நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 1

6

(புதிய தொடர் கதை)

ரிஷி ரவீந்திரன்

Rishi raveendran

| எழுத்தாளர் ரிஷி ரவீந்திரன் பற்றி |

பயணிகள் கவனிக்கவும். வண்டி எண் இரண்டு ஆறு ஒன்பது மூன்று, சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாகத் தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு வண்டி சரியாக இரவு ஏழு மணி முப்பது நிமிடங்களுக்கு இரண்டாவது நடைமேடையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்…..

யுவர் அட்டன்ஷன்ஸ் ப்ளீஸ்….. ட்ரைய்ன் நம்பர் ட்டூ சிக்ஸ் நைன் த்ரீ பேர்ர்ல்சிடி எக்ஸ்ப்ரஸ் ஃப்ரம் ச்சென்னை எக்மோர் டூ ட்யூட்டிக்கொரின் வயா வ்ழுப்ரம், ட்ரிச்சி, மதுரை, விருதுநகர் வில் பீ லீவ் அட் நைண்ட்டீன் தேர்ட்டி ஃப்ரம் ப்ளாட்ஃபார்ம் நம்பர் டூ.

காடி நம்பர் தோ சே நௌ தீன் சென்னை எக்மோர் ஸே விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் ராஸ்தே பர் தூத்துக்குடி தக் ஜானேவாலி, பேர்ல்ஸிடி எக்ஸ்ப்ரெஸ், ப்ளாட்ஃபார்ம் நம்பர் தோ ஸே, சாடே நௌ பஜே கோ ரவானா ஹோகி.

“புளிச்சாதம்… தயிர்ச்சாதம்… இட்லி… வடை….”

“விகடன்… குமுதம்….”

“ச்சாய்….ச்சாய்…..கரம் ச்சாய்….”

“ம்ம்ம்…. பலூன் வாங்கித் தர்லேன்னா…. வரமாட்டேம்போ………” தரையில் விழுந்து ‘வீல்’ எனக் கத்தி, கை கால்களைத் தரையில் உதைத்து, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தது ஒரு குழந்தை.

சிக்னல் பச்சை நிறமாய்க் கட்சி மாற….

“ழே….”

தொடர்வண்டி விசிலடித்து…..

‘‘மாப்ஸ் ஊர் போய்ச் சேர்ந்ததும் மறக்காம லெட்டர் போட்றா….’’ என ஒரு நண்பனின் குரலும்

‘‘எலே…..தூத்துக்குடில எறங்கினதும் ஸ்டேஷ்ன்லேர்ந்தே எறங்கிட்டோம்னு ஃபோன் போடுலே…’’ என ஒரு தந்தையின் குரலும் வெவ்வேறு பயணிகளுக்காக ஒலித்துக்கொண்டிருக்க…..

ஞாயிறுகளில் தாமதமாய்ச் சோம்பலுடன் நித்திரையிலிருந்து துயிலெழும் மென்பொருள் பரமாத்மாவாகத் தொடர்வண்டி மெதுவாக ஊர்ந்துகொண்டிருக்க….. நியான் விளக்கு வெளிச்சத்தில் தூரத்தில் ரிசர்வ்டு டிக்கட்டினைக் கேன்சல் செய்யத் தாமதமானதால் நிறைய பணம் இழக்கவேண்டி வருமே என்ற கவலையுடனிருந்த முகம் தெரியா ஒரு இளைஞனிடம், பொக்கைவாய்ச் சிரிப்பிலிருந்த சில காந்திக் கரன்சிகளைத் திணித்துவிட்டு, அவனிடமிருந்து டிக்கெட்டைப் பறித்துக்கொண்டு S5ஐ நோக்கி ஓடினான் ரங்கராஜ்….

egmore railway station

தொடர்வண்டி இப்பொழுது மெதுவே தன் வேகத்தைச் சீராக அதிகப்படுத்தியிருந்தது. அருகிலிருந்து S3 கோச்சினுள் நுழைந்து உட்புறமாய்த் தன் S5 கோச்சினை அடைந்து, அப்பர் பெர்த்தில் தன் விஐபி தோள் சுமையை இறக்கிவிட்டுக் கீழே உட்கார்ந்து ரிலாக்ஸாய் பெருமூச்சுவிட்டான். கூட்டம் சொல்லிக்கொள்ளும்படியாய் அதிகமாய் இல்லை.

‘டிக்கட் வாங்காமலேயே டிக்கெட் பரிசோதகரைக் கவனித்திருந்தால் போதுமோ’ என எண்ணினான்.

கூபேயை நோட்டமிட்டான். எதிரே லங்கோடு மட்டுமே உடையாய்த் தரித்து ஒருவர் உட்கார்ந்திருந்தார். முகம் சுழித்தான். அடுத்த கூபேயில் தூத்துக்குடி செல்லும் சில கேரளவாசிகள். லங்கோட்டுக் கோவணத்துடன் இருந்தவர், கண்மூடி பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். நெற்றியை மறைக்கும் வண்ணம் விபூதி, வியர்வையில் அதன் திண்மை இழந்திருந்தது……. முகம் பொலிவாய் தேஜஸாய் இருந்தது.

‘ம்ம்ம்ம்…. டிக்கட் இல்லாமல் அதுவும் ரிசர்வ் செய்யப்பட்ட இந்தப் பெட்டியில் ஏற இந்தப் பரதேசிக்கு எவ்வளவு தைரியம்…..? நாட்டில் ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு கோலோச்சலாம்…. இது ஒரு நல்ல பிசினஸ்… உழைக்கத் தேவையில்லை… கார், பணம், பங்களா… என அத்தனையும் கிடைத்துவிடுகின்றது… இவன் எத்தனை குடும்பங்களை அழித்தானோ….’ ரங்கராஜின் மனத்தினில் எண்ணவோட்டங்கள்….
கோவணத்தார் இவனது மனத்தினில் ஓடும் எண்ணங்களைப் படித்தவர் போல் மெல்ல இவனை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்.

பதிலுக்கு ரங்கராஜும் தேமே எனத் தன் ‘குளோஸ்-அப்’ பற்களைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.

“வெண்ணெயுண்ட சாமியின் திருநாமத்தைக் கொண்டவனே…..” கோவணத்தாரின் வாயிலிருந்து வார்த்தைகள் ஜனித்தன.

“அரங்கமாநகர் அதிபனே….!”

ஆயிரம் வாட் ஷாக்….!

இந்தப் பரதேசிக்கு எப்படி நம் பெயர் தெரியும்…? இதெல்லாம் ஹிப்னாடிசமாய் இருக்குமோ…? ஒரு வேளை ரிசர்வ் ச்சார்ட்டில் நம் பெயர் பார்த்திருப்பானோ…? நோ ச்சான்ஸ்… நான் ரிசர்வ் செய்யாததனால் அதில் வேறு பெயரல்லவா…? சாமியார்களுக்கு இதெல்லாம் தெரியுமோ…? ஆயிரம் நாத்திகம் பேசினாலும் இப்பொழுது அவனுள் சிறு நடுக்கம்.

“ஐயா பெரியவரே…. என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்….?”

“ம்ம்ம்…..” கண்களை மூடிப் புன்முறுவலித்துவிட்டு, உள்ளங்கைகளை வானை நோக்கி விரித்து “சிவோஹம்…..” என்றார்.

“சரியான லூசா இருக்குமோ…?” மனத்தினுள் எண்ணிக்கொண்டான்.

‘‘எங்கே போறீங்க…..?’’

‘‘வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?…..’’

பாடிச் சிரித்தார் பெரியவர்….

ஆண்டியின் அண்மையைத் தவிர்ப்பதற்காக ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினான். புது மருமகள் மீது பாயும் மாமியார் மாதிரி ஆக்ரோஷமாய் எதிர்த் திசையில் மரம் செடி கொடிகள் ஓடி, இயற்பியல் விதிகளை மெய்ப்பித்துக்கொண்டிருந்தன.

டிக்கெட் பரிசோதகரின் வருகை.

‘‘இந்தப் பரதேசிப் பயல் கண்டிப்பாக டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொள்ளப் போகின்றான். எப்படி இவனது ஜம்பம் பலிக்கும்…?’’ என்ற ஆவல் ரங்கராஜின் முகத்தில்.

டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்கும்பொழுது ரங்கராஜைப் பார்த்து ஒரு மென்புன்னகையுடன் தன் லங்கோடின் பக்கவாட்டிலிருந்த ஒரு சின்ன ஜிப் வைத்த பையிலிருந்து டிக்கட் எடுத்துக் கொடுத்தார் அந்த ஆண்டி. சப்த நாடிகளும் ஒடுங்கியிருந்தது ரங்கராஜிற்கு.

டிக்கட் பரிசோதகர் தன் கடமையைச் செய்துவிட்டு, இனி தனக்கும் இந்த ரயிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போல் சென்றுவிட்டார்.

“ஐயா பெரியவரே…. எனக்கு ஐஐடியில் எம்.டெக் சூப்பர் கண்டக்டிவிடி படிக்க இடம் கிடைக்குமா…..?”

மென் புன்னகை…. உள்ளங்கைகளை வானை நோக்கி விரித்து, “சிவோஹம்….” என்றார்.

‘சர்தான்….கீழ்ப்பாக்கத்திலிருந்து நேரே வந்திருப்பான்…’  என எண்ணிக்கொண்டான்.

saint“வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி – குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி?
தொழிலறிவு உனக்கெதற்கு….? உபதேசிக்கும் குருதானப்பா நீ….!”

‘நான் கல்லூரியில் பேராசானாக இருப்பது இவனுக்கு… ஸாரி… இவருக்கு எப்படித் தெரியும்….?’ ஆச்சர்யத்தில் ரங்கராஜ்.

மீண்டும் அதே மென் புன்முறுவல்.

நொடிக்கு நொடி என் மனவோட்டங்கள் இவருக்கு எப்படித் தெரிகின்றது….?

“ஐயா…. எனக்கு ஐஐடியில் படிக்க இடம் கிடைக்குமா…? கிடைக்காதா….?”

கிடைக்கும் என்பதைப் போல் மேலும் கீழும் தலையை ஆட்டிவிட்டு, பின்னர் கிடைமட்டமாக இடம் வலமாய்த் தலையையசைத்தார்.

“பற்றற்றிரு…. தாமரை இலை நீர் போல் ஒட்டாதிரு…”

சுத்தப் பைத்தியக்காரனிடம் மாட்டிக்கொண்டோமோ….?

“கிடைக்கும் ஆனால் கிடைக்காது…” என்றார்.

‘இதென்ன புதிர்….?’ விழி பிதுங்கி நின்றான்.

‘‘புரியவில்லை ஐயா…’’

‘‘நீ ராஜாவாய் இருப்பாய்…. குடிக்கக் கூழ் இருக்காது…. மதிநுட்பம் மிகுந்தவனாய் இருப்பாய்… ஆனால் முட்டாளாய் அறியப்படுவாய்….. மாளிகை இருக்கும்; வசிக்குமிடம் நடைபாதை…. குற்றங்கள் எண்ணத் துணியாதவன்…. வலிய சென்று மாட்டிக்கொள்வாய்…. உன் கருமையப் பதிவுகள் இவை…. ’’ எதிரும் புதிருமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘நான் ஒரு victimization personality என்பது என் முகத்தினைப் பார்த்துச் சொல்கின்றானோ…? சரி காதல், திருமணம் பற்றிக் கேட்டால்….?’

இவன் கேட்கும் முன்பாகவே பெரியவர் தொடர்ந்தார்….

‘‘மனையாளால் மங்களம் உண்டாகா…. அவம் அவதானிக்கும்….’’

‘‘குழந்தைகள் உண்டா ஐயா….?’’

இப்பொழுது தலையைக் கிடைமட்டமாக இடம் வலமாய் ‘‘இல்லை’’ என ஆட்டிவிட்டு, சிறிது நேரங்கழித்து, இருப்பதாய் மேலும் கீழும் ஆட்டினார்.

‘‘லக்னத்தில் குரு குடியுள்ள ஒரு ஸப்த ரிஷியே வம்சம் விருத்தி செய்யும் வாரிசாகக் கருவில் உருவாகும் அதிசயம் என் சொல்வேன்….?’’

‘‘பெரியவரே… நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றீர்கள். மண வாழ்க்கையில் மங்களம் இல்லை என்றீர்கள். பின்னர் குழந்தையில்லை என்றீர்கள். இப்பொழுது இப்படிச் சொல்கின்றீர்களே….?’’

‘‘வில்லிபுத்தூரில் வீற்றிருக்கும்
ஆண்டாள் தவமியற்றி
அரங்கனைக் கைப்பற்றுவது விதியே….’’

மேலும் குழம்பினான். “புரியவில்லை” என்றான்.

‘‘நீ யாரோ… நான் யாரோ… நாம் அனைவரும் யார்….? ஒரே இரயிலில் பயணிக்கும் சக பயணிகள் அவ்வளவே. உன் நிறுத்தம் வந்தால் நீ இறங்கிவிடுவாய். என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன்…. இதுதான் வாழ்க்கை…. இதில் மனைவி என்றும் குழந்தை என்றும் மார்தட்டிக்கொள்வது மடமை….’’

மென்புன்னகை உதிர்த்துவிட்டு, தன் டிரேட் மார்க் புன்னைகையுடன் கைகளை வானை நோக்கி விரித்து, ‘‘சிவோஹம்….’’ என்றார்.

‘‘சரி… உங்கள் முகம் தேஜஸ் ஆக இருக்கின்றதே… அது எப்படி….? உங்களின் வயதென்ன….?’’

‘‘106…..’’

‘‘நிஜமாகவா….?’’ நம்பாமல் கண்களை விரித்தான். ’‘பார்ப்பதற்கு நாற்பது வயது போன்ற யெளவனம் எப்படி ஐயா….?’’

‘‘உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும்,
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு,
தின்னும்காய் இலைமருந்தும் அதுவே யாகும்,
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு,
மறலிகையில் அகப்படவும் மாட்டார் தாமே….. ”

(மறலி – எமன். எழுதியவர்: அகத்திய மாமுனி.)

“ஊஹூம் சுத்தமாய் புரியவில்லை ஐயா…’’

‘‘மூலமாங் குளத்தினில் முளைத்தெழுந்த கோரையைக்
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்,
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்.
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே..!
(-சிவவாக்கியர்.)

இதுவே என் இளமையின் இரகசியம்…..’’ என்றார்.

‘‘ஐயா நீங்கள் உரையாடுவது பூடகமாகவே உள்ளது. உட்பொருள் விளங்கவில்லை…’’

‘‘சிவோஹம்….’’

“ஐயா நாடி ஜோதிடத்தில் கூட Closed System முறையில் பல கேள்விகள் கேட்டு System Analysis and Design செய்துதானே சரியான ஓலை இது என ஒரு முடிவிற்கு வர முடிகின்றது….? நீங்கள் எப்படி என்னைப் பற்றி ஒரு தகவலும் இன்றியே இவ்வளவு துல்லியமாகச் சொல்கின்றீர்கள்….?”

‘‘கருமையம் ரங்கா…. கருமையம்…. கருமையம் படித்துச் சொல்லலாம்….’’

‘‘கருமையம்னா என்ன சாமி….?’’

அதே மென்புன்னகை.

‘‘ஈர்ப்பு மையம்தானப்பா…’’

‘‘யூ மீன் Centre of Gravity…?’’

இல்லையென்பதாய் தலையை அசைத்தார்.

‘‘Specific Gravity’’ என்றார்.

‘ஓ மை காட்…!’ எனப் புருவம் உயர்த்தி, Centre of Gravityக்கும் Specific Gravityக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்…? எனக் குழம்பினான்.

‘‘அது எப்படி சாமி, கருமையம் ஆக முடியும்…? அதை எப்படிப் படிக்க முடியும்…? இதெல்லாம் சுத்தப் பேத்தல்…. விஞ்ஞானத்தில் கருமையம்ன்னெல்லாம் ஒன்னுமில்லை….’’

sky

‘‘ம்ம்ம்….. ஆகாயம் என்ன நிறம்….?’’

‘‘நீலம்.”

‘‘அவ்வளவுதானா….?’’

‘‘சில சமயம் சிவப்பு நிறம்.’’

‘‘ம்…அப்றம்…?’’

‘‘சில சமயம் தங்க நிறம்.’’

‘‘ம்… அப்றம்…?’’

‘‘சில சமயம் கரு நீலம்.’’

‘‘ம்…’’

‘‘சில சமயம் கருமை.’’

‘‘இதெல்லாம் எப்போ….?’’

‘‘நான் பாக்றப்பதான்…’’ எரிச்சலுடன்.

‘‘நீ பாக்காதப்ப ஆகாயம் என்ன நிறம்….?’’

‘ச்சொடேர்…. ச்சொடேர்…..’

‘‘சாமி என்னோட விதியை என் ஆசைப்படி மாற்றிக்கொள்ளலாமா….?’’

‘‘கேள்….’’

‘‘கேட்கறேங்க’’

‘‘கேள்… கேள்… பிச்சை கேள்…’’

‘‘பிச்சையா….? சரி கேட்கறேனுங்க’’

‘‘கேள்..கேள்… உன்னிடம் கேள்… உன்னிடம் பிச்சை கேள்…. மண்டியிட்டுப் பிச்சை கேள்…’’

‘‘என்னிடமா….? நான் என்பது என்ன….? இந்த உடலா….? மனமா…? நினைவா…? அறிவா….? உயிரா….?’’

ஒன்றும் புரியவில்லை.

ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க, புருவ மத்தியில் ஒரு குறுகுறுப்பு. உள்ளே தியானத்தின் ஒளிப் புள்ளி விரிகின்றது…. விரிந்து விரிந்து…. இந்தப் பிரபஞ்சம் அளவு விரிகின்றது…. இன்னும்… இன்னும் விரிகின்றது…. ஒரு கட்டத்தில் கருமையாகி ஒன்றுமில்லை…

என்ன அது….?

ஒன்றுமில்லை என்பதாய் கை விரிகின்றது….

ஒன்றுமில்லை….

உள்ளென்றும் வெளியென்றும் ஒன்றுமில்லை; எதிலும் ஒன்றுமில்லை.

ஒன்று புரிகின்றது…. இந்த ஓட்டம் அநாவசியம்; இந்த உழப்பல் அநாவசியம்; நான் எவரையும் தாங்கவில்லை; எவரும் என்னைத் தாங்கவில்லை; அதது அதனது இயக்கத்தில். எல்லாம் என்னால் நடப்பதாய் ஒரு மாயை. குமிழிகள் நாம். முதலில் வரும் குமிழியைத் தாய் என்றும் அடுத்த  குமிழியை மனைவியென்றும் அடுத்த குமிழியை மகளென்றும் எப்படி நம்புவது….? இயக்கம் நிரந்தரம்; குமிழிகள் உந்தி ஆறு போவதில்லை.

‘‘விதியை மாற்ற முடியுமா….?’’

‘‘ம்ம்ம்….. குண்டலினியை எழுப்பு…. ஊர்த்வ தேஜஸை எழுப்பு….’’

‘‘எப்படிங்க….?’’

‘‘போ….போ…. கும்பமலை போ…. பெளர்ணமி நிலவில் சித்த யோகியர்களைச் சந்தி….’’

‘‘குண்டலினியெல்லாம் என்னால் முடியுமா….? எத்தனையோ தடைகள்…’’

சந்தியாவந்தனத்தில் கரநியாசாவில் வருவதைப் போன்று இரு கரங்களின் உள்ளங்கைகளையும் இணைத்து ஒரு சக்கரம் சுழற்றுவது போல் சுழற்றி “Move towards your goal with detached attachment like a wheel…” எனத் திடீரென ஆங்கிலத்தில் பேசி, ஜெர்க்கினைக் கொடுத்தார்.

தனியே உட்கார்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தான் ரங்கராஜ். கருமையம், களங்கம் போக்குவது எப்படி…? விதியை மாற்றுவது எப்படி…? தன்னுடைய Victimization Personalityயை மாற்றியமைப்பது எப்படி…? அறிவாளியாய் ஐஐடியில் நுழைவது எப்படி…?

தன்னை அதிகாலையில் எழுப்பிவிடும்படி ரங்கராஜ், பெரியவரைக் கேட்டுக்கொண்டான்.

அதே மென்புன்னைகயுடன், ‘‘நால ராவுல சூர்யன் அமானுஷ்யமாய் அஸ்தமிக்கும்….’’

ராத்திரிக்கு சூரியன் அஸ்தமிப்பது இயல்புதானே…? தன்னை அதிகாலையில் எழுப்புவதற்கும் சூரியன் இரவினில் அஸ்தமிப்பதற்கும் என்ன தொடர்பு….? சர்தான் இவர் கீழ்ப்பாக்கம் கேஸ்தான் என நினைத்துக்கொண்டான்.

‘‘ட்ஸ்ச்சூஸ்ஸ்….’’ (Tschüss) எனக் கூறிவிட்டுத் திரும்பவும் கண்களை மூடி தவத்தில் ஆழ்நிலைக்குச் சென்றார் பெரியவர். ‘ட்ஸ்ச்சூஸ்ஸ்’ என்றால் என்ன…? புரியாமல் விழித்தான்.

சரியாக அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பு வந்தது. தொடர்வண்டி, திண்டுக்கல்லிற்கும் கொடைரோட்டிற்கும் இடையே எங்கோ பெயர் தெரியாத வனாந்தரத்தில் சிக்னலுக்காக நின்றிருந்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில்.

பெரியவர், ரங்கராஜிற்கு முதுகு காட்டிப் படுத்திருந்தார். கும்ப மலைக்கு எப்படிப் போகவேண்டும் எனச் சந்தேகம் வந்ததால் அவரைத் தட்டி எழுப்ப…. பெரியவர் பிணமாகியிருந்தார்.

முகம் அகோரமாய் நசுங்கியிருந்தது. தலையிலிருந்து இரத்தம் சிந்தி, அது அமீபாவாய் உருமாறியிருந்தது….

‘குற்றங்கள் எண்ணத் துணியாதவன்…. வலிய சென்று மாட்டிக்கொள்வாய்…. உன் கருமையப் பதிவுகள் இவை…. ’  பெரியவரின் வார்த்தைகள் ரங்கராஜினுள் எக்கோவாக ஒலித்துக்கொண்டிருந்தது.

(தொடரும்…..

=====================================

நன்றி:

  • அகத்தியர், சிவவாக்கியர், குதம்பைச் சித்தர்.
  • குண்டலினி யோகம் கற்றுக் கொடுத்த விவேகாநந்தர், கோபால்ஜி, மகரிஷி க.அருணாச்சலம், மகரிஷி வேதாத்திரி
  • கதை எழுதப் பயிற்றுவித்து என் எழுத்திற்கு உயிரூட்டி வழிகாட்டிடும் எழுத்தாளர் சுஜாதா.
  • மனோவியலை எளிமையாகச் சொல்லிக் கொடுத்த Prof B.RaviBabu, Dr.எம்.எஸ்.உதயமூர்த்தி
  • இக்கதையை எழுதத் தூண்டிய டாக்டர் சங்கர்குமார், நார்த் கரோலினா, அமெரிக்கா.
  • A Nuclear Physicist, W.German

படங்களுக்கு

நன்றி –

http://www.flickr.com/photos/golden_road,

http://hubpages.com,

http://science.nationalgeographic.com

 

எழுத்தாளர் ரிஷி ரவீந்திரன் நிர்வாண நேனோ செகண்ட்ஸ் – 2

 


 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 1

  1. ‘…புது மருமகள் மீது பாயும் மாமியார் மாதிரி ஆக்ரோஷமாய் எதிர்த் திசையில் மரம் செடி கொடிகள் ஓடி…’
    => அழகிய சொற்றொடர்.

    நன்றி நவிலல் அருமை. என் பாராட்டுகள்.

  2. கதையின் ஆரம்பமே அசத்தல்! இது ஒரு அறிவுப்பூர்வமான ஆன்மீக அலசலாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

    Let’s share the knowledge of TRUTH. God is Truth. Truth is God.

  3. அருமையான கதை. கதையின் ஆரம்பமே அற்புதமாக உள்ளது.ஆன்மிகம் கலந்த அறிவுபூர்வமான தொடர். அழகான தமிழ். .கதையைவிட நன்றி கூறிய விதம் அருமை. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.வாழ்த்துக்கள் திரு.ரவீந்திரன் அவர்களே

  4. இணையத்தில் பதிவு செய்ததால், இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல வேகம், கதையில் வரும் புகைவண்டியைப் போல….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *