அந்திமாலையும், அவளும் அவனும்-3

11

திவாகர்

“அவள் ஆண்டாள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“முதலில் சுத்தமாகத் தெரியாது.. ஏதோ சிறுமி எதற்கோ நிறுத்துகிறாள் என்று நினைத்துதான் குதிரையை விட்டு இறங்கினோம்.. அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. நாங்கள் உருகிப் போய்விட்டோம்.. எதற்கும் கலங்காத நரசிங்க மகாராஜா அந்த நடுச் சாலையில் மண்டியிட்டு அந்த சின்னப்பெண்ணின் கையைப் பிடித்து ’ஏனம்மா அழுகிறாய்’ என்று கேட்டார்.. அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் எங்களை இதோ நாம் இங்கே நிற்கிறோமே அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு இந்தக் கோயில் உள்ளே வருமாறு வேண்டினாள். என்னையும் கையைப் பிடித்து அழைத்துப் போனாள்..”

கண்களில் ஏதேனும் கண்ணீர் வந்ததோ என்னவோ, திம்மராசு சடாரென தன் கண்களை மேல்துணியால் ஒற்றிக் கொண்டார்.

“எனக்கு வயது அப்போது நாற்பது இருக்கும் கிருஷ்ணா.. என் மூத்த பெண் நன்றாக வளர்ந்து சட்டென ஒரு நோய் வந்து இறந்து போன நேரம் அது.. அந்தப் பெண்ணைப் போலவே இவளும் இருந்தாள்.. எனக்குள் என்னை அறியாமலே ஒரு தந்தைப் பாசம். அந்தப் பெண் என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப் போகும்போதே அந்தப் பாசத்தின் வலி என் நெஞ்சைப் பிசைந்து கொண்டே இருந்ததை எப்படிச் சொல்வேன்..”  திம்மராசு பெருமூச்சு விட்டு மறுபடியும் பேசினார்

”கிருஷ்ணா! அவள் ஒரு வார்த்தை எங்களிடம் பேசவில்லை. அவளே அங்கே உள்ள சிலந்தி வலைகளைக் கலைத்தாள், உடைந்த கற்களையும் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினாள். சிறிது நேரம் அப்படிச் செய்தவள் மறுபடியும் என் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வந்தாள். பாசி படிந்த நீர்க்குளம் அருகே நின்றாள்.. அருகே கிடந்த காய்ந்த சருகுகளையெல்லாம் ஒதுக்கிக் கொண்டே சென்றவள் கோயில் உள்ளே பெருமாள் கர்ப்பக்கிருகத்தருகே வந்து நின்றாள்.. அவள் மறுபடி எங்களை ஒன்றும் கேட்கவில்லை.. என்னைப் பிடித்துக் கொண்டு வந்த கையை அவளே விடுப்பித்துக் கொண்டாள்.. பெருமாளைக் காணச் செல்கிறாளோ என்று நினைத்தோம்தான். உள்ளே அந்த இருளான கருவறையில் சென்றவள்.. மறுபடி வரவில்லை.. குரல் கொடுத்துப் பார்த்தோம்.. கருவறை உள்ளேயே சென்றோம்.. திக்பிரமையோடு அதுவரை கூடவே வந்த நரசிங்க மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எங்களை அழைத்து வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை.. சாட்சாத் ஆண்டாளே.. அவள்  இந்தக் கோயில் கட்டும் நிமித்தம் எங்களை அழைத்து அவள்தான் ஆணையிட்டுள்ளாள் என்று. விஷயம் புரிந்தவுடனே பார்க்கவேண்டுமே நரசிங்கரின் உற்சாகத்தை. அடுத்த ஒரு மாத காலம் அனைத்து ராஜகீய வேலைகளும் இந்த ஊரில்தான் நடந்தது என்றால் பார்த்துக்கொள் கிருஷ்ணா.. கோயில் கோபுரம் எப்படிக் கட்டப்படவேண்டும், கோயில் சுற்றுப்புறம் எப்படி இருக்கவேண்டும், உள்ளே மண்டபங்கள் எப்படியெல்லாம் மராமத்து செய்யப்படவேண்டும், நந்தவனம், குளம் எப்படியெல்லாம் சீரடைய வைக்கவேண்டும், யார் யார் நிதி ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் இங்கிருந்துதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டே வருடம்தான்.. இதோ இந்த கோபுரத்துடன் அழகிய கோயிலும் நந்தனவனமும் இங்கே உருவாகிவிட்டது.” *******(1)

திம்மராசு சற்று நிதானித்தார்..

“எங்கள் ஆண்டாள சன்னிதியில் புதுப் பொலிவு பார்த்தோம். கிருஷ்ணா! இப்போது சொல்கிறேன் ஒரு ரகசியத்தை உனக்கு.. நீங்கள் அத்தனைபேரும் தடுத்துப்பார்த்தாலும் நான் ஏன் விஜயநகரத்தை விடுத்து வில்லிபுத்தூர் வந்தேன் தெரியுமா, என் செல்லப் பெண் போல வந்து என் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாளே, அவளை நினைத்து நினைத்து உருகி உருகித்தான் இங்கே வந்து இதோ கோயிலருகேயே குடில் கட்டி வாழ்ந்து வருகிறேன்.. இனி இந்த உடலிலிருந்து என் உயிர் பிரியும் வரை அவளைப் பார்த்துக்கொண்டே இங்கேதான் வாசம் என்ற முடிவோடுதான் தினமும் உயிர் வாழ்கிறேன் கிருஷ்ணா!”

திம்மராசுவின் குரல் குழைந்து போனதைக் கவனித்தான் கிருஷ்ணதேவன். எத்தனைப் பெரிய விஷயம் இது.. விந்தைகள் எல்லாமே இங்கு சர்வ சாதாரணம் போலும்.. அப்படித்தான் இருக்கவேண்டுமென நினைத்தான்.. இல்லையென்றால் சண்டை நடக்கும்பகுதியில் தரிசனம் கொடுத்தவன் இன்று அந்திமாலையில் நேத்ரதரிசனம் தருவானா.. அதுவும் இவர் பேத்தி மூலமாக.. கிருஷ்ணாவின் மனதில் இனம் புரியாத ஆனந்தம் புகுந்து கொண்டது.

திம்மராசுவுடன் கோயிலுள்ளே சென்று பெருமாள் தரிசனம் செய்தவன் ஆண்டாள் ச்ன்னிதிக்கு வந்தான். கண்ணார அந்தத் தாயைக் கண்டவன் அப்படியே தரையில் விழுந்து சேவித்தான். ’இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய கிழவி போல ஞானத்தைக் கரைத்துக் குடித்து அதன் சாற்றினை மட்டும் அடியவர்களுக்கு அள்ளித் தந்த சுடர்க்கொடியே.. தாயே உன் மேல் காவியம் ஒன்றை எழுத என்னை ஒரு கருவியாக்கு’ என்று மனதுக்குள் அவளை வேண்டினான். மனது மிகவும் திருப்திப்பட்டது போல உணர்ந்தான்.

திம்மராசு நகர்ந்தார். போகும்போது மடைப்பள்ளியில் ஆகாரத்துக்கான ஏற்பாடும் செய்யச் சொன்னார். அவருடன் கிருஷ்ணாவும் நகர்ந்தான். இருந்தும் அவன் கண்கள் ஆங்காங்கே அவர் பேத்தியைத் தேடின.. எங்கே போய்விட்டாள்.. இங்கேதான் கோயிலில் இருப்பாள் என்று சூசகமாக திம்மராசு மாமா சொன்னாரே.. இல்லை எங்கும் அவள் காணவில்லை.. மறுபடியும் கோயில் வெளியே வந்து குடிலுக்குள் சென்று இரு பலகைகளைக் கொண்டு வந்து கீழே போட்டார்.

எங்கே அவள்.. இவள் தாத்தாவுடன் இல்லையோ என்னவோ.. ஒருவேளை தாதியரோடு தனியாக வளர்க்கிறாரோ என்னவோ.. ஆனாலும் தன்னை விட்டுப் பிரியும்போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.. ’என்னைப் பாராதது போலவே தாத்தாவிடம் காட்டிக்கொள்ளேன்’  அது சரி, இவளைப் பாராதது போல காட்டிக் கொள்ளலாம்தான்.. அதற்காக அவளைப் பாராமலே இருந்து விட முடியுமா.. திரும்பப் போவதற்குள் எப்படியாவது அவள் முக தரிசனம் செய்து விட வேண்டும்.. வருவாளா.. அப்படி வரவில்லையென்றால் மாமாவிடம் கேட்டுவிடவேண்டியதுதான்..

அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே குதிரைக் கொளம்படிச் ச்பதங்களோடு ஒரு சிறிய படை ஒன்று தபதப’வென வரும் சப்தம் கேட்டது.. புரிந்தது கிருஷ்ணதேவனுக்கு.. தன் நண்பர்கள்தான்.. கொஞ்சம் தாமதித்தாலும் வந்துவிடுவோம் என்று மதுரையில் சொன்னார்கள் அல்லவா.. வந்துவிட்டார்கள்.

அடுத்த அரை நாழிகையில் திம்மராசுவின் குடில் அல்லோல கல்லோலப்பட்டது. வெளியே மெய்க்காவலர்கள் படை காத்திருக்க, தஞ்சை மதுரை செஞ்சி நாயகர்கள்தான் உள்ளே வந்தவர்கள்.  அவர்கள் திம்மராசுவிடம் கிருஷ்ணை நதிக்கரையோரம் கங்கர்களோடு நடந்த சண்டையில் பெற்ற வெற்றியும் அந்த அதிகாலை வேளையில் மன்னருக்குக் கிடைத்த மகாலக்ஷிமி சமேத மகாவிஷ்ணுவின் தரிசனமும் பற்றியே வெகுவாகப் பேசினார்கள்… சற்றுநேரம் வரைக்கும் வெகு அமைதியாகக் காணப்பட்ட அந்த இடம் அமர்க்களமான குரலில் ஏற்பட்ட சப்தத்தால் பெரும் பரபரப்பு கூடியது போல காணப்பட ஆரம்பித்தது. எல்லோருக்குமே திம்மராசு மீது மரியாதை அதிகம் என்பது கூட அவர்கள் பேச்சின் மூலம் தெரிந்தது. மகாவிஷ்ணுவின் விருப்பமும், அவர் கேட்டுக் கொண்டதனால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் புகழை தெலுங்கு மொழியில் மன்னர் பாட இருப்பதையும் சற்று எல்லோருமே உணர்ச்சிவசமாகப் பேசினார்கள்தான்.

“திம்மராசுப் பெரியவர் பிரதானி பதவியில் இல்லையென்றாலும் இன்னமும் எங்களுக்கெல்லாம் தலைமை அமைச்சர்தாம். மன்னாதி மன்னரான கிருஷ்ணதேவராய சமூகம் மிகப் பெரிய காவியம் படைக்கும் தருணத்தில் திம்மராசனார் திருமலைத் திருப்பதியில் இருக்கவேண்டும்.. திருமலை வேங்கடவன் முன்னிலையில் அல்லவா இந்தக் காவியம் அரங்கேறப்போகிறது.. திம்மராசு மாமய்யா அவசியம் வந்து மன்னரை வாழ்த்த வேண்டும், அதற்கு மன்னாதி மன்னரும் வேண்டுகோள் விடுக்கவேண்டும்’”

இது செஞ்சிக்கோட்டை வையப்ப நாயகர் வேண்டுகோள். அவரது குரல் மிகச் சப்தமாக வந்ததாலும், மற்ற தலைவர்கள் அதை ஆமோதித்து வரவேற்றதாலும் ஏனோ அந்த சூழ்நிலை கிருஷ்ணதேவன் மனதுக்குப் பிடிக்காமல் போனது. அவன் மனம் தனிமையில் திம்மராசு மாமாவிடம் அதிகம் பேசவே விரும்பியது.. தனிமையில் பேசினால் பேத்தி கூட வந்தாலும் வந்து சேர்ந்து கொள்வாள்.. ஆனாலும் இனி இவர்களை விலக்கமுடியாதே..

“நண்பர்களே!.. உங்கள் அழைப்புதான் என் அழைப்பும்.. ஆனால் திம்மராசு மாமாவை நாம் கட்டாயப்படுத்தக்கூடாது.. அவர் சாதாரணப்பட்டவர் இல்லை.. அவர் வந்தாலும் வரமுடியாவிட்டாலும் அவர் ஆசிகள் எனக்கு எப்போதும் உண்டு என்பதை நான் அறிவேன்”

பட்டும் படாமல் பேசிய வார்த்தைகளில் உள்ள உண்மையை திம்மராசு உணரத்தான் செய்தார். கிருஷ்ணாவுக்கு

“உங்கள் அன்புக்கு நன்றி நாயகர்களே!.. ஆனாலும் என் நிலையை விளக்கமாக சற்று முன்னர்தாம் உங்கள் மன்னரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.. என் மனம் முழுவதும் திருமலையில் வேங்கடவன் சன்னிதியில் மன்னர் காவியம் பாடுவதில்தான் இருக்கும்.. ஏனெனில் நான் என் பேத்தியை விட்டு எங்கும் வரமுடியாது..”

புரியாமல் பார்த்தார்கள் நாயகர்கள். புரிந்தவன் சிரித்தான்.

“அதுவும் நல்லதுதான் மாமா.. உங்கள் ஆசை எனக்குத் தெரியாதா என்ன.. இருக்கட்டும்.. நான் வந்ததன் காரணமே இந்தக் காவியத்தை எப்படி ஆரம்பிக்கலாம் என்று உங்களைக் கலந்து ஆலோசிக்கத்தான்.. நல்ல காலம் நம் நண்பர்களும் வந்துவிட்டார்கள்.. எல்லோருமே கேட்கட்டுமே.. சொல்லுங்கள்.. காவியத்தை எப்படி ஆரம்பிப்பது..”

திம்மராசு யோசித்தார்..

”ம்ம்.. சரியானதுதான்.. உனக்கு தரிசனம் தந்தவர் தம்மை ஆந்திர விஷ்ணு என்றார் அல்லவா.. தெலுங்கு மொழியில் ஆண்டாள் தன்னை திருமலையில் சேர்ந்ததாகப் பாடவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் இல்லையா? உனக்கு இந்தக் காவியத்தில் பாட்டுடைத்தலைவன் திருமலை வேங்கடவன்.. நாயகி ஆண்டாள் தாய்தான்.. அவர் எப்படி தரிசனம் தந்தாரோ, என்ன வரம் கேட்டாரோ.. அங்கிருந்து காவியத்தை ஆரம்பித்து எழுது.. முதல் வணக்கத்தையும் திருவேங்கடவனுக்கு சமர்ப்பித்து விடு”

“ஆஹா.. முதலமைச்சரின் ஆலோசனை என்றும் முதன்மையானதுதான்” மதுரை நாகம நாயக்கர் புகழாரம் சூட்ட ஆரம்பித்தார்.. கிருஷ்ணதேவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.. அவனுக்கு அந்தி மாலை நேர நேத்ர தரிசனமும் திம்மராசு பேத்தியின் கௌஸ்துப மாலையின் விளக்கமும் நினைவுக்கு வந்தன..

”இப்படி ஆரம்பிக்கட்டுமா?”

”எப்படி.. சொல் சொல்..”

” இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
தெள்ளத் தெளிவாய் வெளியே
தெரியும் விந்தையைத் தந்த

திருவேங்கடவனே உனக்கு முதல்வணக்கம்!” **** (2)

நாயகர்கள் ஏதும் பேசமுடியாமல் மௌனமாக இருந்தனர். திம்மராசுவோ ஸ்தம்பித்துப் போயிருந்தார். ”என்ன சொன்னாய் கிருஷ்ணா.. ‘ஒருவருக்கொருவர் உள்ளொளியாய உள்ளேயே ஒளிந்திருந்தும் தெள்ளத் தெளிவாய வெளியே தெரிந்த விந்தையா? ஆஹா அற்புதம் கிருஷ்ணா.. உனக்கு திருவேங்கடவனின் பரிபூரண அருள் இருக்கிறது.. ஆஹா எத்தனை அருமை.. எப்படிப்பட்ட சொற்கள்.. எத்தனை வலுவான பொருளோடு அப்படியே நாவில் வந்து வெளியே வெண்முத்துக்களாக விழுகின்றன..”

திம்மராசு புகழ்ச்சியைக் கேட்டதும் சட்டென மறுத்தான் கிருஷ்ணதேவன்.. “மாமா, மன்னிக்க வேண்டும், உங்களின் இத்தனை புகழ் வார்த்தைகளும் எனக்குச் சேரவே சேராது.. எல்லாம் உங்கள் பேத்திக்கே சொந்தம்” என்று வெளியே குரல் உடைபட சொன்னவன் மனதில் இன்னொன்றும் சொல்லிக்கொண்டான்..”என் இனிய செல்லப்பெண்ணே.. இது நீ கொடுத்த பாட்டு, உன் அருள்.. உனக்குதான் அதன் பெருமை சேரும்’…

திம்மராசு எங்கேயோ ஒரு உலகில் இருந்ததைப் போல உணர்ந்தார்..’

“ஆமாம்.. பேத்தி.. பேத்திதான்.. இருந்தாலும் இந்த அழகிய பாடல் உள்ள காவியம் காலம் உள்ளவரை உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும் கிருஷ்ணா!”

நாயகர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு கிருஷ்ணதேவனை உலகளாவப் புகழ ஆரம்பித்தனர்.. கிருஷ்ணா மனதுக்குள் கவலை ஏராளமாக இருந்தது.. எத்தனை இருந்தாலும் அந்த சிறிய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த ஞானத்தின் முன் தன் அஞ்ஞானம் எப்படி சமமாகும் என்று எப்படி இவர்களுக்கு எடுத்துரைப்பது.. அடக் கடவுளே.. ஒருமுறை அவள் தன் தாத்தாவைப் பார்க்க இங்கே தக்கணமே வரக்கூடாதா.. இத்தனை தலைவர்கள் முன் அவளுடைய ஞானத்தைக் காண்பித்து அவளை நாம் முன்னிறுத்தியிருக்கலாமே.. தாத்தா அனுமதியுடன் பேத்தியை தலைநகருக்கு அழைத்துச் சென்று கவுரவம் செய்திருக்கலாம்தான்.. ஆனால் எங்கே அவள்.. எப்படி இவரிடம் கேட்பது.. அவளைப் பற்றியும் நாம் அதிகம் பேசக்கூடாது அல்லவா.. அவள் கட்டளை இருக்கிறதே.. இதனால் அவளுக்கு நிதம் கிடைக்கும் விஷ்ணுவின் நேத்ர தரிசனம் தடைப்படுமே.. அப்படியும் அவரிடம் சூசகமாக பேத்தியைப் பற்றி சொன்னாலும் பேச்சை மாற்றிவிட்டாரே மாமா…

ஏதேதோ பேசினர்.. பின்னர் நாயகர்கள் எழுந்து கொண்டனர். கிருஷ்ணதேவனும் எழுந்துகொண்டான்.. அடுத்தநாள் காலை மதுரையிலிருந்து ராணிகள் சகிதம் தாம் தலைநகரம் பயணப்படவேண்டும்.. சிறிது நேரம் நின்று கொண்டே பேசியவர்கள் விடை பெற்றார்கள். அழகாக தலையசைத்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார் திம்மராசு.

குதிரை ஏறப்போனவன் மறுபடியும் தனியாக திம்மராசு மாமாவிடம் வந்தான். “மாமா.. தங்கள் பேத்தியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்..இது என் தனிப்பட்ட வேண்டுதல்”

சட்டென் கையைப் பிடித்துக்கொண்டார் திம்மராசு..”ஆஹா.. கிருஷ்ணா! என் பேத்தியின் மீது இத்தனை அக்கறையா.. நான் அவளைப் பார்த்துக் கொள்ள, அவள் என்னைப் பார்த்துக் கொள்ள.. எங்களுக்கென்ன கவலை சொல்! இவைகளைப் பற்றி நீ ஏதும் கவலைப்படாமல் உன் காவியத்தை எழுது.. ம்.. சொல்ல மறந்துவிட்டேன்.. நீ எழுதும் காவியத்துக்கு அமுக்த மால்யதா என்று பெயர் வை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பற்றிய காவியமல்லவா” சந்தோஷமாகப் பேசி கையை விடுவித்து அனுப்பித்து வைத்தார்.. அவனும் தலையை ஆட்டி அவர் பாதம் வணங்கி விடைபெற்றான். குதிரையிலும் மெல்ல ஏறினான்.. அவன் சைகை கிடைத்ததும் மற்ற குதிரைகளும் மெல்ல நகர்ந்தன

இருளில் குதிரைகள் சிறிது தூரம் செல்லும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் கோயில் பரிசாரகர் இரவு உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வந்தார். ‘அடடே.. கிருஷ்ணா மட்டும் தனியாக வந்தான் என்றே நினைத்துக்கொண்டு உணவு சமைக்கச் சொன்னேன்.. கூட வந்தவர்கள் ஏதும் உண்ணாமல் சென்று விட்டார்கள்.. எனக்கு சிறிது எடுத்து வைத்து விட்டு, மீதம் உன் இல்லத்துக்கு எடுத்துச் செல்..” என்று உள்ளே செல்லத் திரும்பினார்..

”ஐயா! அர்த்த ஜாம பூசைக்கு நேரமாகிவிட்டது. நீங்கள் வந்து உங்கள் பேத்தியை தரிசனம் செய்து விட்டால் நல்லது என்கிறார் பட்டர்.”

”இதோ வந்துவிட்டேன்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. எங்கள் கிருஷ்ணதேவன் மிகப் பெரிய அறிவாளி, ஞானி கூட.. நான் அவனுக்கு ஆண்டாளை என் செல்லப் பெண்ணாக நினைத்து கோயில் கட்டியதைச் சொன்னேன்.. எனக்கு அப்போது வயது குறைவு.. அதனால் மகளாக நினைத்தேன்.. செல்லப்பெண் என்றும் அவனிடம் சொன்னேன்.. நான் வளர்ந்தாலும் அவள் வளரமாட்டாள் அல்லவா.. இப்போது வயதாகிப்போன இந்தக் கிழவனுக்கு அவள் மகளல்ல, பேத்தி.. இதைச் சரியாகக் கணித்து விட்டான் கிருஷ்ணா. அதனால்தான் தன் புலமையைக் கூட என் பேத்தி சொல்லிக் கொடுத்தது என்று சொல்லி ஆண்டாளுக்கே பெருமையைக் கொடுத்து விட்டான் அவன்.. ஆஹா..!

பரிசாரகருக்கு ஏதும் புரியாமல் பார்த்தார்.. அதைத் தெரிந்து கொண்ட திம்மராசு.. ’ஓ.. உனக்கு ஒன்றும் புரியவில்லை இல்லையா.. நான் சொன்னதை மறந்துவிடு.. சரி, நான் என் பேத்தியைப் பார்க்க வேண்டும்.. கிருஷ்ணா அருமையாக ஒரு கவிதை சொன்னான். அதை அவளுக்கே அர்ப்பணம் செய்துவிடுகிறேன்.. இப்போதே சொல்லிவிட்டால் அவளும் சந்தோஷப்படுவாள்.. ஆண்டாள் தாயே.. என் அருமைப் பேத்தியே.. இதோ வருகிறேன்.. உனக்கு ஒரு புதுப்பாடல் சொல்லவேண்டுமே.. திருவேங்கடவனுக்கு முதல் வணக்கமாம்.. ஆமாம்.. திருவேங்கடவன் உனக்குப் பிடித்தவன் ஆயிற்றே.. இல்லாவிட்டால் வானில் செல்லும் மேகங்களையெல்லாம் திருமலை நோக்கி திரும்பப் போகச் சொல்லி காதல் தூதுதான் விடுவாயா?..’

திம்மராசு ஆனந்தமாக பேசிக்கொண்டு கோயிலுக்குள் செல்லும் அதே வேளையில் கிருஷ்ணதேவன் மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்த தன் குதிரையைத் திடீரென நிறுத்தினான். குதிரை பீறிட்டு திமிறிக்கொண்டே அங்கே நின்றது. மாலை இதே இடத்தில் அத்தனை நேரம் அமைதியாக நின்ற இந்தக் குதிரை இப்போது மட்டும் என்ன அப்படி திமிறல்.. அதன் திமிறல் சப்தம் மற்ற நாயகர்களையும் வீரர்களையும் நிப்பாட்டியது..

அதே இடம்.. அதோ இந்தப் பாறை மேல்தான் அவள் நின்றாள்.. நாளையும் வருவாள்.. அந்தி வானமும் இருக்கும், அவளும் இருப்பாள் அவனைக் காண்பாள். அவன் அழகான செங்கண்ணை சிறுச் சிறிதே திறந்து தரிசனம் கொடுப்பான்..

சட்டென ஒரு திட்டம் மனதில் வந்தது.. தானும் திம்மராசு மாமாவைப் போல இந்த ராஜ்ஜிய சுகங்களை உதறிவிட்டு இதே வில்லிபுத்தூரில் குடிலில் இருந்துகொண்டு தினமும் அவளுடன் அந்திவானத்தில் அவனைக் கண்டால்தான் என்ன.. ஆஹா.. நினைக்கும்போதே என்ன ஒரு இதமான சுகம்.. அப்படிச் செய்தால்தான் என்ன.. வேண்டாமே இந்த மன்னர் வேஷமும் நாடுகளும், சண்டைகளும்..

”மன்னருக்கு ஏதேனும் கவலை வந்து விட்டதோ.. ஏதேனும் மாமாவிடம் பேச மறந்து விட்டீர்களா.. என்னிடம் சொல்லுங்கள் தேவரே.. நான் சொல்லிவிட்டு வருகிறேன்.. இன்று இரவில் மதுரை எப்படியும் சென்றாகவேண்டும்.. ராணியார் வேறு பிரத்தியேகமாக எங்களுக்குச் சொல்லி அனுப்பி வைத்தார்.. தங்களைத் தவறாது பக்கத்தே இருந்து அழைத்து வருமாறு..”

நாகம நாயகனின் குரல் காற்றில் சப்தமாக வந்ததும் கிருஷ்ணதேவன் மனதில் இருந்த திட்டமும் மனோதிடமும் மாறியது.. யாருக்கு என்ன கொடுப்பினையே அதுதானே கிடைக்கும்.. திம்மராசுவுக்கு கொடுப்பினை உள்ளது.. நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லைதான்.. அந்திவானம் இருந்த திசை நோக்கினான்.. இருளில் ஏதும் தெரியவில்லை..  கிருஷ்ணா ஒரு பெரிய பெருமூச்சு விட்டவன் தலையசைத்து குதிரையை மதுரை நோக்கி விரட்டினான்..

(முற்றும்)

******1. இது சரித்திர நிகழ்ச்சியாக கருதப்பட்டு  பர்டன் ஸ்டெயின் அவர்களின் ‘விஜயநகரா’ புத்தகத்தில் பக்கம் 78 இல் ஒரு குறிப்பொன்று கொடுக்கப்பட்டுள்ளது.

******2. அமுக்தமால்யதா’ வில் ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் முதல் பாடல் – தெலுங்கு மொழியிலிருந்து, டாக்டர் பிரேமா நந்தகுமாரின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து , தமிழாக்கம் செய்யப்பட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “அந்திமாலையும், அவளும் அவனும்-3

  1. திவாகர் அவர்களே அமுக்த மால்யதா காவியத்தின் தோற்றத்தை அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.
    திருவேங்கடவனே உனக்கு முதல்வணக்கம் பாடலின் மொழி பெயர்ப்பும் அருமை.
    ….. தேமொழி

  2. //இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
    ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
    ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
    ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
    தெள்ளத் தெளிவாய் வெளியே
    தெரியும் விந்தையைத் தந்த//

    என்ன அற்பூதமான மொழி பெயர்ப்பு. அப்படியே மனம் அதில் தோய்ந்து போய் எழுதி இருப்பதும் உணர முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

  3. வங்க கடல் கடைந்த மாதவனைக் கேசவனைக்
    கங்குல் இராக்கழிந்தக் காலையிலே கண்டவனை
    மங்கிவரும் மாலையிலே அந்தியிலே காணென்றுப்
    பொங்கிவரும் பெருநிலவாய்க் குளிர்வித்து சேதிசொல்ல‌
    அங்கிவனும் அதையுணர்ந்து சுந்தரத் தெலுங்கினிலே
    இங்கிதமாய்ப் பாமாலை தனைப்புனைந்துப் பாடியேத்
    தங்கமகள் கோதையிவள் கதைசொன்ன திவாகரனை
    இங்குநான் வாழ்த்தியவர் அடிபணிந்து போற்றுகிறேன்.

  4. ” ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் ” என்னே வரிகள். ஒவ்வொரு தம்பதியினரும் இப்படி இருந்துவிட்டாள், வாழ்க்கையில் தடங்கல்களே இருக்காதே. மிக அருமையான கதை. உன்னால் மட்டுமே எஅழுதமுடியும் திவா. வாழ்க நீ! வாழ்க உன் எழுத்து!. விசாகை மனோகரன்

  5. Great one. I was praying that this story should not be completed so soon. But I have to satisfy myself.

  6. Hari om Ji,
    I thoroughly enjoyed the story. True, not everyone is gifted to renunce & live in that total bliss. guha.

  7. என்ன சொல்ல என்ன எழுத.. என்று புரியாமல், பாராட்டிய அனைவருக்கும்  நன்றி என்ற ஒரு சொல் கொண்டு இந்தப் பதிலை எழுதுகிறேன்.

    தனிப்பட்ட மடல்கள் மூலம் பாராட்டியவர்களுக்கும் ந்னறி!
    ஒன்றே ஒன்று.. இக்கதையினால் வரும் புகழ்ச்சி எல்லாம் ஆண்டாள் தாயாருக்கே.. எனக்கென்று ஏதுமில்லை. ஆண்டாளைப் பற்றி யார் எழுதினாலும் இனிக்கும்.. அப்படி ஒரு இனிப்பைப் பகிர்ந்து கொள்ள எனக்கும் ஒரு சந்தர்ப்பம் தந்திருக்கிறாள் அவள்.

    இக்கதை இப்படித்தான் எழுதவேண்டுமென நினைத்து எழுதப்பட்டு அது வேறு திசையில் சென்று போன விந்தையை அடியேன் மட்டுமே அறிவேன்..  சின்னஞ்சிறுகதை நெடுங்கதையாக மாறிப்போனது அவள் செயல்தான். 

    ஆண்டாள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.

    திவாகர்

  8. கோதை நாச்சியார் (தெலுங்கில் கோதாதேவி)குறித்த அற்புதக்காவியமான அமுக்தமால்யதா(தமிழில் சூடிக்கொடுத்த சுடர்கொடி)வைப் பற்றிய அருமையான தொடர். இவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுமென எதிர்பார்க்கவில்லை. ‘ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளே ஒளிந்திருந்தும்’ வரிகள் எனக்கு கீழ்க்கண்ட சிந்தனையைத் தந்தன.
    எங்கும் வியாபித்திருப்பதாலேயே இறைவனின் திருநாமம் விஷ்ணு. நமக்குள்ளும் அவரே உறைகிறார். அண்டமெங்கும் பரவியிருக்கும் அவருள்ளேயே நாமும் இருக்கிறோம். ஒளிரூபமாய் நம் உள்ளே ஒளிந்திருந்திருப்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்து விட்டால்(ஞானம் வந்துவிட்டால்) துயர் ஏது?. தங்கள் மொழிபெயர்ப்பு மிக அருமை. தொடரின் ஒவ்வொரு வரியும் பக்தியில் தோய்ந்து எழுதியிருப்பதோடு அந்த உணர்வு படிப்பவர் மனதிலும் ஏற்படும்படி செய்த அற்புதத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. மிக்க நன்றி. 

  9. Dhivakar,
    I have not yet come out from the whole subject. Immersed. Please let me know how to come out. Every part of story I have enjoyed. Thanks and expecting many more from you. – Dhevan

  10. பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கும்,
    தேவனுக்கும் நன்றி!
    பார்வதி அவர்கள் சொன்னதுதான் உண்மை. நல்ல சிந்தனை கூட.

  11. சுடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆணடாளைப்பற்றி எழுத அவள் அருள் வாய்க்க வேண்டும். அவளின் அற்புத லீலைகளை அனைவரும் அறிந்து கொள்ள இக்கதை நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பக்திச் சுவை சொட்டச் சொட்ட இக்கதையைப் படைத்த ஆசிரியர் திரு. திவாகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *