முனைவர். ப. பானுமதி

குழந்தைகள் பால் வேறுபாடு, இன வேறுபாடு இல்லாமல் தெருவில் ஓடி ஆடிக்கொண்டு இருக்கும் போது பார்க்கும் நடுத்தர வயதுள்ள எவருக்கும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

“மகிழ்ச்சியா துள்ளிக்கிட்டு இருந்தோம்; கவலைன்னா என்னன்னு தெரியாம திரிஞ்சோம்; ஏன் தான் பெரியவங்களா ஆனோமோ தெரியல? இளமைப் பருவத்திலேயே இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏங்காதவர்கள் இருக்க முடியுமா? புலம்பாதவர்கள்தான் இருக்க முடியுமா?

இளமைப் பருவம் இனிக்கும் பருவம். அந்தப் பருவம் மட்டுமல்ல. அந்தப் பருவத்து நினைவுகளுக்கும் இனிமை இருக்கும்.. வயது கூடக் கூட வாழ்க்கையில் கசப்புச் சுவை கூடிக்கொண்டே போகின்றது. ஆனால் இளமைப் பருவத்து நினைவுகளை அசை போடும் போது மட்டும் வயது கூடக் கூட இனிப்புச் சுவையும் கூடிக்கொண்டே போகின்றது. குழந்தைப் பருவத்தில் குறும்புத்தனங்கள் செய்த எவரும் இதனை மறுக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு பெரியவருக்குள்ளும் ஒரு குழந்தை உலவிக் கொண்டிருக்கும் என்பார்கள். பத்துக் குழந்தைகள் உலாவிக் கொண்டு இருக்கும் பெரிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம்கூட நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அதே போல ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு பெரியவர் உலவிக்கொண்டு இருப்பாரோ என்னும் வினா இக்காலத்துக் குழந்தைகளைக் காணும் போது எழுகிறது. அதிலும் சின்னத்திரைகள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகளுக்குள் பல பெரிய மனிதர்கள் உலவிக் கொண்டு இருப்பார்களோ? என்னும் ஐயம் பலருக்கும் எழுகிறது.

திருஞான சம்பந்தர்கூட உமையம்மையின் ஞானப்பால் அருந்திய பின் தான் “தோடுடைய செவியன்” என்று பாடத் தொடங்கினார். குமர குருபரர் மீனாட்சியம்மை நாவில் வேலால் எழுதியதால்தான் கவி பாடினார். கவி காளிதாஸ் காளியின் அருள் பெற்றதால்தான் கவிதை படைத்தார். ஆனால் இந்தச் சின்னத்திரைக் குழந்தைகள் மட்டும் எப்படி? தங்கள் பெற்றோரின் நாவுக்குப் பயந்தே ஒரு வேளை ஞானம் பெற்றுவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சின்னத்திரை போட்டிகளுக்கும் சின்னக் குழந்தைகளின் பெற்றோர்க்கும் இடையேயான அரசியல் ஒரு புரியாத புதிராக உள்ளது. எப்படி எப்படியோ தூண்டில் போட்டு இழுத்து விடுகின்றன பெற்றோர்களைச் சின்னத்திரைகள். விளைவு பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளைச் சுமக்கும் சுமைதாங்கிகள் ஆகி விடுகின்றன குழந்தைகள்.

பத்து, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுக் காய்ச்சல் ஒரு புறம் என்றால் மறுபுறம் சுமார் ஐம்பது அறுபது விழுக்காட்டினர் சின்னத்திரைக் காய்ச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். சின்னத்திரையைப் பார்த்தது ரசித்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் சின்னத்திரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றே ஆகவேண்டும் என்று நினைக்கின்றனர்.

அதற்கான அழைப்புகளும் சின்னத்திரையில் கவர்ச்சிகரமாக மின்னலிடுகின்றன. பெற்றோர்க்கோ ஒரு புறம் மகனோ மகளோ புகழ் ஏணியில் பயணிக்கத் தொடங்குகிறார். மற்றொரு புறம் ஒவ்வொரு போட்டியும் கோடிகள்,, வீடு, வாகனங்கள் என்று சொத்துகளைச் சேர்த்துக் கொடுக்கின்றன. பிறிதொரு புறம் எதிர் காலத்தில் குழந்தைகள் அத்துறையில் ஒளிர வாய்ப்பாக அமைந்து விடுகிறது. விடுவார்களா பெற்றோர்கள். தங்களுக்கு கிட்டாத வாய்ப்பு தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதே. தங்கள் கனவை நிறைவேற்றவே தங்களால் பெற்று வளர்க்கப் பட்ட அடிமைகளாகப் பார்க்கின்றனர் குழந்தைகளை.

பாவம் அந்தச் சின்னஞ்சிறு மொட்டுகள். பெற்றோரின் கனவுகளைத் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு தங்கள் இளமையையும் குறும்புகளையும் அறவே மறந்து, போட்டிக்காகக் கடுமையாக உழைத்து ஓரு பக்கமாக வளர்ச்சி அடையும் இக்காலக் குழந்தைகளைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுவதில்லை. பரிதாபமே மிஞ்சுகிறது. இதனை வளர்ச்சி என்று எப்படி கூறமுடியும். வீக்கம் என்று வேண்டுமானால் கூற முடியும். வளரும் குழந்தைகளின் உடல் மன வளர்ச்சியை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருக்கும் கரையான்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன சின்னத்திரைப் போட்டி நிகழ்ச்சிகள்.

துள்ளித் திரியும் பருவத்தில் அந்தப் பிஞ்சுகளைப் பயிற்சி பயிற்சி என்று இப்படி வதைத்தால் அந்தக் குழந்தைகளுக்குக் கழிந்து போன பிள்ளைப் பருவம், விளையாட்டுப் பருவம் மீண்டு வருமா? மீண்டும் வருமா? அது மட்டுமல்ல. குழந்தைகள் பிஞ்சிலே பழுத்துவிடாதா?

நம் முன்னோர்கள் குழந்தைகளின் முன்பு எதைப் பேசலாமோ அதை மட்டும் பேசினார்கள். பெரிய பெரிய செய்திகளை (விஷயங்களை) குழந்தைகளின் முன் பேச மாட்டார்கள். இப்போதோ சின்னச் சின்னக் குழந்தைகள் பெரிய பெரிய விஷயங்களைப் பேசுகின்றன.

“கிருஷ்ணனுக்குப் பெண்களை ரொம்பப் பிடிக்கும். பெண்கள் மேல் அவ்வளவு ப்ரீத்தி. ஒரு யாமத்தில் முப்பது பெண்களைப் பார்த்தான். சாமக்கோழியை இடுப்பில் கட்டிக்கொண்டான். ஒவ்வொரு பெண்ணைப் பார்த்ததும் இடுப்பில் இருந்த சாமக்கோழியை ஒரு கிள்ளு கிள்ளுவான். அது கூவியதும், விடிஞ்சுடுத்து, நாழியாயிடுத்து. நா வரேன்னு சொல்லிவிட்டு கிளம்பி விடுவான். இப்படியே இரண்டரை மணி நேரத்தில் முப்பது பெண்களைப் பார்த்து விட்டு வீடு திரும்பினான். வீடு திரும்பி முன்னால் எப்படி படுத்திருந்தானோ அப்படியே வந்து நல்ல பிள்ளை மாதிரி படுத்துக்கொண்டான்” என்று மழலை மாறாத சுமார் எட்டு வயது முதியவன் பேசுகிறான். இதனை எண்பது வயதுள்ள பாலகர்கள் ரசிக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண நேர்ந்தது இந்த விபரீதத்தை.

இப்படி உரையாற்றும் குழந்தையின் குணத்தில் எந்த மாறுபாடும் வராதா? அவன்  கிருஷ்ணனாக மாறி கோபிகா ஸ்திரிகளைத் தேட மாட்டான் என்று என்ன நிச்சயம்? வளரும் குழந்தைச் சமுதாயத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அவசியமா என்பதை பெற்றோர்கள் முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இது ஒருபுறம் என்றால் போட்டிகளில் தேர்வு பெறாத குழந்தைகள் அத்தனை பேரின் முன்பு அழுவது காணச் சகிக்காத காட்சி. அதைவிடவும் கொடுமையான சகிக்க முடியாத காட்சி அக்குழந்தையுடன் சேர்ந்து பெற்றோரும் அழுவது.

நாற்பது ஐம்பதுகளுக்கு மேல் எல்லோருக்கும் பாலைவனச் சோலையாக இருப்பது, மனத்தைக் குளிரச் செய்வது, சோர்ந்த இதயத்திற்குச் சுறுசுறுப்பைக் கொடுப்பது இளமைப் பருவத்தில் தாம் செய்த மொறு மொறு குறும்புகளை அசை போடுவதுதான். இந்தக் குழந்தைகள் தங்கள் நாற்பது ஐம்பதுகளில் எவற்றை அசை போடுவார்கள். அசைபோட வெற்றுக் கஞ்சிகள் மட்டும்தான் இருக்கும். மொறு மொறுவென்று கிருஸ்ப்பாக ஒன்றும் இருக்காதே….?

தன் குழந்தை கன்னம்மா விளையாடிக் கொண்டு இருக்கின்றாள். அவளைக் காண்கிறான் பாரதி. அவனுக்குள்  அவளை அள்ளி அணைக்க ஆவல் எழுகிறது. தழுவலாம் என்று நினைக்கும் போது குழந்தை உளவியல் அவனைத் தடுக்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் மகளைத் தொந்தரவு செய்யாமல், அவளின் விளையாட்டுக் கலையாமல் அவளைத் தொடாமல் தூர இருந்தே தழுவி மகிழ்கிறான்.

ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி என்கிறான். ஆடித் திரியும் போது தழுவினால் அது கூட அந்தக் குழந்தையின் மகிழ்ச்சியைக் கெடுத்தது போல ஆகும் என்பதால் தள்ளி இருந்து தன்னுடைய ஆவி அக்குழந்தையைத் தழுவுகிறது என்பான். குழந்தைகளின் விளையாட்டுப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானது. முக்கியமானது. அதனால்தான் பாரதி ஓடி விளையாடுவதை, ஆடித்திரிவதை அதிகமாகப் பாடுகிறான்.

ஆளும் வளரனும் அறிவும் வளரனும்

அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு

அதுவே நீ தரும் மகிழ்ச்சி

என்பார் குழந்தைகளுக்காகவே பாட்டுக் கோட்டைக் கட்டிய பட்டுகோட்டை.

இந்தப் பாடலைக் கேட்ட மக்கள் எப்படி சிந்தித்தார்கள் என்று தெரியவில்லை. பட்டுக்கோட்டை குழந்தைகளிடம் குறையாத அக்கறை கொண்டவன். குழந்தைகளின் உடலும் உள்ளமும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதைச் சொல்லவே இப்பாடலைப் பாடினான். அப்படிப் பாடியவன் முதலில், ஆள் வளர வேண்டும் என்கிறான்.. சுவர் இருந்தால்தானே சித்திரம். பிறகு அதற்கேற்றாற் போல் அறிவு வளர வேண்டும் என்று சிந்தித்தவன் அவன்.

இரண்டில் ஒன்றை விட்டு ஒன்று வளர்ந்தால் அதனை வளர்ச்சி என்று கூற முடியாது. ஆள் மட்டும் வளர்ந்து அறிவு வளராது இருப்பின் அது ஆடிசம் (மனநோய்) என்னும் நோயின் அறிகுறி. அறிவு மட்டும் வளர்ந்து ஆள் வளராது இருப்பின் அது உடல் நோயின் அறிகுறி. சின்னக் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மிகவும் முக்கியம் அதனால்தான் முதலில் ‘ஆள் வளரவேண்டும்’ என்று உடல் வளர்ச்சியைப் பற்றிப் பாடியிருக்கிறான் பட்டுக்கோட்டை.

ஆனால் சின்னத்திரைப் போட்டிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொருட்படுத்துகிறார்களா என்பது வினாவாக உள்ளது. அவர்களின் திறமை வளர்ச்சியையே பெரிதாக நினைக்கின்றனர் என்பது கண்கூடு. குழந்தைகளைப் பற்றி எப்படி எப்படியெல்லாமோ கனவு காண்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால் அதற்காக அணு அணுவாக அக்குழந்தைகளை வதைப்பது தவறு.

பெற்றோர்களின் கனவைத் தம் கண்களில் காணும் குழந்தைகளுக்குச் சொந்தக் கனவுகளும் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது பெற்றோர்கள். அவற்றை என்ன என்று அறிந்து அதன்படியும் குழந்தைகளை வளர்க்க முற்படுவது அறிவுடைமை. அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளுக்குப் பழைய நினைவுகள் சுடாத வண்ணம் இருக்கும். குழந்தை மனம் கெடாத வண்ணம் இருக்கும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.