என் அன்பு சாயிக்கு, இது சமர்ப்பணம்

விசாலம்

Sri sathya sai baba

ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ வள்ளலார் அடிகள், ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள், ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள், ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள், ஸ்ரீ ராம் சுரத் குமார், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள்…. இன்னும் பல அவதார புருஷர்களை நம் நாடு அடைந்தது நமக்கு மிக பாக்கியம். இன்று நாம் நம் சத்திய சாயியை, பல சக்தி கொண்ட அன்பே வடிவமான சேவைக்கே முதலிடம் தந்த சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை என்ற கொள்கைகளுக்காகவே வாழ்ந்து, சமதர்ம நோக்கோடு எல்லா மதமும் சம்மதமே என்ற இலட்சியதுடன் ஒவ்வொரு மனத்திலும் வீற்றிருக்கிறார்.  கூப்பிட்டவுடன் ஓடி வந்து நம் கவலைகளைக் களையும் அவர் இப்போது ஜோதி வடிவமாக ஆகிவிட்டார். நாம் அவருக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால் அவர் காட்டிய அன்பு வழியில் நடந்து சத்தியத்தைக் கடைப்பிடித்து, மனித நேயத்துடன் ஒழுக்க முறையுடன் சீரான வாழ்க்கையை வாழவேண்டியது தான்.

அவரைப் பற்றி ஒரு கதா காலட்சேபம் இப்போது சொல்லப் போகிறேன். கதா காலட்சேபம் என்றாலே அதற்கு ஒரு தனிப் பாணியாகத் தமிழ்.  அதை மாற்றினால் அழகாக இருக்காது. எப்படி நாட்டுப் பாடல், வில்லுப் பாட்டு போன்றவற்றுக்கென்று தனி வழி இருக்கிறதோ அதேபோல் தான் இதற்கும ஒரு தனி பாணி………

சாயி ராம், உனக்கே இது சமர்ப்பணம்

முன்னொருக்காலம்… ஆயர்பாடின்னு ஒரு கிராமம். அதுக்கு இன்னொரு பேர்  கொல்லப்பள்ளி. பேருக்கு ஏத்தாற்போல் நிறைய பசுக் கூட்டம் இருந்துதாம். பால் வெண்ணய்க்குப் பஞ்சமில்லையாம். ஒருநாள்… ஒரு இடையன் தன் பசுவைக் கறக்க, பால் இல்லாது இருந்ததைப் பார்த்தான்.
மறு நாளைக்கு அதைத் தொடர்ந்து சென்றானாம். அந்தப் பசு, விசித்திரமாக ஒரு புற்றுகிட்ட போச்சு. அங்கே நின்னுது. அப்போ ஒரு பாம்பு வந்துதாம். பசுவின் மடிலே வாய வச்சு பாலை உரிஞ்சுடுத்து. இடையன் ஆடிப் போனான். கோபத்திலே மூளை மழுங்கிடுமே. ஒரு பெரிய கல்லை எடுத்தானாம். பாம்பு மேலெ வீசினானாம். அது நசுங்கி சாபம் கொடுத்துடுத்து.

அடே மடையா, என்னடா காரியம் செஞ்சே? இந்தக் கிராமம் முழுக்க இன்னிலேந்து புத்துக்கள் தான். நல்ல கிராமம் புட்டபர்த்தி ஆயிடுத்து.
எங்கும் ஒரே பாம்பு மயம்.

அந்த ஊரிலே ரெத்னாகரம் கொண்டமராஜுன்னு ஒருவர் இருந்தார். குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லுவார். உங்களுக்கும் கதைன்னா பிடிக்குமே…. அவருக்கு ஒரு மகன். அவர் பேரு வெங்கப்பா. அவர் சம்சாரம் பேரு, திருமதி ஈச்வரம்மா. அவள் மிகச் சிறந்த பக்தையாம். சத்ய நாராயண பூஜை செய்வாராம்.

ஒரு நாள் பூஜையில் “அப்பா கோவிந்தா, வைகுண்டநாதா நீதான் எனக்கு மகனாகப் பிறக்கணும்” ன்னு வேண்டிக்கொண்டாராம். நல்ல மனத்துடன் வேண்டியது, கிடைத்தது. 1926 நவம்பர் 23இல் சூரிய உதயத்தில் மகனாகப் பிறந்தார். குழந்தை பிறந்ததும் ஒரே ஜோதி மயமாம். கண்ணைப் பறித்ததாம்.

அந்தப் படுக்கையில் எதோ மேலும் கீழும் அசைந்ததாம். அந்தத் தாய் ஓடிச் சென்று, படுக்கையைத் தூக்கிப் பாத்தாளாம். என்ன காட்சி, இது?   அப்படியே ஸ்தம்பித்து போயிட்டா. அங்கே ஒரு நாகம் படுக்கையில் மண்டலமிட்டிருந்தது. அனந்த சயனனுக்கு ஆதிசேஷன். என்ன பொருத்தம்?

குழந்தை, “சந்திர பிம்ப முக மலராலே” என்பதற்கு ஒப்ப, அப்படியே மனத்தைக் கொள்ளைக் கொண்டு போனதாம். என்ன காந்தம். கன்னத்தில் பளிச்சென்று ஒரு மச்சம். எல்லோரும் மாறி மாறித் தூக்கி, முத்தம் கொடுத்து, திருஷ்டி செஞ்சாளாம். பகவானுக்கும் திருஷ்டியா?

குழந்தைப் பருவம்… ஒரு ஐந்து வயதானது. நம் சாயிராமைப் பள்ளிக்கூடம் சேர்த்தார்கள். எப்போதும் சிறுவன் சத்யாவைச் சுற்றிச் சிறுவர்   கூட்டம் இருந்திண்டே இருக்குமாம். ஏன் தெரியுமா? யார் என்ன கேட்டாலும் திங்க கிடைக்கும்.

“ஓ சத்யா, எனக்கு சாக்கிலேட் கொடேன்”

சாக்கிலேட் வந்துடும்…..

“சத்யா, ஒரு லட்டு வரவழைச்சிடு பாக்கலாம்…”

லட்டு வந்துடும்

ஒரு மலையின் மேல் ஒரு புளிய மரம். அந்த மரம் வரை மலை உச்சியில் ஏறி, சத்யா அமர, கீழே அவன் நண்பர்கள்.

“சத்யா, இந்தப் புளிய மரத்திலிருந்து ஆப்பிள், மாழ்பழம் வருமா?”

“ஓ வருமே, இந்தா பிடித்துக்கொள்”

இப்படியாகத் தானே அன்பு சத்யாவைச் சுற்றி ஒரு கூட்டம். இதுதான் சான்ஸ்ன்னு சத்யா ஒரு பஜன் கூட்டம்  ஆரம்பித்தான். காலைக் கூட்டம் பஜனுடன் ஆரம்பமாகும். எல்லா வழிகளிலும் போய், பின் கோயிலுக்கு நுழைந்து முடியும்.

இப்படி ஆரம்பித்த பஜனுக்கு ஒரு பேரும் வந்தது. என்ன பேரு தெரியுமா? “பாண்டுரங்க பஜன் மண்டலி”. அது எங்கு நுழைந்தாலும் அந்த இடத்திலே ஒரு வியாதி அண்டவில்லை. இது என்ன வியப்பு? எல்லாக் கிராமத்திலேயும் கூப்பிட ஆரம்பிச்சா. பேரும் புகழும் வந்தது.

காலம் ஓட, சத்யா 9ஆவது படித்தார். அவருக்கு அப்போ 14 வயது. ஒரு நாள் என்னாச்சாம்…… சத்யா பள்ளியிலிருந்து வந்தார். வீட்டிற்குள் நுழையாமல், ஸ்கூல் பையை மட்டும் வீசி உள்ளே போட்டார்.

முகம் பிரகாசித்தது.

சொல்றார் “என் பக்தர்கள் என்க்காக அங்கே காத்திருக்கிறார்கள். கடமை என்னை அழைக்கிறது” இவ்வளவு தான் பேசினார். அப்பறம் நேராக ஒரு குன்றின் மேல் அமர்ந்தாராம்.

சொல்றார்:
“நான் ஷீரடியில் வசித்த சாயி, இப்போது திரும்ப சத்ய சாயி ஆக வந்துட்டேன். உங்களுக்கு நன்மைச் செய்ய, மனசைக் கோவிலாக்குங்கோ”

பாட ஆரம்பித்து விட்டார்… முதல் பாடல்

“மானச பஜரே குரு சரணம் துஸ்தர பவசாகர சர தரணம்”

என்ன அர்த்தம்… இதுக்கு?

‘அட மனுஷா, நீ குருவோட பாதத்தை இறுக்கிப் பிடிச்சுக்கோ. அப்போதுதான் சம்சார கடலைக் கடக்க முடியும்.’

ஒரு 14 வயது பையன் பேசற பேச்சா இது? பழுத்த ஞானி பேசும் பேச்சுன்னா…

1940 அக்டோபர் 20இல் அவர் அவதார அறிவிப்பு நிகழ்ந்தது. அன்றைய தினத்திலிருந்து சலியாத உழைப்பு, மானுஷ சேவை, மகேசன் சேவைன்னு சொன்னார். பிரசாந்தி நிலையம் உருவாச்சு. சுப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை என்ன! காலேஜ் என்ன! ஏழைகளுக்கு வீடுகள் என்ன! தண்ணீர்  சௌகரியம் என்ன! என்று தொண்டு போயிண்டே இருக்கு. எத்தனை அருளுரைகள்! எத்தனைப் புத்தகங்கள்! எத்தனை பஜன் டேப்புகள்! எந்த நாட்டிலும் இப்படி பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

உலகத்திலே 117 நாடுகளில் சாயி ஆன்மீக சேவை மையங்கள் இருக்கே. சத்ய சாயி அவதாரம், யாரையும் தண்டிக்க இல்லை. ஆனா, அன்பு பொழிய, நல்லவரைக் காத்து, தீயவரின் தீய எண்ணங்களை அழித்து, மனம் அடக்க கத்துக் கொடுத்து, திசை தெரியாமல் தவிக்கிறவருக்கு நல்ல திசைகாட்டி, சத்ய தர்ம சாந்தி பிரேமை மட்டுமே மனத்தில் வைத்து, நம்மைச் சுற்றி இருக்கும் தெய்வீகத் தன்மையை உணரச் செய்யவே அவதரித்த உத்தமர், நம் பாபா.

சாயிராம்.

ஸாயி, உனக்குக் கோடி கோடி பிரணாம்.

============================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என் அன்பு சாயிக்கு, இது சமர்ப்பணம்

  1. உள்மனது படைத்த காவியம். நீங்கள், ‘ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ வள்ளலார் அடிகள், ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள், ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள், ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள், ஸ்ரீ ராம் சுரத் குமார், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள்…. இன்னும் பல அவதார புருஷர்களை நம் நாடு அடைந்தது நமக்கு மிக பாக்கியம்.’ என்று தொடங்கியதில், எனக்கு மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *