கணேஷ் வெங்கட்

விஷால் ஒரு தொழிலதிபரைப் பற்றிய புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்தான். அவன் படிக்கும் மேனேஜ்மெண்ட் பள்ளியில் நடைபெறும் ஒரு செமினாரில் சிறப்புரை ஆற்ற அந்தத் தொழிலதிபர் வருவதாக திட்டம் இருந்தது. க்ரக்ஸ் திரிவேதி என்று பரவலாக அறியப்படுகிற தொழிலதிபர் அவர். பிளாஸ்டிக் பைகள் மற்றும் குட்கா போன்றவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர். மீரட்டில் சாதாரண அச்சகமொன்றில் ஆபரேட்டராக இருந்த திரிவேதி இருபது ஆண்டுகளில் இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர் என்ற ஸ்தானத்தை எட்டியவர். மத்தியிலும் உத்திரப் பிரதேச மாநிலத்திலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் எல்லா அரசியல்வாதிகளுடன் உறவு பேணி தன் நிறுவனத்துக்கும் தன் தொழில் துறைக்கும் சாதகமான கொள்கைகளை அமல் படுத்த வைப்பதன் வாயிலாக அசாதாரண முன்னேற்றத்தை பதிவு செய்தவர். இந்தியாவெங்கும் பத்துக்கும் மேலான தொழிற்சாலைகள் ; கூட்டு முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்கள் மூலம் போலந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் எல்லாம் கிளை பரப்பியிருந்தது அவருடைய “க்ரக்ஸ்” நிறுவனம். அவர் வந்து தலைமையுரை ஆற்றப் போகும் கருத்தரங்கை தொகுத்தளிக்கும் பொறுப்பு விஷாலுக்கு தரப் பட்டிருந்தது. விஷால் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தான். அவருடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் எதைப் பற்றி பேசுவது என்றெல்லாம் ஒத்திகையெல்லாம்  பார்த்து வைத்திருந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திரிவேதி கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையென்று சொல்லி விலகிக் கொண்டார்.

இதற்கெல்லாம் நடுவில் ஒரு நாள் திரிவேதியை சந்தித்துப் பேசியதாக ஆர்த்தி வந்து சொன்ன போது அவனால் துளி கூட நம்ப முடியவில்லை.

“அவ்வளவு பெரிய ஆளை எப்படி நீ சந்திக்க முடியும்…சும்மா கதை அடிக்காதே” என்றான்.

ஆர்த்தி தன் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தில்லி வந்து விஷாலுடன் வசிக்கிறாள். புலந்த்ஷஹரில் வசிக்கும் அவளுடைய பெற்றோரைப் பொறுத்த வரை அவள் நொய்டாவில் ஒரு கால்-சென்டரில் வேலை செய்கிறாள் என்றும். தன் நண்பிகளுடன் காஜியாபாதில் தங்கியிருக்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஹவுஸ்-கீப்பிங் கம்பெனியில் ஒரு சாதாரண வேலை அவளுக்கு கிடைத்திருந்தது.

“இல்லை நிஜமா அவரைப் பார்த்தேன்….இன்னிக்கு கன்னாட்பிளேசில் இருக்கிற ஸ்டார் பிளாசா ஓட்டலில் வேலை செய்ய என்னை அனுப்பியிருந்தாங்க…அங்க இருந்த பார்-இன் நாற்காலிகளை நான் துடைத்துக் கொண்டிருக்கும் போது அவர் பாரில் தனியாக உட்கார்ந்து கொண்டு குடிச்சிட்டிருந்தார்”

”அப்புறம்”

“அவரே என்னிடம் பேச ஆரம்பிச்சார்….அவருடைய அம்மாவின் சொந்த ஊரும் நம்ம ஊர் தான்….நம்ம ஊர்ப் பெண் என்று சொன்னார்….எங்க வேலை செய்றேன்னு கேட்டார்…சொன்னேன்…ஆசையிருந்தா அவர் கம்பெனியில் அவருடைய பெர்சனல் அசிஸ்டெண்டாக சேர்கிறாயான்னு கேட்டார்…என்ன சொல்றதுன்னு தெரியாம நின்னேன்….ஒரு கார்டில் அவருடைய எக்ஸிக்யூடிவ் ஒருத்தர காண்டாக்ட் பண்ணச் சொன்னார்”

நோய்டாவில் செக்டர் 62-இல் க்ரக்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. கார்ப்பரேட் ஆஃபீஸ் பத்து மாடி கட்டிடம். கார்ப்பரேட் ஆஃபீசின் பின்புறம் சேர்மன் ஆஃபீஸ் இருக்கும் கட்டிடம் இருந்தது. மூன்று மாடிக் கட்டிடம். இக்கட்டிடத்தில் திரிவேதியும் அவருடைய பர்சனல் ஸ்டாஃபும் மட்டும் வேலை செய்தார்கள்.

ஆர்த்தியின் நேர்முகத்தை ஜோஷி மேடம் என்று அழைக்கப்பட்ட ஒருத்தி எடுத்தாள். ஜோஷி மேடத்துக்கு நாற்பது வயது இருக்கலாம். மிகக் கவர்ச்சியான பாணியில் புடவை அணிந்திருந்தாள். தலையை குட்டையாக வெட்டியிருந்தாள். ஆர்த்தி தேர்வு செய்யப்பட்டாள். அன்றே வேலை நியமனக் கடிதம் வழங்கப் பட்டது. தற்போதைய வருவாயை விட மூன்று மடங்கு அவளுடைய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அவளுடைய சிறு வருவாய் மற்றும் விஷாலின் தந்தை அனுப்பிவைக்கும் பணம் – இவற்றினால் அவர்களிருவரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இச்சூழ்நிலையில் ’க்ரக்ஸ்’ தரும் சம்பளம் கூரையைப் பொத்துக்கொண்டு விழும் தங்கம்!

அன்றைய தினம் ஆர்த்தியின் ஆச்சரியம் நிற்பதாகத் தெரியவில்லை. ஜோஷி மேடம் “சேர்மனைப் பார்க்க பல்வேறு உயர்பதவியாளார்கள் மற்றும் பெரும்புள்ளிகள் வந்து போகும் இடம் இது. கீழ் வேலை செய்பவர்கள் எல்லாம் அழகாக உடை அணிய வேண்டும் என்று சேர்மன் விரும்புவார். கூந்தலை அழகாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். புதிதாக நாகரீகமாக உடை வாங்கிக் கொள்ள உனக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும். நாகரீக ஆடைகளில் எதை வேண்டுமானாலும் அணியலாம். கர்நாடகமான உடைகள் தவிர்க்கப்படல் வேண்டும்” என்றாள். இருபதாயிரம் ரொக்கமும் உடன் கிடைத்தது. கம்பெனி விதிகளின் படி எல்லா ஊழியர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆர்த்திக்கு ஒரு தனியார் மருத்துவமனையின் முகவரி தரப்பட்டது.

அடுத்த நாள் மாலை ஆர்த்தியும் விஷாலும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று நவநாகரீக உடைகள் வாங்கினார்கள். ஆர்த்திக்கான உடைகள் வாங்கிய பின் மிச்சமான பணத்தில் விஷாலுக்கும் உடை வாங்கி பரிசளித்தாள்.

புதிதாக வாங்கிய உடை இறுக்கமாக இருந்தது. தோள்கள் தெரியும் உடை அணிவது அவளுக்கு இதுவே முதல்முறை. புலந்த்ஷஹரில் இருந்த நாட்களில் சல்வார்-கமீஸ் தான் அணிவது வழக்கம். தில்லி வந்த பிறகு ஜீன்ஸ்-டாப்ஸ் என்று ஆகி விட்டது. ஊரிலிருந்து கொண்டு வந்த உடைகளை எல்லாம் வீட்டை சுத்தம் செய்ய வரும் வேலைக்காரிக்கு கொடுத்து விட்டாள். விஷாலுக்கு அன்று கல்லூரி இல்லை. அவள் உடை அணிந்து காட்டிய போது, அவன் வாய் விரிய பார்த்துக்கொண்டிருந்தான். “ஏய்..ஏய்” என்று கண்ணடித்தவாறு நெருங்கினான். அவள் “போடா” என்று சொன்னவாறு பையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அவன் அவள் கையை இழுத்து அவளை வீட்டுக்குள் இழுத்தான். இருவரும் முத்தமிட்டுக்கொண்டார்கள். “சரி…நான் போகணும்” என்று விலகினாள். ”சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவேன் என்று தெரியவில்லை. உனக்கு போன் பண்ணுகிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

காலையில் நடந்தததை நினைத்ததும் அவள் இதழில் புன்னகை ததும்பியது. உதட்டை மடித்து புன்னகையை அடக்கிக் கொண்டாள். மார்புப் பகுதியை அடிக்கடி தொடும்படியாக இருந்தது. பிரா அணியாமல் இருப்பதும் முதல் தடவை. ரொம்ப சின்ன வயதிலிருந்தே அவளுக்கு பிரா அணியும் பழக்கம். பருவமெய்துவதற்கு சில வருடங்கள் முன்னரே அவளுடைய அம்மா அவளை பிரா அணிய வலியுறுத்தினாள். தோள் தெரியும் உடையை வாங்குவதற்கு முன்னர் ட்ரயல் ரூமில் பிராவைக் கழட்டாமலேயே போட்டுப் பார்த்தாள்.

சேர்மனின் இரண்டு சீனியர் காரியதரிசிகளில் ஒருத்தியான அஞ்சலி மேடம் (இன்னொருத்தி ஜோஷி மேடம்!) “என்ன அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கறே? எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு” என்று கேலி பண்ணினாள். “ஒண்ணும் இல்லக்கா…..” என்று வெட்கத்துடன் புன்முறுவலித்தாள் ஆர்த்தி.

ஜோஷி மேடம் ரொம்ப நேரம் கழித்து திரிவேதி சாரின் அறையிலிருந்து வெளியே வந்தாள். “அஞ்சலி! எனக்கு தலைவலிக்கிறது. டாக்டர் பிரசாத்திடமிருந்து மாத்திரை வாங்கிவரப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு. எங்கோ கிளம்பிச் சென்றாள். அஞ்சலி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை ஆர்த்தி பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்து விட்டாள். அஞ்சலி மேடமும் மற்ற பெண்களும் வேலையெதுவும் செய்வதாகத் தெரியவில்லை. மேக்-அப்பை சரி பார்ப்பதும், கம்ப்யூட்டரில் சாட் செய்வதுமாக இருந்தார்கள்.

“சிகரெட் குடிப்பியா?” என்று அஞ்சலி மேடம் கேட்டாள்.

“பழக்கம் இல்லக்கா” என்றாள் ஆர்த்தி.

“வாயேன் உலாத்திவிட்டு வருவோம்” என்று அஞ்சலி அழைக்கவும் ஆர்த்தி அவளுடன் சென்றாள். மொட்டை மாடிக்கு வந்ததும் அஞ்சலி சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள்.

“ஹ்ம்ம் என்ன பாக்கேஜ்ல வந்திருக்க” என்று ஒரு தோரணையாகக் கேட்டாள்.

தயக்கத்துடன் தன் சம்பளம் எவ்வளவு என்ற தகவலைச் சொன்னாள்.

“ஹ்ம்ம்…இதுக்கு முன்னாடி எவ்வளவு சம்பாதிச்சிட்டிருந்தே”

“____ அக்கா”

“லேட் நைட் வோர்க் இருக்கும்னு ஜோஷி மேடம் சொன்னாங்களா”

ஏதோ ஆஃபீசர் மாதிரி அஞ்சலி மேடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது ஆர்த்திக்கு பிடிக்கவில்லை. ஆர்வமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்ன சைஸ்?” என்று அஞ்சலி மேடம் கேட்டதும் அதிர்ச்சியானாள்.

“என்ன மேடம் இப்படியெல்லாம் கேட்குறீங்க”

“ஏன்….ஜோஷி மேடம் கேட்கலியா?”

“இல்ல மேடம்…அப்படி கேட்டாலும் பதில் சொல்லணுமா என்ன?”

அஞ்சலி வாயை மூடிக் கொண்டாள். மேலே எதுவும் பேசவில்லை. சிகரெட் புகைத்து முடித்ததும் தன் சேலையை சரி செய்து கொண்டாள். பிரக்ஞையின்றி சேலை கொசுவத்தைப் பிரித்து கட்டிக் கொண்டாள். ஆர்த்திக்கு வெட்கமாக இருந்தது. வேறு திசையில் பார்த்தாள்.

காரியதரிசிகளின் அறைக்கு திரும்பியவுடன், ஜோஷி மேடம் இண்டர்காமில் போன் செய்து ஆர்த்தியை முதல் ஃப்ளோரில் இருக்கும் மெடிக்கல் ஆஃபீசரின் அறைக்கு வருமாறு அழைத்தாள். அறைக்கு வெளியே டாக்டர் பிரசாத் என்று எழுதியிருந்தது. கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே சென்றாள். டாக்டர் பிரசாதிற்கு ஐம்பது வயது இருக்கலாம். தலைமுடியெல்லாம் நரைத்திருந்தது, “வெல்கம் டு க்ரக்ஸ் க்ரூப்” என்று கை குலுக்கினார் பிரசாத். ஜோஷி மேடம் “பிரசாத் டியர், ப்ரோசிஜர் படி ஆர்த்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்யணும்..நேத்து பிளட் சாம்பிள் கொடுத்துட்டு வந்துட்டா” என்றாள்.

டாக்டர் பல்ஸ் செக் செய்தார். ரத்த அழுத்தத்தை மெஷர் செய்தார்.

“லேப்பில் இருந்து ரத்த டெஸ்ட் ரிப்போர்ட் வந்திடுச்சி…எல்லாம் நார்மல்…” என்று சொன்னார். ரிப்போர்ட் இருந்த உறையை ஜோஷி மேடத்திடம் தந்தார்.

மூன்று மணியளவில் திரிவேதி ஆர்த்தியை கூப்பிட்டனுப்பினார். அவருடன் ஆங்கிலேயர் ஒருவர் அமர்ந்திருந்தார். திரிவேதி ஆர்த்தியை கூர்ந்து பார்த்தார். பின்னர், ”உட்கார்” என்றார். ஆங்கிலேயர் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் மெள்ள உட்கார்ந்தாள். ஆங்கிலேயருக்கு ஆர்த்தியை அறிமுகம் செய்து வைத்தார். திரிவேதியும் ஆங்கிலேயரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள். ஆர்த்திக்கு அவ்வளவாகப் புரியவில்லை. பசையெடுத்து ஒட்டிக்கொண்ட புன்னகையை வீசியவாறே உட்கார்ந்திருந்தாள். திரிவேதி டீ பாட்டில் இருந்த டீயை சர்வ் செய்யச் சொன்னார். கோப்பைகளில் டீயை பதவிசாக ஊற்றி இருவருக்கும் தந்தாள். சந்திப்பு முடிந்து ஆங்கிலேயர் கிளம்பு முன் கோட் ஸ்டாண்டில் இருந்த கோட்டை எடுத்து வருமாறு பணிக்கப்பட்டாள். அந்த ஆங்கிலேயரை லிஃப்ட் வரை வந்து திரிவேதி வழியனுப்பிவிட்டார். “அவரை கேட் வரை விட்டுவிட்டு வா!” என்று ஆர்த்தியிடம் சொல்லப்பட்டது, “ஒக்கே சார்” என்று புன்னகை மாறாமல் சொன்னாள். ஆங்கிலேயர் லிஃப்ட்டுக்குள் புன்னகைக்கவும், அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். காரில் ஏற்றி விடும் போது “தேங்ஸ் ப்ரெட்டி கேர்ள்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார் ஆங்கிலேயர்.

ஐந்து மணி வாக்கில் ஜோஷி மேடம் ஆர்த்தியிடம் வந்து “ஏற்கெனவெ சொன்னா மாதிரி, பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை லேட் சிட்டிங் இருக்கும். நாளைக்கு பாஸ் நியூயார்க் போறதாலே அவருக்குன் இன்னிக்கு லேட் நைட் உட்காருவாரு….இன்னிக்கு உன்னை லேட் சிட்டிங் பண்ணச் சொல்லியிருக்காரு…உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை தானே!”

“இல்லை மேடம்”

ஆறு-ஆறரை வரை எல்லாக் காரியதரிசிகளும் சென்று விட்டார்கள். சேர்மன் ஃப்ளோரில் ஒரு ஈ-காக்கை இல்லை. அவ்வப்போது பட்லர் ஒருவன் பானங்களை சேர்மனின் அறைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தான். சேர்மன் அறையில் இருந்து ஆங்கில இசை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஆர்த்தி தனியே உட்கார்ந்திருந்தாள். ஃபெமினா பத்திரிக்கையின் பழைய இதழ்கள் அஞ்சலி மேடத்தின் மேஜையில் இருந்தன. அவற்றை புரட்டி அதனுள்ளில் இருந்த புகைப்படங்களில் மாடல்கள் அணிந்து கொண்டிருந்த உடைகளை ரசித்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் விஷாலுடன் எஸ் எம் எஸ்-சில் உரையாடலும் நடத்திக் கொண்டிருந்தாள். அன்று காலை முதல் அவளுக்கு பல தடவை ஐ லவ் யூ சொல்லிவிட்டான். போனில் முத்தமழை வேறு. சேர்மனின் அழைப்புக்காக காத்திருக்கையில் வந்த விஷாலின் குறுஞ்செய்திகள் ஆர்த்தியை அன்றிரவு கோடு தாண்டும் ஆசையை பிரகடனப்படுத்தின. விஷாலின் ஆர்த்தியின் காதல் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு வருடமாக இருவரும் சேர்ந்து வேறு வசிக்கின்றனர். ஆர்த்தியின் அன்புக்கட்டளைக்கு இதுவரை கீழ்ப்படிந்து வந்திருக்கிறான் விஷால். இன்றைய நாள் வரை அவர்களுடைய காதலின் உடலியல் பரிமாணங்கள் ஒர் எல்லைக்கோட்டுக்குள் அடங்கியிருக்கின்றன. ஆர்த்திக்கு எல்லை மீறும் ஆசை வந்ததில்லை. அவனின் கோரிக்கையை “அப்புறம் பார்க்கலாம்” “உன் படிப்பு முடியட்டும்” “பொறுமை காத்தோரின் கையில் அவனியே வந்தமரும்” என்றெல்லாம் கூறி அன்புடன் மறுதளிப்பாள் ஆர்த்தி.

பட்லர் வந்து திரிவேதி சார் கூப்பிடுகிறார் என்று கூறவும் விஷாலுக்கு “சார் கூப்பிடுகிறார்” என்ற குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சேர்மன் அறைக்குள் நுழைந்தாள். திரிவேதி குர்த்தா-பைஜாமா அணிந்திருந்தார். அமருமாறு ஜாடை செய்தார். போனில் யாருடனோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். டாக்டர் பிரசாத் ஜோஷி மேடத்திடம் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட் இருந்த என்வலப் திரிவேதியின் மேஜையில் கிடந்தது. போனை கீழே வைத்ததும், ஐஸ் பாக்ஸிலிருந்து ஒர் ஐஸ் துண்டத்தை பானம் நிரம்பியிருந்த கோப்பையில் போட்டார்.

புலந்த்ஷஹர், ஆர்த்தியின் குடும்பம், – இவை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர் “பத்துப்பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை லேட் சிட்டிங் செய்யணும் என்று ஜோஷி மேடம் சொன்னார்களா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

“சார், நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லவேயில்லையே?” என்று கேட்டாள்.

”கான்பரன்ஸ் ரூமுக்குப் போவோம்”

வராண்டாவின் கடைசியில் இருந்த கான்பரன்ஸ் ரூமுக்கு சென்றார்கள். கான்பரன்ஸ் ரூமுக்குள் ஒரு கதவு இருந்தது. அதைத் திறந்தால் உள்ளே படுக்கையறை. ஆர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

“வேலை அதிகமாக இருந்தால், வீட்டுக்குப் போகாமல் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளத்தான் இந்த அறை”

கட்டிலில் திரிவேதி உட்கார்ந்தார். “ஹ்ம் உட்கார்” என்று சொன்னார். “இல்லை சார் பரவாயில்லை” என்று நின்றுகொண்டிருந்தவளை, அவள் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்தார் ;, ஆர்த்தியின் கையை பிடித்து இழுத்து கட்டிலின் மேல் விழும்படி செய்தார். அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் லாவகமாக ஆர்த்தி அணிந்திருந்த உடையின் பின்புற ஜிப்பை திறந்து இழுத்துவிட்டார். உடையை இடுப்புக்கு கீழ் இறக்கிவிட்டு, ஆர்த்தியின் மேலாடையில்லாத உடம்பை வேட்கையுடன் பார்த்தார்.

“வேண்டாம் சார்” என்று எழ எத்தனித்தவளை, திரும்ப கட்டிலில் இழுத்து தன் மடியில் கிடத்திக்கொண்டார். தலைகீழாக அவள் மேல் படுத்து, அவளின் உடையை முழுக்க உருவி தரையில் எறிந்தார். சில வினாடிகளில் அவளை வெறியுடன் அனுபவிக்க ஆரம்பித்தார். ஆர்த்தி கண்ணை மூடி ஒர் இயந்திரம் போல கிடந்தாள். வெண்ணிற மீசை அவளின் மூக்கில் உரசும் படி, தன் வாயால் ஆர்த்தியின் வாயை மூடி, மூர்க்கமான விசையுடன் இயங்கினார். இச்சை  தீர்ந்ததும், களைத்து விழுந்தார். தஸ்புஸ்ஸென்று மூச்சை வெளியேற்றினார். ஆர்த்தி கண்ணை திறக்காமல் சில நிமிடங்கள் படுத்திருந்தாள். சத்தம் ஓய்ந்தது மாதிரி இருந்த போது, கண்ணைத்திறந்தவள், திரிவேதியின் கண்கள் அவளையே மறு உயிர் பெற்ற இச்சையோடு நோக்கிக் கொண்டிருப்பதை கவனித்தாள். உடையை எடுக்க எழுந்தவளை அவரின் கரங்கள் மீண்டும் இழுத்தன. “கொஞ்ச நேரம் இரு…இன்னும் வேலை இருக்கு” என்றவர் ஆர்த்தியின் உடலை படுக்கப் போட்டு இறுக்கிக் கட்டிக்கொண்டார். அடுத்த நிமிடம் அவளின் மேல் படுத்துக் கொண்டு இன்னொரு முறை அனுபவித்தார்.

திருப்தியுடன் பக்கவாட்டில் படுத்து திரிவேதி கண்ணை மூடிய அடுத்த கணம், ஆர்த்தி அவசரமாக அவசரமாக உடையால் தன் உடலை மறைத்துக் கொண்டு வராண்டாவில் ஓடினாள். வராண்டாவில் ஒருவரும் இல்லை. அவளுடைய இருக்கையை அடைந்து கைப்பையை எடுத்துக் கொண்டு வாஷ்-ரூமுக்கு சென்றாள். வாஷ்-ரூமில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தை வெறித்துப் பார்த்த வாறே நின்றிருந்தாள். முகம் அலம்பி, உடைகளை அணிந்து, கூந்தலை சரி செய்து கொண்டு கிளம்பினாள். வராண்டாவில் திரிவேதி சுருட்டு பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

“கிளம்பிவிட்டாயா?

ஆர்த்தி மவுனமாக இருந்தாள்.

“ஜோஷி மேடம் இண்டர்வியு அன்னிக்கு கொடுத்த பணத்துல எத்தனை ட்ரெஸ் வாங்கிக்கிட்டே”

“இரண்டு”

”இப்போ போட்டுட்டிருக்கிறது அதுல ஒண்ணா?

“ஹ்ம்”

பைஜாமாவுக்குள் கைவிட்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிலவற்றை அவளுக்கு கொடுத்தார்.

“இதே மாதிரி இன்னும் ரெண்டு-மூணு ட்ரெஸ் வாங்கிக்க…..என் ட்ரைவர்ல யாராவது ஒருத்தர் உன்னை வீட்டுல விட்டுடுவாங்க…நீ காஜியாபாதில தானே இருக்க?”

ஆர்த்தி தலையாட்டினாள்.

“சார் நான் நாளைக்கு…..” என்று இழுத்தாள்.

“பரவாயில்லை…லீவு எடுத்துக்கோ….நாளை மறு நாள் வந்தா போதும்,,,,ஜோஷி மேடத்துக்கு நான் சொல்லிடறேன்”

வீடு திரும்பிய போது விஷால் அவளை அணைத்துக் கொண்டான். “யோசிச்சியா?” என்று கேட்டவனின் கண்களில் எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. ஆர்த்தி பதில் சொல்லவில்லை.

பேச்சை மாற்றி “முதல் நாள் எப்படி இருந்தது?” என்று கேட்டான்.

“முப்பதாயிரம் இலாபம்…..இன்னும் ரெண்டு மூணு டீசெண்டான ட்ரெஸ் வாங்கிக்க சொல்றாங்க….”

தன் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்தாள். அதற்குள் அவளுடைய கைப்பையில் இருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டான் விஷால்.

டிபன் காரியரை எடுத்து அவள் சாப்பிடத்தொடங்கியதும் பேண்ட் மாட்டிக் கொண்டு எங்கோ கிளம்பினான்.

“எங்க போறே?”

”கொஞ்சம் வேலையிருக்கு”

“பார் மூடியிருக்குமே”

“பாருக்கு போகலை”

“பொய்”

“நான் என்ன பண்ணினா உனக்கு என்ன?” – அவன் குரலில் கோபம் தெறித்தது.

“எதுக்கு கோபம்?”

“அதைப் பத்தி உனக்கென்ன?”

”என் ராசாவுக்கு என்ன கோபம்னு எனக்கு தெரியாதா?”

பாதி சாப்பாட்டில் எழுந்து அவனருகில் ஓடி வந்து அவன் இதழில் அழுத்தி முத்தமிட்டாள்.  சாப்பாடு முழுக்க சாப்பிடப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டு டிபன் கேரியரிலேயே அடைத்து வைக்கப்பட்டது. நாளைக்கு சூடு பண்ணி சாப்பிட்டுக் கொள்ளலாம் ! விஷாலின் கோபம் அன்றிரவே தணிந்தது. அன்றைக்குப் பிறகு விஷால் மாலை நேரங்களில் கோபம் கொள்வது நிரந்தரமாக நின்று போனது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *