இலக்கியம்கட்டுரைகள்தலையங்கம்

துள்ளி வருகுது வேல்!

பவள சங்கரி

தலையங்கம்

2014ல் தேர்தல் வரப்போகிறது.. யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் மக்கள் வெதும்பியிருக்கிறார்கள். கிராமத்தில் சொல்லும் ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. ஒரு வீட்டிற்கு வரும் விருந்தாளி ஒருவர், உங்கள் குடும்பத்தில் மிக நல்லவர் என்று யாரைச் சொல்லுவீர்கள் என்று குடும்பத் தலைவனிடம் கேட்டபோது அவர், அதோ அங்கு கூரையில் ஏறி கொள்ளி வைப்பவன்தான் மிகச் சிறந்தவன் என்றாராம்.. வந்திருந்தவருக்கு தெளிவாகப் புரிந்ததாம், மற்றவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று. . இப்பொழுது சமுதாயச் சிந்தனையிலும், சமுதாய வளர்ச்சியிலும் துளியும் நாட்டம் இல்லாதவர்களின் கையிலேயே அரசியல் இருக்கிறது. இதற்கு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல என்பது அன்றாடம் வரும் செய்திகள் மூலமாக அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அன்றைய சுதந்திரக் காலப் போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, கோயிலுக்கு நேர்ந்துவிட்டதுபோல் வரிசை வரிசையாகச் சென்று அன்றைய காவல் துறையினரிடம் அடியும் உதையும் பெற்று இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம அல்லவா இது. தாயகக்கொடி மண்ணில் வீழ்வதைத் தடுத்து நிறுத்தி காப்பதற்காக தம் உயிரை விட்டவர் வாழ்ந்த பூமியல்லவா இது. அப்படி காப்பாற்றிய கொடியை மென்மேலும் வானில் பட்டொளி வீசிப்பறக்கச் செய்ய வேண்டாமா?  இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம். இன்று தனி மனிதர்களும், பொது மக்களும் நாடு வளம் காண வேண்டுமென்று தனியாத ஆவல் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மிடையே வழிநடத்த சிறந்த தலைவர்கள் இல்லையே? இன்று இவர்கள் தவறு செய்துவிட்டார்கள் அவருக்கு வாக்களிக்கலாம் என்றால் அதுவும் முடியாத சூழ்நிலையாக உள்ளது. நம்மை ஆளச் சிறந்த தலைவர்களாக யார் இருக்கிறார்கள்.. முப்பது கோடி முகமுடையாள் என்று சொன்ன அந்தக் காலத்தில் நம்மை வழிநடத்த ஒரு மாபெரும் தலைவர் இருந்தார். இன்று 130 கோடியைத் தாண்டிவிட்ட நிலையிலும் நமககு வழிகாட்ட நல்லதொரு தலைவரில்லை என்பதுதான் வேதனை. நல்லதொரு பாதை காட்டினால் அனைவரும் செல்வதற்குத் தயாராக இருப்பினும் அந்தப் பாதையைக் காட்ட நல்ல தலைவரில்லையே.. இன்னும் ஓராண்டே தேர்தலுக்கு இருக்கக் கூடிய சூழலில், தேர்தல் வான வேடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டது. .இதைக் கண்டு மயங்கி நாம் வாக்களிக்கப் போகிறோமா.. அல்லது வளமான வாழ்க்கை அமையும் என்று நம்பி வாக்களிக்கப் போகிறோமா என்று கனவில் பிதற்றும் நிலையில் இன்று மக்களின் மனம் இருக்கிறது. .

படித்தவர்களும் அறிஞர்களும் மக்களின் நலனில் அக்கறையுள்ள சிந்தனாவாதிகளும்  அரசியலுக்கு வருவதற்கு தயங்கக்கூடிய இன்றைய நிலை மாற வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி அறைகூவல் விட்டதுபோல மாணவர்கள் அரசியலை சுத்தப்படுத்துவதற்கு வர வேண்டும். நாட்டு நலனைப் பேணும் மகக்ள் உங்களுக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கிறார்கள். அசாமில் இது போன்றதொரு சூழலில்தான் மாணவர்கள் மாற்றங்களை ஏற்படுத்திக் காட்டினர். ’துள்ளி வருகுது வேல்’ என்பதுபோல இளைய சமுதாயம், மாணவ சமுதாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. இளைஞர்களை நாடு  எதிர்பார்க்கிறது இன்று. பொறுப்பை உணர்ந்து தயங்காமல் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.. ஜனநாயக முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவோம்.. நம் இந்தியா வல்லரசு ஆவதும், வளமான வாழ்க்கையை இழப்பதும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்பதுதான் சத்தியம்.  ஜெய்ஹிந்த்..

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

 1. Avatar

  நல்லதொரு அழைப்பு. மாணவப்பருவத்தில் தான் நீதி நியாமம், தர்மம், இரக்கம், யாவும் நிறைந்திருக்கும். அதைவிட துனிச்சலும் அதிகம் இருக்கும். இந்த பருவம் மட்டும் சரியாக பயன் படுத்திக்கொண்டால் அந்த மாணவனும் சரி அவன் ஈடுபட்ட துறையும் சரி அப்பழுக்கில்லாமல் வளர்ந்திருக்கும். அவன் அரசியலில் இறங்கினாலும் அப்படியே.

 2. Avatar

  இன்றைய இளைஞர்கள் சினிமா நாயகர்களுக்கு மன்றம் வைப்பதற்கும், கனவு நாயகிகளுக்குக் கோயில் எழுப்புவதற்கும் நேரத்தைச் செலவிடாமல் நாடும் சமுதாயமும் பயன்பெறத்தக்க வகையில் அரசியல் துறையில் பிரவேசித்து நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தால் இந்தியா வல்லரசாக மாறுவது ஒன்றும் இயலாத காரியமல்ல.

  இளைஞர்கள் எழுச்சியோடு புறப்பட்டுச் சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கவேண்டும். இப்போதுள்ள கறைபடிந்த, குறை மலிந்த அரசியல் கட்சிகளுக்கு மாற்றான ஓர் புதிய சக்தியாக, புரட்சிச் சக்தியாகச் செயல்படவேண்டும் என்பதே நல்லோரின் விருப்பம்.

  உறங்கிக் கொண்டிருக்கும் இளைய பாரதத்தைத் தட்டியெழுப்பும் புதிய ‘திருப்பள்ளியெழுச்சியாய்’ விளங்குகின்றது ஆசிரியர் பவள சங்கரியின் தலையங்கம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!!

  –மேகலா

 3. Avatar

  நல்ல சுவராசியமான தேர்தலின் கட்டுரை. 2010 தேர்தலின் சமயத்தில் தில்லி தமிழ் சங்க மேடையிலே  திரு நெல்லை ஜெயந்தா தலைமையில் ஒரு கவியரங்கம் . தலைப்பு  “தேர்தலின் தேடுதல்” அதில் “வாக்காளர் தேடுதல்”  வாய்ப்பு எனக்களிக்கப்பட்டது.  உங்களின் கட்டுரைக் கண்டதும்  அதன் ஞாபகம் வருகிறது. அதன் பதிவையும் ஒலி பதிப்பையும் விரைவில் பகிர்ந்து மகிழ்வேன்.அதியமாய் நிறைய இளைஞர்கள் நிறைவில் மகிழ்ச்சி பகிர்ந்தார்கள். 
   “நம் இந்தியா வல்லரசு ஆவதும், வளமான வாழ்க்கையை வளர்ப்பதும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்பதுதான் சத்தியம்.  ஜெய்ஹிந்த்..”

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க