பாடுங்கள் தமிழாள் வாழ!
சத்தியமணி
வாருங்கள் பலகோடி சேர மகளிர் நிலமேக!
பாடுங்கள் தமிழாள் வாழ! நிலத்து நலமாக !
பருவங்கள் மாறும் தமிழகராதியில் பெண்ணின் வாழ்க்கை
புருவங்கள் ஏறும் அறிவீர்!அவள் புன்னகை சேர்க்கை ()
பேதைமெய் சிறுமிகுறுமி பாலை வடிவெடுத்தாள் (5-7)
பெதும்பையே ஆகத்தருவி தும்பை நுனிபிடித்தாள் (8-11)
மங்கையாய் பருவமெய்தி பெண்மை பெயர்ந்தாள் (11-13)
மடந்தையாள் மாந்தளிராகி மலராய் சிரித்தாள் (14-19) ()
அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள் (20-25)
தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள் (26-31)
பேரிளம்பெண் அன்னை யென்றே பாசம் பொழிந்தாள் (32-40)
நுங்கையாகி நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள் ()
நங்கையாகி உறவுகள் ஏற்று பெண்ணின் பெருமை – மாலன்
தங்கையிவளே ! மகளாய் பிறந்தாள்! சக்தி மகிமை !
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை
புதுமையாய் இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()
‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்னும் திண்ணிய கருத்தைச் சொல்லும் கண்ணியக் கவிதை. மண்ணில் பெண்ணியம் பேசும் கவிதைகள் பல கோடி உண்டெனினும், பெண்ணின் ஒவ்வொரு பருவத்தையும் சுட்டும் வரிகளால் சக்தி மகிமையைச் சொன்ன சத்தியமணி அவர்களின் கவிதை அவற்றுள் முக்கிய இடம் பெறுவது உறுதி. வாழ்த்துக்கள், நன்றிகள் கவிஞரே!!.
பெண்ணியல் கவிதைக்கு பெண்களின தரப்பிலிருந்து வந்தஅன்பு சகோதரியின் பாராட்டுக்கு நன்றி ! இருப்பினும் பாட வைத்த தமிழும் , தமிழ் ஆசான்களும் , தமிழின் சிறப்பும் தான் காரணம். எனக்கு தெரிந்து ஏனைய மொழிகளில் இப்படி ஆழமான கலைச் சொற்கள் இல்லை. இது தமிழ் ஆன்றோர் தாய்மைக்கும் பெண்மைக்கும் முன்னுரிமைத் தந்ததற்கு சான்று.
பெண்களின் ஏழு பருவங்களையும் பெருமைப் படுத்திப் பாடும் அழகான கவிதை. வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே.
தாங்கள் பின்னூட்டத்தில் கூறியிருப்பது போல ஆண்களுக்கு ஐந்து பருவங்கள், பெண்களுக்கு ஏழு பருவங்கள், நிலங்களில் நான்கு வகை என்று அழகும் சுவையும் வெளிப்பட அமைக்கப் பட்டிருப்பது தமிழ் மொழி ஒன்றில் மட்டும் தான் என்று நினைக்கிறேன்.
பருவங்களை படிக்கையில் கவிதையின் வரிகளால் படிப்பவரின் புருவங்களும் ஏறுது. அதன் சுவையால் வயிறும் நிறையுது.