-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
பகலவன் வந்துநின்றால்
பாரினுக்கு விடுதலை
பசித்தவர்க்கு உணவுஅளித்தால்
பசிக்கெலாம் விடுதலை
உழைத்துமே நிற்பார்க்குஎலாம் 
ஓய்வுநல் விடுதலை
ஒன்றுமே செய்யாவிட்டால்
உமக்குமேன் விடுதலை
கார்முகில் கண்ணன்பார்க்கக்
கர்ணனுக்கு விடுதலை
போர்முனை வந்தகீதை
புவிக்கெலாம் விடுதலை
தாயொடு பிள்ளைசேரின்
தனிமைக்கே விடுதலை
வாய்தனைக் காப்போமாயின்
வம்புக்கே விடுதலை
கண்டதைப் பார்க்காவிட்டால்
கண்ணுக்கு விடுதலை
காதினைக் காத்துவிட்டால்
கயமைக்கே விடுதலை
சிண்டுகள் முடிக்காவிட்டால்
சிக்கலுக்கே விடுதலை
சின்னத்தனம் காப்போமாயின்
சிதைந்திடுமே விடுதலை
ஸ்ரீராமன் வந்துநின்றான்
சீதைக்கு விடுதலை
கார்நிறத்தான் கால்பட்டுக்
கல்லுக்கே விடுதலை
பேரறிவு வளரவிட்டால்
பேதமைக்கே விடுதலை
பெம்மானின் கழல்பற்றி
பெறுவோம்நல் விடுதலை

Leave a Reply