அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (29)

29. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! லியானார்டோ அருங்காட்சியகம் (2), வின்ச்சி, இத்தாலி

சுபாஷிணி ட்ரெம்மல்

மனித பரிணாம வளர்ச்சிக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக அமைந்தவர்களில் லியோனார்டோவின் பங்கு அளப்பறியது. அவரது சிந்தனைகளில் உதித்த கருத்துகள் அனைத்தையும் தமது குறிப்பேட்டில்  தொகுத்து வைத்ததனால் அவை இன்று நாம் அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. தனது கண்டுபிடிப்புகளில் சிலவற்றை லியோனார்டோ மாடல்களாகச் செய்தும் பார்த்திருக்கின்றார். பல கண்டுபிடிப்புகள் செயல்வடிவம் பெற்றதோடு அவை மென்மேலும் செம்மையாக்கப்பட்டு மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியின் பயன்பாட்டிலும் இடம்பெறுவதாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

இத்தாலியின் வின்ச்சி நகரில் உள்ள இந்த லியோனார்டோ அருங்காட்சியகம் இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கின்றது. ஒன்று நகர மையத்தில் இருக்கும் அருங்காட்சியகம். இங்கே லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாடல்கள் இந்த அருங்காட்சியகத்தை நிறைத்துள்ளன. இந்த மாடல்களை உருவாக்கியதில் பெரும் பங்கு IBM நிறுவனத்தைச் சாறும் என்ற குறிப்பும் அங்கே காணக் கிடைக்கின்றது.

suba 1
அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் வடிவங்கள்

இதைத் தவிர்த்து வின்ச்சி நகர மையத்தைக் கடந்து ஏறக்குறைய 3கிமீ தூரத்தில் லியோனார்டோவின் பிறந்த இல்லம் இருக்கின்றது. இதில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே நவீன தொழில் நுட்பம் கொண்டு ஹோலோக்ராம் வடிவில் நம் கண் முன்னே லியோனார்டோ டா வின்சி தோன்றி தம்மைப் பற்றியும் தனது சிந்தனைகளை, தன் வாழ்க்கை வரலாறு என இத்தாலி மொழியிலும் ஆங்கிலத்திலும் கூறுவதைக் கேட்கலாம். இது நம் முன்னே லியோனார்டோ நின்று பேசுவதைப் போன்றதொரு உணர்வினை வழங்குகின்றது. இந்தக் கண்காட்சியகத்தில் அவரது இல்லத்தின் கூடம், வாசல் பகுதி, சமையலறை, தூங்கும் அறை போன்ற பகுதிகளில் விளக்கக் குறிப்புகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

லியோனார்டோவின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதும் இந்த அருங்காட்சியகப் பதிவிற்கு உதவும் எனக் கருதுகின்றேன். 1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி ப்ளோரன்ஸ் நகரில் இருக்கும் வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வசாரி (Vasari) அவர்களது குறிப்புகளிலிருந்து கிடைக்கின்றன. இது மிக விரிவானதொரு குறிப்பு. இக்குறிப்புகளில் காணப்படும் தகவலின் படி லியோனார்டோ சைவ உணவு உண்பவர் என்று அறியமுடிகின்றது. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகளை வாங்கி அவற்றை கூண்டிலிருந்து சுதந்திரமாகப் பறக்க விடுவாராம். சுதந்திர தாகம் அவர் மனதை ஆக்கிரமித்திருக்க வேண்டும் என்றும் விலங்குகள் போன்ற ஏனைய உயிரினங்களின் மீதும் அவற்றின் சுதந்திர வாழ்க்கையின் மேலும் அவருக்கு ஓர் ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என்றும் இதனை அறிந்து கொள்ளும் போது எண்ணத் தோன்றுகின்றது.

இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை; குழந்தைகளும் இல்லை. அதிகமான நண்பர்கள் இவருக்கு இருந்திருக்கின்றனர். அதில் ஆண்களும் சில குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் பெண்களும் அடங்குகின்றனர்.

ஆரம்ப காலத்தில் இவரது புகழ் இவரது கலைப்படைப்புக்களுக்காகவே என அமைந்தது. ஐரோப்பிய கலாச்சரத்திற்குப் புகழ் சேர்க்கும் பல சித்திரங்கள் லியோனார்டோவின் கைவண்ணத்தில் உருவானவை. உதாரணமாக Virgin and Child with St. Anne, John the Baptist,Virgin of the Rocks, Adoration of the Magi, The Last Supper, Mona Lisa ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஓவியராகவும் சிற்பியாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட லியோனார்டோ உடற்கூறுகளை ஆராயும் கலையையும் கற்க எண்ணம் கொண்டு Andrea del Verrocchio என்ற சிற்பக்கலை ஆசிரியரிம் பிரத்தியேகப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இந்தப் பயிற்சிகள் அவருக்கு மனித உடலின் பாகங்களை ஆராய்ந்து அவற்றை தனித்தனியே விரிவாக விவரிக்கும் வகையில் படைப்புகளை உருவாக்க உதவின. உடலின் அனைத்து பாகங்களையும் மருத்துவர்களைப் போல வெட்டி ஆராய்ந்து அதன் உட் பகுதிகள், தோல், தசை, நரம்பு நாளங்கள், என உடலின் பாகங்களை ஆராய்ந்து அதன் குறிப்புகளை இவர் உருவாக்கியிருக்கின்றார்.

suba 2

லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புடன் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆரம்ப நிலைவடிவம்.. ஏறக்குறைய 1510 வாக்கில் எழுதப்பட்ட குறிப்பு (இது இங்கிலாந்தில் உள்ள Royal Library, Windsor Castle லில் உள்ளது)

இவர் ஒரு சிறந்த ஓவியர் என்ற காரணத்தினால் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வெட்டி அதன் உட்பகுதிகளை வரைந்து குறிப்பெடுக்கும் அனுமதி இவருக்கு அரசினால் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஃப்ளோரன்ஸ் நகரில் இருந்த Hospital of Santa Maria Nuova, மருத்துவமனையிலும் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மிலான், ரோம் நகர மருத்துவமணைகளிலும் இவ்வகை வாய்ப்புக்கள் அவருக்கு அமைந்தன. மருத்துவர்களுடன் இணைந்து 1510-1511ம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய உடல் கூறுகளை விளக்கும் 240 ஓவியப்படைப்புக்களை இவர் உருவாக்கியிருக்கின்றார். இக்கால நிலை போல கேமராவில் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ பதிவு செய்வதோ அமையாத காலகட்டம் அது. சித்திரங்களின் வழியே தான் இவ்வகை மருத்துவ குறிப்புக்கள் உருவாக்கம் பெற்றன. இந்த மருத்துவ ஆவணப் படைப்புகளை உருவாக்கியோர் வரிசையில் லியோனார்டோவின் பங்களிப்பு சிறப்பிடம் பெறுகின்றது என்பதில் மறுப்பேதுமில்லை.

​இதைத் தவிர்த்து லியோனார்டோவின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சார்ந்த சிந்தனைகள் நம்மை வியக்க வைப்பன. ​ பாலம் அமைக்கும் என்ஜீனியரிங் அடிப்படைகள், போர்க்கருவிகளின் இயந்திரப் பகுதி, இசைக்கருவிகள், விமானம் போன்ற பறக்கும் கருவி, வீட்டு பயன்பாட்டு கருவிகள் என எண்ணிக்கையில் உயரும் வகையில் இவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன.

suba 3

பறவைகளின் பறக்கும் முறைகளை விவரிக்கும் குறிப்புக்கள். இதன் வழி பறக்கும் கருவி உருவாக்கம் பற்றி லியோனார்டோவின் குறிப்புக்கள் அடங்கிய பக்கம்

​லியோனார்டோவின் அசாதாரண திறமை அவரது புகழ் உயரக் காரணமாக அமைந்தது. ​இத்தாலி மட்டுமன்றி ஐரோப்பாவில் இவர் புகழ் பரவியது. இத்தாலியின் பல நகரங்களில் இவருக்குச் சிற்பங்கள் உருவாக்கும் பணிகள் அமைந்து பள்ளிகளையும் அமைத்து நடத்தி வந்தார். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐரோப்பாவின் பல இடங்களிலிருந்து இவரிடம் சித்திர சிற்பக்கலையைக் கற்றுக் கொள்ள மாணவர்கள் அமைந்திருந்தனர். ப்ரான்ஸ் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸ் லியோனார்டோவின் புகழை அறிந்து தனது அரண்மனைக்குச் சிறப்பு விருந்தினராக இவரை அழைத்திருந்து சிறப்புச் செய்தார். நாளடைவில் இவர்களது நட்பு மிக நெருக்கமாக வளர அரசரின் பிரத்தியேகச் சிறப்பு சிற்பக் கலைஞர் என்ற பட்டமும் வழங்கி கௌரவித்ததோடு தம்முடனேயே லியோனார்டோ இருக்கும் படி ஏற்பாடுகளையும் செய்தார் மன்னர். லியோனார்டோ தம் முதுமையில் இறந்த போதும் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் அரவணைப்பில் இறந்ததாக குறிப்பும் ஒரு சித்திரப் படைப்பும் இருக்கின்றது.

suba 4

1818 -ல் ஓவியக் கலைஞர் இங்க்ரெஸ் உருவாக்கிய படைப்பு. மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் கைகளில் லியோனார்டோவின் இறுதி மூச்சு செல்வதை உருவகப்படுத்தும் ஓவியம்

இத்தாலியில் சித்திரக் கலைஞர்களின் வாழ்க்கை குறிப்பை தேடி பதிந்து வைத்த பெருமை ஜியோர்ஜியோ வசாரியையே சாரும். டான் ப்ரவ்னின் இன்ஃபெர்னோ நூலில் இந்த வசாரி பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே வருவதை இந்த நாவலை வாசித்தவர்கள் அறிந்திருக்கலாம். வசாரி தனது Lives of the Artists நூலில் லியோனார்டோவை அறிமுகப்படுத்தும் பகுதியில் கீழ்க்காணும் வாசகத்தைக் குறிப்பிடுகின்றார்.

In the normal course of events many men and women are born with remarkable talents; but occasionally, in a way that transcends nature, a single person is marvelously endowed by Heaven with beauty, grace and talent in such abundance that he leaves other men far behind, all his actions seem inspired and indeed everything he does clearly comes from God rather than from human skill. Everyone acknowledged that this was true of Leonardo da Vinci, an artist of outstanding physical beauty, who displayed infinite grace in everything that he did and who cultivated his genius so brilliantly that all problems he studied he solved with ease.

—Giorgio Vasari

​எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றோம்.. பின்னர் இறக்கின்றோம். நித்தம் வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்கள் காலம் கடந்தும் மனித குலத்தினால் நினைத்துப் பார்க்கும் நிலையை அடைவர். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் இடம்பெறுபவர்!

இன்று மே மாதம், 2ம் தேதி 1519ம் நாள் லியோனார்டோ இவ்வுலகை விட்டு மறைந்தார். லியோனார்டோ என்னும் இப்புதுமைச் சிற்பிக்கு என் அஞ்சலிகள்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க