பள்ளியிலேயே வேலை வாய்ப்புப் பதிவு – தமிழக அரசின் புதிய வசதி
2011ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர் தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெறும் நாளிலேயே அவர்களது மேல்நிலைக் கல்வித் தகுதியினைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ – மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை ஆண்லைன் மூலம் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவே பதிவு செய்துகொள்ளலாம்.
மாணவ – மாணவியர் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற, பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களுடைய குடும்ப அட்டையினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அக்குடும்ப அட்டையினில் பதிவுதாரரின் பெயர் இருப்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியினை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தற்பொழுது புதியதாகப் பதிவு செய்வோருக்கு உரிய பதிவெண்ணும் வழங்கப்படும்.
பதிவுதாரர்கள் மாற்று திறனாளிகளாக இருப்பின், தங்களுடைய கல்வித் தகுதியைப் பள்ளியில் பதிவு செய்த பின்னர், தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளளாம்.
இதனால் கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதனையொட்டி ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் கால விரயம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பதற்காக, பள்ளிகளின் வாயிலாகவே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
===================================
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை.
படத்திற்கு நன்றி: http://mrnewz.com