கொட்டம் அடக்கிய காற்சிலம்பு
விசாலம்
ஒரு சமயம் சோழ நாட்டிலிருந்த கவியரசர் கம்பர், சோழ மன்னருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பாண்டிய நாடு சென்றார். போகும் வழியெல்லாம் பசுஞ்சோலையாக இருந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்தார். பாண்டிய மன்னரிடம் தான் யார் என்று சொல்ல விருப்பமில்லாமல் நல்ல வேலை இருந்தால் அங்கே தங்கி, மன்னருக்குச் சேவை செய்ய முடிவு செய்தார். அதேபோல் அடப்பைக்காரராக ஆகும் வேலை கிடைத்தது. மன்னருக்குத் தாம்பூலம் மடித்துத் தரும் வேலை அது.
இந்த வேலையினால் மன்னருக்குச் சமீபமாய் இருக்கும் வாய்ப்பு, அவருக்குக் கிடைத்தது. பாண்டிய அரசருக்கு இந்த அடப்பக்காரரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அடப்பக்காரராக வேஷம் போட்ட கம்பர் இல்லாமல் மன்னருக்கு வேலை ஓடாது. மன்னரின் அன்பைப் பெற்ற கம்பர், அரசருடன் பல தடவைகள் அளவளாவிக்கொண்டிருப்பார். பல தடவைகள் கவிதைகளையும் எடுத்துவிடுவார்.
“மன்னரே இந்தாருங்கள் தாம்பூலம். உங்கள் விருப்பம் போல் தாம்பூலம் தயார் செய்துள்ளேன்”
“ரொம்பவும் நல்லது. குறிப்பறிந்து செய்வது எனக்கு மிகவும் பிடிக்கிறது. சரி, ஒரு கேள்வி கேட்கிறேன் சொல்வாயா?’
“கேளுங்கள் அரசே”
“மொழிக்கு அழகு, கவிதை. கவிதைக்கு அழகு?”
“மன்னா கவிதைக்கு அழகு……. கற்பனை”
“ஆஹா, நல்ல பதில். என்ன புலமை, என்ன புலமை!”
“சாதாரண வெற்றிலை மடித்துக் கொடுக்கும் உன்னிடம் இத்தனை திறமையா? கவிதையிலும் வல்லவனாக நீ இருக்கிறாய். இது எப்படி?’
“எல்லாம் கடவுள் கிருபை தான்”
இப்படி இவர்கள் அன்னியோன்யமாக இருப்பதைக் கவனித்த அரசவைப் பண்டிதர்கள், பொறாமையால் கொதித்தனர். ஒருவர் மேலே வர விரும்பாத மனிதர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். இது குறித்து ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.
“என்ன பண்டிதரே, இந்த அடப்பக்காரனுக்கு வந்த மவுசு தான் என்ன? அரசர் ரொம்ப தலையில் தூக்கி வைத்துத்தான் ஆடுகிறார்”
“ஆமாம், நானும்தான் பார்த்து வருகிறேன். எப்போது பார்த்தாலும் கவிதையென்ன, விளக்கமென்ன? மன்னரைத் தன் பிடிக்குள் அல்லவா வைத்திருக்கிறான்”
“கேவலம் ஒரு அடப்பக்காரன். அவனை வளர விடக்கூடாது”
“என்ன செய்யலாம்?”
“அவனை வளரவிட்டால் நம் பதவிக்கு ஆபத்து வந்துவிடும். ஏதாவது யோசிப்போம்”
பண்டிதர் ஒரவர் சிறிது யோசித்தார். பின் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
“மன்னர் அவனை வெறுக்கும்படி செய்யவேண்டும். ஒரு பிச்சைக்காரன் போல் ஒருவன் வந்து அடப்பக்காரனைக் கட்டிக்கொண்டு சகோதரன் போல் நடிக்க வேண்டும்”
எல்லோரும் இந்த யுக்தியை ஆமோதித்தனர்.
மறு நாள் கம்பர் அரண்மனையை நோக்கி நடந்துகொண்டிருந்தார். ஒரு பிச்சைக்காரன் அவரிடம் ஓடி, அப்படியே அவரை இறுகித் தழுவிக்கொண்டான்.
“அண்ணா, இத்தனை நாள் எங்களை விட்டு எங்கு சென்றிருந்தீர்கள்? உடல் நலமாக இருக்கிறீர்களா?”
கம்பர் குழம்பிப்போனார். யார் இவன்? நான் இவனைப் பார்த்ததே இல்லையே! என்னை ஏன் இவன் அண்ணா என்று அழைக்கவேண்டும் என்ற எண்ணங்கள், அவரைச் சுற்றின.
அதற்குள் அங்கு வந்த அரசவைப் பண்டிதர்கள், “ஐயோ என்ன கேவலம்! ஒரு பிச்சைக்காரனின் சகோதரனா நீ! பாண்டிய மன்னருக்குச் சமமாக அமர்ந்து மிகப் பெரிய இழுக்கு ஏற்படுத்திவிட்டாயே”
“மன்னருக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இங்கிருந்து ஓடிப் போ”
பண்டிதர்கள் பழிக்கப் பழிக்க, கம்பருக்கு எல்லாம் புரிந்தது..
‘ஒ எல்லாம் அரசவைப் பண்டிதர்கள் வேலையா? இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்’ என நினைத்துத் திரும்ப தன் இல்லத்தில் நுழைந்தார். தன் தெய்வமாகிய கலைவாணியிடம் மனமுருகி வேண்டிக்கொண்டார்.
கலைவாணியும் அவர் முன் தோன்றினாள். கவிச்சக்ரவர்த்தியே கம்பனே, இந்தா என் காற்சிலம்பு. இதை வைத்துக்கொண்டு அவர்கள் கொட்டத்தை அடக்கு”
“வணங்குகிறேன் கலைவாணியே” என்றபடி காற்சிலம்பைப் பெற்றுக்கொண்டு அரண்மனைப் பக்கம் நடந்தார்.
மன்னர் அவரை அழைத்தார்.
“என்ன அடப்பக்காரரே, என்ன நீங்கள் பிச்சைக்காரனின் சகோதரராமே! யாரோ ஒரு பிச்சைக்காரன் உன்னைச் சகோதரன் என்று அழைத்து அணைத்துக்கொண்டானாமே, இது உண்மையா?’
“மன்னா அதற்கு முன்னால் இந்தக் காற்சிலம்பைப் பாருங்கள்”
“ஆஹா என்ன அழகு! இதனது ஜோடி எங்கே?”
“மன்னா இதனது ஜோடி, என் சகோதரனிடம் உள்ளது”
“சரி அந்தப் பிச்சைக்காரனை அழைத்து வாருங்கள்” என்றபடி கையைத் தட்டினார் மன்னர்.
பிச்சைக்காரனும் வரவழைக்கப்பட்டான். பின் அந்தக் காற்சிலம்பின் மறு ஜோடியைக் காட்டச் சொன்னார் மன்னர்.
பிச்சைக்காரனாக வந்தவன், அழுதபடி “மன்னியுங்கள் மன்னா. என்னிடம் காற்சிலம்பு ஒன்றும் கிடையாது. இவர் என் அண்ணாவும் இல்லை.”
“பின், நடுத்தெருவில் இவரை அணைத்துக்கொண்ட காரணம் என்ன? உண்மையைச் சொல்லாவிட்டால் உன் தலை உருளும்”
இதைக் கேட்டு நடுங்கியபடியே பிச்சைக்காரன், பண்டிதர்கள் பணம் கொடுத்து இப்படி நடிக்கச் சொன்னதாகவும் அதனால் அவன் இதைச் செய்ததாகவும் கூறினான்.
“என்ன இது ? இப்படி ஏன் செய்ய வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்? ஒன்றும் புரியவில்லையே! ஒரே குழப்பமாக இருக்கிறதே!”
கம்பர் சிரித்தபடியே, “மன்னா இதற்குப் பதில், எனக்குத் தெரியும். பண்டிதர்களுக்கு நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு பிடிக்கவில்லை.
நீங்கள் என்னை வெறுக்க வேண்டும் என்று இப்படி செய்திருக்கிறார்கள்”
“என்ன இத்தனை பொறாமையா? அவர்களைச் சிறையில் அடைக்கிறேன்” மன்னர் கர்ஜித்தார்.
“வேண்டாம் மன்னா. அவர்களை மன்னித்து விடுங்கள். கலைவாணி எனக்கு என்றும் துணையிருப்பாள்” என்றபடி தான் யாரென்றும் விளக்கினார்.
பின் வீடு சென்று, கம்பர் கலைவாணியைத் தொழ, கம்பர் கையிலிருந்த சிலம்பு, சரஸ்வதியின் காலை அலங்கரித்தது.
===========================================================
படங்களுக்கு நன்றி – http://www.tamilkalanjiyam.com, http://www.tamilvu.org
படிப்பினை தரும் சம்பவம்; சுவையான நடை. என் கருத்து ஒரு வரியின் மேல்:”…ஒருவர் மேலே வர விரும்பாத மனிதர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ..”
=> முதலில் அதிருப்தி அவர்களுக்கு. அதனால் இந்த யுக்தி. ஆனால் அதிருப்தி குறையவில்லை. ஒருவனை இறக்கினால், அந்த நேரத்தில் வேறு ஒருவன் மேலே! என்ன இருந்தாலும், தான் ஏறமுடியவில்லை. ஒரு நீண்ட நோக்கில் பார்த்தால், இந்த விளைவை தடுக்கமுடியாது. ஆனால், நடுவில் இன்னல்கள் பல, நல்லோருக்கு.