— விசாலம்.

 

 

titwala ganesh2
சாதாரணமாகக் காதலர்கள் சந்திக்கும் இடம் ஒரு பார்க்கோ, பீச்சோ அல்லது  மாலோ  என்று இருக்க,  ஒரு வித்தியாசமான  இடத்தில் சந்திப்பை  மும்பையில் நான் பல தடவைகள் கண்டிருக்கிறேன்.

ஒரு பிள்ளையார் ஆலயம் … எப்போதும் அங்கு  சில இள வட்டங்களின் கூட்டம்.  ஆண்கள்,  பெண்களின் கூட்டம். அதுவும் எல்லோரும் காலேஜ் போகும்  நேரம் புஸ்தகமும் கையுமாய்   காலையிலும், மாலையிலும்  தங்கள்  காதலனுடன்  இந்தக்கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள்.  கோயிலில் இருந்து அருள் புரிபவர் யாரென்றால்  அட ! நம்ம பிள்ளையார்தான். இதிலிருந்தே தெரிகிறது காதலுக்கும் அந்தப் பிள்ளையாருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று, நானும் அங்கு போயிருந்தேன். அட, எனக்கும் ஏதாவது காதலா என்ன? இந்த வயதில் காதல் கேட்கிறதா என்றக் குரல் கேட்கிறது. அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் மும்பைவாசி. பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை ஆணி அடித்தாற்போல் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததில்லை. என் வீடும் இந்தப்பிள்ளையார் கோயில் அருகில் தான் இருந்தது. ஆகையால் எப்போது மும்பய்க்கு  விஜயம் செய்தாலும் இந்த கணபதி பப்பா  என்னை அழைத்துவிடுவார். அவரைப்பார்க்காமல் இருக்க மாட்டேன். இவருக்கும் காதலுக்கும் ஒரு புராண சம்பந்தம் இருப்பதைப் பற்றிச் செவி வழியாகக்  கேட்ட செய்தி இது. சகுந்தலையும் துஷ்யந்தனும் தங்கள்  திருமணத்தை இந்தப் பிள்ளையார் சன்னதியில் தான் செய்து கொண்டனராம்.  கண்வ முனிவர் ஆசிரமத்தில் முதலில் அவர்கள் காந்தர்வ விவாகம் செய்து கொண்டார்கள்.  ஆனால் துர்வாசரின் சாபத்தினால் அரசன் துஷ்யந்தன்  சகுந்தலையை  மறந்து போனான். சகுந்தலையும் இந்தக்கணபதியை சதா சர்வகாலமும்  நினைந்து நினைந்து உருகி வேண்டிக்கொள்வாள்.

“அப்பா தும்பிக்கை கணபதியே, என் கணவர் துஷ்யந்தன்  என்னை  காந்தர்வ்  மணம்  புரிந்துக்கொண்ட பின்  தனது ராஜ்ஜியத்திற்குப் போய் உடனே தகுந்த மரியாதைகளுடன்  என்னை அழைத்துப்போவதாகச்சொல்லிவிட்டு  போனாரே. ஆனால் இன்னும் வரவில்லையே! அவரை எப்படியாவது என்னை வந்து அழைத்துப்போக அருள் செய் கணேசா.” என்று வேண்டிக்கொள்வாள்.

இது ஒரு நாள், இரண்டு நாள் செய்த வேண்டுதல் இல்லை. தினமும் மனமுருகி கண்கள் கலங்கி நின்ற வேண்டுதல். ‘சோக வினாச காரணம்’ என்றும்  ‘விக்ன ஹரண வினாயகா’ என்றும் பெயர் பெற்ற அந்தக் கருணாமூர்த்தி இவளுடைய வேண்டுகோளை தனது பெரிய முறம் போன்ற காதில் போட்டுக்கொண்டார்.  சகுந்தலையை அவளது கணவருடன் சேர்க்க வேலைகள் செய்ய ஆரம்பித்தார்.  சகுந்தலையை தான் மணந்துக்கொண்ட  செயலை  முற்றிலும் மறந்திருந்த துஷ்யந்தனுக்கு   இந்தக்கணபதி   பழைய ஞாபகத்தை வரவழைக்க   காரணமாயிருந்தார்.  பின் துஷ்யந்தன் தன் தவறுக்கு வருந்தி சகுந்தலையைப்பார்க்க ஓடோடி வந்தார். சகுந்தலையின் மகன் பரத் இருக்க    சகுந்தலையைத் திரும்ப இந்தப்பிள்ளையார் கோயிலில்   மணந்தார்  என்று இந்த ஆலயத்தில் கூறப்படுகிறது. அதனால் இவர் காதலுக்கு வெற்றி தரும் கணபதி ஆனார்.

titwala ganesh1மும்பையில்  தாதர் ஸ்டேஷன் அருகில்   இருக்கும்  இந்த ‘டிட்வாலா கணபதி’  ஒரு  வரப்பிரசாதி, கேட்டதை வழங்குவார். நான்கு கைகள் கொண்டவர்.  மேல் இரண்டிலும் பாசமும்   அங்குசமும் கீழ் இரண்டில் ஜபமாலையும்  மோதகமும்  கொண்டுள்ளார்,  பாம்பு பூணலாகிறது. கண்கள் அப்படியே மின்னி பளபளக்கின்றன.  ஏன் என்றால் கண்களில் வைரக்கற்கள். பதிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல் நாபியிலும் வைரக்கற்கள், பார்க்கப் பார்க்க பரவசம்தான்,  நம்முடன் பேசுவது போலவே  இருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் பீடம் நாகபந்தனத்திலான பீடம்.  அங்கு எல்லா பூஜை பாத்திரங்களும் தங்கமும் வெள்ளியுமாக  காணமுடிகிறது.

மும்பையில்   பலர் வீட்டில் இந்த  டிட்வாலா  கணபதியின் படம் இருக்கும். நிஜ  குடுமியுடன்  இருக்கும் தேங்காய் ஓட்டின்  நடுவில் இந்த  கணபதியின் சிலையை வைத்து   வியாபாரம் செய்கின்றனர்.

அதற்கு நல்ல டிமேண்ட்! என்னிடம் ஒன்று அதுபோல் இருக்கிறது. செவ்வாய்கிழமை அன்று வரும் அங்காரக சதுர்த்திக்கு இங்கு ஒரு கியூ வரிசை நிற்கும் பாருங்கள்!!! திருப்பதியை ஞாபகப்படுத்திவிடும்.

தவிர கணேச சதுர்த்தி அன்று இங்கு பெரிய விழாவே நடக்கும். கூட்டம் தாங்காது. எங்கும் டெலிவிஷன் அமைக்கப்பட்டு மக்களுக்காக அங்கு நடக்கும் அபிஷேகம் ஆராதனைகள் காட்டப்படும். மக்கள்  இங்கும் மட்டைத்தேங்காய் வாங்கி தங்கள் கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு பூஜாரியிடம் கொடுக்க, அவர் அதை கணபதி பாதங்களில் வைத்து  அதை அவர்களிடமே திருப்பிக்கொடுப்பார். அதை ஒரு இடத்தில் கட்டிவைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று அங்குப்போய் பூஜை செய்து வரவேண்டும். இது போல் ஐந்து செவ்வாய் செய்ய வேண்டும். ஐந்து வாரம் முடிவதற்குள் நினைத்தது நடந்து விடுவதை நான் பலரிடம் பார்த்திருக்கிறேன்.

வினாயகருக்கு  வழிபட 21 பச்சிலைகள் உண்டு எனப் புஷ்ப சாஸ்திரம்  சொல்லுகிறது……..

அருகு, நொச்சி, மாசி, கையாந்தரை, வில்வம், ஊமத்தை, கத்திரி, நாயுருவி, தேவதாரு, வன்னி, நெல்லி, மருவு, அலரி, சிறுசெண்பகம், எருக்கு, மருதம், விஷ்ணுக்ரந்தை, மாவிலை, பாதிரி, செந்தாழை, காட்டகத்தி.

கணேச சதுர்த்திக்கு என் நல்வாழ்த்துகள்… ஒரு பாடல்  அவர்மேல் பாடி அருளை வேண்டுகிறேன்…

ராகம்: கல்யாணி   
தாளம்: ஆதி

பல்லவி
ஆதி முதல்வனே ஓம்கார ரூபனே
அனைத்து வினைகளும் தீர்ப்பவனே
{ஆதி முதல்வனே}

அநுபல்லவி:
வேழ முகத்தோனே ஞானம் தருபவனே
சிவனின் மைந்தனே அழகனின் சோதரனே
உந்தன் நாமம்  சொல்லச்சொல்ல
கிடைக்கும்  ஒரு   பரமானந்தம்
{ஆதி முதல்வனே}

சரணம்:
தாய் தந்தையே உலகம் என்றாய்
தரமான மாம்பழம்  வெற்றி பெற்றாய்
பற்பல தலங்ளில் பற்பல வடிவங்கள்
பற்பல பெயருடன் பற்பல கதைகள்
அருகம்புல்லில் குளிர்ப்பவனே
அனைத்து பூஜைக்கும் தலைவனே
மூஷிக வாஹனனே  மோதகப்பிரியனே
மதி எங்குச் சென்றாலும் மனம் உன்னை நாட
அருள் புரிவாய் பார்வதி பாலகனே
{ஆதி முதல்வனே}

படம் உதவிக்கு நன்றி:
https://abhishekkisla.wordpress.com/tag/titwala-ganesh-mandir/
http://blessingsonthenet.com/indian-temple/photo-gallery/261/titwala-temple-photos

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *