அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (30)

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! மூஸியோ டி செரா, மட்ரிட், ஸ்பெயின்

சுபாஷிணி ட்ரெம்மல்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட்டில் அருங்காட்சியகங்களுக்குக் குறைவில்லை. முன்னர் மட்ரிட் நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு பதிவில் சற்றே விரிவாகவும் விளக்கமாகவும் பொதுவான அறிமுகமாக மட்ரிட் நகர அருங்காட்சியகங்கள் பற்றிய சில தகவல்களை வழங்கியிருந்தேன். இந்தப் பதிவில் மட்ரிட் நகரில் உள்ள மற்றொரு அருங்காட்சியகத்திற்கு வாசகர்களான உங்களை அழைத்துச் செல்கின்றேன்.

இன்று நாம் செல்லவிருப்பது மட்ரின் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மூஸியோ டி ஸெரா (Museo de Cera). வேக்ஸ் (மெழுகு) மூஸியம் என்றால் முதலில் நம் மணக்கண்னில் தோன்றுவது லண்டன் மாநகரில் இருக்கும் மேடம் தூஸோ வேக்ஸ் அருங்காட்சியகம் தான். ஆனால் லண்டனில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் மெழுகினால் தயாரிக்கப்படும் உருவச் சிலைகள் இருக்கும் அருங்காட்சியகங்கள் பெருகி விட்டன. ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரிலும் ஒரு மெழுகுச் சிலை அருங்காட்சியகம் இருக்கின்றது. இதே போல ஒன்று தான் மட்ரிட் நகரில் இருக்கும் இந்த மூஸியோ டி ஸெரா.

mc1
அறிஞர் குழுவின் சந்திப்பு ​(ஜூலை 2013)

ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட மெழுகு உருவச்சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஸ்பெயின் முழுமைக்குமுள்ள இவ்வகை அருங்காட்சியகங்களில் அதிகம் மெழுகு உருவச் சிலைகள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இது மட்டும் தான். நகரின் மத்தியிலேயே இருப்பதால் மெட்ரோ ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே நேராக அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து விடலாம்.

கட்டிட அமைப்பில் இந்த அருங்காட்சியகத்தை இரண்டு தளங்களாகப் பிரித்து அமைத்திருகின்றனர். முதலில் கட்டணம் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு வெளிவரும் போது நம்மை அழைத்துச் சென்று வழிகாட்ட சில ஊழியர்கள் இருக்கின்றனர். அருங்காட்சியகப் பகுதி மூன்று தனித்தனி பகுதிகளாக இருப்பதால் இந்த ஊழியர்களின் துணையோடு ஒவ்வொரு பகுதிக்கும் செல்வது சிறப்பு.
அச்சமூட்டும் ஒரு ரயில் பயணம், வானவெளிப்பயண சிமியூலேட்டர், அதன் பின்னர் மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகம் என்ற வகையில் மூன்று தனிப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றது இந்த அருங்காட்சியகம்.

நான் சென்ற போது முதலில் அச்சமூட்டும் ரயில் பயணம் உள்ள பகுதிக்குச் சென்று ரயிலில் பயணித்து குகைகளுக்குள் பயணம் செய்து காட்டு மிருகங்கள், பேய் பிசாசுகளின் உருவங்கள் போல செய்யப்பட்டிருந்த சிலைகளைப் பார்த்து ரசித்து முடித்து விட்டு பின்னர் வானவெளிப் பயண சிமியூலேட்டர் பயணம் மேற்கொண்டு இறுதியாக அருங்காட்சியகப் பகுதிக்கு வந்தேன்.

mc2

க்ளியோபாட்ரா (ஜூலை 2013)

ரயில் பயணத்தில் ஏனைய பார்வையாளர்களுடன் பயணிக்கும் போது குழந்தைகள் அச்சத்துடனும் குதூகலத்துடனும் கூச்சலிட்டு சத்தம் போட்டு சிரித்து மகிழும் போது நாமும் அந்தக் குழந்தைகளோடு குழந்தைகளாகி அவர்களைப் போல குதூகலித்து மகிழலாம். அதே போல வானவெளி பயண சிமியூலேட்டர் வாகனத்தில் உட்கார்ந்து அந்த சிமியூலேட்டர் நம்மை அழைத்துச் செல்லும் போது உண்மையில் நிலத்தில் தான் ஒரு வாகனத்திற்குள் அமர்ந்து இருக்கின்றோம் என்பதை மறந்து வானத்தில் பறப்பது போலவும், பல வின்வெளிக் கப்பல்கள் நம்மை தாக்க வருவது போல வர அங்கிருந்து தப்பித்து செல்ல நாம் முயற்சி எடுப்பது போலவும் மனம் ஒன்றித்துப் போய் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம். 15 நிமிடம் நீடிக்கும் இந்தப் பயணம் முடிந்து வெளியே வந்தால் .. ஆஹா.. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்று சொல்லி பெருமூச்சு விட்டு மகிழும் நிலைமையை உணர்வோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி .. அருங்காட்சியகம் பார்க்கத்தான் வந்திருக்கின்றோம். வானத்தில் வின்வெளிக் கப்பல் பயணம் மேற்கொள்ள அல்ல, என்பதை நம் மனம் நமக்கு ஞாபகப் படுத்தும் போது சிரித்துக் கொண்டே அடுத்தப் பகுதிக்குச் செல்வது தான் நிகழும்.

மெழுகுச் சிலை அருங்காட்சியகப் பகுதி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே முதலில் நுழையும் போது நம்மை வரவேற்பவை எகிப்திய பண்டைய நாகரிகத்தை விவரிக்கும் காட்சிகளே. இங்கே க்ளியோபாட்ரா, ஜூலியஸ் சீஸர், மார்க் அண்டனி உருவச் சிலைகள் தத்ரூபமாக இவர்கள் நம் கண் முன்னே இருந்து காட்சியளிப்பது போன்று அமைத்திருக்கின்றனர். அதனை அடுத்ததாக அரேபிய வரலாறு சொல்லும் பகுதி, அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை காட்சிப்படுத்திக் காட்டும் மெழுகுச் சிலைகள், அதன் கருப்பொருளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

mc3

​ஸ்பியின் அரச குடும்பம் (ஜூலை 2013)

இந்த வரிசையில் நம் கண்களையும் கருத்தையும் கவரும் ஒரு பகுதி ஸ்பெயின் அரச குடும்பத்தினர் இருக்கும் ஒரு பகுதி. மன்னர் முதலாம் ஹுவான் கார்லோஸ், அரசியார் ஸோஃபியா, இளவரசர், இளவரசியார் – இவர்கள் நால்வருமே நம் கண் முன்னே புன்னகைப் பூத்த வண்ணம் எழிலாக நின்ற வண்ணம் நம்மை பார்த்தவாறு இருப்பது மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கின்றது.

mc4

உலகத் தலைவர்கள்அது உருவச் சிலைகள் (ஜூலை 2013)

மற்றொரு பகுதியில் உலகத் தலைவர்கள் சிலரது சிலைகள் பல ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன, ஜெர்மனியின் தற்போதைய சான்ஸலர் திருமதி.மெர்க்கல், மஹாத்மா காந்தி, மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த ப்ரிட்ட்ஷ் இளவரசியார் டயானா, யாசீர் அராஃபாட், தெரேசா அன்னையார் ஆகியோரது உருவச் சிலைகளை உதாரணமாக்ச் சொல்லலாம்.

மேலும் இங்குள்ள ஏனைய உருவச் சிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் காண்போமே!

தொடரும்….

சுபா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *