“நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 2 “
ரிஷி ரவீந்திரன்
ஆயிரம் வாட் ஷாக்…..!
‘குற்றங்கள் எண்ணத் துணியாதவன்…. வலிய சென்று மாட்டிக்கொள்வாய்…. உன் கருமையப் பதிவுகள் இவை…. ’ பெரியவரின் வார்த்தைகள் ரங்கராஜினுள் எக்கோவாக ஒலித்துக் கொண்டிருந்தது.
நோ…. விதி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நான் இதிலிருந்து வெளியே வரவேண்டும்… என்ன செய்யலாம்….?
நாமனைவரும் யார்….? சக பயணிகள்தானோ…? ஏன் வீணான பற்று…? அவரவர் நிறுத்தம் வந்தால்….? Move towards your goal with detached attachment like a wheel. பெரியவரின் சிந்தனைகள் மனதினுள் ஓடியது.
முதலில் இங்கிருந்து தப்பியோட வேண்டும். நான் ஏன் ஓடவேண்டும்….? நான் என்ன தவறு செய்தேன்….?
முட்டாள். நீ ஒரு அரிச்சந்திரன் என உலகம் உன்னை நம்புமா….? வீணான சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே…. போலீஸ் ஸ்டேஷன் வாசப்படிய மிதிச்சவனும், கோர்ட் வாசப்படிய மிதிச்சவனும் நிம்மதியா இருந்ததா சரித்திரமே இல்லை. ஓடு ஓடு தப்பியோடு….
அவசரத்தில் தடயங்களை விட்டுவிட்டுச் செல்லுதல்கூடாது. முதலில் பதட்டம் தவிர்.
சுற்றும் முற்றும் பார்த்தான். அனைவரும் ஆழ்ந்த நித்திரையில். கும்மிருட்டு. தன் இருக்கையிலமர்ந்து ஆழ்ந்து மூச்சினை இழுத்து பூரகம் ரேசகம் கும்பகம் செய்தான். கும்பகத்தின் கால அளவினை அதிகரித்தான். இப்பொழுது மனம் நிர்ச்சலனமாயிருந்தது. மூச்சையடக்கினால் மனம் அடங்குகின்றது.
’விக்ரம்…..விக்ரம்…. நான் வெற்றி பெற்றவன்…இமயம் தொட்டுவிட்டவன்…. என் ஜீவனே வாகையே சூடும்….விக்ரம்…விக்ரம்…’ மனதிற்குள் பாடிக்கொண்டு மூளையின் நியூரான்களை உற்சாகமூட்டினான்.
தன் தோள் பையிலிருந்த நெய்ல் கட்டரினை எடுத்தான். அதில் உட்புறமிருந்த கொக்கி போன்ற ஒன்றினை வெளியே நீட்டி, எரிந்து கொண்டிருந்த விளக்கினை அணைத்துவிட்டு விளக்கின் கண்ணாடியின் விளிம்பிலிருந்த ஸ்குரூவைத் திருகி உள்ளிருந்த பல்பினைக் கழற்றி எடுத்து தோள் பையினுள் பத்திரப்படுத்தினான்.
அணிந்திருந்த நீலநிற டீசர்ட்டினை மாற்றிவிட்டு கருப்பு நிற டீ சர்ட்டினையும் கருப்பு ஜீன்ஸையும் அணிந்துகொண்டு பெரியவரின் செருப்பை மறக்காமல் தன் அடிடாஸ் காலணிக்குக் கீழ் இணைத்துக்கொண்டு தன் கைகளில் கையுறை அணிந்துகொண்டு மெதுவே குளியலறை வரை சென்று குளியலறையில் கைப்பிடி, டேப் என அனைத்து இடங்களிலும் கைவிரல் ரேகைகளை அழித்து பெர்த்திலும் அவ்வாறே அழித்துவிட்டு காலடி சப்தம் வராமல் மெதுவே கதவினை நோக்கி நகர…. புகைவண்டி ‘ழே…..’ என விசிலடித்து ஊர ஆரம்பிக்க, காற்றினைக் கிழித்துக்கொண்டு புகைவண்டியிலிருந்து தன் தோள் பையுடன் வெளியே குதித்தான்.
எலுமிச்சை வாசம் வந்துகொண்டிருந்தது. எலுமிச்சை தோட்டத்திற்குள் விழுந்திருக்கின்றோம் என புரிய சிறிது நேரம் ஆனது. யோசித்துக்கொண்டே கைகளைப் பின்னால் ஊன்ற கையில் சுருக்கென எதோ ஒன்று குத்தியது. கையில் இரத்தம்…வலி…. தட்டித்தடவி அதனை எடுத்துப்பார்த்தான். அது ஒரு லாடம். அதனை எரிச்சலுடன் தூக்கி எறிந்தான்.
புகைவண்டி தன் கண்களிலிருந்து மறையும்வரை அப்படியே படுத்திருந்தான். கருப்பு ஆடைகள் அவனை இருட்டிலிருந்து மறைத்தது. யார் கண்களுக்கும் தெரியவில்லை. அமாவாசை மையிருட்டு. சுற்றும் முற்றும் பார்த்தான். ஊஹூம். ஆள் அரவமில்லா இடம். இங்கிருந்து எப்படி ஊருக்குச் செல்வது….? ட்ரைன் ட்ராக்கில் செல்லலாமா…? நோ… போலீஸ் ரோந்துவந்தால் கோழிக்குஞ்சென லபக்கென அகப்பட்டுவிடுவோம். யோசனையிலிருந்தான். ட்ராக்கிற்கு எதிர்ப்புறத்தில் ஹெட்லைட் ஒளிக்கீற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தது. ஏதோ ஒரு வாகனம் வரும் அறிகுறி. அப்படியானால் அது ஒரு தார் ரோடு…. குட்….
கும்மிருட்டு. பல்பினை எடுத்தான்.. வயர் இல்லாமல் பேட்டரி செல்கள் இல்லாமல் பல்பினை எப்படி எரிய வைப்பது…? யோசித்தான்.
தன் பெளதிக மூளையினைக் கசக்கினான். யெஸ்…. லெமனில் சிட்ரிக் ஆசிட்… இரண்டே இரண்டு எலக்ட்ரோடுகள் மட்டுமிருந்தால் போதும். வேறுபட்ட உலோகங்கள் தேவை. யோசி,.. யோசி….கண்டிப்பாக விடை கிடைக்கும். தன் அரைஞாண் கயிற்றிலிருந்த தாயத்தை கல்லால் தட்டி அதை செவ்வக வடிவத் தகரமாக்கினான். இனியும் ஒரு உலோகம் வேண்டுமே…?
ஆர்க்கிமிடிஸ்ஸிற்கு ஃப்ளாஷ் அடித்ததுபோல் ஒரு ஃப்ளாஷ். யெஸ்…. அந்த லாடம்…! அவன் தூக்கி எறிந்த அந்த இட்த்தில் நின்றுகொண்டான். எந்த திசையில் எறிந்தோம்…? எவ்வளவு வேகத்தில் எறிந்தோம்…? அதன் Trajectory என்ன…? Projectile Velocity என்னவாகயிருந்திருக்கும்….? Target Place எதுவாயிருந்திருக்கும்….? மனம் கணிக்க ஆரம்பித்தது, ஆழ்மனமும் உள்ளுணர்வும் மூளையும் வழிகாட்டிய இடத்தில் அந்த லாடம் இருந்தது. எடுத்துக்கொண்டு ஒரு மிகப்பெரிய எலுமிச்சம் பழத்தினைப் பறித்தான்.
எலுமிச்சையின் ஒரு புறத்தில் அந்த செவ்வக வடிவ தாயத்தினைச் செருகினான். மறுமுனையில் லாடம். இரண்டையும் வளைத்து ஒரு முனையை பல்பின் அடிக்குமிழுக்கும் இன்னொரு உலோக முனையை பல்பின் உலோகப் பரப்பிற்கும் இணைத்தான். பல்ப் மினுக்கென ஒளிவீசியது…. அந்த அமாவாசை இருட்டினை கொஞ்சமே கொஞ்சமாய் விலக்கப் போதுமானதாயிருந்தது.
தன் தோள்பையிலிருந்த ட்ராயிங் நோட்டிலிருந்து ஒரு காகிதத்தினைக் கிழித்தான். ஆரஞ்சு நிற ஸ்கெட்ச்சினால், ‘உலகஅமைதிவேண்டி கன்னியாகுமரிவரை நடைப்பயணம்….’ கொட்டை எழுத்தில் எழுதினான். ட்ராயிங் நோட் கார்ட் போர்ட் அட்டையினைக் கிழித்து அதன் மீது இதனை ஒட்டி, அட்டையின் மேற்புரம் இரண்டு துளைகள் செய்து, இடுப்பிலிருந்த தன் அரைஞான் கயிற்றினை அறுத்து அதனை அத்துளைகளுக்குள்ளிணைத்து தன் கழுத்தில் மாட்டி இழுத்து சரி பார்த்துக்கொண்டான்.
கழுத்தில் தான் எழுதிய வாசகங்களை மாட்டிக்கொண்டு அந்த தார் ரோட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தான். லாரிக்காரன் சென்றபிறகே அங்கு அடையும் நோக்கில் மெதுவே மிக மெதுவே நடந்துகொண்டிருந்தான். மைல்கல், கொடைரோடு 7 கிமீ எனச் சொல்லியது.
மணி பார்த்தான். அதிகாலை 3:18 மணியாகியிருந்தது. மனம் வேகமாக கணிக்க ஆரம்பித்தது. ட்ரைன் கொடை ரோட்டில் சரியாக 3:19 மணிக்கு சென்றடையும். ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும். 3:20 க்கு திரும்பவும் நகர ஆரம்பித்துவிடும். அங்கே இறங்கும் கூட்டமோ ஏறும் கூட்டமோ இருப்பதில்லை. அடுத்த ஜங்கஷன் மதுரை. நடந்தே கொடைரோடு போய்ச் சேர்ந்தால் போதும் அங்கிருந்து பஸ் பிடித்து போய்விடலாம். எளிதில் தப்பிவிடலாம்.
டிக்கட்டின் ரிசர்வேஷனில் கூட என் பெயர் இல்லை. ரிசர்வ் செய்தவனை விசாரித்தால் என் முகம் அவனுக்கு நினைவிற்கு வர வாய்ப்புக்கள் இல்லை. ஓரிரு விநாடிகளே அவனிற்கும் எனக்கும் பரிச்சயம். இருந்தாலும் முதலில் நம் அவதாரத்தினை மாற்ற வேண்டும். அருகினில் என்ன கோயில் இருக்கின்றது….? யெஸ்… நேரே திருப்பரங்குன்றம் செல்லவேண்டும். மொட்டையடித்து அதிகாலை தரிசனம் செய்யவேண்டும்.
நோ….அதிகாலை எனில் முதல் நபர் நாமகத்தானிருக்க முடியும். நாவிதன் மனதினில் நம் முகம் ஃபோட்டோகிராஃப் மெமரியில் பதியும். கூட்டத்துடன் கூட்டமாய் மொட்டையடிப்பதே புத்திசாலித்தனம். வீடு போய்ச் சேர்ந்ததும் இன்றோ நாளையோ வழக்கமாய் செல்லும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகேயிருக்கும் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று மொட்டை- யடித்துக் கொள்ளவேண்டும்.
கழுத்தில் ‘உலக அமைதிவேண்டி நடைபயணம்….’ பலகையுடன் திக்…திக்….இதயத்துடன் நடக்க ஆரம்பித்தான். அருகே இருந்த கிணற்றினை எட்டிப்பார்த்தான். எலுமிச்சை டார்ச்சினை உயிர்ப்பித்தான். நீர் நிரம்பியிருந்தது. தன் இரயில் டிக்கட்டினை உருத்தெரியா வண்ணம் சுக்கு நூறாகக் கிழித்து பேக்கினுள்ளிருந்த நீலநிற ஜீன்சின் பாக்கெட்டில் திணித்து ஜீன்சையும், நீலநிற டீசர்ட்டையும் அருகிலிருந்த ஒரு பெரிய கல்லினை இணைத்து கிணற்றினுள் எறிந்தான்.
‘ப்ளக்….’
அது நீரினுள் மூழ்கி குமிழிகளைப் பிறப்பித்து ஓய்ந்தபின் நிம்மதிப்பெருமூச்சுடன் நடையைத் தொடர்ந்தான். 1 ½ மணி நேர நடைபயணத்தில் கொடைரோடு அடைந்து அங்கிருந்து பஸ் பிடித்து மதுரை… அங்கிருந்து சிவகாசியருகேயுள்ள ஒரு கிராமத்திலிருக்கும் தன் வீட்டினை அடைந்தான்.
பகலில் சாப்பிட்டுவிட்டு அமைதியாய் படுத்தான். இந்த கிராமத்திற்கு எந்த போலீஸும் வர இயலாது. கோழிக் குஞ்சுகளின் சப்தம். மாட்டுக் கொட்டிலில் அசைபோட்டபடி காளைமாடுகள்…. வீட்டிலிருந்த ‘வொய்ட்டி’ நாய் தன் வாலினை அசைத்தும் ரங்கராஜின் மீது பாய்ந்தும் தன் விசுவாசத்தினையும் அன்பையும் வெளிப்படுத்தியது. பாதுகாப்பாய் உணர்ந்தான். தூங்கினான்.
இரவினில் அந்த கிராமமே அமானுஷ்யமான அமைதியிலிருந்தது. தூரத்தில் நாய்களின் குரைப்புச்சத்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது.
அமைதியைக் கிழித்துக்கொண்டு குடுகுடுப்பைக்காரனின் குடுகுடுப்பை சப்தம்.
ரங்கராஜ் மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு தீவிர யோசனையில் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான். வீட்டில் எவரிடமும் மூச்சுவிடவில்லை. ‘கடவுளே என்னைக் காப்பாற்று…’ என வேண்டிக்கொண்டிருந்தான்.
‘குடு…குடு…ஜக்கம்மா…..
குடு…குடு…. ஜக்கம்மா….’
ரங்கராஜ் மொட்டைமாடியின் பூவேலைப்பாடுடன் கூடிய காரைவிளிம்பிற்குக் கீழே பதுங்கி கவனிக்க ஆரம்பித்தான்.
ஒருமுறை தன் பால்ய காலத்தில் தானும் ஜனகராஜும் குடுகுடுப்பைக்காரன் இப்படி குறி சொல்லும்பொழுது கருப்புக் கம்பளியைப் போர்த்திக்கொண்டு மொட்டைமாடியிலிருந்து ‘பே..’ எனக் கத்திக்கொண்டு விழ அவன் ‘குய்யோ…முறையோ…’வென்று தன் பின்னங்கால்கள் பிடரியில்பட ஓடியதை நினைத்துப்பார்த்துக்கொண்டான். இப்பொழுதும் அப்படிக் குதித்தால் என்ன….? ஃப்ராடு பசங்க…. ஜோசியமா சொல்றான்….? மெதுவே கம்பளியை எடுத்து சுற்றிக்கொண்டான்.
‘குடு…குடு…ஜக்கம்மா…..
இந்த மனையில துக்கம் ஒன்னு நடக்கப்போகுது…..
கவனமா கேட்டுக்கோ….
ஜக்கம்மா சொல்றா….குடு…குடு…’
ரங்கராஜ் இப்பொழுது தன் முடிவினை மாற்றிக்கொண்டு அமைதியாகக் கவனிக்கலானான்.
‘தாயுறவுள்ள ஸ்த்ரீயொருத்தி
தனயன் மீது பில்லிசூனியம் ஏவியாச்சு….
விதை வளர்ந்து ஆலமரமாச்சு….
வஞ்சத்தால் வாழ்வு அழியும்…..
ஜக்கம்மா கைவிரிக்கிறா……..’
தொடரும்….
நிர்வாண நேனோ செகண்ட்ஸ் – 1 | நிர்வாண நேனோ செகண்ட்ஸ் – 3 |
திகிலுடன் தொடர்கிறேன்
உங்களது எழுத்து நடை நன்றாக இருக்கிறது. இனிமேல் உங்களது புத்தகங்களை தேடிப் படிக்க வேண்டும்.
நன்றி.
Story is very interesting, I am waiting to read next next part.
அடுத்த தொடரை படிக்க ஆவலாக உள்ளது.
Very interesting and eagerly waiting to read the remaining part of the story.Contains lot of technical information.
நன்றிகள் ஜீ