சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இதோ அடுத்த மடல் கொஞ்சம் வித்தியாசமாக என் மனவோட்டங்களை உங்களுடன் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆதங்கத்தில் உங்கள் முன்னே வந்து விழுகிறது.

உள்ளத்தின் ஆழத்தில் உருண்டும் நினைவுகள் வெள்ளமாய் பள்ளம் பார்த்து வடிந்தோடிட, அதிலே தெள்ளத் தெளிவான சில சிந்தனை முத்துக்கள் மின்னியபடியே பளிச்சென்று வலம் வந்து கொண்டிருக்கும்.

மனித மனங்களில் இவ்வெண்ண அலைகளின் ஓட்டம் இல்லலாவிடில் வாழ்க்கையே நின்று போய்விடும். கடிகாரத்தின் முள் நின்று விட்டால் எவ்வாறு அக்கடிகாரம் உபயோகமில்லாத ஜடப்பொருளாய் தூக்கிப் போடப்படுகிறதோ அதே போலத்தான் எண்ண ஓட்டமில்லாத மனித உள்ளமும் ஜீவனற்றுப் போய் விடுகிறது.

இவ்வெண்ணங்கள் எமக்கு கொடுப்பவை எல்லாம் மனதுக்கு இதமான உணர்வுகள் தானா? எப்போதுமே எம் எண்ணங்கள் எமக்கு ஆனந்தம் அளிப்பவையாகத்தான் இருக்கின்றனவா?

இல்லை அவ்வப்போது சிற்சில ஆனந்தக் கணங்களைத் தந்திடும் வல்லமை படைத்தவையாக இருப்பினும் வாழ்க்கையின் சுமைகளும் அச்சுமைகளின் அழுத்தம் உள்ளத்தில் ஏற்படுத்தும் வலிகளுமே அதிகமாக எமது எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கின்றன.

எப்போதுமே எதிலுமே ஏதோ ஒரு அனர்த்தம் நிகழக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போல எமது உள்ளமும் எத்தகைய ஒரு செயலைச் செய்யும் போதும் அதன் விளைவின் தாக்கங்கள் எதிர்மறையாகத்தான் இருக்கும் எனும் ஒரு அச்சத்தினல் தவித்துக் கொண்டுதானிருக்கிறது.

எமக்கு நடக்கும் நன்மைகளையும், தீமைகளையும் நாமடையும் இன்பங்களையும் துன்பங்களையும் அது எமக்கு பிறரால் அல்லது இயற்கையால் அன்றி அனைவர்க்கும் பொதுவான இறை எனும் சக்தியால் ஏற்பசுத்தப்படுகின்றது என்று எண்ணிப்பார்க்கும் வரை அவைகளின் தாக்கமும் அவைகளை ஏற்படுத்தியவர்கள் என்பவர்கள் மீதான எமது காழ்ப்புணர்வும் அதிக அளவில் இருக்கத்தான் போகின்றன.

ஆனால் நடந்தைவைகள், நடப்பவைகள் எவ்வகையான நிகழ்வுகள் ஆக இருந்தாலும் அதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருப்பினும் அது இயற்கையாக எமது வாழ்வில் நடந்தேறிய நிகழ்வுகள் எனும் பொதுப்படையான் நோக்கில் பார்க்கப் பழகிக் கொள்வோமாகில் அது நிச்சயமாக எமக்கு அமைதியான ஒரு மன ஓட்டத்தைக் கொடுக்கும் என்பதில் ஜயமில்லை.

ஆனால் அப்படி ஒரு மனதை ஒரு சாதாரண மன உளைச்சல்களுக்கு உட்பட்ட இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒரு மனிதனால் அடைந்து விட முடியுமா?

அது அவ்வளவு எளிதானதா ?

இல்லை ஆனால் அத்தகைய ஒரு மனநிலையை அடையும் முயற்சியின் முதலாம் படியில் நிற்கிறோம் ஒரு எண்ணமே மனதில் அலையாடும் அல்லலான உணர்வுகளுக்கு ஒரு தெளிவான பாதையை வகுத்துக் கொடுக்கும் வல்லமை படைத்தது என்பதே உண்மையானது.

இதுதான் பாதை இதுதான் பயணம் என்று ஈழத்தின் வடபுலத்தில் மத்தியதரக் குடும்பத்தின் கடைசிப் பிள்ளையெனும் மமதையில் உழன்று கொண்டிருந்த எனது பாதையை இத்தனை வளைவு சுளிவுகளுக்கு உள்ளாக்கி அனுபவப் பட்டறையில் அடிமேல் அடி கொடுத்து இன்று என் இனிய உறவுகளுடன் அவ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுத்ததவர் அன்றி வழி வகுத்தது எது?

காலமா? அன்றிக் அக்காலத்தின் மூலமாய் யாரின் கண்களுக்கும் தென்படாமல் இயற்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தியா ?

இதோ வென்று விட்டேன் என்று நினைத்துக் கொண்டு ஒரு அடி எடுத்து வைத்தால் இரண்டு அடி பின்னே தள்ளி என்னைப் பார்த்துச் சிரிக்கிறான் அனைவருக்கும் மேலானவன்.

சரி பின் வைத்த அடி இரண்டையும் முன் வைக்க தேவையான முயற்சிகளை எடுக்கும் போது தானகவே இரண்டு அடிகள் முன்னே கொண்டு போய் நிறுத்தி விட்டு இப்போ என்ன செய்வாய் ? என்பது போல ஒரு கேள்வி.

இதைத்தான் கவியரசர் “நடக்கும் என்பார் நடக்காது , நடக்காது என்பார் நடந்து விடும் ” என்றாரோ ?

எண்ணிய இடத்தில் தொடங்காது எண்ணாத இடத்தில் முடிந்து விடும் இவ்வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஓராயிரம்.

சொந்தமென்று நம்பியவர்கள் தந்திரமாய் தப்பித்துக் கொண்டதும் எங்கிருந்தோ யாருமறியாத இடத்திலிருந்து சொந்தமாக என்னைக் கொண்டு அன்பு பொழியும் உள்ளங்கள் மறுபுறம் அப்பப்பா ! இந்த வாழ்க்கை ஒரு பகடையாட்டம் என்றால் இக்காய்களை நகர்த்துபவன் யாராலுமே புரிந்து கொள்ள முடியாத ஒரு அதி விற்பனன் என்பதுவே உண்மை.

அடாது பெய்யும் மழையில் உருவாகும் வெள்ளத்தில் மிதக்கும் நீர்க்குமிழியைப் போன்ற எமது வாழ்க்கையில் எதுவுமே நான் கொண்டு வந்ததுமில்லை எதையுமே நான் உருவாக்கியதுமில்லை எதுவுமே என்னால் கொண்டு போகப்படப் போவதுமில்லை இதனுள்ளே இத்தனை போராட்டாமா? இதற்க இத்தனை திண்டாட்டமா?

புரிந்து கொள்ள முடியா வினைகள் விளக்கமில்லா விடயங்கள் விளங்க முடியாச் சூழல்கள் இவரினால் பின்னப்பட்டுள்ள நாம் எண்ணங்களின் மையத்தை நோக்கி தெளிவான பார்வைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே என்னுடைய இந்த அலசல்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *