நைவுறும் நினைவுகள்

எஸ்.ரவி 

மனிதர் வாழ்வில் நிகழ்வன எல்லாம்

நினைவெனும் நன்னூல் நிலையத்துள்ளே

படிந்து படிந்து படிமங்க ளாகும்.!

கற்றதும், கேட்டதும், படித்ததும், பட்டதும்,

குறிப்பே டுகளாய்க் குவிந்து கிடக்கும்!

குவியலுக் குள்ளே குடைந்து தேடினால்,

மடிதவழ்ந் திருந்த மழலை நாட்களின்

“அம்மா” வாசனை அங்கே இருக்கும்!

ஒண்ணாம் வகுப்பில் ஒன்றாய்ப் படித்த

கண்ணம்மாவும், கிருஷ்ணமூர்த்தியும்,

ஓரம்  ஒன்றில் ஒளிந்து கிடப்பர்!

ஐந்தாம் வகுப்பில், தீபாவளிக்கு

அடம் பிடித்து வாங்கிய டெரிலின் சட்டை

பச்சை நிறத்தில் பசுமையாய் இருக்கும்.

கவனமாய்ச் செய்த கணக்குப் பாடம்,

மனனம் செய்த செய்யுள், ஸ்லோகம்,

கல்லூரி நாட்களின் கலாட்டா வாழ்க்கை

எல்லாம் அங்கே இறைந்து கிடக்கும்.

கண்ணையும், கருத்தையும் கவர்ந்து இழுத்த

யாரோ ஒருத்தியின் ஓரப் பார்வையும்,

காதல்  பதித்த  காலடித்  தடங்களும்

திருமண தினமும்,  முத்லிர வளித்த

புதுஅனு பவமும்,  தேனாய் இனித்த

இல்லற வாழ்வும், இணைந்து கிடக்கும்,

மக்களைப் பெற்(று)அவர் மழலை உகந்து,

அட்மிஷனுக்கு அலைந்து திரிந்து,

ஆளாக்கி விட்டதில் அலுத்துக் களைத்து

முதுமை நெருங்கிய மூளைக் குள்ளே,

பாசம்,  நட்பு, பகைமை, அன்பு,

துவேஷம், துரோகம், கருணை, காதல்,

எனப்பல அலைகள்; எத்தனை புயல்கள்!

 

இத்தனை சுமைகள் அழுத்திய தாலோ,

சரிவர ஒழுங்கு செய்யாமை யாலோ,

பக்கங்கள் சிலசற்று பழுப்பேறி மங்கின!

மறதிக் கரையான் மற்றதைத் தின்றது

கவிதை வரிகள்   கண்ணீர் பட்டுக்

கரைந்து போயின! காலனுக் காகக்

காத்துக் கிடந்த காலப் போக்கில்

எஞ்சி இருந்த பதிவுகள் எல்லாம்

தடம் புரண்டங்கே தடுமாறிப் போயின!

புத்தகம், வித்தகம், தத்துவம் எல்லாம்

அர்த்த மிழந்திடும் அந்நேர த்தில்

‘நி’னைவுகள் ‘நைவதால் நிச்சயமாக

வார்த்தைகள் சற்றே வரிசை கலைந்து

கோர்வை தவறிக் குலைந்து போகும்!

 

ஆனால் என்ன? ஆன்மா மட்டும்

ஆண்டவனோடு அமைதி கொள்கையில்,

நினைவுக ளெல்லம் நீறாய்ப் போகும்!

படத்துக்கு நன்றி

 http://alzheimers.about.com/library/blbrain.htm

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நைவுறும் நினைவுகள்

  1. wowww. அருமையான படைப்பு.

    பகைமை, துவேஷம், துரோகம் எல்லாம் பழுப்பேறி நைந்து போக, அன்பு, பாசம், நட்பு, கருணை, காதல் போன்றவை எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாகவே மனதினில் நிலைக்கும்.

    திரு,ரவி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  2. மனதை வருடிப் பழைய நினைவுகளைக் கிளறி இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி அளிக்கும் ‘டைரி’க் குறிப்புக்களாய்க் கவிதை வரிகள். ஒவ்வொருவர் மனதிலுமே கொலுவீற்றிருக்கும் இதுபோன்ற மறக்கவியலா நினைவுக் குவியல்கள். அற்புதமான கவிதையை யாத்த திரு. ரவி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published.