2011இல் ஐக்கிய இராச்சியம்! – பகுதி 2
சக்தி சக்திதாசன்
மாற்றம் என்பது காலத்தின் நியதி. எந்தவொரு சமூகமோ, அன்றி நாடோ மாற்றத்தை அனுசரித்துப் போக வேண்டியது, காலத்தின் கட்டாயம். இந்த மாற்றங்களின் வழி மனிதர்களின் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த வாழ்வியல் மாற்றங்கள் மனிதர்களின் தேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இத்தேவை மாற்றங்கள் அவர்களைச் சுற்றிய, அவர்களை வழிநடத்தும் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
ஆம், இந்தப் பகுதியில் நான் பார்க்க விழைவது, இங்கிலாந்தில் வாழும் ஒரு புலம்பெயர்ந்த தமிழனின் பார்வையில் ஒரு 36 வருட கால அரசியல் மாற்றங்களைப் பற்றியது ஆகும்.
அரசியலைப் பற்றி அதீத அளவில் அலசும் அளவிற்கு நான் அரசியலில் பாண்டித்தியம் பெற்ற ஒரு அரசியல் விமர்சகன் அல்லன். ஒரு சாமான்யனின் பார்வையில் பட்ட விடயங்களையே இங்கு நான் குறிப்பிடப் போகிறேன்.
நான் இங்கிலாந்தில் 1975ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காலடி வைக்கும் போது வெறும் பதினெட்டு வயது நிரம்பிய, அனுபவம் ஏதுமற்ற ஒரு இளைஞனே! ஆனால் இன்று 54 வயது நிரம்பிய, பல அனுபவங்கள் மனத்தில் தீட்டப்பட்ட வைரமாக மின்னாவிட்டாலும் நன்றாக அடிவாங்கி, பண்பட்ட ஒரு இரும்பாகவேனும் இருக்கும் நிலையிலேயெ எனது பார்வைகளின் பின்னணி இருக்கிறது.
அன்றைய காலத்து ஈழத்துத் தமிழ் மாணவனாக நான் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து அரசியல் ஒரு வெளிநாட்டு மணவனுக்கு எவ்வகையில் அனுகூலம் அளிக்கிறது என்னும் ஒரு குறுகிய கண்ணோட்டத்திலேயே என் பார்வை அமைந்திருந்தது.
என் இங்கிலாந்துக் கல்வி ஒரு ஜந்து வருட காலம், பட்டம் பெற்றுக்கொண்டு என் தாயகம் திரும்ப வேண்டும் என்னும் இளமை இலட்சிய தாகமே என் நெஞ்சில் நிலை கொண்டிருந்தது. அப்போது நான் இந்த இங்கிலாந்துச் சமூகத்திலே என்னை ஒரு வேற்று இனத்தவனாகவே கணித்துக் கொண்டிருந்தேன். நான் இந்தச் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்னும் மனப்பான்மை என் மனத்தில் குடி கொள்ளவில்லை.
என்னை நோக்கிய வெள்ளை இனத்தவர்களின் பார்வை, நிற வேற்றுமை அடிப்படையில் இருந்ததா? இல்லையா? என்பதை விட என் மனத்தினுள்லேயே நான் ஒரு வகை நிற வேற்றுமை உணர்வைக் கொண்டிருந்தேன் என்பதுவே உண்மை.
அப்போதைய அரசியல் அரங்கம், இப்போதைய அரசியல் அரங்கத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. வெளிநாட்டு மக்களை இரு கை கொண்டு வரவேற்ற நிலை மாறி, வெளிநாட்டுக்காரர் தமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு சுமை என்னும் எண்ணம் உருவாகிக்கொண்டிருந்த ஆரம்ப காலம்.
நான் இங்கிலாந்துக்குள் நுழையும் போது, இங்கிலாந்து நாட்டின் அரசாங்கம் லேபர் கட்சியின் கைகளிலிருந்தது. அதற்கு முந்தைய வருடம் தான் மிகவும் பிரசித்தி பெற்ற நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளரின் வேலை நிறுத்தம், அதற்கு முன்னாலிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்திருந்த காலம்..
தொழிலாளர் யூனியன்களின் கைகள் ஓங்கி, அரசியல் அரங்கத்திலே தொழிலாளர் யூனியன் தலைவர்கள் கோலோச்சிய காலம். அதற்கு ஒரு முக்கிய காரணி, லேபர் கட்சியின் ஆரம்பகர்த்தாக்களே தொழிலாளர்கள் என்பதே.
ஆனாலும் அதிகாரம் தங்கள் கைகளில் இருந்ததால் வேலை நிறுத்தம் என்னும் ஒரு ஆயுதத்தைக் கொண்டு அப்போதைய லேபர் அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது, தொழிலாளர் யூனியன். தொழிலாளர்களின் நல்வாழ்க்கையைப் பாதுகாப்பது, உரிமைகளைக் கட்டிக் காப்பது என்னும் அடிப்படைக் கொள்கையை மறந்து, தாமே இந்நாட்டின் அரசியலை நிர்ணயிப்பவர்கள் என்னும் ஒரு வகை மமதையைத் தொழிலாளர் யூனியன்கள் கொண்டிருந்தன..
இதன் காரணத்தால் பல நியாயமற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பல வேலை நிறுத்தங்களை முன்னெடுத்தார்கள். மக்களை இவ்வகை வேலை நிறுத்தங்கள் அசெளகரியத்திற்கு உள்ளாக்கின. கொஞ்சம், கொஞ்சமாக மக்களின் வெறுப்பு அப்போதைய அரசாங்கத்தின் மீதான அதிருப்தியாக மாறத் தொடங்கியது.
வெளிநாட்டுக்காரர்களின் மீதான அதிருப்தி, நிறவேற்றுமை எனும் அடிப்படையில் இனவாத கொள்கைகளை முன்னேடுக்கும் கட்சிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகின. இங்கிலாந்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வெள்ளை இனத்தவருக்கே சொந்தமானது என்னும் அடிப்படையில் அமைந்த கொள்கையை முன்வைத்து, “தேசிய முன்னணி” என்னும் ஒரு இனவாதக் கட்சி, மக்கள் மத்தியில் வேரூன்றத் தொடங்கியது.
ஒரு பக்கம் வெளிநாட்டுக்காரர்களின் வருகை, மக்கள் மனத்தில் அதிருப்தியை விளைவித்தாலும், இங்கிலாந்தினுள்ளே நுழையும் வெளிநாட்டுக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. படிப்பதற்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கை, மிகவும் அதிக அளவில் இருந்தது.
எமக்கு முன்னாலே மாணவர்களாக வந்து, தமது கல்வியை முடித்துப் பட்டம் பெற்றவர்கள், இந்நாட்டிலேயே வேலை பெற்று, வசதியாக வாழ்க்கை நடத்துவது, உள்ளே வரும் புது மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டியது. ஆனால் அச்சமயத்திலே தான் இங்கிலாந்து அரசியலில் வெளிநாட்டு குடிவரவுக் கொள்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
அது வரை யாராவது ஒரு வெளிநாட்டுக்காரர் இங்கிலாந்துள்ளே வந்து சட்டப்படி 5 வருடங்கள் வரை விசா பெற்று வாழ்ந்துவிட்டால், அவருக்கு இங்கிலாந்தில் எதுவிதக் கட்டுப்பாடுமற்ற சுதந்திரமான நிரந்திர வதிவிட உரிமையைக் கொடுக்கும் வகையிலேயே சட்டம் இருந்தது.
மக்கள் மனங்களில் எழுந்த அதிருப்தியாலும், இனவாதக் கட்சியின் வளர்ச்சியாலும் அப்போதைய அரசாங்கம் 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னே வந்தவர்களுக்கு மட்டுமே இச்சலுகை இனி வழங்கப்படும் எனச் சட்டத்தை மாற்றியமைத்தார்கள்.
இச்சட்டத்தின் மூலம் என்னைப் போன்றவர்கள் பாதிக்கப்பட்டோம். ஆனால் படிப்பு முடிந்ததும் ஊர் திரும்ப வேண்டும் என்னும் எண்னம் கொண்ட எனக்கு, இது ஒரு பெரிய இழப்பாகத் தெரியவில்லை.
(தொடரும்…….
=======================================================
படங்களுக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/United_Kingdom