முகில் தினகரன்

கடல் காடு பூத்த கசப்பு மலர்!
காலங்கள் கரைக்காத கண்ணீர்ச்சுவை!

தூத்துக்குடி மக்களின்
சோத்துப் பசி தீர்க்க
சமுத்திரக் கன்னி வழங்கிய
சாத்துக்குடி சாறு!

நீரில் பிறந்து நீரில் சாகும்
சர்க்கரையின் சக்களத்தி!

இது குறைந்து விட்டால் எப்பண்டமும்
குப்பைத் தொட்டிக்கு உறவு!

இது எகிறி விட்டால் எம்மனிதனும்
சவப்பெட்டிக்கு உறவு!

ரத்த அழுத்த ரவுடிக்கும்
கிட்னி ஃபெயிலியர் கில்லாடிக்கும்
வெண்சாமரம் வீசும் சைவ சண்டியர்!

வாலிப வயதில் உன்னுடன்
வரைமுறையின்றி உறவு கொண்டோர்க்கு
முதுமை இரவில்
சப்பை உணவையே
சிம்னியாக்கி விடுகின்றாய்!

சாவுக்கு சம்மன் அனுப்பும்
சாகரத்தின் விழுதே!..நீ
கம்யூனிசத்தில் கரிசனம் கொண்டவனோ?

பணங்கொழுத்த முதலைகளின்
பாவ உடம்பில் உப்புச் சத்தாய்
ஒட்டிக் கொள்கிறாய்!
உறவாடி உயிர் கொல்ல!
அனால்
உழைக்கும் ஏழையின்
ஊதுபத்தி மேனியிலிருந்து
வியர்வையாய் வெளியேறிவிடுகிறாயே!

இலவசங்களில் இளைப்பாற
ஓட்டுப் போட்டு…ஓட்டுப் போட்டு
ஒட்டுக் கோவணம் இழந்தும்
உணர்ச்சியற்று நிற்கும்
மனித ஒட்டடைகள் நாங்கள்!
எங்களுக்கு ரோஷ நகம் வளர
உப்புப் போட்டு உண்ணணுமாம்!
அடப் போங்கய்யா!
மொத்தக் கடலையே குடித்தாலும்
ரோஷம் வெடிக்காது!…
சூடு பிறக்காது!
சொரணை இருக்காது!
நாங்கள்தான் மலட்டுக் கொசுக்களின்
மழுங்கிய ஊசிகளாச்சே!

இறுதியாய்
உப்பிட்டவரை உள்ளளவும்
நினைத்தல் வேண்டுமாம்!
முன்னோர் சொன்னார்…
ஒரு சந்தேகம்..
எது உள்ளவரை?
உப்பா?…உயிரா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *