நிதிநிலை அறிக்கை ஒரு சிறு அலசல்!….

கிருஷ்ணமாச்சாரி                                                                                                                                    

கற்க கசடற, நிற்க அதற்குத் தக… இளம் பருவம் பல கேள்விகளை கேட்கும் பருவம், பல புதிய முயற்சிகளை தேடும் பருவம். பல இளம் விஞ்ஞானிகள் பள்ளி பருவம், கல்லூரி பருவத்தில் புதிய முயற்சிகளை எடுத்து மேற்கொள்ளும் சில கண்டுபிடிப்புக்கள் மக்களுக்கு உதவும் என்றாலும் வியாபாரமாக்க முடியாத நிலையில் ஒரு கண்டுபிடிப்பாகவே மறைந்து விடுகிறது. அப்படிப்பட்ட நிலை மாற உதவும் இந்த நிதி அறிக்கையில்,  நிறுவனங்கள் தனது லாபத்தில் 2% வரை இப்படிப்பட்ட துவங்கு நிலை ஆராய்ச்சிகளுக்கு உதவும் நிலையை அளித்தது, பல கண்டுபிடிப்புகள் இங்கு வெளிஉலகிற்கு வர ஒரு நல்ல வாய்ப்பு.

நிதிப் பற்றாக்குறைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றை காரணம் காட்டியும் அதே சமயம் இவற்றை குறைக்க மாற்று சக்திகளான, காற்றாலை, கழிவிலிருந்து ஆற்றல் போன்றவற்றிற்கு உதவி அறிவித்திருப்பது இன்றைய தேவையை அறிந்து செயல் படுவது. ஜெர்மனியை விட இந்தியாவில் சூரிய ஒளி மணி நேரங்கள் இரு பங்கு இருந்தும், நாம் உற்பத்தி செய்யும் ஆற்றல் மிகச் சிறிதே. அனைத்து புது கட்டிடங்களும் சூரிய ஒளி மின்சாரத்தை  தயாரிக்கும் வகையில் அமைக்கப் பட வேண்டும் என ஒரு விதி அவசியம். எப்படி மழைநீரை சேகரிக்கிறோமோ, அப்படி சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதும் ஒரு விதியாக ஆக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கான வங்கி என்பது இந்தக் காலத்தில் அவசியமான ஒன்றா என்பது ஒரு கேள்வி. தனியார் நிறுவனங்களும், PSUக்களும் வங்கி துவக்கலாம், இந்திய தபால் துறையும் வாங்கி ஆகும் எனும் அறிவிப்புக்களுக்கு மத்தியில், இந்த அறிவிப்பு தேவையானதாக தோன்றவில்லை. தற்போதைய வங்கிகளில் ஆண்-பெண் என பிரித்து பேதம் பார்கிறார்கள் எனும் எண்ணத்தையோ, பெண்களுக்கு வங்கிகளில் பாதுகாப்பு இல்லை எனும் தோற்றத்தையோ இது உருவாக்குகிறது. அப்படியெனில் இதற்கு காரணம் என்ன என அறிந்து அதைப் போக்குதல் மிக அவசியமாகிறது. எந்த வங்கியும் தன்னிடம் பணம் சேமிக்க வரும் ஆணையோ பெண்ணையோ ப்ரிஹ்த்டுப் பார்ப்பதில்லை. அப்படி எனில் கடன் அளிக்கும் போது பிரித்துப் பார்க்கப் படுகிறதா? என்ன காரணம், பெண்கள் கல்வி அறிவு, செயல் அறிவு இருந்தும் குடும்பத்தில் அவர்களின் முக்கிய பங்குகள், இப்படி பேதம் பார்க்க வைக்கிறதா? ஆம் எனில் அதை சரியாக அணுகுதல் முக்கியம்.

இளைய தலைமுறைக்கு தனது திறன் வளர்க்க பயிற்சி என்பது நல்ல விஷயம். ஆனால் பயிற்சியில் வெற்றி அடைந்தால் சான்றிதழுடன் சராசரியா ரூபாய் 10000 வரை அளிக்கப்படும் என்பது பணத்திற்காக சில நிறுவனங்கள் இப்பயிற்சி முறையை சரியாக உபயோகிக்காமலோ, அல்லது பயிற்சி அளித்தது போல  தவறாக உபயோகிக்கவோ வாய்ப்பு உண்டு. கல்வியை பணத்துடன் இணைத்து பார்ப்பது தவறு. அதைவிட இன்றைய தலைமுறையின் அத்தியாவசிய தேவையான SOFT SKILL எனப்படும் தொடர்புத் திறன் (communication skills), பந்தி நடத்தை (table manners), sசெயலை முன் வைக்கும் திறன் (presentation skills) போன்றவற்றை பற்றி சிறு வயது முதலே பள்ளிகளில் அறிமுகப் படுத்துதல் அவசியம். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் குழைந்தை இவற்றை அறிஐயும் போது, வலைக்காக வேறு இடம் செல்கையில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை இது தவிர்க்கும்.

ஆதார் அட்டை வாங்கி கணக்குகளுடன் இணைக்கப்படும். குறிப்பாக இந்த அட்டையின் சிறப்பு நமது தனித் தன்மை பெற்ற விழி மற்றும் கை ரேகைகளின் தொகுப்பு. நம் போல் வேறு யாரும் வர முடியாது என்பதின் ஒரு தணிக்கை. இது முழுதும் உபயோகப்படுத்தப் பட வேண்டும். ஆதார் அட்டை இருந்தால்தான் வங்கிக் கணக்கு, பத்திரம் பதிவு என்று மட்டும் இல்லாமல் இந்த இடங்களில், அட்டை கொண்டுவந்தவர் தான் அட்டைதாரரா?  என சோதிப்பது அவசியம். இவ் வசதிகள் இவ்விடங்களிலோ அல்லது ஒரு பொது இடத்தில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெறுவதோ போலி அட்டைகள் வலம் வருவதைத் தடுக்கும். அதுபோல, வாக்களிக்கும் போதும் கை-ரேகை சோதனை  செய்து அட்டைதாரரை பரிசோதிப்பதும் அவசியம்.

பெரும் பணக்காரர்கள்  வரி. பெரும்பாலும் இந்த நிலையில் உள்ளவர்கள் உரிமையளராகவோ அல்லது நிறுவனங்களில் பெரும் பதவியிலோ இருக்க வாய்ப்பு உண்டு. இந்நிலையில், இந்த வரியை நிறுவனங்களோ வேறு ஏதாவது வழியில் ஈடுகட்ட முயலும். எனவே அவர்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. அரசாங்கத்திற்கு லாபமா என்றால்,, இதை நிறுவனங்களே ஈடுகட்டும் வகையில் கணக்கு வகைதான் மாறும், வரி தனி ஒருவர் அதிகமாகவும், நிறுவனம் குறைவாகவும் கட்ட வாய்ப்பு அதிகம். இது ஒரு சொந்தக் கருத்து மட்டுமே.

மற்றபடி புகைப்பொருட்கள் விலை ஏற்றம் என்பது எப்பொழுதும் எதிர்பார்ப்பதே. பொருள்கள் விலையில் அதிகம் மாற்றம் இல்லை என்று கூறமுடியாது ஏனெனில் கடந்த இரயில் நிதி அறிக்கையில் சரக்கு கட்டணம் 5-8% ஏறிவிட்டது. விலை ஏற்றத்தை அது பார்த்துக் கொள்ளும்.

வீட்டுக்கடன் வரிவிலக்கு 250000 ஆக அதிகரிப்பு. நல்ல விஷயம் ஆனால், மேலே குறிப்பிட்ட சரக்கு கட்டண மாற்றத்தால் சிமென்ட் மூட்டை 2-4 ரூபாயும்,  ஸ்டீல் விலை 5-8%  வரை அதிகரிப்பும் இந்த சேமிப்பை ஈடுகட்டிவிடும். இந்த இரண்டு துறைகளும் ரயில் போக்குவரத்தை அதிகம் உபயோகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் குடுத்தோம், எடுத்தோம் என கணக்கிட்டு நமது பையில் ஒன்றும் மிஞ்சப் போவதில்லை.

எச்சரிக்கை: இனி சாப்பிடப் போகும்போது அந்த ஓட்டலின் மொத்த சதுர அடி எவ்வளவு என கேட்டு தெரிந்து கொள்ளவும். 2000க்கு மேல் இருந்தால் உங்கள் பில்லில் 4% வரை ஏற்றம் காண வாய்ப்பு உண்டு. இனி  உணவகங்களில் இப்படியும் நடக்கலாம்…

சர்வர்: சார்! இந்தாங்க மெனு கார்ட்..

வந்தவர்: இதை விடுங்க..முதல்ல ஹோட்டல் லே-அவுட் பிளான் காட்டுங்க

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க