தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 11

இன்னம்பூரான்

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை –  ‘குரங்குப்பிடிக்க…’

 

இன்னம்பூரான்
இந்த ஆனானப்பட்ட 2ஜி விவகாரம் ஒரே சமயத்தில் பற்பல இடங்களில் – தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், பாராளுமன்றம், அதனுடைய குழுக்கள், பொது மன்றங்கள், உலகமேடை என்றெல்லாம் – பேசப்படுகிறது. அவற்றில் ஒன்று பாராளுமன்றத்தின் பொது கணக்குக்குழு. அதனுடைய வரைவு அறிக்கை மே 2, 2011 அன்று வல்லமை இதழில் அலசப்பட்டது. அக்குழுவின் காங்கிரஸ், தி.மு.க. அங்கத்தினர்கள் பெருங்குரலெழுப்பி, அந்த வரைவு அறிக்கையை கண்டனம் செய்து, வெளி நடப்பு செய்ததும் வரலாறே.

 

நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஒன்று, அரசு ரதத்தின் ஐந்தாவது சக்கரமாகச் சுழல்வதையும், காண்கிறோம். அதனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு, அதற்கு முன்னால் ஆஜரான இந்திய தணிக்கைத்துறையின் தலைவரும், இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரும் அளித்த சாட்சியங்கள், நம்மை எல்லாம் திணற அடிக்கின்றன. ஒரு புறம் பார்த்தால்,  தமிழகம் அறிந்த ஒரு சொலவடைக்கு ஏற்ப, ‘குரங்கு பொம்மை பிடிக்கப்போய், அது பிள்ளையாராக அமைந்த மாயமா!’ என்று தோன்றலாம். அல்லது, ‘கிணறு வெட்ட கிளம்பியது பூதம்’ எனலாம்.

ஜூன் 8, 2011 அன்றைய எகானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியமும், ஜூன் 9, 2011 அன்றைய ஹிந்து இதழில் ஏற்றப்பட்ட, இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியமும், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் அணுகுமுறைக்கு இசைந்ததாக அமையவில்லை என்ற கணிப்பு ஒரு புறம் இருக்க, கிளறப்பட்ட விஷயங்கள், ஆதாரக்கூறுகள் எல்லாம் நம்மை திகைக்கவைக்கின்றன. தலை குனிய வைக்கின்றன. பற்பல வருடங்களாக, அரசு ஆளுமை மக்களை வஞ்சித்து, சுயநலப் போக்கு உடையவர்களின் சாம்ராஜ்யமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து, ‘குரங்கு பிடித்ததா…’ என்ற அச்சம் எழுகிறது. எனினும். நம்மீது அளவிலா இரக்கம் கொண்டு, இந்த அச்சமில்லா சாட்சியங்களின் உருவகமாக, சித்தி புத்தி விநாயகர் காட்சி அளிக்கலாம்!

இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியம்:

உகந்த முறையில் ஒரு அமைச்சர்களின் குழு, கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகளை, திரு.தயாநிதி மாறன் தனது ஏகாதிபத்யமாக மாற்றி அமைத்துக்கொண்டார்;  2003ம் வருடம், நிதி அமைச்சரகத்திற்கு சம அளவு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.2006ஆம் ஆண்டு, கலந்து ஆலோசிக்க ஒரு அமைசர்களின் குழு அமைக்கப்பட்டது.

இதையெல்லாம்,திரு.தயாநிதி மாறன் தூக்கி எறிந்து விட்டார். நிதி அமைச்சரகம் இதை எதிர்த்தாலும், அதனுடைய சொல் எடுபடவில்லை. சொல்லப்போனால், அமைச்சரகம் முழுதுமே ஒருசேர 2003இல் இட்ட ஆணையை,திரு.தயாநிதி மாறன் புறக்கணிக்க ஏற்பாடு செய்துவிட்டார். (இந்த நடவடிக்கை எல்லாம், பிரதமரை கேட்ட பிறகு தான் என்று திரு.தயாநிதி மாறனுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் சொன்னாராம். அவர் அநாமதேயமாகத்தான் பேசினாராம்!)  திரு.தயாநிதி மாறன் காலத்தில் விளைந்த நஷ்டம் ரூபாய் 38 ஆயிரம் கோடி என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது துறையின் 2005ஆம் வருட வழிமுறைகள் கடாசப்பட்டன. அத்துடன் விட்டதா? 15 மனுக்களில், 14 மனுக்களின் மீது முடிவு எடுக்க தாமதம்: 608 =>969 நாட்கள்; அடுத்த 9 மனுக்கள் தாமதம்: 232 =>421 நாட்கள்; அடுத்த 29 மனுக்கள்: ‘கடப்ஸ்!’ அவற்றில் சிக்கிக்கொண்டதில் ஒன்று திரு. சிவசங்கரனில் ஏர்செல்; இதை இந்திய தணிக்கைத்துறையின் தலைவர் எடுத்துச் சொல்லவில்லை என்றாலும் (அது மரபு), அந்த விஷயம் வெளிச்சத்தில். அது போகட்டும். திரு.தயாநிதி மாறனுக்கு வேலை போனதுக்கு இதெல்லாம் காரணமில்லை: குடும்பப்பூசல் தான் காரணம்.

இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியம்:

திருவாளர்கள். ஆ. ராஜா, சித்தார்த் பெஹூரா, ஆர்.கே. சந்தோலியா அடங்கிய ஒரு  கும்பல், நேர்மையான அதிகாரிகளை மிரட்டி, அதட்டி, தண்டித்து, தன்னிச்சையாக முறைகேடுகள் செய்த வண்ணம். அனில் அம்பானியின் நிறுவனம் மறைந்திருந்து மர்மங்கள் செய்ததாகவும், அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

வாழ்க பாரதமாதா! வாழ்க மஹாத்மா காந்தியின் நாமம்! வாழ்க இந்திய பெருமக்கள்!

(தொடரும்)

http://articles.economictimes.indiatimes.com/2011-06-08/news/29633917_1_spectrum-pricing-excess-airwaves-pricing-formula

http://www.thehindu.com/news/national/article2090717.ece?homepage=true

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *