Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(119)

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

தினமும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான திட்டங்களும் வழிமுறைகளில் பலவழிகளில் சலிப்படைய வைப்பது இயற்கை.

வீட்டுக்கு வீடு வாசற்படி இருப்பது போல மனிதராய்ப் பிறந்த எம் அனைவருக்கும் ஏதாவது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டேயிருக்கின்றன.

வரும் பிரச்சனைகளின் வடிவங்களும் அவற்றின் தாக்கங்களும் வேண்டுமானல் வேறுபடலாம் ஆனால் பிரச்சனைகள் எதுவும் இல்லாதோர் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று.

என்னடா இது ? ஆரம்பிக்கும் போதே பிரச்சனை, பிரச்சனை என்று கொண்டு வருகிறானே ! என்று சிறிது கலக்கமடைவது புரிகிறது. விசாரம் வேண்டாம் விடயத்திற்கு வருகிறேன்.

பிரச்சனைகளைப் பிரஸ்தாபித்து நான் ஆரம்பித்த காரணம் இப்பிரச்சனைகளிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத் தேவையை வலியுறுத்த வேண்டியதாலேயே !

ஆமாம் கொஞ்ச நேரம் எம்மை மறந்து நாம் இருக்க வேண்டி தொலைக்காட்சி அல்லது சினிமா என்று எமது மனதை அவற்றில் லயிக்க விடுவது அனைவருக்கும் பொதுவான செயலாகிறது.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அன்றி சினிமாக்களிலோ நாம் எம்மை மறந்து சிரிப்பது அதிலே இடம்பெறும் நடைச்சுவை நிகழ்ச்சிகளிலோ அன்றி நகைச்சுவைக் காட்சிகளிலோ எமது மனம் எம்மையறியாமலே லயிப்பதினாலேயாகும்.

எந்த அளவிற்கு இந்நகைச்சுவைக்காட்சிகளில் எமது மனம் லயிக்கிறது என்பது அக்காட்சியில் நடிப்பவர்ளின் தத்ரூபமான நடிப்பைப் பொறுத்தே இருக்கும்.

அப்படியாக எம்மை லயிக்க வைக்கும்படியான நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சரி எதற்காக இத்தனை விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ?

நேற்று அமெரிக்க திரையுலகமான ஹாலிவுட்டில் நடந்த ஒரு துயரகரமான நிகழ்வே எனது மனதில் இச்சிந்தனைக் குதிரையைத் தட்டி விட்டது.

எமது துயரங்களை மறந்து எம்மைச் சிரிக்க வைப்பதற்காக பலமணிநேரம் மேடையிலோ அன்றித் தொலைக்காட்சியிலோ அன்றி திரையரங்குகளிலோ பாத்திரமேற்று பணிபுரியும் அந்நடிகர்கள் தமது பிரத்தியேக வாழ்வினில் கவலைகளை மறந்து வாழ்கிறார்களா ?

ஹாலிவூட்டின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான “ராபின் வில்லியம்ஸ்” ( Robin Williams ) அவர்களை அறியாதவர்கள் மிகச்சிலரே.

cold-and-dieகடந்த திங்கட்கிழை தனது வீட்டில் தூக்குக் கயிற்றை மாட்டி தனது உயிரைத் தானே எடுத்துக் கொண்டார் எனும் செய்தியை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.

1951ம் ஆண்டு சிக்காகோ நகரில் “ராபர்ட் விட்ஸெரால்ட் வில்லியம்ஸ்” என்பவருக்கும் “லாரின் மக்லாரின்” என்பவருக்கும் மகனாக ராபின் மக்லாரின் வில்லியம்ஸ் பிறந்தார்.

இளவயதிலே தனது தந்தையிடம் மிகுந்த பயம் கொண்டவராகவே வளர்ந்த இவரின் தாயாரும் பணிபுரிந்தமையால் தாதிமார்களிடமே வளர்ந்தவர் இவர்.

பின் ஒருமுறை குறிப்பிடுகையில் “அன்புக்காக ஏங்கியவன் நான் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியில் சக மாணவர்களால் “அதி சிறந்த நகைச்சுவையாளர்” என்று கெளரவிக்கப்பட்ட அதே நேரம் “வாழ்க்கையில் வெற்றியடையும் வாய்ப்பே இல்லாதவர் ” எனும் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரசித்தி பெற்றது அந்நாளில் அமெரிக்கத் தொலைக்கட்ச்சியில் பிரபலமான நகைச்சுவைத் தொடரான “ஹாப்பி டேஸ்” ( Happy days ) எனும் தொடரில் பாத்திரமேற்று நடித்த பின்னரே.

மூன்றுமுறை மணமுடித்த இவருக்கு முதலாவது மனைவியின் மூலம் ஒரு மகனும், இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகள் , மகன் என இரு குழ்ந்தைகளும் பிறந்தனர்.

இவர் நதித்த படங்களில் “Good morning vietnam “, “ Mrs. Doubtfire”, “The dead poets society “ என்பன மிகவும் பிரசித்தி பெற்ற திரைப்படங்களாகும்.

இவ்வாறு மேடையிலும், திரையிலும் மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் போதை வஸ்துகள் மது என்பனவற்றிற்கு அடிமையாக மாறினார். தனது இந்த பழக்கங்களை இல்லாதொழிப்பதற்காக பலமுறை இதற்கான சிகிச்சை நிலையங்களில் தானாகவே போய்ச் சரணடைந்துள்ளார்.

இவர் சமீபகாலத்தில் பல பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியிருந்தார் என்று ஒரு செய்தி பத்திரிகைகளில் அடிபடுகிறது.

இவர் சமீபத்தில் பலத்த மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது..

தன்னுடைய வாழ்வுநிலை கொடுத்த மனபாதிப்பைத் தாங்கமுடியாமல் தனது உயிரைத் தானே மாய்த்துக் கொண்டார்.

இவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா தொடங்கி பல நாட்டைச் சேர்ந்த அரசியல், கலைத்துறைப் பிரமுகர்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

அடுத்தவரின் துயரைப் போக்க சிரிப்பு அதிர்வலைகளை உருவாக்கும் இவரைப் போன்றவர்களின் சொந்தவாழ்க்கை கொடுக்கும் மன அழுத்தத்தைப் பற்றி  இவர்களது நகைச்சுவைகளை ரசிக்கும் நாம் எப்போது கூட எண்ணியிருந்திருக்க மாட்டோம்.

கவியரசரின்,

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான்
சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
எனும் பாடலின் அர்த்தம் இவர்களை மையப்படுத்தி எழுந்ததோ ?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க