கனடாவில் தமிழர் வரலாற்று ஆவணக் காப்பகம்

0

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கண்ணுக்கும் செவிக்கும் விருந்தளித்த கனடா வரலாற்று ஆவணக் காப்பகத்தின் பதின்ம ஆண்டு நுழைவு!

கடந்த மே 23ம் திகதி திங்கட்கிழமை கனடா வரலாற்று ஆவணக் காப்பகத்தின் 13ஆவது நிறைவு நிகழ்வை ஒட்டிய கண்காட்சி, கவியரங்கம், கருத்தரங்கம், மாலைஅரங்கம் என முழுநாள் நிகழ்வைக் கண்டுகளிக்க நேர்ந்தது. இந்த நிகழ்வை திரு. திருமதி .நகுலசிகாமணி, இருவரும் தேனீ போல திரட்டிய பழைய தமிழ் நூல்கள், இதுவரை மீள்பதிப்பித்து வெளியிட்ட நூல்கள், புதிதாக அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட நூல்கள், படங்கள், ஆவணங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பழைய செல்லரித்த, கிடைக்கமுடியாத நூல்களை உ.வே.சாமிநாதர், சி.வை.தாமோதரம்பிள்ளை
பாணியில் தேடிக்கண்டுபிடித்து மறுபதிப்புச் செய்து வெளியிடுகிறார்கள். போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் நாவற்குளி, சுண்டிக்குளி, புத்தூர், உடுப்பிட்டி போன்ற ஊர்களில் அவர்கள் கட்டிய தேவாலயங்களின் படங்கள் காட்சியில் வைக்கப்பட் டிருந்தன. அவற்றைப் பார்த்தபோது 500ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பதைப் பின்னோக்கிப் பார்க்க முடிந்தது.

17ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் பண்டிதர்களின் பெயர்களையும் அவர்கள் நமக்கு அளித்த நூல்களின் பட்டியலையும் வைத்திருந்தனர்.

ரொராண்டோ மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி, காலை 11மணிக்கு நாடாவை வெட்டிக் கண்காட்சியைத் திறந்து வைத்தபோது இதன் முக்கியத்துவம் பற்றியும் மார்க்கம் நகரத்தில்
கண்காட்சியை வைக்கும்போது அரச செலவில் வைக்கத் தான் ஒழுங்கு செய்வதாகவும் கூறினார்.

கவியரங்கு திரு.க.நவம் தலைமையில் திரு.கனக மனோகரன், திருவாட்டி கோதை அமுதன், திரு.த.சிவபாலு ஆகியோர் “சுவரோடாயினும் சொல்லியழு” என்ற தலைப்பில் கவிதை படித்து பார்வையாளரை ஈர்த்தனர்.

கருத்தரங்கு திரு.நக்கீரன் தலைமையில் பேராசிரியர் உ.சேரன் “கடந்தகாலத்தின் தடங்கள்” என்ற தலைப்பிலும் முனைவர் நா.சுப்பிரமணியன் “ஆவணப்படுத்தலும் ஆராய்வும்” என்ற தலைப்பிலும், திரு.மா.க.ஈழவேந்தன் “சாம்பலில் பூத்த பூக்கள்” (யாழ் நூலகம்) என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். எல்லோரும் பயனுள்ள கருத்துக்களை கூடியிருந்த மக்களிடம் வைத்தனர்.

இதில் உரையாற்றிய முனைவர் சுப்பிரமணியன், முன்னைய காலத்தில் ஆறுமுகநாவலர் போன்ற அறிஞர்கள் வெறும் ஓலைச் சுவடிகளாய் இருந்த பல அரிய படைப்புக்களை நூல்களாக பிரசுரம் செய்த காரணத்தால் தான் நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. எமது மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பெருமைகளையும் விரிவாக்கங்களையும் பல நூல்களை இழந்தாலும் வல்வை நகுலசிகாமணி அவர்கள் தற்காலத்தில் ஆற்றும் பணிகள் ஆறுமுகநாவலர் போன்றவர்கள் ஆற்றிய பணிகளுக்கு ஒத்தவை அதோடு பாராட்டுக்குரியவை என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என புகழாரம் சூட்டினார். அத்தோடு ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்துப் பூதந்தேவனார் என்ற சங்ககாலப் புலவரோடு தொடங்குகிறது.

அதன்பின் கி.பி1310ம் ஆண்டு போசராசரால் இயற்றப்பெற்ற சர சோதிடமாலை. இடையில் ஆயிரம் ஆண்டுகள் எந்த நூலும் எழுதப்படவில்லை. காரணம் எழுதிய நூல்களை தமிழர்கள் பேணத்தவறிவிட்டார்கள் என்பதே, எனவும் தனது உரையில் கூறினார்.

கடந்தகாலத்தில் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய “யாழ்ப்பாண வைபவ கௌமுதி”, மற்றும் கைலாயமாலை, வைபவமாலை, கருணைக்கோர் அருணகிரி நாதர் அருளிச் செய்த கந்தலரங்கார மூலமும் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் வயித்தியலிங்கபிள்ளை எழுதிய உரை, வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள், பொன்னம்பலம் அருணாசலம் (ஆங்கிலம்) போன்ற இருபது நூல்களை இதுவரை மீள்பதிப்புச்செய்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டில் (சென்னை) ஈழத்தவர்களின் பதிப்பகமாக விளங்கும் “காந்தளகம்” உரிமையாளரும், நாட்டுப்பற்றாளருமான மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில்,
“வல்வைத் தமிழர்கள் வளமான இலக்கிய ஊட்டர்கள்
சொல்லில் சுவையைப் பெருக்கும் கருத்துத் தேட்டர்கள்
எல்லைக் கப்பால் கனடாவில் அவற்றைக் காட்டுவோர்
வல்வை நகுலரும் உமையும் தமிழின நாட்டர்கள்”.,
எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரும் “ஓர் அரசு அல்லது ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய பணியை நகுலசிகாமணியும் அவரது துணைவியாரும் செய்துள்ளார்கள் எனப் பாராட்டி, விமர்சனக் குறிப்பேட்டில் ஆவணக் காப்பகத்திற்கு ஆலோசனைகளும் வழங்கிச் சென்றனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *