சக்தி சக்திதாசன்.

 

 

LOECD1

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

மற்றொரு வாரத்தில் உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வடைகிறேன்.

இலண்டன் பி.பி.ஸி தொலைக்காட்சியில் சமீபத்தில் ” உலகில் உயிரினங்கள் ( Life on Earth ) “ எனும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

அந்நிகழ்ச்சியை பார்வையுற்ற போது என் மனதில் பல நினைவலைகள் அதிர்ந்து எழுந்தன.

இப்பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் எத்தனையோ வகையானவை. அவை ஒவ்வொன்று வாழும் வகைகள் வேறுபட்டவை.

இப்பூமி உருவானதாகச் சொல்லப்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்த உயிரினங்கள் பல அக, புற சூழல்களின் காரணத்தினால் முற்றாக அழிந்து போயின.

வேறு பல வாழ்க்கையின் சவால்களை சந்திப்பதற்காக மாறும் சூழல்களினால் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன.

ஏன் குரங்கு வடிவிலிருந்து மனித வடிவிற்கு மாற்றம் காணக் காரணம் கூட காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்ட சவால்கள் என்றுகூடக் கூறப்படுகின்றன..

இந்நிகழ்ச்சியில் உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கை அணுகுமுறைகளை அவை பிறந்தது முதல் அவைகளின் பருவமாற்றங்களினூடக நிகழும் மாற்றங்களைக் கையாளும் வகையில் ஆராய்ந்திருக்கிறார்கள்.

இவற்றில் சிலவற்றை ஒரு பேச்சுக்காக எடுத்துப் பார்ப்போம்.

monkeysபால பருவத்திலிருந்து வாலிபப் பருவத்தையடைந்த “சிம்பன்ஸி” எனும் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்றைப் பார்க்கிறார்கள். பால பருவ குரங்குகளுடன் இணைந்து விளையாடுவதைத் தவிர்த்த இக்குரங்கு அக்குரங்குக் கூட்டத்தின் முன்னனித் தலைமைக் குரங்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்காக முயன்று தோல்வியடைந்து பின் வாங்குகிறது.

இதனுடைய இம்முயற்சி எதற்காக? அக்குரங்குக் கூட்டத்தில் தன்னுடைய அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வதற்காகன முயற்சி என்கிறார்கள்.

அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வது ஒன்றே உணவு பெறுவதில் முக்கியத்துவதையும், பெண் குரங்குகளுடனான உறவுகளில் முக்கியத்துவம் பெறுவதற்காகவும் என்று சொல்லப்படுகிறது.

antஅடுத்து அமெரிக்காவில் அரிசோனா எனும் மாநிலத்தில் உள்ள ஒரு எறும்புச் சமுதாயத்தைக் காட்டுகிறார்கள். மழை பெய்தவுடன் ஈரமான நிலத்தில் தனக்கு ஒரு புற்று ஏற்படுத்துவதற்காக இராணி எறும்பு தரையைக் கிண்டத் தொடங்குகிறது. அதனுடன் சேர்ந்து இன்னும் ஓர் ஏழு இராணி எறும்புகள் அக்குழியைத் தோண்டுகின்றன.

அமைக்கப்பட்ட புற்றினுள் இந்த எட்டு இராணி எறும்புகளும் முட்டையிட்டு பல தொழிலாளி எறும்புகளைத் தோற்றுவிக்கின்றன.

அதன் பின்பு நடப்பதுதான் விசித்திரம்! அரசியலோ?

அப்புற்றினுள் ஒரேயொரு இராணி எறும்புதான் அதிகாரம் செய்ய முடியும் விளைவு ஏழு இராணி எறும்புகள் அவைகளால் உருவாக்கப்பட்ட தொழிலாளி எறும்புகளினாலேயே அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கப்பட்டு வளரும் தலைமுறைக்கு உணவாக்கப்படுகின்றன.

மிஞ்சிய அந்த ஒரு இராணி அவ்வெறும்புக் குழு அனைத்துக்கும் அதிகாரம் செய்யும் தலைமைத்துவத்தைப் பெறுகிறது .

தண்ணீரிலே நீந்தும் ஒருவகை மீன் தனக்குத் தேவையான உணவை தன் வாயிலிருந்து சீறியடிக்கும் நீர்க்கற்றையின் மூலம் இலைகளில் ஒளிந்திருக்கும் பூச்சியை அடித்து நீரினுள் வீழ்த்தி அதனை உட்கொள்கின்றது.

அதனைப் பார்த்துத் தானும் பழகிக் கொள்ளும் மீன்குஞ்சு கஷ்டப்பட்டு அடித்து வீழ்த்திய பூச்சியை அருகிலிருந்த பெரிய மீன் பாய்ந்து லபக்கென்று விழுங்க்கிக் கொள்கிறது. அந்தோ பாவம் அச்சிறிய மீன்!

evolutionஇத்தகைய நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் அவைகளுக்கும் மனிதர்களாகிய நமக்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் தலைதூக்கியது.

பகுத்தறிவு !

ஆமாம்… அதன் மூலம் மட்டுமே நாம் நம்மை நாகரீகமாக வளர்த்துக் கொண்டு மனிதர்கள் என்று கூறித் தம்பட்டம் அடித்து அலைகின்றோம்.

ஆனால் பகுத்தறிவற்ற இவ்வுயிரினங்களுக்கும் நமக்கும் அப்படி பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

உடைகள் அணிவதிலும், நம்மை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்வதிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் … ஆனால் அடிப்படையான தேவைகளின் உணர்வுகள் மாறுபடவில்லை.

மனிதர்களும் அதே தேவைகளுக்குகாகத்தான் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கிறோம்..

ஆனால் தமது வயிற்றுப்பசியை போக்கிக் கொள்ளவும், தமது சந்ததியைப் பெருக்கவுமே தமது உழைப்பை ஈந்திடும் விலங்குகள் அத்தோடு தமது இலக்குகளை நிறுத்திக் கொண்டு விடுகின்றன.

ஆனால் மனிதர்களாகிய நாமோ நமது தேவைகளுக்கு மீறி சேர்க்கத் தலைப்பட்டு பேராசையினால் உந்தப்பட்டு அல்லல்படுகின்றோம்.

மதம், இனம், மொழி, நிறம் எனப் பல்வேறு வேறுபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து நம்மைப் போன்ற அடுத்த மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

நாமும் வாழ்ந்து அடுத்தவரும் வாழ்தற்கான ஆதாரங்கள் பலவிருந்தும், அந்த அடுத்தவருக்குக் கிடைக்க வேண்டியதையும் நாமே அமுக்கிக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தினால் நமது மனவளர்ச்சியை நாமே குந்தகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஓ ….இந்தச் குட்டைக்குள் ஊறும் ஒரு மட்டைதான் நானுமோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

படம் உதவிக்கு நன்றி: http://www.trunkrecords.com/turntable/life_on_earth.shtml & BBC

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *