(A successful marriage requires falling in love many times, always with the same person.  -> Germaine Greer

காதல் ஒரு முறை தோன்றுதல் அழகு.  அடுத்த முறை தோன்றினால் அது காதல் அல்ல…காமம்!

பூக்கள் ஒரு முறைக்கு மேல் மலர்வதில்லை!   -> தமிழ்த்தேனீ)

-நடராஜன் கல்பட்டு

ஒரு நாள் எங்கள் குடியிருப்பில் கேட்ட சத்தம், “எவண்டா அவன் மரத்தெ வெட்டுறது? வெட்டுற கையெ ஒடிச்சு அடுப்பிலெ வெச்சூடுவேன்!”  சத்தம் போட்டது எனது பக்கத்து ஃப்ளேட்காரர்தான்.

மற்றொரு நாள், “விஷயம் தெரியுமா ஒமக்கு?  இந்த கிச்சு ராஸ்கல் ஒரு முஸ்லீம் பொண்ணெக் கல்யாணம் பண்ணிண்டு வந்திருக்கான்.  அவனெ எம் புள்ளையே இல்லேன்னு தூக்கி எறிஞ்சுட்டேன்.”

“அவனுக்குப் புடிச்சிருக்கு; கல்யாணம் பண்ணிண்டு இருக்கான்.  அதுக்காக அவனெ ஒங்க புள்ளையே இல்லேன்னு சொல்லறதெல்லாம் டூ மச் சார்.  சந்தோஷமா ஏத்துக்கோங்கோ வீட்டுக்கு வந்த மகராஜீன்னு அவன் கல்யாணம் பண்ணிண்டு வந்திருக்கறவள.”

“அது ஒரு நாளும் நடக்காது.  கூடப் படிச்சாளாம்.  திடீர்னு அவளோட அப்பா செத்துப் போயிட்டாராம்.  பாவம்னு…இவன் அவளுக்கு வாழ்க்கெ கொடுத்திருக்கானாம்.  ராஸ்கல்… ராஸ்கல்!”

“நல்ல காரியந்தானே பண்ணி இருக்கான்?  அவனெ புகழறதெ உட்டூட்டு…”.  முடிக்கவில்லை நான் சொல்ல வந்ததை.

“நல்ல காரியமாம்.  நல்ல காரியம்.  ஊருலெ தினோம் ஒருத்தன் செத்துண்டு தான் இருப்பான்.  அவுங்க பொண்ணுங்களெ எல்லாம் இவரு போயி காப்பாத்துவாராக்கும்?  நான் வாங்கி இருக்குற ரெண்டு பெட்ரூம் ஃப்ளேட் போறாது.  மல்டி ஸ்டோரீட் ப்ளாக்கு ஒண்ணையேதான் வாங்கணும் நான்.”

கிடு கிடுவென ஓடியது ஓராண்டு.

“சார் அடுத்த மாசம் அஞ்சாம் தேதி ஆண்டு நெறவு நடக்கறது நம்மாத்துல்லெ என் பேரனுக்கு.  நீங்க அவசியம் வரணும்.”

“நல்ல விஷயந்தான்.  கட்டாயம் வரேன்.”

ஐந்து வருடங்கள் ஓடி விட்டன கிடு கிடுவென்று.

“சார் மாமி ரொம்ப கஷ்டப்பட்டாளோ?”

“இல்லாமெ இருக்குமா?  கேன்சர்னா சும்மாவா?  ரொம்ப அவஸ்தெப் பட்டா சார்.  ஆனா கடெசீ மட்டும் அவொ பக்கத்துலெ இருந்து ஒரு பொண்ணாட்டம் கவனிச்சிண்டா சார் நஸரீன், அதான் என் மாட்டுப் பொண்ணு.  என்ன ஜாதியானா என்ன…என்ன மதமானா என்ன சார்.  மனுஷத்தனம் வேணும் சார்.  அது அவொ கிட்டெ ரொம்பவே இருக்கு சார்.”

ஒரு நாள் நான் கேட்டேன், “ஏன் சார் இந்த வயசான காலத்துலெ இப்பிடி நீங்க தனியா இருந்துண்டு எத்தனை நாளு கஷ்டப் படணும்?  புள்ளெயோட போயி இருக்கக்கூடாது?  அவந்தான் பெங்களூருலே பெரிய ஃப்ளேட்டு வாங்கி இருக்கான்னு சொல்லுவேளே” என்று கேட்டேன் பெரியவரை.

“எனக்கேது புள்ளெ?  என் புள்ளெயே இல்லேன்னு ‘டிசோன்’ பண்ணீட்டேன் அவனெ.  என் புள்ளேயே இல்லேன்னு தலெ முழுகீட்டேன்.”

“அப்பிடிச் சொல்லாதீங்க சார்.  என்ன பண்ணீட்டான் அவன் இப்போ?”

“பின்னெ என்ன சார்.  ராஸ்கல் காதல் கல்யாணம் பண்ணிண்டான்.  புள்ளெக்கு அஞ்சு வயசாறது.  இப்போ இன்னோரு பொண்ணோட சுத்திண்டு இருக்கானாம் அவன்.  வீட்டுக்கே வரதில்லையாம்.  பொண்டாட்டியெ விவாக ரத்துக்கு ஒத்துக்கோன்னு வெரெட்டறானாம்.  விவாகரத்துக்கு ஒத்துண்டா அவளுக்கு அவொ வீட்டுலெ இன்னோரு கல்யாணம் பண்ணி வெச்சூடுவா.  என் பேரன் கதி என்ன சார் ஆகும்?  ராஸ்கல்… ராஸ்கல்.  ஏம்மா இதெ முன்னாடியே சொல்லலே?  சொல்லியிருந்தையானா அவன் காலெ முறிச்சு வீட்டோடு ஒக்காத்தி இருப்பேன் இல்லென்னு கேட்டேன் என் மாட்டுப் பொண்ணெ.”

“அழுதுண்டே கேக்கறா அவொ, எப்பிடி அங்கிள் ஒங்க புள்ளெயெப் பத்தி ஒங்க கிட்டெயே நான் கம்ப்ளெய்ன்டு பண்ண முடியும்னு,”

“இப்பொ எப்பிடி சொன்னேன்னு கேட்டேன்.  அதுக்கு அவொ சொல்றா அழுதுண்டே, ”அங்கிள் ஒங்க புள்ளெ பதினெஞ்சு நாளே வீட்டுக்கே வரலே.  போனு போட்டு கேட்டா ஆபீசுலெ வேலெ அதிகம்னு சொல்றாரு.  இப்பொ ஒரு வாரமா நான் போனு பண்ணா கட் பண்றாரு அங்கிள்.  அதான ஒங்களுக்கு சொல்றேங்கறா.”

“நீங்க போயி பேசறது தானே புள்ளெ கிட்டெ?”

“போயி பேசினேனே அந்த ராஸ்கல் கிட்டெ.”

“என்ன சொல்றான்?”

“பாவம்பா மஞ்சு.  என்ன பணமிருந்து என்ன?  அவொ ஹஸ்பெண்டு இந்த சின்ன வயசுலெ அவளெ உட்டூட்டு வேற ஒத்தியோட போயிட்டான்.  அதான் அவளுக்கு ஒரு நல்லது பண்ணலாமேன்னு அவ கூட நான் போயி தங்கி இருக்கேங்கறான்.  ராஸ்கல் ராஸ்கல்.

பாவம் சார் என் பேரன்.  பச்செக் கொழெந்தெ சார் அவன். ‘தாத்தா எனக்கு சாக்கலேட் வாங்கித் தரெயான்னு கேக்கறான்.”

கிச்சு மனதில் நிரம்பி யுள்ளது பச்சாதாபமா அன்றி இச்சாதாபமா?

(கதையல்ல…கற்பனையல்ல…அக்மார்க் நிஜம் இது!)

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பச்சாதாபம்!

  1. சம்பந்தப்பட்டவர்கள் இதைக் கருணை என்றுதான் நினைத்துச் செய்கிறார்கள்.  எனக்குத் தெரிந்து ஒருவர், `போதைப்பித்தர் ஒருவரின்  மகள் வியாதிக்காரி என்று தெரிந்தும், அவளுக்கு வாழ்க்கை கொடுக்க விரும்பினேன்,’ என்று என்னிடம் கவுன்செலிங்கிற்கு வந்தார். இரு குழந்தைகளுக்குப் பிறகு, திடகாத்திரமான அவருக்கு  உடலுறவுக்கும் வழி இல்லாமல் போய்விட்டது என்பதுதான் அவரது குறை.  `நான் என்ன செய்தால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்லுங்களேன்,’ என்று அவர் ஒரேயடியாகப் புலம்ப,  “இவளை விவாகரத்து செய்துவிட்டு, வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்!” என்றேன். `அது பாபம் இல்லை?” என்ற் அவர் கேட்க, “ஆயுள் பூராவும் கலக்கத்திலேயே கழிக்கப் போகிறீர்களா?” என்று பதில் கேள்வி கேட்டேன். இப்போது அவர் ஒரு சின்ன வீடு வைத்திருப்பதாகக் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.