வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

     -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      நீறு கொண்ட நெற்றியுடன்
      நிமிர்ந்த நெடுந் தோற்றத்துடன்           vaariyar
     ஆறு படை முருகனையே
     அனுதினமும் தொழு தெழுவார்!

     சேறு கொண்ட மனமுடையோர்
     நீறணிந்து நின்று விடின்
     மாறு பட்ட குணமெல்லாம்
     மாண்டுவிடும் எனச் சொன்னார்!

     தாறுமாறாய்ச் சண்டை செய்த
     சராசரி மக்கள் எல்லாம்
     வாரியாரின் உரை கேட்டு
     வாழ்வை வளம் ஆக்கினரே!

     வேதத்தின் விழுப் பொருளை
     விளங்கும்படிச் சொல்லி அவர்
     போதனைகள் பல ஆற்றி
     பொறுப்புடனே செயல் பட்டார்!

      புராணக் கதைகள் எல்லாம்
      புளுகு எனச் சொன்னவர்க்குப்
      புத்துணர்வு அவை என்று
      புரியும்படி அவர் சொன்னார்!

     தமிழ் கொண்டு சமயத்தைத்
     தரணியெங்கும் பரவச் செய்தார்
     தனி ஒருவராய் இருந்து
     தலையாய தொண்டு செய்தார்!

     வாரி எனும் பெயருக்கு
     வாரிவாரித் தமிழ் கொடுத்தார்
     வற்றாமல் அவர் நாவில்
     வளர்ந்ததே தமிழ் நாளும்!

     நாத்திகர் மத்தியிலும் நல்ல தமிழ் பேசினார்
    ஆத்திகர் மத்தியிலும் அழகு தமிழ் பேசினார்
    அவர் தமிழைக் கேட்டவர்கள் அவர்வசமே யானார்கள்
    ஆண்டவனின் அருளாலே அவர் தமிழுமுயர்வாச்சே!

     புராணக் கருத்தை எல்லாம் புதுவிதமாய்ச் சொன்னாரே
     புதுமைக்குப் புதுமையாய் பழைமையைச் சொன்னாரே
     தெரு எங்கும் திருநாமம் செப்பிநின்ற வாரியார்
     சிவநாமம் பரவி நிற்கத் தேசமெங்கும் சென்றாரே!

     பேசுவார் எழுதமாட்டார் பிறவேலை செய்து நிற்பார்
     கூசும்படி நின்றவர்கள் குறைகளுடன் நிற்பார்கள்
     வாரியார் சுவாமிகளோ வம்பெதுக்கும் போகாமல்
     பேசினார் எழுதினார் பெரும்பணிகள் ஆற்றிநின்றார்!

     வாரியார் இடத்துக்கு வந்திடுவார் யாருமிலை
     வாரியார் செய்தபணி வையத்தில் ஈடுஇலை
     வாரியார் வாழ்வெமக்கு நல்லவழி சமைத்திருக்கு
     வாரியார் சுவாமிகளை வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

1 thought on “வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

 1. பிறவிகளின் பிணிதீர்க்க அறுமுகனைச் சரணடைவோம் என்றோதி
  பிறந்திட்ட பிறவியதன் முழுவதுமே தொழுதிட்ட வாரியார் சுவாமிகளை
  நினைந்திடும் நேரத்திலும் நெஞ்சம் கைதொழச் சொல்கிறதே…. பக்திப்
  பழமென்றால் சடுதியில் நினைவினில் நிற்கும் மெய்ஞானி…
  தமிழ் அமுதம் பெற வேண்டின் இவர்தம் சபையறிந்து செல்வருண்டு..
  எதிர்மறை கருத்துக்கள் கொண்டாரும் ஏற்றிட்ட தமிழ்ஞானி!!
  மயில்மேல் முருகன் உலா வரும் அழகை இவரிடம் கேட்டால்
  மனமே உருகிவிடும்.. மால் மருகன் திருப்புகழ் பாடிவிடும்…
  நிறைகுடம் போல்நின்று குறைவிலா அருள்மொழிதரும்
  திருமுருக கிருபானந்த வாரியார் புகழ் தரணியில் நிலைபெறும்!!

  அன்னவர்தாம் அவதரித்தத் திருநாளில் …
  ஆஸ்திரேலியா விலிருந்து புகழாரம் சூட்டிவிட்ட
  ஜெயராம் உங்களை விண்ணிலிருந்து வாரியார்
  வாழ்த்துவார் என்றே உளம்நிறைகிறேன்!!

  அன்புடன்..
  காவிரிமைந்தன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க