கவிநயா

நம் தாய் மொழி பற்றி அடிமனசில் கனன்று கொண்டிருந்த கவலையை சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் நன்றாக விசிறி விட்டு விட்டது. எதிர்காலம் கண் முன்னே காட்சிகளாக விரிய விரிய, அதில் உள்ள உண்மையும் நிதர்சனமும் நெஞ்சில் அறைகிறது. நமக்குத் தேவையான விழிப்புணர்வை இந்தப் படம் சரியான சமயத்தில் தந்திருப்பதாகத் தோன்றுகிறது.

நம் தமிழ் மொழியின் சிறப்பு எத்தகையது? காஞ்சி மஹா சுவாமிகளின் திருவாய் மொழி மூலமாகக் கேட்போம்…

காஞ்சிப் பெரியவர் ஒரு முறை கி.வா.ஜ. விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும், “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம். அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!”, என்றார்.

கி.வா.ஜ. அவர்கள் அடக்கமாக, “பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்”, என்றார்.

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும் அழகு, இனிமை, இவற்றைக் குறிப்பதாகவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ், இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை.  ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடம் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா?” என்றார்.

உடனே கி.வா.ஜ. அவர்கள், “இதை விடப் பொருத்தமாகச் சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்”, என்றாராம். (எஸ். கணேச சர்மா அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து தட்டச்சிய வரகூரான் நாராயணன் அவர்களுக்கு நன்றி)

பலப் பல மொழிகளிலும் வல்லமை பெற்றிருந்த பாரதி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றுதான் சொன்னானேயன்றி, “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று சொல்லவே இல்லை! (அதே தவறான புரிதலில்தான் நானும் இருந்தேன் என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறேன்). நம் பாரதி, நம் தமிழ் மொழியின் பெருமைகளைத்தான் விண்டு விண்டு வைக்கிறான்! மேலும், யாரோ ஒருவர் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னதைப் பொறுக்க முடியாமல், அந்த நிலை வராதிருக்க என்ன செய்ய வேண்டுமென்றுதான் இங்கே சொல்கிறான், பாரதி. முழுக் கவிதையும் கீழே இருக்கிறது, கவனமாகப் படித்தால் உங்களுக்கும் புரியும். (நன்றி: http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_5671.html)

ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். (1)
 
மூன்று குலத் தமிழ் மன்னர் – என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். (2)
 
கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல
காற்றையும் வான் வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் – பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். (3)
 
சாத்திரங் கள்பல தந்தார் – இந்தத்
தரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் – தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். (4)
 
நன்றென்றுந் தீதென்றும் பாரான் – முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் – வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். (5)

 
கன்னிப் பருவத்தில் அந்நாள் – என்றன்  
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்  
என்னென்ன வோபெயருண்டு – பின்னர்  
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர். (6)  
 
தந்தை அருள்வலி யாலும் – முன்பு  
சான்ற புலவர் தவவலி யாலும்  
இந்தக் கணமட்டும் காலன் – என்னை  
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான் (7)  
 
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி  
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!  
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு  
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)  
 
‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச  
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;  
மெத்த வளருது மேற்கே – அந்த  
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)  
 
சொல்லவும் கூடுவதில்லை – அவை  
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை  
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த  
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’ (10)
 
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!  
இந்த வசையெனக் கெய்திடலாமோ?  
சென்றிடு வீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)  
 
தந்தை அருள் வலியாலும் – இன்று  
சார்ந்த புலவர் தவ வலியாலும்  
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்  
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)

நீங்களும் மணி ராம் என்பவர் இயக்கிய “தமிழ் இனி…” என்ற இந்தப் படத்தைப் பாருங்களேன்… அவரும் கடைசியாக பாரதியின் கவிதையைத் தவறாக mislead பண்ணும் வகையில்தான் சேர்த்திருக்கிறார் என்றாலும், சரியான நேரத்தில் விழிப்புணர்வு தரும் இந்தக் குறும்படத்தைத் தந்தமைக்கு அவருக்கு நன்றி.

இனியேனும் நாமும் தமிழில் பேசி, நம் சந்ததியினரையும் தமிழில் பேச ஊக்குவிப்போமா? பாரதி சொன்னவற்றை மனதில் கொள்வோமா?

 
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். என் அன்னைத் தமிழோடு!

 

அன்புடன்

கவிநயா

 

பி.கு: இந்தப் பதிவில் படத்திற்கான சுட்டியையும் இணைத்திருந்தேன்; ஆனால் அது you tube-ல் இருந்து நீக்கப் பட்டு விட்டதாகத் தெரிகிறது. மன்னிக்கவும்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *