காந்தாரி கொடுத்த சாபம்!…

தஞ்சை வெ.கோபாலன்

மகாபாரதத்தில் மெளஸர பர்வம் என்ற பகுதி கதையின் இறுதிப் பகுதியில் உண்டு. அது சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் செய்யும் வினைகளின் பலன் அவரவர்க்கு வந்து சேரும் என்பதுதான். அதனால்தான் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நல்லதாகவே இருக்கும்படி பார்த்துச் செய்வது. இதைத்தான் வினைப்பயன் என்பார்கள். இது நம்மைப் போன்ற மனிதர்களுக்கு மட்டுமல்ல, புராண புருஷர்களையும் இந்த வினைப்பயன் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.

பெரியவர்கள் சாபம் கொடுத்தால் பலிக்கும் என்ற நம்பிக்கை உண்மைதான்; சாபமிட்டால் அது சாபத்தை ஏற்பவர்களின் வினைப்பயனை ஒட்டிதான் விளைவுகள் அமையும். நம் செயலுக்குப் பயன் இதுபோன்ற எதிர்பாராதவர்களின் சாபத்தினால் கிடைத்து விடுகிறது. பெரியவர்கள் வாழ்த்தோ அல்லது சாபமோ நம்மை எந்தெந்த விதங்களில் பாதுகாக்கும் அல்லது பாடாய்படுத்தும் என்பதற்கு மகாபாரதத்தில் மெளஸர பர்வத்தில் பதில் கிடைக்கிறது.

பாரத தேசத்தின் மாபெரும் காப்பியமான மகாபாரதத்தில் அந்த பதினெட்டு நாட்கள் பாரதப் போர் முடிந்த நேரம். கண்ணில்லாத தன் கணவன் திருதராஷ்டிரன் கண்களில் துயரத்தால் கண்ணீரும், நெஞ்சத்தில் தாங்கமுடியாத சோகமும் மண்டிக் கிடக்க அவன் மனைவி காந்தாரியோ தன் மக்கள் மாண்டு கிடந்த அந்த போர்க்களத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். குரு வம்சத்தின் புத்திரர்கள் வளைய வந்த பழைய நாட்களையும், அவர்கள் அனுபவித்த அரச போகங்களையும், இறுதியில் பிணங்களாக இந்த யுத்த பூமியில் விழுந்து கிடந்ததையும் அவள் எண்ணிப் பார்க்கிறாள். கண்களுக்குப் பார்வை இருந்தும், தன் கணவனால் பார்க்கமுடியாத இந்த உலகத்தைத் தானும் பார்ப்பதில்லை எனும் வைராக்கியத்தில் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு வாழ் நாளெல்லாம் அலைந்தவள், இப்போதும் கண்கட்டோடுதான் சுற்றுகிறாள்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய வரத்தினால் கண்கள் மூடப்பட்டிருந்தும், அந்த யுத்தகள காட்சிகளை அவள் மனக் கண்களால் பார்க்கமுடிகிறது. இந்த போரைத் தன் எண்ணம் போல நடத்தி முடித்துவிட்ட சாட்சாத் கண்ணனே அருகில் இருந்து அவளை வழிநடத்திக் கொண்டு வருகிறான். பாண்டவர் பக்கம் சேர்ந்து கொண்டு கெளரவர்களின் ஒட்டுமொத்த அழிவுக்கும் காரணமானவன் அல்லவா இந்த கண்ணன். என் வாரிசுகளை பூண்டோடு அழித்துவிட்டு, அழித்தவர்களுக்குத் துணை புரிந்துவிட்டு ஒன்றுமே தெரியாத நல்லவன் போல அல்லவா என்னோடு இந்த ரணபூமியைச் சுற்றிக் காட்டுகிறான் என்று காந்தாரியின் மனத்தில் தீப்பற்றி எரியத் தொடங்குகிறது

இவன் மட்டும் நினைத்திருந்தால் இந்த பேரழிவைத் தடுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் இவன் அப்படிச் செய்யவில்லையே. என் மக்கள் அழியவேண்டு மென்பதற்காகத்தானே அவனே பார்த்தனுக்குத் தேர் சாரதியாக இருந்து அவனை வழிநடத்தியிருக்கிறான். இப்படி யுத்த களத்தின் காட்சிகளை கண்ணன் எடுத்துச் சொல்லச் சொல்ல, அவள் மனக்கண்முன் வீராதிவீரர்கள் மாண்டுபோன காட்சிகள் தென்பட தென்பட அவள் நெஞ்சத்துத் தீ பெரு நெருப்பாகப் பற்றிக் கொண்டு அந்தத் தீயின் கொதிப்பு வெளிப்படும்படி கண்ணனிடம் கேட்கிறாள். கண்ணன் எவ்வளவோ எடுத்துச் சொன்னான் தான் போர் வராமல் செய்ய அரும்பாடு பட்டதையும், ஒவ்வொரு முறையும் துரியோதனன் தன் பிடிவாதத்தினால் தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான் என்பதையும் காந்தாரிக்கு விளக்கமாக எடுத்துரைத்தான்.

“கண்ணா! எங்கள் குரு வம்சம் பூரணமாக அழிந்துபோன காட்சிகளைக் காண்கிறேன். என் மக்கள் போரில் மாண்டுபோன காட்சிகளைக் காண்கிறேன். இந்த யுத்தகளம் குருதியால் நனைந்ததைப் போல, இப்போது என் நெஞ்சமும் கோபத் தீயால் வெந்து போயிருக்கிறது. கிருஷ்ணா! எங்கள் வம்சம் இங்கு எப்படி நசிந்து போனதோ, அது போலவே உனது விருஷ்னி வம்சமும் அழிந்து போகட்டும்! அந்த அழிவையும் நீ பார்த்துவிட்டு அதனோடு நீயும் அழிந்து போ!” என்றாள் ஆத்திரம் பொங்க.

ஒன்றல்ல, இரண்டல்ல நூறு மக்களையும், சுற்றத்தார், நண்பர்கள், வீராதி வீரர்கள், குருமார்கள், வீரபுருஷர்கள் என்று அத்தனை பேரையும் இழந்து தவிக்கும் அந்தத் தாயின் வயிறு இப்படித்தான் எரியும், அந்தத் தாயின் வாயிலிருந்து புறப்பட்டு வந்து தன்னைத் தாக்கும் இந்த சாபம் நிச்சயம் பலிக்கத்தன் போகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த கண்ணன் முகத்தில் சோகத்துடன் ஒரு புன்னகை படர்ந்தது.

அந்தத் தாயின் கரங்களை ஆதரவோடு பற்றிக் கொண்டான் கண்ணன். தனக்கு இப்படியொரு சாபத்தின் பலனாக முடிவு ஏற்படுவதாயின் அதுவும் ஏற்புடையதே என்று அவன் மனச்சாட்சி சொல்லியது. அவன் முகத்தில் சாந்தம் நிலவியது. காந்தாரியின் அந்தச் சாபம் விருஷ்ணிகளை எப்போது எப்படி சாய்த்தது?

ஒரு மனிதன் வாழ்விலும் தாழ்விலும் ஒரே மாதிரியான அடக்கம், பணிவு, பிறர்க்கு உதவும் பாங்கு இவற்றோடு இருந்தால் அவன் பிறவி எடுத்த பயன் உயர்ந்தது. ஆனால் மனிதன் உயர உயர அகந்தையும், செல்வச் செருக்கும் அவன் கண்களை மறைக்க, தான் சர்வ வல்லமைப் படைத்தவன் எனும் அகந்தை ஏற்படுமானால் அவனது முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் காட்டும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைச் சார்ந்த விருஷ்ணிகளுக்கு உலகில் தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு, கர்வம் ஏற்பட்டுவிட்டது. அது எல்லை கடந்து போய் விட்டது.

துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணனின் தந்தை வசுதேவர் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்காக பாரதவர்ஷத்தின் பல பகுதிகளிலிருந்தும் ரிஷிபுங்கவர்கள் வரத் தொடங்கினர். விஸ்வாமித்திரர், துர்வாசர், வசிஷ்டர், நாரதர் முதலான பல ரிஷிகள் வரத் தொடங்கினர். தான் எனும் அகங்காரமும், செருக்கும் தலைக்கு மேல் போய்விட்ட விருஷ்ணிகள் இந்த ரிஷிகளை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், கிருஷ்ணரின் மகன் சம்பா என்பவனை ஒரு கர்ப்பமடைந்த பெண்போல வேடம் தரித்து அந்த ரிஷிகளின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தி, “முனிவர்களே இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்?” என்று கேட்டனர்.

இவர்கள் தங்களை அவமதிப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட முனிவர்கள் ஆத்திரத்துடன் சொன்னார்கள், “இவளுக்கு ஒரு இரும்புத் தடி பிறக்கும்; அதுவே உங்கள் விருஷ்ணி குலம் அழிவுக்குக் காரணமாகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். உண்மையில் அந்த சம்பாவின் வயிற்றில் கட்டப்பட்டிருந்த துணிகளுக்குள் ஒரு இரும்புத் துண்டும் இருந்தது.

ரிஷிகளின் கோபத்துக்கு ஆளான விருஷ்ணிகள் அச்சமுற்று உக்கிரசேன மகாராஜாவிடம் சென்று நடந்தவைகளை விவரித்தனர். அந்த ரிஷிகளின் சாபம் பலித்துவிடுமே. அந்த இரும்புத் துண்டைப் பொடிப்பொடியாக்கிக் கொண்டுபோய் கடலில் தூவிவிடுங்கள் என்று அரசன் சொன்னான். உடனே விருஷ்ணிகள் அந்த இரும்புத் துண்டை பொடியாக்கினார்கள். பெரும்பாலும் பொடியாகிப் போனாலும், ஒரு சிறு இரும்புத் துண்டு மட்டும் பொடியாகாமல் அப்படியே இருந்தது. அதைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டு விருஷ்ணிகள் இந்த இரும்புத் துண்டுதானே நம் வம்சத்தை அழிக்கும் இப்போது அதைக் கொண்டு போய் கடலில் போட்டாகிவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

நல்ல வேளை இந்த நிகழ்வுகள் எல்லாம் கிருஷ்ணனுக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணன் இவை அத்தனையையும் நன்கு அறிவான். கடலில் போட்ட அந்த இரும்புத் துகள்கள் கரையொதுங்கி அங்கெல்லாம் வளர்ந்திருந்த நாணல் புதர்கள் மூங்கில் தடிகளைப் போல தடித்து வளர்த்தன.

குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின்னர் கிருஷ்ணன் துவாரகை திரும்பியிருந்தார். அங்கு அவர் முப்பத்தாறு ஆண்டுகள் தர்மத்தோடு ஆட்சி புரிந்தார். தன் பிறப்பின் நோக்கங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனும் எண்ணமும் கிருஷ்ணனுக்கு உண்டானது. தன்னுடைய யாதவ குலத்து விருஷ்ணிகளும் நாளாக ஆக அகந்தையின் உச்சிக்குச் சென்றுவிட்டதை கண்ணன் கவனித்தான். எவர் ஒருவருக்கு வேண்டிய செல்வமும், அதிகாரமும், செல்வாக்கும் கிடைத்து விடுகிறதோ அவன் அகந்தையின் உச்சத்துக்குச் சென்றுவிடுவான் என்பதுதான் இந்த உலக வாழ்க்கை சொல்லும் நியதி. ஒரு குலம் அல்லது இனம் அழிவதற்கு எவைகள் எல்லாம் காரணங்களாக அமையுமோ அவைகள் எல்லாம் அவர்களிடம் வந்து சேர்ந்தன. இதன் பயனாக துவாரகையில் மெல்ல மெல்ல தீமைகள் எல்லாம் நடக்கத் தொடங்கின.

கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரம் மறைந்து போனது. பாஞ்சஜைன்யம் எனும் கிருஷ்ணனின் சங்கும் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் காணாமல் போயின. காந்தாரி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டதோ? கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். செய்த பாவங்கள் தீர மக்கள் தல யாத்திரை போய்வரும்படி கிருஷ்ணன் பணித்தான். மக்களும் கிளம்பினார்கள் ஒரு கிரகண சமயத்தில். அதுவே ஒரு கெட்ட சகுனமாக ஆகிவிட்டது.

தல யாத்திரை புறப்பட்டவர்களுக்குள் குருக்ஷேத்திர யுத்தம் பற்றிய விவாதம் தொடங்கி அவர்களுக்குள் கைகலப்பில் முடிந்தது. பாண்டவர்கள் பக்கம் போரிட்ட சாத்யகிக்கும் கெளரவர்கள் பக்கம் போரிட்ட கீர்த்திவர்மனுக்கும் தகறாறு மூண்டது. இந்த சண்டையில் கீர்த்திவர்மனை சாத்யகி கொன்று விடுகிறான். இவ்விருவரும் சண்டை செய்தபோது மீதமிருந்த யாதவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் கடற்கரையில் உலக்கை அளவில் வளர்ந்திருந்த நாணல் தடிகளைக் கொண்டு தாக்கிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இந்த போரின் உச்ச கட்டத்தில் கிருஷ்ணனின் மகன்களும், பேரப்பிள்ளைகளும், சகோதரர்களும் மாண்டு போனார்கள்.

இப்படி கோட்டைக்குள் குத்து வெட்டு என்று உருவெடுத்து யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்கத் தொடங்கியதும் பலராமன் காட்டுக்குள் தவம் செய்யச் சென்று விட்டார். இதற்கிடையே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஒரு செய்தி சொல்லி அனுப்பினார். பெண்களை ஜாக்கிரதையாக மீட்டுக் கொண்டு வந்து அத்தினாபுரத்தில் சேர்க்கும்படி அவர் அர்ஜுனனை கேட்டுக் கொண்டிருந்தார்.

கடற்கரை முழுவதும் முன்பு கடலில் கலக்கப்பட்ட இரும்புத் துகள்கள் படர்ந்து அங்கெல்லாம் முளைத்தெழுந்த புற்களின் இலைகள் கத்திகளாக மாறி இவர்களைக் கொன்று போட்டன. மீதமுள்ள பெண்களை ஒன்று திரட்டி கிருஷ்ணன் அவர்களிடம் உங்களையெல்லாம் அழைத்துச் செல்ல அர்ஜுனன் வருகிறான், அவன் உங்களைப் பத்திரமாக அத்தினபுரம் கொண்டு சேர்ப்பான் என்று சொல்லிவிட்டுத் தானும் கானகம் சென்று தவம் செய்யச் செல்கிறான். காட்டில் சென்ற பலராமனும் தன் பிறப்பின் நோக்கம் முடிந்துவிட்டதை உணர்ந்து வைகுண்டம் செல்கிறான்.

ரிஷிகள் விருஷ்ணிகளுக்கு சாபமிட்டபோது சம்பாவின் வயிற்றில் வைத்துக் கட்டப்பட்ட இரும்புத் தடியைப் பொடித்து கடலில் கலந்த போது ஒரு சிறிய துண்டு பொடிபடாமல் மிகுந்தது அல்லவா, அந்தச் சிறு துண்டை மீனொன்று விழுங்கிவிட்டது. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவனிடம் அந்த மீன் சிக்கிக் கொண்டது. அதன் வயிற்றில் ஒரு சிறு இரும்புத் துண்டு இருப்பதறிந்து அதை மீனின் வயிற்றைக் கிழித்து எடுத்தான் அவன். அதைக் கல்லில் நன்கு இழைத்து கூராக்கித் தன் அம்பின் நுனியில் அதைப் பொறுத்தி வேட்டைக்குப் புறப்பட்டான்.

தன் கண் முன்னாலேயே தன்னுடைய இனம் அழிவதை கிருஷ்ணன் பார்த்துக் கொண்டு வருத்தமடைந்தான். அவன் மனம் அமைதியை நாடியது. தன் இனத்தின் அழிவு மட்டுமல்ல தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் கிருஷ்ணன். மன அமைதி நாடி அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்றான். அங்கு நெடிது வளர்ந்திருந்த புல் வெளியொன்றில் சிறிது ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தான். அவன் உடல் முழுவதும் புல்லினுள்ளும் பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக வைத்துப் படுத்தான். அப்போது அந்த வனத்தினுள் வேட்டைக்கு வந்தவன் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல காட்சியளித்த கிருஷ்ணனின் பாதங்களை நோக்கி முன்பு மீனின் வயிற்றிலிருந்து மீட்டு இரும்புத் துண்டு பொருத்திய அம்பை எய்தான். அது கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்துக் கொண்டு உடலின் உள்ளே சென்றது. கிருஷ்ணனுக்கு உடலின் பாதங்களைத் தவிர வேறு எங்கு அடித்தாலும் மரணம் நேராது. தரையில் படுத்திருந்த கிருஷ்ணனின் கால்கள் மானின் தலையைப் போல இருந்ததால் அதை நோக்கி எய்த அம்பு கிருஷ்ணனின் உயிரைக் குடித்தது. அன்று காந்தாரி கொடுத்த சாபம் இப்படி நிறைவேறியது.

அத்தினபுரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. துவாரகையில் ஆண்கள் எல்லாம் இறந்து போன நிலையில் மீதமிருந்த பெண்மணிகளை மீட்டுக் கொண்டு போகும் கடமை அர்ஜுனனுக்கு இருந்தது. ஆகவே அவன் அந்தப் பெண்மணிகளையும் குழந்தைகளையும் மீட்டுக் கொண்டு அத்தினபுரம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். துவாரகை நகரம் பாழ்நகரம் ஆகிவிட்டது. பெண்கள் கூட்டம் அர்ஜுனனின் பாதுகாப்போடு புறப்பட்ட பின்னர் துவாரகை நகருக்குள் கடல் புகுந்தது. அத்தோடு பெருமை மிகுந்த அந்த நகரம் கடலினுள் மூழ்கியது.

அர்ஜுனன் பாதுகாப்போடு சென்ற பெண்களையும் குழந்தைகளையும் வழியில் திருடர்கள் வழிமறித்தார்கள். அவர்களோடு போரிட அர்ஜுனன் தன் காண்டீபத்தை எடுத்து வளைத்தான். அந்தோ, அந்த காண்டீபம் இப்போது வீரியம் இழந்து செயலற்றதாகிவிட்டது. திருடர்களிடமிருந்து மீண்ட பெண்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் அத்தினாபுரம் சென்றடைந்தான்.

இந்த நிலைமையை வியாசருக்கு எடுத்துரைத்து அவருடைய ஆலோசனைகளைக் கேட்க அர்ஜுனன் வியாசரை அணுகினான். விருஷ்ணிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாண்டு போனதையும், பலராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வுலக வாழ்வை நீத்து வைகுந்தம் சென்று விட்டதையும், துவாரகை நிர்மூலமான செய்தியையும், தன்னுடைய அஸ்திரங்கள் எல்லாம் பயனற்று போனதையும் எடுத்துச் சொன்னான்.

அர்ஜுனன் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்ட வியாச பகவான் சொன்னார், “வில்விஜயா! நீங்கள் அனைவரும் இந்த மண்ணுலகத்தில் பிறவி எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. கிருஷ்ணனின் நோக்கமும் நிறைவேறி விட்டது. உங்களிடம் இருந்த அஸ்திரங்கள் அனைத்துக்கும் இனி வேலை இல்லாமல் போய்விட்டது. அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் இனியும் இந்த பூவுலகில் இருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்களும் புறப்படுங்கள்” என்று ஆணையிட்டார்.

பாண்டவர்கள் தருமன் தலைமையில் திரெளபதியுடன் தங்கள் தலைநகரைவிட்டுப் புறப்பட்டு சுவர்க்கம் செல்ல தீர்மானித்து இந்த புனித பாரத பூமியை வலம் வந்து வடக்கு நோக்கிச் சென்று பனிபடர்ந்த ஹிமாச்சலத்தைக் கடந்து சுவர்க்கம் செல்ல பயணத்தைத் தொடங்கினார்கள்.

2 thoughts on “காந்தாரி கொடுத்த சாபம்!…

 1. மஹாபாரதத்தில் மூன்று பெண்மணிகள்  தங்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்கு எதிர்வினையாற்றினர் சிகண்டியும் திரௌபதியும் சபதம் செய்தனர்.காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணருக்கே சாபமிட்டாள்.காந்தாரியின் துயரம் 100 பிள்ளைகளை இழந்தது மட்டுமில்லாமல் தன் ஒரே மகள் துச்சலையையும் விதவையானதுதான்.இக்கட்டுரை ஆசிரியரின் எழுத்து நடை நன்றாக அமைந்துள்ளது.

 2. மௌஸர பர்வம் – தவறு
  மௌஸல பர்வம்  [முஸலம் – உலக்கை].

  சம்பா – தவறு
  ஸாம்பன் [கண்ணபிரானுக்கும் ஜாம்பவதிக்கும்
  பிறந்தவன்; துரியோதனனின் குமாரி லக்ஷ்மணையை
  மணந்து கொண்டவன்]

  தேவ்

Leave a Reply

Your email address will not be published.