பாத யாத்திரை!
-சேசாத்ரி பாஸ்கர்
இந்த வகை ஓட்டத்தை நான் ரசிப்பேன்
ஒரே சீராய் ஒரே கோட்டில் நேர்படும் நடை!
அங்கங்கே நின்று ஒரு சிறு முத்தம்!
பின் அதனதன் ஒவ்வோர் வழி
கை மேல் நடந்தால் உடல் கூசும்!
ஊதிவிட்டால் காணாமற் போகும்
என்றும் தரும் உற்சாகச் சிந்தனை
யார் அதன் தாய்?
யார் அதன் தந்தை?
நடப்பதே வாழ்வா?
நடந்தே மரணமா?
எங்கே துயிலும் அது?
அந்தக் குறு கண்ணில் வருமா கண்ணீர்?
யாரிட்டார் அதன் பெயரைப்
பிள்ளையார் எறும்பு என்று?