இசைக்கவி ரமணன்

உனக்கே உனக்காக   (23)

என்ன செய்வது?

{கேட்டு மகிழ}

ht1971

உன்

நிழலைக்கூடத் தழுவிடாமல் விலகி நிற்பதா? ஓர்

இழையும்கூட விலகிடாமல் தழுவிநிற்பதா? என்னைக்

கழுவிலேற்றும் கண்களைநான் கண்டு வாழ்வதா? அதில்

விழுந்து கலந்து புரண்டு விளிம்பில் கரைந்து போவதா?

 

வாழ்க்கை என்னும் யாழ்நரம்பில் ராகம் மாறலாம், ஒரு

வசந்தகால மாலைகூட சோகமாகலாம்

மீட்டும்விரல்கள் மீட்டியபின் மீள முடியுமா? ஒரு

மின்னல்சன்னல் ஏறிவந்தால் தாள முடியுமா?

 

மண்ணில் போட்ட கோலம் சற்று மாறுவதுண்மை, ஒரு

மழைவிழுந்தால் மண்ணிலெங்கோ மறைவதும் உண்மை

எண்ணி வைத்த புள்ளிகளா என்ன சொல்வது? அவை

இஷ்டம்போல இணையும்போது என்ன செய்வது?

 

வானில் புள்ளிவைத்துப் போன விரல்கள் என்னவோ? அவை

வைத்தபடி வைத்துச் சென்ற விவரம் என்னவோ?

மோனவிழிகள் காண்பதெல்லாம் கோலமாகுமா? அதில்

மூண்டுவரும் கனவையெல்லாம் வானம் ஏற்குமா?

 

அந்தப் புள்ளி இந்தப் புள்ளி இணைவதும் இல்லை, யுகம்

ஆயிரங்கள் போனாலும் பிரிவதும் இல்லை

சொந்தங்கள் சொல்லிச்சொல்லிப் புரிவதும் இல்லை, ஏதும்

சொல்லாமல் இருப்பதாலே குறைவதும் இல்லை

 

அன்பு என்றும் தியாகமின்றி வாழ முடியுமா? தன்னை

அர்ப்பணிக்காமல் திரியும் தீபமாகுமா?

ஒன்றிலொன்று உயிரைப்பெய்து ஒன்றுபட்டபின், அங்கு

உறவுமேது பிரிவுமேது ஒன்றுமில்லையே!

 

புள்ளியென்றும் கோலமென்றும் விரல்கள் எண்ணுமா? இரவுப்

பொழுதில் மறைவில் கண்பனிக்கும் கதையை அறியுமா?

வெள்ளிமுளைக்க ஏதுமில்லை வெட்ட வெளியிலே, மாலை

விழுந்தபின்பு மீதமில்லை நீல வானிலே

 

இரவும் பகலும் ஒன்று நீங்க ஒன்று வாழலாம், அந்தி

இடையில் மட்டும் ஒன்றையொன்று நின்று காணலாம்

ஒருமுறைதான் உயிரில்தோன்றும் உறவு என்பது, அதை

ஓயாமல் உறுதிசெய்யும் பிரிவு என்பது……….

 

படத்திற்கு நன்றி : இளையராஜா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *