சு. ரவி

 

 

வானமென்னும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம்
தேனமுதைத் தேவரெல்லாம் பூட்டிவைக்கும் மாடம்
அலைகள் எறியுமொரு
கடலை அணையவரும்
நிலவு இதனொளியில்
உலவி உலவி மனச்
சாந்திபெறச் சற்றினிது நான் நினைத்தபோது
ஏந்திவந்தாள் எழிலதனை இயற்கைஎனும் மாது!

AD8DF21D-65E8-47E1-8A06-25685358C1C1

தென்றலிங்கு வந்து என்னைத் தொட்டுத் தொட்டுச் செல்லும்
மென்மைசுகம் சேர்ந்தகதை மெல்ல வந்து சொல்லும்
சலல சலலவென
சலன உலகமிதில்
அலையும் இதனொலியில்
எனது மன மகிழ
நானுலவி நல்லதமிழ் பாடிவரும் போது
தான்வருவாள் தளிர் நடையில் இயற்கைஎனும் மாது!

36DA191F-B8BF-423A-84FF-52AE27F61220

நீலப்பட்டில் ஆடைகட்டி நீண்டிருக்கும் வானம்
கோலப் போட்டு வைத்தாங்கே செய்திருக்கும் மோனம்
கரிய பெரிய முகில்
உரச உரச இடி
சரிய வருமழையில்
நனைய நனைய ஒரு
மின்னல்வெட்டில் உள்ளம் தந்து நான் மறந்தேன் என்னை- அங்கே
புன்னகைத்துப் புதுச் சிரிப்பு பூத்தாள் எங்கள் அன்னை!

DDB517DC-692B-46BC-8FB4-F14E7A67399D (1)

காட்டாற்று வெள்ளமெங்கும் கரை புரண்டு ஓடும்
பாட்டாக என்மனத்தில் பரவசங்கள் சூழும்
உடலில் உறையுமுயிர்
அதனில் இயையும் இறை
அடியை மனதிலெணி
அருவி உருளுமொரு
தன்னந்தனி வழியாக நான் நடந்தேன் என்னை
இன்னருளால் காத்திடுவாள் இயற்கைஎனும் அன்னை!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இயற்கை அன்னை!

  1. சந்தம் பொங்கும் சிந்து நடை. சிந்தை கவர்ந்து துள்ளும் இசை. அருமை சு.ர. வின்கவிதை.
    “தேனமுதைத் தேவரெல்லாம் பூட்டிவைக்கும் மாடம்” என்ற வரி மிகப் பொருத்தம். அசுரர்கள் கவர்ந்திடாத வண்ணம் அமுதை ஒளித்து வைக்க அல்லாடும் தேவர்கள் அதைப் பூட்டி வைக்கும் அழகு நிலா மாடமே அமுதக் குடமன்றோ! அமுதக் குடத்தில் அமுதைப் பதுக்கி வைக்கும் தேவர்கள் என்ற நயத்தை வியக்கத்தானே வேண்டும்! அதுவும் அதை அமுதத் தமிழில் அமுதக் கவியாய் சு.ரா அள்ளித் தரும் போது! மேலும் விவரிக்க வார்த்தை ஏது? கே.ரவி

  2. அண்ணா – நல்ல சந்தம் காரணம் உமது தமிழ் பந்தம் .உங்களின் உள்ளக்காட்டில் உலவும் விலங்கின் பதிவிட வேண்டுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.