இந்திய ஆண்கள்
நாகேஸ்வரி அண்ணாமலை
சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தி உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ள கணவன்மார்கள் எத்தனை மணி நேரம் மனைவிக்கு வீட்டுவேலைகளில் உதவுகிறார்கள் என்ற புள்ளிவிபரத்தைக் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க ஆண்கள்தான் அதிக நேரம் (ஒரு நாளைக்கு இரண்டு மணி நாற்பத்தியொரு நிமிடங்கள்) மனைவிமார்களுக்கு வீட்டுவேலைகளில் உதவிசெய்கிறார்களாம். ‘இந்திய ஆண்களின் இடம் என்ன என்று கேட்கிறீர்களா?’ அது எங்கோ இருக்கிறது’ என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்தப் பத்திரிக்கை. இந்திய ஆண்கள் 19 நிமிடங்கள்தான் மனைவிமார்களுக்கு உதவுகிறார்களாம்.
இந்திய ஆண்கள் ஏன் மனைவிமார்களுக்கு வீட்டுவேலைகளில் உதவுவதில்லை என்று பார்ப்போம். ஜாதிகளில் உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று இருப்பதுபோல் ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டையும் நாம் பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தின் கொள்கையாக ஏற்றுக்கொண்டுவிட்டோம். உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி மற்ற ஜாதிகள் தங்களுக்குச் சமம் என்று இன்றும் ஒப்புக்கொள்வதில்லையோ அதுபோல் ஆண்களும் பெண்கள் தங்களுக்குச் சமமானவர்கள் என்று கருதுவதில்லை. ஒரு முறை பள்ளியில் எங்களுக்கு இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவருடைய மனைவி எங்களுக்கு அருந்துவதற்குப் பால் கொண்டுவந்து கொடுத்தார். நாங்கள் அதைக் குடித்து முடித்த பின் அந்தத் தம்ளர்களை உள்ளிருந்து ஒரு கோல் கொண்டுவந்து எங்கள் முன்னாலேயே அந்தக் கோல் மூலம் அவற்றை ஒரு ஓரத்திற்குத் தள்ளினார். நாங்களே அவரைப் போல் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார். இது நடந்தது பதினைந்து வருஷங்களுக்கு முன்னால்தான். என் கணவரின் கீழ் வேலைபார்த்த ஒரு பிராமணர் நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்றபோது அவர் தந்தை இறந்து அவருக்குரிய ஈமச்சடங்குகள் முடிந்திருக்கவில்லையாதலால் எங்களை வீட்டிற்கு வெளியேயே வைத்துப் பேசி அனுப்பிவிட்டார். அவருடைய தந்தை மிகவும் ஆசார அனுஷ்டானங்கள் உடையவராம். அதனால் அவருக்கான ஈமச்சடங்குகள் முடியும்வரை இவர் மடியாக இருக்க வேண்டுமாம். பிராமணரல்லாத எங்களை வீட்டிற்கு உள்ளே விட்டால் அவர் தந்தை சொர்க்கத்திற்குப் போய்ச் சேர மாட்டார் என்று நினைத்துவிட்டார் போலும். இவர்களைப் போன்றவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு மாறப் போவதில்லை.
இந்தியப் பெண்களையும் எல்லாக் காலங்களிலும் ஆண்களைவிடக் குறைந்த நிலையிலேயே வைத்துவந்திருக்கிறது இந்தியச் சமூகம். அதனால் இந்திய ஆண்களின் மனதிலும் தாங்கள் தங்கள் மனைவிமார்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் நன்றாகவே ஊறிப் போயிருக்கிறது. வயலில் வேலைபார்க்கும் குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். ஆனால் வீட்டு வேலைகள் எல்லாம் மனைவிதான் செய்கிறாள். வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த எங்கள் பாட்டனார், தந்தை காலத்தில் மனைவிமார்கள் வெளியே எங்கும் வேலைக்குச் செல்லவில்லை. கணவன்மார்கள்தான் வெளியில் சென்று உழைத்துக் குடும்பத்திற்கு வேண்டிய வருமானத்தை ஈட்டி வந்தார்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளைச் செய்ய நிறைய நேரம் இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பல பெண்கள் வெளியே வேலைக்குப் போகிறார்கள். அவர்களுக்கும் கணவன்மார்கள் எந்த உதவியும் செய்வதில்லை. வேலைக்காரர்கள் என்ற ஒரு இனம் இந்தியாவில் இருக்கிறது. அவர்கள் பெண்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறார்கள். அதற்கு மேல் நவீன சமையல் உபகரணங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன. அவை ஓரளவு பெண்களுக்குக் கைகொடுக்கின்றன. இந்திய ஆண்கள் தங்கள் மனைவிமார்களை தங்கள் வாழ்க்கைத் துணை என்றும் அவர்கள் தங்களுக்குச் சமமானவர்கள் என்றும் ஒரு போதும் நினைப்பதில்லை.
மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போதுகூட கணவன்மார்கள் சமையலறைக்குள் நுழைவதில்லை. ஒரு முறை ஒரு கணவனிடம் அவருடைய மனைவிக்கு அடிக்கடி உடல்நலம் கெடுவதால் மனைவிக்குச் சமையலில் உதவுமாறு நான் கூறினேன். என் அறிவுரைக்குச் செவிமடுத்த அவர் ஒரு நாள் தன் மனைவிக்கு பட்டாணி உரித்துக் கொடுத்திருக்கிறார்! இதைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் (இந்தச் சிறிய கிராமத்தில் யாரும் யார் வீட்டிற்குள்ளும் எப்போதும் செல்வார்கள். ‘பிரைவசி’ எல்லாம் கிடையாது.) ‘இப்படி ஆண்கள் வீட்டுவேலை செய்வதால்தான் மழை பெய்யவில்லை’ என்றானாம்! இதுதான் இந்தியப் பண்பாடு.
நாம் பலவாறாகப் போற்றும் நம் இதிகாசங்களும் காலம் காலமாக பெண்ணுக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதி என்றுதான் வகுத்திருக்கின்றன. கண்ணகியைக் கற்பிற்கு அரசியாகச் சித்தரித்த இளங்கோ அடிகள் கோவலனை கற்புக்கரசனாகச் சித்தரிக்கவில்லையே. கணவனைத் தாசி வீட்டிற்கு நளாயினி கூட்டிச் சென்றாள். எந்த இதிகாசக் கணவனும் மனைவியை அவள் விரும்பியவனிடம் அழைத்துச் சென்றதாகக் கதை இல்லை. இப்படி ஆண்களை உயர்த்திவைத்தே பெண்களைப் பழக்கப்படுத்திவிட்ட இந்திய சமூகத்தில் கணவன்மார்கள் மனைவிமார்களை மதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏன் மனைவிமார்களே கூட கணவன்மார்களிடமிருந்து இதை எதிர்பார்ப்பதில்லை.
அமெரிக்கா போன்ற வளர்ந்துவிட்ட மேலைநாடுகளில் இப்போது நிறையப் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்கு சந்தையில் நிறைய ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் வந்துவிட்டாலும் வீட்டைச் சுத்தப்படுத்துவது, துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளை கணவன், மனைவி இருவரில் ஒருவர் செய்தாக வேண்டும். இந்தியாவில்போல் சொற்ப சம்பளத்தில் வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களால் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது. மேலும் இந்தியாவில் போல் பெண்களைவிட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இந்தச் சமூகங்களில் ஒரு காலத்தில் இருந்ததோ என்னவோ இப்போது இல்லை. எந்தக் கணவனும் தான் தன் மனைவியைவிட உயர்ந்தவன் என்று நினைப்பதில்லை. இந்தியாவில் தன்னைவிடப் பணக்காரக் குடும்பத்துப் பெண்களை மணந்துகொள்ள எந்த ஆணும் தயங்குவதில்லை. ஆனால் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை, அதிகம் படித்திருக்கும் பெண்ணை மணந்துகொள்ள நிறைய ஆண்கள் முன்வருவதில்லை. எங்கே தன்னை மதிக்க மாட்டாளோ என்று பயப்படுவதே இதற்குக் காரணம். மேலைநாடுகளில் இப்படிப் பயப்படுவது இல்லை. சில கணவன்மார்கள் தேவை ஏற்பட்டால் சில வருஷங்களாவது குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, வீட்டை நிர்வகித்துக்கொண்டு இருப்பதை தாழ்வாக நினைப்பதில்லை.
ஒரு முறை ஒரு அமெரிக்கர் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றிருந்தோம். நிறைய சமைத்திருந்தார்கள். விருந்து முடிந்து கிளம்பும்போது ஏதோ வேலையாக நான் சமையலறைக்குள் சென்றபோது சமைக்க உதவிய பாத்திரங்கள், விருந்தினர் உபயோகித்த பாத்திரங்கள் என்று அத்தனை சாமான்கள் சமையலறை முழுவதும் சிதறிக் கிடந்தன. இவற்றை எல்லாம் எப்போது சுத்தப்படுத்துவார்கள் என்று எனக்கே மலைப்பாக இதுந்தது. ‘இவற்றை எல்லாம் இனி நீங்கள் சுத்தப்படுத்த வேண்டுமே’ என்று மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘என் கணவர் எல்லாவற்றையும் முடித்துவிடுவார்’ என்றார். எந்த ஒரு இந்தியக் குடும்பத்திலாவது இப்படி நடக்குமா? இதுதான் இந்தியக் குடும்பங்களுக்கும் அமெரிக்கக் குடும்பங்களுக்கும் உள்ள வித்தியாசம். இதனால்தான் அமெரிக்காவில் கணவன் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ இரண்டு மணி நேரம் நாற்பத்தியோரு நிமிடங்கள் செலவழிக்கிறான். இந்தியாவில் பத்தொன்பது நிமிடங்களே செலவழிக்கிறான்.
இந்திய ஆண்கள் சொகுசுப் பேர்வழிகள்….99.99% பேருமேதான் …
இன்னமும் ஒரு நூற்றாண்டாவது ஆகும் இந்திய ஆண்களின் மனப்பான்மை மாறுவதற்கு. அதுவரை உண்மையிலேயே மனப்பூர்வமாக அவர்கள் பெண்களைத் தங்களுக்கு சமமாக மதிப்பார்கள் என்று கனவு மட்டுமே நாம் காணலாம். நல்ல கட்டுரை, நன்றி.