2011 இல் ஐக்கிய இராச்சியம் ………… பகுதி (3)

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

2011 இல் ஜக்கிய இராச்சியம் ………… பகுதி (3)
==========================================
இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் நிலையைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனிப்பதற்காகவே சில பழைய கால நிகழ்வுகளைச் சென்ற பதிவில் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவை இருந்தது.

அன்றைய சமுதாயத்தின் தேவைகளுக்கும். இன்றைய சமுதாயத்தின் தேவைகளுக்கும் பல வேற்றுமைகளுண்டு. இவ்வேற்றுமைகளின் அடிப்படையில் அரசியல் மேடையின் காட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக அன்றைய கால அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு வருபவர்களின் சராசரி வயது 60துகளில் இருந்தது ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது 40 வயதாக குறைந்துள்ளது.

அன்றைய அரசுகளின் பொருளாதாரம் ஜக்கிய இராச்சியத்தைப் பொறுத்தமட்டில் உற்பத்தியின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் இன்றோ இந்நாட்டின் தொழிர்சாலைகள் பல மூடப்பட்டு, ஜக்கிய இராச்சியத்தின் தாயாரிப்புகள் பல வெளிநாடுகளில் உற்பத்தி ஆக்கப்பட்டு வருகின்றன.

ஜக்கிய இராச்சியத்தின் 2011 பொருளாதாரத்தின் அடிப்படை சேவை (service) நிறுவனங்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. ஜக்கிய இராச்சியத்தில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு , வெளிநாடுகளில் ஆகும் செலவை விட அதிகமாக இருப்பதால்,தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு அதன் கதவுகள் மூடப்பட்ட நிலையில் பல அனுபவமிக்க தொழிலாளிகள் வேலையில்லாதோர் பட்டியலில் இணைகிறார்கள்.

இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் வழமையான கொள்கைகளிலிருந்து மாறுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தின் முன்னோட்டமாகத் திகழ்ந்தது 1997ம் ஆண்டு பொதுத் தேர்தல் எனலாம். இங்கிலாந்தின் முதல் இளம் பிரதமராக டோனி பிளேயர் வெற்றிவாகைச்சூடி ஆட்சிப் பீடத்திலமர்ந்தார். அவரது தேர்தல் கால பிரசார‌ முறையில் மாற்ற‌மிருந்தது. மக்க‍ளோடு நான் உடன்படிக்கை செய்துகொள்கிறேன் என்று தனது வாக்குறுதிகளை ஒரு அட்டையில் அச்சடித்து, காணும் அனைவரிடமும் விநியோகித்து வந்தார்..

புதுவகையான தேடல்களுடன், புதுவகையான தேவைகளுடன் அல்லாடிக் கொண்டிருந்த மக்களுக்கு இவரது புதியமுறையிலான பிரசாரமும், இளமை உத்வேகமும் புதிய நம்பிக்கையைக் கொடுக்க தமது வாக்குகளை அவரின் கட்சிக்கு வாரி இறைத்தார்கள்.

அவர் பதவிக்கு வந்த முதல் நூறு நாட்களுக்குள் அவரது அரசாங்கம் கொண்டு வந்த மாற்றங்கள் ஒருவகை நம்பிக்கை அளிப்பனவையாகவே இருந்தன.

தொடர்ந்து அடுத்த தேர்தலிலும் வெற்றி கண்ட டோனி பிளேயர் , ஈராக் விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

ஈராக்கிய அதிபர் சதாம் உசேனை அழித்து விடவேண்டும் எனக் கங்கணம் கட்டிய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர்கள் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையால் அவர்கள் கொடுத்த விபரங்களின் அடிப்படையில் தான், ’ஒரு இராசயன்ப் போரினால் ஏற்படப்போகும் அழிவைத் தடுக்கப் போகிறேன்’, என்று எண்ணிக் கொண்டே ஈராக் என்னும் அரசியல் சகதிக்குள் காலை விட்டார்.

’ஈராக் நாட்டின் அரசியல் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன்’, என்று கூறியிருந்தால் ஏற்றிருக்கக்கூடிய மக்கள் , இவர் ’இரசாயன ஆயுதங்களை அழிக்கப்போகிறேன்’ என்ற பொய்மையான வாக்குறுதியைப் புரிந்து கொண்ட மக்கள் அவரின் மேல் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை இழக்கத் தொடங்கினார்கள்.

உலகப் பொருளாதாரம் என்பது ஒரு சுழற்சக்கரம் போன்றது.அது எப்போதும் ஒரே நிலையிலேயே இருக்காது. காலமாற்றங்களின் நிமித்தம் தற்போதைய உலகப் பொருளாதார நிலையில் சீனாவும், இந்தியாவுமே முன்னனி நிலையிலிருக்கக்கூடியச் சூழலில் மேற்குலக நாடுகளும் அரசியலில் அதற்கேற்ற பல மாற்றங்களைச் சந்திக்க வேண்டி வந்தது.

ஜக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகைக் கணிப்பின் படி உழைக்கும் மக்களின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டு செல்கிறது. அதே சமயம் மருத்துவ கண்டுபிடிப்புக்களாலும், தேக ஆரோக்கியப் பாதுகாப்பினாலும், ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரம் அதிகரிக்கிறது.

இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது. எப்படி என்கிறீர்களா?

உழைக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே தேசியத்தின் வருமானம் இருக்கிறது. ஏனெனில் உழைக்கும் மக்களே வரி செலுத்துகிறார்கள். இவர்களின் வரிப்பணத்தினாலேயே முதியோர்களைப் பராமரிக்க முடிகிறது. உழைக்கும் மக்களின் விகிதாச்சார வீழ்ச்சி மறைமுகமாக அரசின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்கும் காரணியாகிறது.

எமது நாட்டின் முதியோர் சமுதாயப் பராமரிப்பிற்காக உழைக்கும் மக்களின் எண்னிக்கையைப் பெருக்குகிறோம் என்று கூறி கடந்த லேபர் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்தில் வந்து உழைப்பதற்குரிய அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை இலகுவாக்கியது.

அதைத் தொடர்ந்து லேபர் அர‌சின் இறுதிக் காலங்களில் ஏற்பட்ட உலகப்பொருளாதாரச் சரிவின் நிமித்தம் ஜக்கிய இராச்சியம் கண்ட பொருளாதார வீழ்ச்சியினால் ஜக்கிய இராச்சியத்தில் பெரும்பாலானோர் தமது வேலைகளை இழக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

விளைவு ! வெளிநாட்டுக்காரரை இங்கிலாந்தில் பணிபுரியச் செய்யும் அனுமதியின் பால் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியது. கடந்த பொதுத்தேர்தலில் இங்கிலாந்தின் அரசியல் வாக்குறுதிகளில் வெளிநாட்டுக்காரர்களின் இங்கிலாந்து வருகையை மட்டுப்படுத்தும் கொள்கைகளே அதிக அளவில் அளிக்கப் பட்டது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *