அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 4
கீதா சாம்பசிவம்
நிலத்தின் மதிப்புக் கூடுவது பணவீக்கத்தின் எதிரொலியோ என்றே தோன்றுகிறது. ஏனெனில் நம் நாட்டில் இந்த ஐ.டி. கலாசாரம் வந்தது முதலே எல்லாப் பொருட்களின் விலைகளும் கூடிக்கொண்டே போகின்றனவே தவிர, குறைந்தபாடில்லை. முன்னெல்லாம் ஒரு படுக்கை அறை, கூடுமிடம், சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதியோடு கூடிய அடுக்குமாடி வீடு, ஐந்து லட்சத்துக்கு உள்ளாகவே விலைக்குக் கிடைத்தன. வாடகையும் அதிகம் போனால் ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாகவே இருக்கும். முன்பணம் மூன்று மாதங்களுக்கு மேல் வாங்கினால் அதிகம். அதுக்கே வீட்டுக்காரங்க பயப்படுவாங்க, திரும்பக் கொடுக்கணுமே என்று கவலைப்படுவாங்க.
இப்போதோ, அப்படி ஒரு படுக்கை அறை உள்ள குடியிருப்புப் பகுதியிலே கிடைப்பது குறைந்த பட்சமாக ஐந்தாயிரத்தில் இருந்து ஏழாயிரம் வரையிலும் வாடகை கொடுக்க வேண்டும். விலைக்கு வாங்குவது என்றால் சதுர அடி 4,000 ரூபாய் வரை அம்பத்தூரிலேயே விற்கின்றனர். எனில் ஐந்நூறு சதுர அடி உள்ள குடியிருப்பை வாங்க வேண்டுமெனில் குறைந்தது இருபது லட்சம் தேவை.
இதைத் தவிரவும் குடியிருக்கப் போகும் பகுதியின் உள்ளே தேவைப்படும் முக்கியமான மர வேலைகள் பூரணமாகச் செய்திருக்க மாட்டார்கள். கதவுகளும், ஜன்னல் கதவுகளும் மட்டுமே போடப் பட்டிருக்கும். ஜன்னல்களுக்கும் இப்போதெல்லாம் மரச் சட்டம் வைத்துக் கட்டுவது அரிதிலும், அரிதாகக் காண முடிகிறது. அப்படிக் கட்டினால் அந்தக் குடியிருப்பின் எல்லாக் குடியிருப்புகளுக்கும் கூடுதல் விலை வைத்துத்தான் கொடுப்பாங்க. நாம கேட்டாலும், கூடுதல் பணம் தனியாகக் கொடுக்க வேண்டும். இதுக்கே இப்படி என்றால் சமையலறையின் அலமாரிகளுக்கு மட்டும் செய்து கொடுப்பாங்களா? நிச்சயமா மாட்டாங்க.
மர வேலைகள் நாம்தான் செய்துக்கணும். சும்மாக் கட்டிக் கொடுக்க மட்டுமே இருபது லட்சம் ஆகி இருக்கும். சமையலறை அலமாரிகள், மற்ற படுக்கை அறை அலமாரிகள், சமையலறையில் சாமான் வைக்கும் அலமாரிகள், வரவேற்பு அறைக்கு, பூஜை அலமாரிக்கு எல்லாம் நாம் தனியாக ஆள் வைத்துச் செய்துகொள்ள வேண்டும். அல்லது கட்டடம் கட்டும் காண்ட்ராக்டரிடம் இதற்கும் சேர்த்துத் தனியாகப் பேசிக்கொண்டு அவர்கள் மூலம் செய்து கொள்ளவேண்டும். இதற்கு ஆகும் செலவு குறைந்தது இரண்டு லட்சத்தில் இருந்து பத்து லட்சம் வரையிலும் வீட்டின் மொத்தப் பரப்பளவை ஒட்டி ஆகின்றன. இதனால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும். இதனால் எல்லாவற்றுக்கும் விலைகள் கூடிக்கொண்டே போகின்றன. எப்போதும் தேவை இருப்பதால் இவற்றின் விலை உச்சாணிக் கொம்பை எட்டி விடுகின்றன.
அதிலும் ஐ.டி.காரர்களுக்கு எல்லாமே நவீனமயமாய் இருக்க வேண்டி உள்ளதே. ஆகவே எலக்ட்ரிக் சிம்னி, மாடுலர் கிச்சன் என எல்லா வீடுகளிலும் அமர்க்களப்படுகின்றது. மாடுலர் கிச்சன் அமைக்கவும் குறைந்த பட்சமாய் ஒரு லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இது இல்லை எனில் அவங்க கர்நாடகம், பழமைவாதி. இப்படியான வீடுகளின் மதிப்பும் கூடுகிறது. ஐ.டி.காரங்களுக்கு வருமான வரியில் இருந்து தப்பிக்க இந்த வீட்டுக் கடன் பெருமளவு உதவியும் செய்கிறது. ஆகவே குறைந்த பட்சமாய் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாவது வாங்கறாங்க. ஒண்ணுமே வாங்க முடியாதவங்களும் இருக்கிறாங்க தான். அது தனி. பெரும்பாலும் பெரிய, பெரிய கம்பெனிகளான டாடா, இன்போசிஸ், சிடிஎஸ், எச் சி எல் போன்ற பெரிய, பெரிய கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு இவ்வகையான கடன்களைக் கொடுத்து ஊக்குவிக்கின்றன என்றே கூறலாம்.
மேலும் இந்த ஐ.டி. கம்பனிகள் எல்லாமும் சென்னையிலும், அதன் சுற்று வட்டாரம் இருபத்தைந்து, முப்பது மைல்களுக்கு உள்ளேயே இருக்கின்றன. இதனால் சென்னையில் ஜனத் தொகை அதிகரித்துள்ளது. அதிகரித்த ஜனத் தொகைக்கு ஏற்பத் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து வசதி போன்றவை சரியாகக் கிடைப்பதில்லை. இதற்கு அரசின் மெத்தனம் முழுப் பொறுப்பு என்றாலும் ஓரளவுக்கு நாமும் காரணம். இதைப் படிக்கும் அனைவரும் என்னை ஏன் சென்னையில் இருக்கிறாய்? கிராமத்தைப் பார்த்துப் போவதுதானே எனக் கேட்கலாம். அம்பத்தூர் ஒரு அழகிய கிராமமாக இருந்ததாலேயும், சென்னையை விட்டுத் தள்ளி அமைதியாகவும், தண்ணீர் வசதியோடும் இருந்ததாலுமே இங்கே வீடு கட்டிக் குடியேறினோம்.
ஆனால் இப்போதோ அதைக் குறித்த மறு சிந்தனைகளுக்கு உள்ளாகி இருக்கிறோம். நிலத்தடி நீர் முன்பெல்லாம் 100 அடி, 150 அடிக்குள்ளாகக் கிடைத்து வந்தது, தற்சமயம் 300 அடி வரையிலும் போகிறது. எல்லா வீடுகளிலும் கோடையில் கூட முப்பது அடிக்குள்ளாகக் கிணற்றில் நீர் கிடைத்துக்கொண்டிருந்தது, தற்சமயம் ஐம்பது அடியானாலும் கிடைப்பதில்லை. அதோடு மக்கள் பெருக்கத்தினாலும், போக்குவரத்து நெருக்கடியினாலும் திணறுகிறது அம்பத்தூர். சாலைகள் பராமரிப்பும் இல்லாமல், பாதாளச் சாக்கடைத் திட்டமும் நிறைவேற்றப்படாமல், சென்னைக்கே குடிநீர் வழங்கும் புழல் ஏரியும், அம்பத்தூர் ஏரியும், தாங்கல் ஏரியும், கொரட்டூர் ஏரியும், முகப்பேர் ஏரியும் இருந்தாலும் அம்பத்தூரில் உள்ள எந்த வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு கிடையாது.
குடிநீர் முனிசிபாலிட்டி கொடுப்பதில்லை. குழாய்களும் ஒரு சில முக்கியமான தெருக்களிலேயே பதிக்கப் பெற்றுள்ளன. நாங்கள் குடி இருக்கும் பகுதியில் குடிநீர்க் குழாய்களே பதிக்கவில்லை. நாங்க குடிநீர் விலை கொடுத்தே வாங்குகிறோம். அதோடு பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படாமையால் கழிவுநீர், பூமியின் நீரோடு கலந்து நிலத்தடி நீர் தற்சமயம் சுவையும் குறைந்து, துர் நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் குளிக்கவும் தோய்க்கவும் மட்டுமே வீட்டின் நிலத்தடி நீரை வேறு வழியில்லாமல் பயன்படுத்திக்கொண்டு மற்ற தேவைகளுக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்குகிறோம். இயற்கை நமக்களித்த கொடை நீரும் காற்றும். இப்போது காற்றுக்கும் பஞ்சம், நீருக்கும் பஞ்சம்.
அடுத்த பகுதியோடு இது நிறைவடைந்து அடுக்கு மாடிகளில் குடியிருப்போரின் பிரச்னைகளை அலசலாம். ஆக மொத்தம் தொல்லைகள் தொடரும்! 😀
(தொல்லைகள் தொடரும்…..
===================================================
படங்களுக்கு நன்றி: http://www.eurotrendfurnitures.com, http://www.ambatturbiz.com
ஐடி மட்டும் காரணம்னு சொல்ல முடியாது. அவங்களும் ஒரு காரணம். பன்னாட்டுக் கம்பெனிகள் என்று சொல்லலாம்.
//முன்பணம் மூன்று மாதங்களுக்கு மேல் வாங்கினால் /
பத்து மாச வாடகை அட்வான்ஸ். இல்லாட்டி அஞ்சு மாசம். ஆனால் வாடகை அதிகம் 🙁