விடியல்…
என். சுரேஷ், சென்னை
மருந்துகளால் இனியேது பலன்?
மனம் திறந்து பேசினார் மருத்துவர்! – அன்றுமுதல்
கவலை, பயம், கோபம் இவை கடந்து
கல்லறையில் நானுறங்கும் நாள்
என்று வருமென்று ஆசையுடன் காத்திருக்கிறேன்!
எனது செயற்கைக் கோபத்தால் என் மனைவி
என்னை மட்டும் வெறுக்கத் திட்டமிடுகிறேன் – ஆனால்
எட்டு வயது மகன் என்னைக் கட்டியணைத்து முத்தமிட
கண்ணீரின்றி அழுகின்றன எனது கண்கள்!
மௌனம் தியானம் ஆன்மீக புத்தகங்கள் இவற்றோடு
வீட்டிலேயே எனக்கென ஓர் அலுவலகம்!
அங்கேயே எனது படுக்கை! பாவம் எந்தன் மனைவி!
ஒவ்வொரு விடியலைக் கண்டதும்
இதோ மீண்டும் ஒரு நாள் என மகிழ்கிறேன் – ஆனால்
நோய் தரும் வலி நினைத்ததும் இரகசியமாய் அழுகிறேன்!
மனைவியோடு மகிழ்ந்த கட்டில்!
நான் வளர்த்த செடிகள்! அதில் மலரும் அழகிய பூக்கள்!
இவர்களுக்கும் பதிலின்றித் தவிக்கிறேன்!
காலதேவனே!
உரிமையோடு திரும்ப என்னை
அழைப்பது என்றென்று
ஒரு நாள் முன்தினம் நீ
தயவாகச் சொல்வாயா?!
==============================================
படத்திற்கு நன்றி: http://girlonahottinroof.wordpress.com
கவிதை சிறந்து இருக்கிறது …
விடயமோ மிகவும் கனத்து இருக்கிறது..
மனைவியை நேசித்தவர் பிரச்சனையைச் சொல்ல ஏன் தயக்கம்..
இப்பொழுது பிரச்சனையைச் சொன்னால் ஆறுதல் கூற, கணவர் இருக்கிறார் …
பின்பு அவர் இறந்த பின் மனைவிக்கு உண்மை தெரியும் பொழுது யார் ஆறுதல் கூறுவார்…
எப்பொழுதோ தெரிய வரும் உண்மையை இன்று சொன்னால் என்ன?
இக்கணவனை விட மனைவிக்கு வேறு யாரும் ஆறுதல் கொடுக்க முடியாது ….
இப்படியாக அன்பு வைத்த மனைவியே கணவனுக்கும் ஆறுதல் கொடுப்பார்..
பங்கிட்டால் பளு பாதி குறைந்துவிடும்.. இருவருக்கும் தான் … மனைவிக்கும மறைப்பதால் ஏற்படும் வேதனை மிகவும் கூடவாக இருக்கும் … பொய்யான வாழ்க்கையில் உள்ள வேதனை மிகவும் கூட ..
அன்புத் தம்பி சுரேஷ்,
உணர்வுகளின் விளிம்பில், உண்மைகளின் தகிப்பில் உன்னதமான வரிகளைக் கொண்டு உள்ளார்த்தமான கருத்துகளை உள்ளடக்கிய அருமையான கவிதை.
அன்புடன்
சக்தி
மரணத் தேதி தெரிந்து…தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் கொடுமை உண்மையிலேயே யாருக்கும் வரக் கூடாது என்பது தான் எனது பிரார்த்தனை இறைவனிடம் ……. அருமையான கவிதை அன்பின் சுரேஷ்…… நன்றி…. வாழ்த்துக்கள்