Featuredஇலக்கியம்கட்டுரைகள்

நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 29

பெருவை பார்த்தசாரதி

 

அதிர்ஷ்டம் வேணும் சார், இல்லண்ணா ஒண்ணும் நடக்காது.

ஏன் சார் இப்படிச் சொல்றீங்க?….

அது ஒண்ணுமில்ல, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

அட என்ன சார், ஒண்ணுமே இல்லாத விஷயத்த, பெரிசாக்கி ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு நினைக்கிறேன்?…

‘தலகீழ நிண்ணு தண்ணி குடிச்சாலும் நடக்கிறதுதான் நடக்கும்’ போல இருக்கு.

‘என்ன சார்’ மறுபடியும் தத்துவம்!..

வேற ஒண்ணுமில்ல எவ்வளவுதான் விழுந்து புரண்டாலும், ஒட்றதுதான் ஒட்டும்னு சொல்றேன்.

சரீங்க போதும், சொல்ல வந்தத நேரடியாச் சொல்லுங்க, எதுக்கு சுத்திவளச்சு பெரிசா!….இழுக்கிறீங்க…

ஒண்ணுமில்ல, போனவாரம், வெளிநாடு போயிருந்தேனா, அங்க வாங்கின லாட்ரி சீட்ல, ஒரு நம்பர்ல பல லட்சம் ஏமாந்துட்டேன். எனக்கு பக்கத்து நம்பர்காரணுக்கு ஒரு கோடி விழுந்திருக்கு.

ஏங்க அதிர்ஷ்டத்த நம்பி வெளியூர் போறீங்க, இங்கதான் அறிவுக்கு முதலிடம் கொடுக்கறாங்களே, டிவில குரோர்பதில கலந்துக்க வேண்டியதுதான, கரெக்டா பதில் சொல்லி கிட்டே வந்தா, உங்களுக்கும் ஒரு கோடி கிடச்சிடுமில்ல.

அட அதுலகூட மோசடி உண்டுங்க, வரிசயா கரெக்டா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டே வரும்போது, கடைசி கேள்விக்கு பதில் தப்பா இருந்தா, மொத்த பணமும் அவுட்டுல்ல.

அது போகட்டும் போனவாரம் கையில ஏதோ அடிபட்டுடுச்சுன்னு சொன்னிங்களே?..

அத ஏன் கேக்கிற, என் போறாத பாத்ரூம்ல காலம் வழுக்கி விழுந்தேன், கையிலே சரியான அடி, ஆஸ்பிடல், செக் அப், எக்ஸ்ரே அது, இதுன்னு ஒரு வாரம் ஓடிருச்சு. ஒரே டென்ஷன், கவல. நல்லவேள பெரிசா ஒண்ணுமாகல.

சின்ன விஷயம்தானே இதுக்கு போய் இவ்வளவு அலட்டிக்கிருங்கீளே?..

சின்னகாயம்தான், ஆனா பெரிசா கொண்டுபோயி விட்டுட்டா?…

சின்ன விஷயத்துக்கெல்லாம், ரொம்ப அலட்டிக்காம இருக்கிறதுக்கு, ஒரு வழி இருக்கு, அதாவது சில பிரச்சினைகள பெரிதாக்காம, கண்டுக்காம இக்னர் பண்ணிட்டா எப்பவுமே சந்தோஷம்தான் என்பது, பாண்டிச்சேரி அன்னையின் பொன்மொழிகளுள் ஒன்று……தெரியுமா!…..

===========

இந்த இரண்டு பேரின் உரையாடலைச் சற்று உன்னிப்பாக கவனித்தால், ஒன்று தெளிவாகும், ஒருவர் எதிர்மறை எண்ணங்களோடு உரையாடும்போது, மற்றொருவர் நேர்மறை எண்ணங்களின் மூலம் பதில் சொல்கிறார் என்பது தெரியவரும்.

இதுபோல் பொது இடங்களிலும், விழாக் கூட்டத்திலும், பலர் புலம்பக் கேட்டிருக்கிறோமல்லவா?… இந்த உரையாடலில் இருந்து என்ன தெரிகிறது. இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழாமல், தன்னிடம் திறமை இல்லை என்ற சுய பச்சாதாபம் உள்ளவர்கள்தான் இப்படிப்பட்ட புலம்பலுக்கு ஆளாகின்றனர் என்கிறது மனநல ஆய்வு ஒன்று. எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் நடக்கும் என்று அலுத்துக்கொண்டு, ‘இது நம்மால் முடியாது’ என்கிற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி இருப்பதைக் காணமுடியும்.

வெற்றி வந்தால், அது கடின உழைப்பால் வந்தது என்று பீற்றிக்கொள்வது, இல்லையேல் நமக்கு ‘நேரம் சரியில்லை’ என்று வெறுத்துக் கொள்வது. தன்னால் ஒன்றும் சாதிக்கமுடியாது என்று தெரிந்ததும், மற்றவர்களின் உண்மையான சாதனையை ஒரு போதும் ஒத்துக்கொள்ளாமல் ‘ஏதோ அதிர்ஷ்டம் அவனுக்கு’ என்று  விளக்கமளிப்பது. இல்லாவிட்டால், அந்தச் சாதனைப் பற்றி ஏதாவதொரு அவதூறு சொல்வது, இதுவே எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தவர்களின் வாடிக்கையான வழக்காக இருக்கும் என்பதை நாம் பணிபுரிகின்ற இடங்களில் பழகுபவர்களிடம் உணரமுடியும்.

இதுபோல் அதிர்ஷ்டத்தின் மீது பழிபோட்டு, தம்முடைய திறனைக் குறைவாக மதிப்பிட்டு தம்மைத் தாழ்த்திக்கொள்வதால் ஒரு காரியத்தையும் முழுமையாகச் செய்யமுடியாது.  துன்பங்கள் வருவது எல்லோருக்கும் சகஜம், அதை எப்படி சமாளிக்கிறான் என்பதைப் பொருத்தே அவன் மற்றவருக்கு வழிகாட்டியாகிறான். நம்மால் முடியும் என்கிற நேர்மறை எண்ணம் இருந்தால் மனிதனால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை என்பதை இதுவரை எடுத்துச் சொல்லாத எழுத்தாளர்களே இல்லை என்று கூடச்சொல்லலாம்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும், பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்” என்று பாடிய வடலூர் வள்ளலார், பயிர்கள் வாடுவதைக் கூட சகிக்கமுடியவில்லை, வயிற்றுப் பசியால் வாடும் மாந்தர்களை கண்டார், அதன் தாக்கமாக, ‘பசியால் வாடும் அனைவருக்கும் உணவளிக்க முடியும்’ என்ற அற்புதமாகத் தோன்றிய, அந்தச் சிந்தனைத்துளி என்கின்ற சிறு நெருப்புதான், இன்று அணையா நெருப்பாய் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருக்கிறது. சிந்தனை தோன்றியபோது, பணமில்லை, ஸ்பான்சர் செய்யவும் யாரும் இல்லை. ஆனால், இவரது ஆக்கப்பூர்வமான சிந்தனையாலும், மனவலிமையாலும், எந்தச் செயலையும் செய்துவிட முடியும் என்பதைத்தான் வள்ளலாரின் வாழ்க்கைமுறை நமக்கு வழிகாட்டுகிறது.

இது போன்று, மன வலிமை கொண்ட எத்துணையோ சாதனையாளரின் வரலாறுகளைப் படிக்கிறோம். அனைத்திலும் ஒரே மாதிரியாக ஒரு உண்மை நிலவுவதை அறிகிறோம். அதாவது துன்பத்திலும், மன வலிமை ஒன்றே உயர்வு தரும் என்பதும், மனோபலம் இருந்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது. ஆப்பர்சுனிட்டி என்பது எல்லொர் வீட்டுக்கதவையும் ஒன்றாக ஒரே நேரத்தில்தான் தட்டுகிறது. ஆனால் சந்தர்ப்பத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தியவர்கள்தான் சாதனை படைத்தவனாகி வரலாற்றில் இடம் பெறுகிறார்கள்.

அரசாங்க அலுவலங்களில் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், அதில் தினமும் வேலைக்கு வருவது மட்டுமே தன்னுடைய கடமை என்றும், வேலை செய்வது மற்றவரது வேலை என்றும் நினைப்பவர்களே அனேகர். அரசாங்க உத்தியோகம் என்றாலே, கேட்கவே வேண்டாம், ஏதோ வேலைக்கு வந்தோமா, சொந்தப் பணிகளை மட்டுமே முன்னிறுத்தி அலுவலகப் பணியைப் பின்னே தள்ளி அன்றயப் பொழுதைக் கழித்துவிட்டு வீடு வந்து சேர்வதற்குப் பெயர்தான் ‘பணி’.  இதில் சற்று விதிவிலக்காக ஒர்க்கஹாலிக்காக இருப்பவர்கள், அபாரமான திறமைகள் கொண்டவர்களுக்கு மட்டுமே, வாய்ப்புகள் அதிகமாகக் காத்திருக்கின்றன.

இப்படிப்பட்ட திறனுள்ளவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும், திறமைக்கு விலையாகத் தொடர்ந்து வேறு இடத்தில் பணி செய்ய முடிகிறது. இங்கே பலருக்கு அதிர்ஷ்டம் வேலை செய்யாது. திறனுக்கும், முயற்சிக்குமே முதலிடம். ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, எத்தகய இடையூறு வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், அசாத்தியமான மனோபலத்துடன் செயல்படுபவர்கள், முடிவில் வெற்றிகரமாக செயலை முடித்து விடுவதைப் பார்க்கிறோம். பின்னாளில், எதிர்த்து நின்றவர்கள் கூட, அச்செயலை வியந்து பாராட்டுவதும் சகஜம்.

எத்துணையோ பேருக்கு எண்ணம்தான் பெரிதாக இருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபாடு இல்லை. அப்படியென்றால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?…குழந்தைகள் மேதையாகவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான முயற்சி ஏதும் எடுத்தால்தானே ஓரளவுக்கு நடக்கும். வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?..ஆக “ஆசை இருக்கு தாசில் பண்ண அருகதை இருக்கு கழுதை மேய்க்க” என்பது போல், ஆசை மட்டும் இருந்தால் போதுமா?.. முயற்சி எடுத்தால் முடியாது உண்டா. எடுத்த காரியத்தை முடிக்க மனோபலம் அவசியம் என்பதை சாதனையாளரின் வரலாற்றிலிருந்து அறிகிறோமல்லவா?…

ஒவ்வொரு நிமிடமும் உலகில் ஏதாவதொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டுதானிக்கிறது. புதிய, புதிய கண்டுபிடிப்புகளுக்கு குறிக்கோள்தானே முன்னோடியாக இருக்கிறது. இன்றய உலகத்தில் நான்கு சக்கர வாகனங்களின் வசதிகளில் வளர்ச்சி, அலைபேசியின் அபரிமிதமான செளகர்யங்கள் இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.  நித்தம் ஒரு சிந்தனையோடு, புதிது புதிதாக ஆராய்ச்சி செய்து புகழின் உச்சிக்கு சென்ற ஆப்பிள் நிறுவனர் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ என்பவரை அவ்வளவு எளிதில் உலகம் மறந்து விடுமா?… மேன்மேலும் சாதிக்க வேண்டிய தருணத்தில், இளம் வயதிலேயே இறந்து விட்டார் என்பதுதான் வருந்துதற்குறியது.

நமது உடலில் எல்லா அவயங்களும் நன்றாக வேலை செய்கிறது. அங்க ஹீனம் இல்லை. ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்டால் ‘ஏதோ இருக்கிறேன்’, ‘காலம் ஓடிக்கிட்டுருக்கு’ என்ற சலிப்பான பதில் வருவதைப் பார்க்கிறோம். கால்கள் நன்றாக இருந்தும். அவசரமாக ஒரு பஸ்ஸைப் பிடிப்பதற்குக்கூட சிறிது தூரம் ஓடமுடியவில்லை. ‘நேற்று இடுப்பிலே ஒரே வலி, கால்களிலே வெரிகோஸ் ப்ராப்ளம்’, ஒரு வேலையுமே செய்ய முடியலே, கொஞ்சதூரம் நடக்க முடியல’ இப்படி தினமும் அலுத்துக் கொள்பவர்களை நம்மிடம் பழகுபவர்களிடம் அதிகம் காண முடியும்.

குழந்தைகள் படித்து, பட்டம் பலபெற்று நல்வாழ்க்கை வாழவேண்டுமென்பதுதானே, அனைவரின் லட்சியம். அதற்காகத்தானே எல்லாத் தாய்மார்களும் எத்தகய துன்பம் வந்தாலும் சகித்துக் கொண்டு மனோபலத்துடன் பிள்ளகளின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான், ஒரு தாயும் கனவு கண்டாள். எட்டு வயதே நிரம்பிய தன்னுடைய பிள்ளை எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்றான். அங்கு குளிர் மிகுந்த வகுப்பறையை சூடேற்றுவதற்காக ஸ்டவ் பற்ற வைத்தான், ஸ்டவ் வெடித்து, வகுப்பறை முழுவதும் தீ பரவியது, மாணவனின் உடம்பும் இடுப்புக்கு கீழ் பாதிக்குமேல் எரிந்து விட்டது. கெரோசினுக்கு பதில் தவறுதலாக கேஸோலின் நிரப்பி இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. தீ விபத்தில், 13 வயதான தனது சகோதரரை இழந்தார்.

உடம்பில் ஒரு பாதி முழுவதும் தீக்காயங்களுடன் எரிந்து விட்டதால், இவன் இனி வாழ்ந்து துன்பத்தை அனுபவிப்பதைவிட இறப்பதே மேல் என்று தன் அன்னையிடம் டாக்டர் சொல்வதை, அரைகுறை நினைவோடு இருந்த அந்த தைரியமான மாணவன் கேட்கிறான். பள்ளிக்கூடமே பாதி எரிந்து அணைந்து விட்டாலும், கடவுள் பக்தி நிரம்பிய அவன் மனதில் “நான் வாழ்வேன்” என்கிற மன வலிமை, மனோசக்தி(‘தீ) மட்டும் அணையவில்லை.

மருத்துவரே வியக்கும்வண்ணம் எப்படியோ பிழைத்து விடுகிறான். ஆனால் செயலிழந்த கால்கள் இரண்டையும் வெட்டி எடுத்துவிடவேண்டும் என்ற மருத்துவரின் கோரிக்கையை, அவனது அம்மா நிராகரித்து விடுகிறார். தினமும் தந்தையும் தாயும், அவனது கால்களுக்கு மருந்துகள் தடவி நீவி விடுகின்றனர். காலில் சுரணையோ, சக்தியோ ஒரு முன்னேற்றமும் இல்லை. “நான் கண்டிப்பாக நடந்து காட்டுவேன்” என்ற எண்ணம் மட்டும் சிறுவனின் மனதை விட்டு அகலவில்லை.

ஒரு நாள் அவனது தாய், தன் மகனை ஒரு தள்ளு வண்டியில் உட்காரவைத்து, தோட்டத்தின் பக்கம் சுகாதாரமான காற்றைச் சுவாசிக்கும்படி அழைத்துச் செல்கிறாள். திடீரென்று எழுந்த அவன், காம்பெளண்ட் சுவரின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு தரையில் தவழ்ந்த வாறு சிறிது தூரம் செல்கிறான். தினமும் அவ்வாறு செய்ய ஆசைப் படுகிறான். தாயும், தந்தையும் அவனது கால்களுக்கு மஸாஜ் செய்து, தினமும் தெம்பூட்டுகிறார்கள்.

படுக்கையையும், வீல்சேரையையும் வெறுத்த அவன், எப்படியாவது ஒரு நாள் நடந்து விடவேண்டும், ஓடிக் காட்டவேண்டும் என்ற வைராக்கியம் அவனை தினமும் இதே முறையில் பயிற்சி செய்ய வைக்கிறது. இரும்பு மனதால் ஆன அவனால், இப்போதெல்லாம் சிறிது சிறிதாக அவனால் நடக்கமுடிந்து பல நாள் தொடர்ந்தது. எதிர்பாராதவிதமாக ஒரு நாள், தன்னால் ஓடமுடிவதைக் கண்டு அவன் மனம் மேலும் சக்தி பெற்றது.

நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்ய, நடந்து செல்லவேண்டிய பள்ளிக்கு, ஓடிச் சென்றடைகிறான். நினைத்த இடத்திற்கெல்லாம், அவனால் ஓடமுடிகிறது. அவனைப் பார்த்த அனைவருக்கும் வியப்பு. மன வலிமையால் “எந்த இடத்திற்கும் என்னால் ஒடிச் சென்றடய முடியும்” என்று நிரூபித்துக் காட்டிய அவனுக்கு ‘கான்ஸாஸ் ஃப்ளையர்’ (&), கான்ஸாஸ் இரும்புமனிதன் என்ற அடைமொழியைக் கொடுக்கிறார்கள்.

இச்சிறுவனால் வாழமுடியாது,

இவனால் நடக்க முடியாது,

இவனால் ஒருபோதும் ஓடமுடியாது,

என்று எல்லோராலும் கருதப்பட்ட, அவ்வாலிபன், 1934 ல், நியூயார்க்கில் புகழ்பெற்ற ‘மேடீஸன் ஸ்கொயர் கார்டன்’ (Madison Square Garden) என்ற இடத்தில் நடந்த போட்டியில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடம் எட்டு நொடிகளில் கடந்து சாதனை புரிந்ததை, 25000 பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். வலிமையான எண்ணமும், மன வலிமையும் கொண்ட அவ்வாலிபனின் பெயர் ஃக்ளன் கன்னிங்காம். தொடர்ந்து 1936, 38, 40 என்று அனைத்து போட்டிகளிலும் முதலிடம் வகித்தார்.

இவரைப் பற்றிய மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள:-

http://en.wikipedia.org/wiki/Glenn_Cunningham_(athlete)

உடம்பிலே ஒரு குறையும் இல்லாத, இன்றய இளைய சமுதாயத்தினர், ‘ஃக்ளன் கன்னிங்ஹாம்’ (Glen Cunningham) என்ற வீரரின், சுயரசரிதையை முழுவதுமாகப் படித்து, அவரது மன வலிமையையும், திறமைகளையும் அறிந்து கொள்ள முயற்ச்சி செய்தால், கண்டிப்பாக நாமும் சாதனை புரிய வேண்டும் எண்ணம் உருவாகும். இதேபோல் இரண்டு கால்களையும் இழந்த பிறகு, செயற்கைக் கால்களுடன் எட்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸ்’ (Oskar Pistorius) என்ற ஓட்டப்பந்தய வீரரை ‘பிளேட் ரன்னர்’ (Blade runner) என்ற பெயரில் உலகமே அறியும். இவர்களைப் போன்றோரின் வரலாறுகளை தேடிக் கண்டுபிடித்து அறிந்து கொள்ளவேண்டும்.

உடல் நலத்தைப் பேணுவதற்கு, சத்தான உணவு தேவைப்படுவதைப்போல, மனநலத்துக்கும், மனஉறுதிக்கும், மனவலிமைக்கும் தேவை நல்ல எண்ணங்கள். இத்தகய எண்ணங்களைத் தூண்டும் தகவல்களை, இளைஞர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தால், படிப்படியாக வெற்றிப் படிகளை எட்டி சாதனை படைக்க முடியும்.

கட்டுரையின் சாராம்சமாக,

ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம், பெரிதாக மனதைப் போட்டு அலட்டிக்கொண்டிராமல், கடந்தகாலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிராமல், இருப்பதை வைத்துக் கொண்டு, இன்புற்று வாழ, தினமும் புதிது புதிதாக சிந்தனை செய்தால், இன்பம் என்றும் நிலையானது என்பதை மஹாகவி பாரதி, தனது பாடல் ஒன்றை மிக அருமையாக, பாமர மக்கள் கூட எளிதில் அறிந்துக்கொள்ளும் விதமாக அமைத்திருக்கிறார்:-

சென்றது இனி மீளாது மூடரே!… நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன் றொழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்!… சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று வாழ்வீர்

தீமை எல்லாம் அழிந்து போம் திரும்பி வாரா!…

இன்றய இளய சமுதாயத்துக்கு எழுச்சியூட்டும் விதத்தில் இப்பாடல் அமைந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 தொடரும்……..

 

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  வழக்கம்போலவே, நற்சிந்தனைகளைத் தூண்டும், மன வலிமையின் மகத்துவத்தை விளக்கும் அருமையான கட்டுரை.

  சாதனையாளரின் வாழ்க்கை வரலாற்றையும் நீங்கள் சேர்த்தே கொடுத்திருப்பது ‘சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி’ப் பெய்ததுபோல் கட்டுரையின் சுவையை மேலும் கூட்டுகின்றது. திரு. பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செய்திகளையும், சம்பவங்களையும் தாங்கிவரும் தங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். நன்றி!

  ..மேகலா

 2. Avatar

  மிகமிக அருமையான கட்டுரைத் தொடரை அளித்து வரும், திரு.பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். என்றென்றும் மனதில் கொள்ள வேண்டிய முத்தான கருத்துக்கள். திருமதி. மேகலா அவர்கள் சொன்னதைப் போல, ‘சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி’யாகவே இருக்கிறது கட்டுரை. மிக்க நன்றி. 

 3. Avatar

  எழுத்தாளர் என்ற முறையில், மற்ற எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்புகளுக்கும் தவறாமல் தங்கள் மேலான கருத்துகளைச் சொல்லி, எழுத்துத் திறமையை வளர்க்கும் விதமாக வல்லமையில் தொடர்ந்து எழுதி வரும் திருமதி மேகலா இராமமூர்த்தி மற்றும் பார்வதி ராமச்சந்திரன் இருவருக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க