பட்டினத்தடிகளின் பாடல்கள் – 10ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

அடியார் உறவும், அரன் பூசை நேசமும், அன்பும் அன்றிப்
படிமீதில் வேறு பயன் உளதோ, பங்கயன் வகுத்த
குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக் கலங்கள்
தடியால் அடியுண்ட வாறொக்கும் என்று இனம் சார்ந்திலரே. 1.

சிவநேசச் செல்வர்களான அடியார்களின் நட்பும், சிவபெருமானுக்குச் செய்கின்ற பூஜைகளும், அவர் மீது செலுத்துகின்ற அன்பையும் உள்ளடக்கிய பக்தி மார்க்கத்தை விட இவ்வுலகிலுள்ள ஜீவன்களுக்கு வேறு நல்ல செயல் ஏதேனும் இருக்கிறதா என்ன? பிரமன் படைப்பில் நமக்கென்று அமைந்த சுற்றத்தார், மனைவி முதலான உறவினர்கள், அவர்களோடு இனிது வாழ்கின்ற வாழ்க்கை இவைகள் யாவுமே குயவன் செய்த மட்பாண்டங்களைத் தடியால் அடித்தால் என்னவாகுமோ அதைப் போல ஆகும் என்பதை எண்ணி நல்லோர் நட்பை சார்ந்திருக்கவில்லையே.

ஆங்காரப் பொக்கிசம், கோபக் களஞ்சியம், ஆணவம்தான்
நீங்கா அரண்மனை, பொய்வைத்த கூடம், விண் நீடிவளர்
தேங்கார் பெருமதிற் காம விலாசம், இத்தேகம் கந்தல்
பாங்காய் உனைப் பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே. 2.

என்னுடைய இந்த உடல் இருக்கிறதே இது கிழிந்து போன தோலால் ஆன பை. இது எப்படி இருக்கிறது தெரியுமா, அகங்காரத்தை உள்ளடக்கிய பொக்கிஷம், கோபத்தைத் தேக்கி வைத்த களஞ்சியம், ஆணவம் குடிகொண்ட அரண்மனை, பொய் கோலோச்சுகின்ற கூடம், விண்ணை முட்டும் பெரிய மதிற்சுவரைக் கொண்ட காமவிலாச மாளிகை. இவை அத்தனையையும் நீக்கிவிட்டு இறைவா உன்னைப் பணிந்து வணங்கி நற்கதி அடைகின்ற ஞானத்தைப் பெறுவது எங்ஙனம்?

ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி, அனாதியனை
மழுமான் கரத்தனை மால் விடையானை மனத்தில் உன்னி
விழியால் புனல் சிந்தி விம்மி அழு; நன்மை வேண்டும் என்றே. 3.

ஓயாமல் திரும்பத் திரும்பப் பிறந்து, பின் இறந்து இப்படி எத்தனையோ பிறவி எடுத்து மனம் வருந்தி தவிக்கின்ற என் நெஞ்சே! அழிவற்ற முக்தி நிலையை அடைய உனக்கு ஒரு மருந்தைச் சொல்கிறேன் கேள்! தொடக்கமோ முடிவோ இல்லாத ஆதி அந்தமில்லாப் பெருமானை, மழு, மான் இவற்றைத் தன் கரங்களில் தாங்கியவனும், திருமாலை ரிஷபமாகக் கொண்ட சிவபெருமானை மனத்தால் தியானித்து, கண்ணீர் விட்டு அழுது அரற்றி, அவனது அருட்கருணை வேண்டுமென்று வரம் கேட்டு உய்வாயாக.

நாய்க்கொரு சூலும், அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ?
பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ பெரும் காஞ்சிரங்காய்
ஆக்குவார் ஆர் அது அருந்துவர் ஆர் அதுபோல் உடம்பு
தீக்கிரை ஆவதல்லால் ஏதுக்காம் இதைச் செப்புமினே. 4.

*நாய் கர்ப்பமாக இருந்தால் அதை வைத்தியம் செய்து பிரசவம் எல்லாம் பார்க்கிறோமா என்ன? பேய்களுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமா என்ன? எட்டிக் காயை பயிராக்கி காய்த்தால் அதை உண்பார் உண்டா என்ன? அதுபோலத்தான், இந்த நம்முடைய உடல் இருக்கிறதே இதிலிருந்து ஆவி நீங்கிவிட்டால் தீக்கு இரையாவதைத் தவிர வேறு பயன் உண்டோ சொல்.

*அந்தக் காலத்தில் நாய் சினை கொண்டிருந்தால் அதற்கு மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால் இப்படிக் குறிப்பிடுகிறார். இபொழுது வளர்ப்புப் பிராணிகளாக நாய் வளர்ப்போர் அதையும் செய்யலாம்.

கச்சிற் கிடக்கும் கனதனத்திற் கடைக்கண்கள் பட்டே
இச்சித்திருக்கின்ற ஏழை நெஞ்சே, இமவான் பயந்த
பச்சைப் பசுங்கொடி உண்ணாமுலை பங்கர் பாதத்திலே
தைச்சுக்கிட மனமே ஒருக்காலும் தவறில்லையே. 5.

பெண்களின் மார்பில் கச்சைக்குள் அடங்கிய கனத்த தனங்களின் மீது இச்சைகொண்டு அலையும் பேதை நெஞ்சே! மலையத்துவஜனின் மகளான பச்சைப் பசுங்கொடியன்ன விளங்கும் அந்த உமாதேவியாம் உண்ணாமுலை அம்மையைத் தன் உடலின் வாமபாகத்தில் கொண்ட சிவபெருமான் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்திக் கிடந்தால் உனக்கு ஒரு துன்பமும் வாராதே.

மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவுங்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறிருந்தாலும் நற்பேறிது பொய்யன்று காண்
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே. 6.

மானின் விழிகளையொத்த வேல்விழி மாதர்களின் மோகவலையைக் கடந்து அதிலிருந்து விடுபட்டு வந்துவிட்டேன், ஞானகுருவாக வந்து இறைவன் அருள்பாலித்து என்னை ஏற்றுக் கொண்டனன்; ஆகையால் எனக்கு இனி ஒரு குறையுமில்லை. இந்த பூத உடல் இருந்தாலும் சரி, இல்லை அழிந்தாலும் சரி எனக்கு எந்தக் குறையுமில்லை; அப்படிப்பட்ட நற்பேற்றினை நான் பெற்றுவிட்டேன், இஃது உண்மை. இருந்தாலும் இந்த இழிவான உடலைத் தாங்கிக் கொண்டிருப்பது எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது.

சற்றாகிலும் உந்தனைத் தானறியாய் தனை ஆய்ந்தவரை
உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை
பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலிற் சென்று என்
பெற்றாய் மட நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தனுமே. 7.

ஏ மட நெஞ்சமே! ஒரு சிறிதாவது உன்னைப் பற்றி நீ யார் என்பதை ஆராய்ந்தறிந்து பார்த்திருக்கிறாயா? இல்லையே! போகட்டும் அப்படித் தன்னைத் தானே யார் என்று வினா எழுப்பி ஆய்ந்து அறிந்து ஞானம் பெற்றவரை அணுகி அவர் உரையையாவது கேட்டதுண்டா? இல்லையே. ஆகையால் உனக்கு ஏற்ற நிலை எது என்பதை எண்ணி அதனைப் பின்பற்றுவாயாக. சற்குருநாதரைக் கண்டு அவர் பாதங்களைப் பணியாமல், பொதுப் பெண்டிர் இல்லம் சென்று நீ பெற்றதென்ன? உன்னைப் போன்ற பித்தன் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை.

*உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன் எனவே
ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவது உண்மையென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே. 8.

கல்லை உளியால் செதுக்கிச் சிற்பமாக ஆக்கிய விக்கிரகத்தையும், மிக அழகாக உருவாக்கிய சுண்ணாம்பினால் ஆன சிலையையும், புளியினால் தேய்த்துப் பளபளக்கும் செம்பினால் ஆன விக்கிரகத்தையும் நான் போற்றி வணங்க மாட்டேன். பொன்மேனி அமைந்த பரமேஸ்வரனின் தாமரைப் பாதங்கள் இரண்டையும் என் நெஞ்சத்துள் பதித்து வைத்து விட்டேன், எனவே இனி எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை.

*பத்ரகிரியாரும் தன் பாடலொன்றில் இப்படிச் சொல்லுகிறார்: “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்”.

கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளை கையில்
வில்லால் அடியுண்டும் முன்னாள் விடம் உண்டு மேவிளித்துப்
பல்லால் புரமெரி ஏகம்பவாணர் பதாம் புயத்தின்
சொல்லார் செவியினிற் கேளாதிருந்தது என் தொல்வினையே. 9.

சாக்கிய நாயனார் எறிந்த கல்லால் அடிபட்டும், காளத்தி வேடன் கண்ணப்பன் தன் காலால் உதையுண்டும், இளையவனான அர்ஜுனனிடம் வில்லாம் அடிபட்டும், அந்த நாளில் பாற்கடலைக் கடந்தபோது எழுந்த ஆலகால விடத்தை உண்டு கண்டத்தில் தாங்கியும் இப்படி சிரமங்களையெல்லாம் பட்டபோதும், பற்கள் தெரிய புன்னகைத்த ஏகம்பவாணருடைய பொன்மலர் பாதங்களைப் பாடிய பனுவல்களைக் காதால் கேளாமலே இருந்தது என் முன்வினைப் பயனே.

ஒருநான்கு சாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும்
திருநாளும் தீர்த்தமும் வேறுளதோ அத்திசைமுகனால்
வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக்
குருநாதன் ஆணை கண்டீர் பின்னை ஏது இக்குவலயத்தே. 10.

நான்கு வருணத்தார்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், இவர்கள் அல்லாத மற்ற தேவர்களுக்கும் திருவிழாவோ அல்லது புண்ணிய தீர்த்தமோ வேறு ஏதேனும் உண்டோ? பிரம்ம தேவன் வகுத்தபடி அதது அந்தந்த நாட்களில்தான் வரும். பிரம்ம சிருஷ்டிப் பணி முடியும் காலத்தில் பரமகுருவான பரமேஸ்வரனின் பாதரவிந்தங்களே கதி என்பதைத் தவிர வேறு என்ன உண்டு இந்த உலகத்தில்.

(இனி வருவது பட்டினத்தார் தன் அன்னைக்கு அந்திமத் தீயிட்டபோது பாடிய பாடல்கள்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.