடித்து விட்டாள். அப்பாடா என்று பெருமூச்சுடன் எழுந்தேன்.

மரியா கிழவரிடம் ஒரு பாட்டிலைக்காட்டிச் சரமாரியாக ஸ்பானிஷில் ஏதோ சொன்னாள்.அவள் கையால் காட்டிய சாடைகளிலிருந்து, அந்த பாட்டில் தைலத்தை தலையில் தேய்த்துக் கொண்டால் தலைமுடி முழங்கால் வரை வளரும் என்பதாகப் புரிந்தது.

பொய் சொல்லுவதற்கும் ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

”நாலு பாட்டில்கள் கொடு” என்று வாங்கிக்கொண்ட கிழவர், ஒரு நூறு டாலர் நோட்டைக் கொடுத்து, ”பாக்கியை நீயே வெச்சுக்க” என்று சொன்னதும், மரியா இடுப்புவரை குனிந்து வணங்கி வாசல் வரை போய் அவரை வழியனுப்பிவிட்டு வந்தாள்.

என்னைப் பார்த்து ”கமான், ஸிட் டவுன்” என்று உபசரித்து என்னை நாற்காலியில் அமர்த்தினாள்.

“எவ்ளோ நேரமா காத்திருக்கேன் ?பீட்டர் இருந்தா நல்லாயிருந்திருக்கும். அவன் எங்க ? தனியாக் கடை வெச்சுட்டானா ?” என்று வினவினேன்.

அவள் ஒரு நிமிஷம் என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் சற்று கலங்கி விழியோரத்தில் ஒரு சொட்டு கண்ணீர் தெரிந்தது.

“பீட்டர்..பீட்டர்.. இன் ஜெயில் இன் மெக்சிகோ” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

“ஜெயிலா ? ஏன் ? என்னாச்சு ?”

அவள் சொன்னதிருந்து எனக்குப் புரிந்தது:

“பீட்டர் தன் குடும்பத்தைப் பார்த்து விட்டு வர மெக்சிகோ போயிருக்கிறான். தன்னுடைய பெண் ஒரு குவாட்மாலா நாட்டுப் பையனைக் காதலித்துக் கல்யாணம் செய்ய விரும்புவது அவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு பார்ட்டியில் அந்தப் பையனைக் கண்டிக்கப் போய் பெரிய வாக்குவாதமாகி அவனை பீட்டர் கத்தியால் குத்திவிட்டான். போலீசு பிடித்துக் கொண்டு போய் வழக்கு போட்டு, இப்பொழுது ஜெயிலில் இருக்கிறான். வெளியில் வர அஞ்சு வருஷத்துக்கு மேலாகும்”

=======================

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “காதல் கல்யாணம்

 1. //இதைக் கேட்டவுடனே எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. “பாவிகளா, என் தலைதான் கிடச்சுதா உங்களுக்கு. நீங்க அம்பது, நூறுன்னு செலவழிச்சு ஹேர்டிரஸ்ஸிங் பண்றது தெரியல. நான் வருஷத்துக்கு ரெண்டு தடவை சலூனுக்கு போனா உறுத்தறதா”.. சொல்லத்தான் நினைத்தேன், ஆனால் வெளியே சொல்லவில்லை//

  🙂 சிரிப்பு இங்கயே ஆரம்பித்துவிட்டது!!

  //இருக்கட்டுமே. அவள் அப்பனுக்கு என்ன வந்தது ? பொண்ணு செய்யற முடிவை இவன் ஏன் தடுக்கணும் ? இது அனியாயம் இல்லியா ?”
  என்று என் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வினவினபோது, உலகத்துக் காதல் கல்யாணங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல் நானே முன்னின்று நடத்தி வைக்கத்தயாராய் இருப்பதை../

  //

  :):) நகைச்சுவை உணர்வு ஆசிரியருக்கு அதிகம் என தெரிகிறது:0

  //மரியா கிழவரிடம் ஒரு பாட்டிலைக்காட்டிச் சரமாரியாக ஸ்பானிஷில் ஏதோ சொன்னாள்.அவள் கையால் காட்டிய சாடைகளிலிருந்து, அந்த பாட்டில் தைலத்தை தலையில் தேய்த்துக் கொண்டால் தலைமுடி முழங்கால் வரை வளரும் என்பதாகப் புரிந்தது.

  பொய் சொல்லுவதற்கும் ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.//

  ரொம்ப பொதுவான பொய்யா இருக்கு எல்லா இடத்திலயும்:)

  ஆக முடிதிருத்தற நிலைய அனுபவத்தை இதைவிட நகைச்சுவையாய் எழுதிவிடமுடியுமா? ரசித்தேன் மிகவும் அதிலும் முடிவு!

 2. சிரிக்க சிரிக்க எழுதிய கதையைப் படித்து மீண்டும் மீண்டும் வாய்விட்டு சிரித்தேன்.
  “உலகத்துக் காதல் கல்யாணங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல் நானே முன்னின்று நடத்தி வைக்கத்தயாராய் இருப்பதைச் சொன்னேன்.” …..எனப் படித்ததும் மீண்டும் கட்டுப்படுத்த முடியாத சிரிப்புதான் வந்தது.

 3. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கொண்டே இவ்வளவு குசும்பு என்றால் நல்லுத்துகுடியில் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பீர்கள் . சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிப் போச்சு.     🙂 

 4. மத்தவா எல்லாரும் சிரிக்கச்ச நான் சிரிக்காமல் இருப்பேனே.  கதையை படித்து விட்டு, ‘மத்தவா எல்லாரும் சிரிக்கச்ச நான் சிரிக்காமல் இருப்பேனே.  கதையை படித்து விட்டு, ‘என் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வினவினபோது’ என்ற அற்புதமான சீனை அசை போடும் போதும் சிரித்தேனா! அப்படியாக சிரித்துக்கொண்டிருக்கும் போது வந்த என் பேத்தி, ‘தாத்தா! எதுக்கு நீயே சிரிச்சுக்கிறே’ என்று அப்பாவியாக கேட்டாள். நான் பலமாக சிரித்தேன். பேத்தி, ‘அம்மா! வந்து பாரு. தாத்தாவுக்கு சிரிப்பு பைத்தியம் பிடிச்சுடுத்து.’. 

  ஆனாலும், முடிவு பரிதாபம்.

 5. கதை நகைச்சுவையாக இருந்தாலும் “ஒருவரின் சிந்தனைக்கும் அவரது பேச்சுக்கும் எதிராகவே அவரது செயல்கள் இருக்கும் என்ற கருத்தை நாசூக்காக “பீட்டர்” கதாபாத்திரம் மூலம் நச்சுனு சொல்லியுள்ள ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *