சத்திய சாயி பாபா: அதி மாயையும் விதி மீறலும்

3

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Maravanpulavu Sachithananthanஉயிர்கள் பெறுமதியானவை. வாழ்வு அரிய கொடை. ஒருவரின் இறப்பு வருத்ததுக்குரியது. அநத வகையில் புட்டபர்த்தி சத்திய சாயி பாபாவின் இறப்பைப் பார்க்க.

சத்திய சாயி பாபா வேறு, சாயி பாபா வேறு. முன்னவர் புட்டபர்த்தி, பின்னவர் சிருடி. பின்னவரின் மறுபிறப்பாகத் தன்னைக் கொண்டவர் முன்னவர்.

ஈழத் தமிழ் மக்களுள் குறிப்பிடத்தக்க தொகையினர், முன்னவரின் கூட்டத்திலுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மருத்துவர் சோமசுந்தரம், 1960களில் சத்திய சாயி பாபா நடைமுறைகளைப் பரவலாக்க முயன்றவர்.

எனினும் 1980களுக்குப் பிறகே சத்திய சாயி பாபாவுக்கான கூட்டம் ஈழத் தமிழரிடையே பரவலாகியது.

மருத்துவத்தால் நலம்பெற முடியாதவர், வணிகத்தில் தோல்விகளைச் சந்தித்தவர், பதவி உயர்வுகள் கிடைக்காதவர், மக்கட் பேறற்றவர், இவ்வாறாக உலகியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் அற்புதத்தால் தமது நியாயமான எதிர்பார்ப்பு நிறைவேறும் எனக் கருதியவர்கள் சத்திய சாய் பாபாவிடம் சென்றனர்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை அவர் வழங்கினார். அந்த நம்பிக்கை, உளவியல் வாழ்க்கையில் அவர்களுக்குத் துணையாக இருந்ததே அன்றி உலகியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதனவாகத் தொடர்ந்தன.

மந்தை உளவியலால் பலர், சத்திய சாய்பாபாவிடம் சென்றனர். அயலவர், தெரிந்தவர் அழைக்கிறார், செல்கிறார், நாமும் போவோம் என்ற கண்ணோட்டத்துடன் சென்றவர் தொகை, மிக மிக அதிகம். இந்த உளவியலால் இந்தியாவில் உள்ள பல்வேறு காவி உடையாளரிடம் ஈழத்திலிருந்து பலர் சென்றனர்.

இந்தக் காவியாளரின் குழுவில் உள்ளேன் எனக் கூறுவதில் அத்தகையோர்களுக்கு இடையில் தன்முனைப்புச் சார் போட்டிகளும் இருந்தன.

தொண்டு என்ற சரியை, பூசை, திருவிழா விரத அனுட்டானம் போன்ற கிரியை முறைகளை இறைவழிபாட்டுக்கு உரியதாய்க் கொண்டவரே ஈழத்தில் சைவ சமயிகளிடையே பெரும்பாலானவர்.

மன ஒடுக்கம் என்ற யோகம், அந்த யோக நிலையில் தொடரும் ஞான வழிகளைச் சைவ சமயத்தில் சொல்லிக் கொடுப்போர் மிக அரிதாயினர்.

தோத்திரங்கள் எளிதானவையாய் இருப்பினும் சாத்திரங்கள் சாதாரண மக்களுக்கு அரிதானவையாக இருந்ததால், எளிதான தத்துவ விசாரத்தில் ஈடுபடுவோர் வேதாந்தத்தை நாடினர்.

1940கள் தொடக்கம் விவேகானந்தரின் உரைகள், இராமகிருட்டிண அமைப்பின் தொண்டு நோக்கு ஆகியவை ஈழத்தவரை ஈர்த்தன. ஈழத்தவர் பலர் பிரமசரிய வாழ்வுக்கு அந்த அமைப்பை நாடினர். இத்தகையோருக்குத் திருவண்ணாமலை இரமணாச்சிரமும் புகலிடமாயிற்று.

ஈழத்திலேயே யோக சுவாமிகள் போன்ற ஞானத் தேடிகளுக்குப் பின் சென்றவர்களுட் பலர், அவரிடம் உள்ள அற்புத ஆற்றலால் தம் உலகியல் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவே போய்வந்தனர்.

அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர் என்ற தகைமை அவர்மீது கற்பிக்கப்பட்டதை யோகர் சுவாமிகளே ஒப்பவில்லை. அவரின் ஞானத் தேடல், அவரிடம் வருவோர் பலரின் உலகியல் எதிர்பார்ப்புத் தேடலுக்கு உடன்பாடாகாததால் தம்மிடம் வருவோர் பலரை யோகர் சுவாமிகள் ஓட ஓட விரட்டுபவரானார்.

இந்தப் பின்னணியில் ஈழத்துச் சைவரிடையே சத்திய சாயி பாபா அறிமுகமாகிறார். அவரே அற்புதத்தால் திருநீறு வழங்குவதான செய்திகளும், ஈழத்தில் அவர் சார்ந்த கூட்டு வழிபாட்டு நிகழ்வுகளில் அவர் படங்களில் இருந்து திருநீறு கொட்டுவதான செய்திகளும் பரவலாயின.

உலகாயதப் பொருள்களான கைக்கடிகாரம், மோதிரம், தங்கச் சங்கிலி போன்றவற்றை அவர் திடீரென எங்கிருந்தோ எடுத்துக் கொடுக்கிறார் என்ற செய்திகள் பரவலாயின.

இலிங்கத்தை வாய்க்குள் இருந்து சிவராத்திரி தோறும் வரவழைக்கிறார் என்ற செய்திகளும் பரவலாயின.

ஈழத்தில் பகுத்தறிவாளர் பலர் இதைக் கேலி செய்தாலும் உலகியல் எதிர்பார்ப்புகளை அற்புதத்தால் உடனுக்குடன் பெறலாம் என்ற எதிர்பார்க்கும் உளவியல் மரபு, இந்தியத் துணைக் கண்டத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே பொதுவான மரபு.

இந்து, புத்தம், கிறித்தவம், இசுலாம் யாவும் சத்திய சாயி பாபாவின் தத்துவப் பார்வைக்குள் இணைந்தன.

1990களில் நிறுவனக் கட்டமைப்பு வழியாகச் சத்திய சாயி பாபா செயற்படத் தொடங்கியதும் இவ்விதச் சமய மரபுகளைத் தனது கூட்டத்தினரிடையே புகுத்தினார். அவரது சின்னத்தில் சிலுவையும் பிறையும் இணைந்தன. புத்தரின் விசாகத் திருநாள், கிறித்துமசுப் பண்டிகை, மீலாத் விழா என்பன சத்திய சாயி பாபாக் கூட்டத்தின் விழாக்களாயின.

Sri sathya sai baba

எந்தவித உடலுழைப்பும் இன்றி, அற்புதங்களைச் செய்வதன் வழி, அவரது நிறுவனம் நன்கொடைகளின் களஞ்சியமானது. வெளிநாட்டு நன்கொடை நிதி குவியும் நிறுவனங்களுள் சத்திய சாயி பாபா அறக்கட்டளை, இந்தியாவின் முதல்நிலை நிறுவனங்களுள் ஒன்றாயது. இந்த நிதிக்கு வெளிநாடுவாழ் ஈழத் தமிழர் வழங்கும் தொகை கணிசமானது.

இந்த நன்கொடைகளின் உதவியுடன் மிகச் சிறந்த வசதிகளின் நடுவே சத்திய சாயி பாபா வாழ்ந்தார். மாளிகை சார் கட்டட அமைப்பில் குளிரூட்டிய அறைகளுள் தங்கினார். சிம்மாசனங்களை அமைத்து அமர்ந்தார். முதல்தர மகிழுந்துகளான கடிலாக்கு மகிழுந்துகளில் பயணித்தார். கோடை வாழ்விடங்களில் மாளிகைகள் கட்டி, வெயில் காலத்தில் ஓய்வெடுத்தார். உயர் சம்பளம் கொடுத்துத் தனது நிறுவனத்தை நடத்தப் படித்த ஆற்றலுள்ள வல்லுநர்களைப் பயன்படுத்தினார்.

நீரிழிவு நோய் அவரைப் பீடித்தது. அதற்காகப் புட்டபர்த்தியில் அமெரிக்கர் ஒருவரின் நன்கொடையுடன் உயர்தர மருத்துவமனையை அமைத்தார். தன் கூட்டத்தாரும் அந்த மருத்துவமனையைப் பயன்படுத்த வழிசெய்தார்.

நன்கொடைகளில் சிறு பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிட்டார், ஆந்திரப் பிரதேசத்தின் இராயலசீமைக் கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டம் வெற்றிகரமான வளரச்சித் திட்டம்.

சத்திய சாயி பாபா அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் அண்மைக் காலமாக வளர்ந்து வரும் தனியார் கல்வி நிலையங்கள் போல நிதி குவியும் நிறுவனங்களாயின.

படிப்படியாக உலகெங்கும் சத்திய சாயி பாபா அறக்கட்டளையின் தொடர்பு நிறுவனங்கள் பதிவாகின, நிதி சேர்த்தன. 100க்கும் கூடுதலான நாடுகளில் அவை உள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவற்றை அங்கங்கே வாழும் ஈழத் தமிழர்களே நடத்துகிறார்கள்.

இலங்கையில் செயவர்த்தனா தொடக்கம் இராசபட்சா வரை இலங்கைக் குடியரசுத் தலைவர்கள் யாவரும் சத்திய சாயி பாபாவின் கூட்டத்தவரே. புட்டபர்த்திக்கு வந்து செல்பவரே. எனினும் இலங்கையில் சத்திய சாய் நிறுவனங்களைச் சைவர்களே நடத்துகிறார்கள். கோப்பாயைச் சேர்ந்தவரும் கொழும்பில் நிலைகொண்டவருமான வன்னியசேகரம் அதன் தலைவர், சத்திய சாயி பாபாவுக்கு நெருக்கமானவர்.

1990 தொடக்கம் புட்டபர்த்தியில் வன்முறைகள் தலைதூக்கத் தொடங்கின. வழமைபோல நிறுவன உட் பூசல்கள் பெருகின. 1993 ஆனியில் சத்திய சாயி பாபாவைக் கொல்ல முயன்ற அறுவர், அவர் கண்முன்னே கொலையாயினர். கட்டிலுக்குக் கீழ் சத்திய சாயி பாபா மறைந்து தன் உயிரைக் காத்துக்கொண்டார். பின் தொடர்ந்த காவல் துறைத் தேடல்களில் வெடிமருந்துப் பொருள்கள், ஆயுதங்கள் என்பனவற்றை அவர் மாளிகைக்குள் கைப்பற்றினர்.

2001 தொடக்கம் சத்திய சாயி பாபா நிறுவனங்கள், ஈழத் தமிழருக்கு எதிராகவும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் உலகெங்கும் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கின. இதற்காகச் சுற்றறிக்கைகளை உலகெங்கும் அனுப்பினர். இதழ்களில் செய்திகளும் வெளியாயின.

அக்காலத்தில் வன்னியசேகரத்தையும் ஈசுவரனையும் சென்னையில் தற்செயலாகச் சந்தித்தேன். சத்திய சாயி பாபா போதிப்பது, அன்பு, அறம். நிறுவனங்களில் உள்ள நீங்களும் மற்றவர்களும் ஈழத் தமிழைரைக் கொலை செய்யச் சிங்கள அரசுக்குத் துணை போவதா எனக் கேட்டேன். புட்டபர்த்திக்குச் செய்தி அனுப்பி இந்தக் கொடுமையைப் போக்குங்கள் எனக் கேட்டேன். புட்டபர்த்தியினர் அப்படிச் செய்தார்களா என வியப்புடன் என்னிடம் வினவிய அவர், அங்கு சொல்கிறேன் எனவும் தெரிவித்தார்.

வன்னியசேகரம் புட்டபர்த்தியில் சொல்லியிருக்க மாட்டார். ஏனெனில் அவர்கள் யாவரும் ஒரு மாயையில் கட்டுண்ட தனிமனித வழிபாட்டினர்.

சத்திய சாயி பாபாவும் தன்னைக் கடவுள் என அறிவித்துவிட்டார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராசப் பிள்ளையார் கோயில் அறங்காவலர்களான ஈசுவரனும் பாலசுந்தரமும் சத்திய சாயி பாபாக் கூட்டத்தினர். அந்தக் கோயிலின் பகுதியாக ஐங்கரன் மண்டபம்.

அங்கே சத்திய சாயி பாபாக் கூட்டத்தினரின் நிகழ்ச்சிகள் நடக்கும். மீலாது விழா நடக்கும், புத்த சயந்தி நடக்கும் கிறித்துமசு விழா நடக்கும். சைவ ஆகம விதிகளுக்குப் புறம்பான நிகழ்ச்சிகள் நடக்கும். நான் இதை அவர்களிடம் எடுத்துக் கூறுவேன். கேட்க மாட்டார்கள்.

அந்தக் கோயிலில் மட்டுன்று, ஈழத்திலுள்ள சைவக் கோயில்கள் பலவற்றுள் இத்தைகைய ஆகம விதி மீறல்களுக்குச் சத்திய சாயி பாபா கூட்டத்தினர் காரணமாக இருக்கிறார்கள்.

கிறித்தவ, இசுலாமிய, புத்த, சைன, நிகழ்வுகளை இந்து வழிபாட்டிடங்களில் நிகழத்துவதைச் சமய சமரச சன்மார்க்கம் எனக் கருதித் தீவிரமாகச் செயற்படும் சத்திய சாயி பாபாக் கூட்டத்தினர், கிறித்தவ, இசுலாமிய, புத்த வழிபாட்டிங்களில் சிவராத்திரி, இராமநவமி, நவராத்திரி போன்ற இந்து நிகழ்ச்சிகளை நடத்த முயலமாட்டார்கள். அந்தந்த வழிபாட்டிடங்களின் விதிகளை மீறமாட்டார்கள். இந்துக்களை மட்டுமே நோக்கிய கிறித்தவ, இசுலாமிய, புத்த, சைன நிகழ்வுகளை நடத்தும் ஆகம விதி மீறும் முயற்சியைச் சமய சமரச முயற்சியாகக் கொள்ளலாமா? சத்திய சாயி பாபாக் கூட்டத்தினர் தம்மைத் தாமே ஏமாற்றுவதுடன் அப்பாவி இந்துக்களையே தம் வெற்றுக் கொள்கைக்கும் செயலாற்றாமைக்கும் பலிக்கடாவாக்குவர்.

தாயின் கருவறையில் வளர்ந்து பிறந்தவர் மனிதர். வினை வழியினர், குறைகளை உடையவர் மனிதர், குறைவிலா நிறைவே இறைவன். குறைகளைப் போக்கி, நிறைவை அடைய முயல்தலே மனிதப் பிறவியின் நோக்கம்.

மனிதரை முழுமையானவர் என்பார் இலர். கடவுளைக் குறைவுடையவர் என்பாரும் இலர். சைவ சமயமும் இதனையே கூறும்.

இந்தக் கொள்கைக்குக்குப் புறம்பாக, நானே கடவுள் என்ற வரிகளுடன், சத்திய சாய் பாபவின் படத்தை ஒட்டிகளாக வீட்டுச் சுவர்கள்தொறும் பூசை அறைகளிலும் வைத்திருப்பவர் தத்தம் குழந்தைகளுக்கு அறியாமையை ஊட்டுகின்றனர். தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்கின்றனர். மந்தை உளவியலைப் பெருக்குகின்றனர். தமிழ்ச் சைவ மரபுகளை வேரோடும் வேரின் மண்ணோடும் பெயர்த்தெறிகின்றனர்.

உயிர்கள் பெறுமதியானவை. வாழ்வு அரிய கொடை. ஒருவரின் இறப்பு வருத்ததுக்குரியது. அந்த வகையில் புட்டபர்த்தி சத்திய சாயி பாபாவின் இறப்பைப் பார்க்க.

=============================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சத்திய சாயி பாபா: அதி மாயையும் விதி மீறலும்

  1. அவரது உடல் நிலையை சீர்செய்யவே மருத்துவமனை கட்டினார் என்று குற்றம் சொல்லும் ஆசிரியர் அதற்கு ஆதாரம் எதுவும் தரவில்லை.

    //ஒருவரின் இறப்பு வருத்ததுக்குரியது// என்று சொல்லும் ஆசிரியர் அவர் இறந்து அவரது பக்தர்கள் சோகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அவரை மோசக்காரர் என்று சொல்வது ஏனோ??

  2. திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் எழுத்துரிமையை நான் மதிக்கிறேன். ஆனால், அதை நிலை நாட்ட, மேற்கண்ட வகையில் எழுத வேண்டிய தருணம் இது அன்று. நான் ஸ்ரீ ஸ்ரீ, சத்யசாயி பாபாவின் சிஷ்ய கோடிகளில் ஒருவன் இல்லையெனினும், அவருடன் ஒரு சிறு துளி பரிச்சயம் இருந்தது, ஒரு காலத்தில். அன்றும், இன்றும் எனக்கு வியப்பு என்னவென்றால், ஏதாவது ஒரு வகையில், அவர் நினைவுச் சின்னங்கள் வந்தபடி இருக்கும், என் போன்ற ‘மதில் போல் பூனைக்குக் கூட’.

    ஆன்மீகத்தை அணுகும் போது கூட ஸ்ரீ ஸ்ரீ சத்யசாயி பாபா, சமரசம் நாடினார், மேலெழுந்தவாரியாக என்று சொல்பவர்கள் உண்டு. அந்தக் கருத்தை எளிதில் மறுக்க முடியாது. சமூகப் பணிகளில், அவர் அடைந்த வெற்றியைக் குறைத்து மதிப்பீடு செய்வது முறையல்ல. அவருடைய ஆளுமை, தலைமை, மேய்க்கும் திறன் ஆகியவை புகழுக்கு உரியவை. ஆங்காங்கே அதிகார மையங்கள் இருந்தன. அவரும் தன்னிச்சையாக நடப்பவர். வித்தைகள் பொருந்தவில்லை. ஆக மொத்தம் நமக்குத் தெரியாத விஷயங்கள் பல. எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால் கூட, வாசகன் என்ற முறையில், இந்தக் கட்டுரையை நான் வரவேற்கவில்லை.

  3. பற்றற்றோமென்பார் படிற்றொழுக்கம் என வள்ளுவர் கூறியதை நோக்குக.
    தக்கன் வரலாறு எனக் கந்த புராணம் விரிப்பதையும் பார்க்க.
    கட்டுரையில் உள்ள செய்தி யாவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளின் தளத்தில் எழுந்தவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.