|| இணை(யா) கோடுகள்… ||

அருண் காந்தி
parallel lines
அன்பாய் இருக்கிறாள்
அறிவாய் நடக்கிறாள்
அனிச்சையாய்ச் சிரிக்கிறாள்
அமிழ்தமாய் இனிக்கிறாள்…

கனிவாய் திறக்கிறாள் அதில்
கனிவைக் கசிகிறாள் – என்
கண்களைப் பூட்டுகிறாள் – அதில்
கனவுகளை நிரப்புகிறாள்…

பதறாமல் இருக்கிறாள் – என்
பக்கத்திலேயே இருக்கிறாள்
பாசமாய்ப் பார்க்கிறாள் – எனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறாள்…

இயல்பாய் இருக்கிறாள் – வெகு
இலகுவாய் இருக்கிறாள் – எனக்கு
இன்பமாய் இருக்கிறாள் – நல்ல
இறைமையாய் இருக்கிறாள்…

பேருந்தின் வேகத்திலும் வருகிறாள் – உடன்
ரயிலின் ஓட்டத்திலும் வருகிறாள்
பறக்கும் விமானத்துடன் பறக்கிறாள் – வெளியே
மிதக்கும் மேகத்தினூடே மிதக்கிறாள்…

என்னுடனேயே இருக்கிறாள்
எப்பொழுதுமே இருக்கிறாள்
என் அருகிலேயே இருக்கிறாள்
ஏனோ அமைதியாய் இருக்கிறாள்…

என்னுடன் சேரவுமில்லை
எனைவிட்டு விலகவுமில்லை
எனக்குத் துணையாக இருக்கிறாள் – எப்பொழுதும்
நல்ல இணையாக இருக்கிறாள்…

என்னுடன் இணையாமல்…
எனக்கு நல்ல இணையாக இருக்கிறாள்!!!

=======================================================

படத்திற்கு நன்றி: http://fakeexpressionsoftheunkown.wordpress.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “|| இணை(யா) கோடுகள்… ||

  1. அருமையான கவிதை, இது தான் உண்மை, தன்னையும் இழக்காமல் அதே சமயம் தன்னுடைய இணையோடு துணை போவது. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனையும் கூட. வாழ்த்துகள் அருண் காந்திக்கு. இதை விடவும் நல்ல இணை கிடைக்காது,. இங்கே புரிந்து கொள்ளுதலிலும் பிரச்னை இல்லை. ஆகவே இனிமையான வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *