இரா நடராசன் படைப்புலகத்தினுள்……
எஸ் வி வேணுகோபாலன்
பேச்சு மொழியாகவே எதிரொலிக்கும் எழுத்து மொழி!
ஓங்கி மண்டையில் அறைந்தாற்போல் நம்மை உலுக்கி எடுக்காத புத்தகத்தை
எதற்கு வாசிப்பானேன்……
– காஃப்கா
கணையாழி இலக்கிய இதழின் நீண்ட கால வாசகர்களில் ஒருவனான என்னை, ’90களின் பிற்பகுதியின் வெளியான அந்தக் குறுநாவல் அப்படியே போட்டு உலுக்கி எடுத்தது…பேரதிர்ச்சியின் ஆழத்தில் திணறடித்தது….ஓர் இலக்கிய பிரதியில் சமூகத்தின் ஆன்மாவை இப்படி பளீரென்று சாட்டையடியாக எடுத்து வைக்க முடியும் சாத்தியம், வெளியே வர முடியாத எண்ணக் குமிழிகளுக்கிடையே ஆட்படுத்தியது. சம காலக் கல்வி முறையின் பரிதாபத்தை, பள்ளிக்கூடங்களில் நிகழும் உடலியல்-உளவியல் வன்முறையை அதற்கு முன்னரும், பின்னரும் கூட வாசிக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அந்தக் குறுநாவலின் தளம் அதற்கு மேலும், அவற்றைவிட நுட்பமான கட்டமைப்பிலும், பேசப்படாத செய்திகளினூடும், புறக்கணிக்கப்படும் கோணங்களிலிலும் அமைந்திருந்தது. வாசித்துவிட்டு கீழே வைக்க முடியாத கனத்தை அதன் கதை உள்ளிறக்கியது என்றால், தப்ப முடியாத கேள்விகளையும் அது காற்றில் கலந்து சுவாசிக்க வைத்துவிட்டது. பல லட்சம் வாசகர்களை விம்மி விம்மி அழவைக்கப் போகும் “ஆயிஷா”வை வாசித்த முதல் தலைமுறை வாசகர்களில் ஒருவனின் அன்றைய இராப்பொழுது எப்படி கடந்து போனது என்பதை இப்போது விவரிக்க முடியாது.
நவயுகத்தின் கட்டியக்காரன் இரா நடராசன். ஏதோ ஓர் அழகான கவிதை. சிலிர்க்க வைக்கும் சிறுகதை. சிந்திக்க வைக்கும் கட்டுரை. போற்றத் தக்க ஆய்வு நூல் என்று சொல்லிவிட்டு நகர முடியாத எழுத்துக்கள் அவருடையவை. மன்னிக்க முடியாத படைப்பாளிகள் வரிசை ஒன்றை மானசீகமாக வைத்திருக்கும் வாசகர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவஸ்தைக்குள்ளாக்கும் எழுத்துக்களை இடைவிடாது நெய்து கொண்டிருக்கும் நெசவாளிகளில் ஒருவர் நடராசன்.
பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும். அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றை வாசித்த மாத்திரத்தில் எங்கெங்கோ தேடிப் பிடித்து அவரது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து (93605 47808), அவரோடு முதன்முதல் பேசிய அந்த உரையாடலை மறக்கமுடியாது. ஏன்யா எங்களை இப்படிக் கொல்றீங்க….நாங்க என்னதான் ஆகறது… என்பதாகத் தான் தொடங்கியது எனது புகார்ப்பட்டியல்! அத்தனை வித்தியாசமான தொகுப்பு அது.
அந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவத்தில், வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எழுதப் பட்டிருந்தது. ஆயிஷா கதையே, அறிவியல் ஆசிரியை ஒருவர் தமது ஆய்வு நூலுக்கு எழுதும் முன்னுரை போன்ற வடிவத்தில் கொடுக்கப் பட்டிருக்கும். தலைப்புக் கதையான “மதி எனும் மனிதனின் மரணம் குறித்து”, பிரேத பரிசோதனை அறிக்கை எப்படி இருக்குமோ அந்தப் படிவத்தை நிரப்பிய பாணியில் கதையை அத்தனை நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும். பாலின மாற்றத்திற்குள்ளான மதியை ஏற்க முடியாத குடும்பம், துரத்தித் துரத்தி கொச்சை செய்து மகிழும் சமூகம், இறுதியில் குடும்ப கௌரவத்தைக் காக்க சோதிடனின் ஆலோசனைப்படி நிகழ்த்தப்படும் கொடூரக் கொலை என்று பேசப்படும் செய்திகளில் திருநங்கையர் பிரச்சனைகள் குறித்து முதலாவதாகப் பேசிய கதைகளில் ஒன்றாக அதிர வைத்த கதை அது. வனத்துறை அதிகாரிகளிடம் தனது நேர்மையான நடத்தையால் சிக்கிக் கொண்ட நரிக்குறவன், நீதிமன்றத்தில் முன்வைக்கும் சாட்சிய நடையில் பேசும் வேறொரு கதை, காடுகளில் இருந்து பூர்வகுடிகள் விரட்டப்படுவதன் வலியை உணரவைக்கும். சிறையிலிருந்து மகள் தாய்க்கு எழுதும் கடித நடையிலான கதை, குகைக் கோவிலுக்குள் இருந்தபடி சாதிய சமூகத்தின்மீது சாட்டையடி அடிக்கும் பறையடி சித்தன் கதை….என் விரியும் பெருவெளி அந்தத் தொகுப்பு.
“ரோஸ்” புத்தகத்தை யாரோ நண்பருக்குக் கொடுத்துவிட்டேன் என்பதற்காக என்னிடம் என் மகள் போட்ட சண்டை எளிதில் மறக்க முடியாதது. சூரியசந்திரன் எழுப்பிய அருமையான கேள்விக்கு, நடராசன் புத்தகம் பேசுது இதழுக்கான நேர்காணலில் இப்படி பதில் சொல்லி இருந்தார்: “ஆயிஷா ஓர் ஆசிரியனின் சுய விமர்சனம் என்றால், ரோஸ், ஒரு தந்தையின் சுய விமர்சனம்!” கேள்விகள் எழுப்பும் குழந்தைப் பருவத்தின் தேடலைத் தூண்ட நேரமற்ற நடுத்தர நகர வாழ்க்கையில் ஒரு சிறுவன் ரோஸ் என்றால் என்ன என்ற தனது எளிய கேள்விக்குப் படும் அலைக்கழிப்பான ஒரே ஒரு நாள் நிகழ்வுகள் சமகால பரந்த வாசிப்புக்கான கதை.
நடராசனின் புனைவு மிகுந்த வேலைப்பாடுகள் உடையதாக நிகழ்கிறது. கடலூரில் வசிப்பதால் ஆழிப் பேரலை குறித்த நேரடி அனுபவம், சுனாமியை அடித்தளமாகக் கொண்டு சாகசமிக்க ஒரு குறுநாவலை, சாரணர் இயக்கத்தைப் பெருமைப்படுத்தும் வண்ணம் எழுத வைத்தது. அவரது “நாகா” நாவல், சாரணிய இயக்கம் குறித்த அற்புதமான செய்திகள் பலவற்றை உட்கொண்டிருப்பது. சதுரங்க ஆட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகள், சுவாரசியமான செய்திகள் போன்றவை அவருள் நிரம்பித் ததும்புகையில், “ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்” என்ற மிகவும் வித்தியாசமான கதை ஆகிறது! கண்பார்வை அற்றவர்கள் படிக்கும் வண்ணம் பிரெயில் மொழியிலும் அச்சிடப்பட்ட அவரது “பூஜ்யமாம் ஆண்டு” அசாத்திய வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றைக் குறித்த அசரவைக்கும் செய்திகளை எளிதாக முன்வைத்தது.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோரின் தவிப்புகளையும், ஒடுக்கப்பட்டோரின் குரல்களையும், கவனம் பெறவேண்டியவர்களது கண்ணீரையும் இலக்கியமாக்கும் புதுமைச் சித்தர் நடராசன். கல்விமுறையின் அராஜக வன்முறை குறித்த தாளமாட்டாத வேதனைகள் அவரது எழுத்தின்வழி கலகக் குரல்களாக வெளிப்படுவதைத் தொடர்ந்து காண முடியும்.
நாளைய தலைமுறைகளுக்கான கொடையாகவே வெளிவந்திருக்கும் “இது யாருடைய வகுப்பறை” நூல், அவரது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் வேர்வையோடு, மாற்றுக் கல்விமுரைக்கான அவரது தாகத்தையும், நம்பிக்கைகளையும் ஆவேசப் படையலாகக் கொண்டிருப்பது. கல்வி முறையை வருணாசிரம முப்பட்டைக் கண்ணாடி வழியாகவும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் பின்புலத்திலும், தாராளமய காலத்தில் ஈவிரக்கமற்ற போட்டியின் பலிபீடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதன் வரைபடத்திலிருந்தும் பேசும் இந்த நூல், ஆரோக்கியமான கல்வி வெளி இருக்கவே செய்யும் நாடுகளையும் பெருமிதம் பொங்க எடுத்துக் காட்டுவது. நமது சமூகத்தின் பேசுபொருளாகவே உருப்பெற வேண்டிய விவாதங்களை மாற்றுக் கல்விக்கான போராளிகள் ஆயுதங்களாக்கிக் கொள்ளமுடியும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆழத்தில் உறைந்திருக்கும் ஆய்வாளர்களின் குருதியை, அவர்கள் எதிர்கொண்ட அவமதிப்புகளை, பேசப்படாது போன அவர்களது துயரக் கதைகளை, பறிமுதல் செய்யப்பட அவர்களது சுதந்திரத்தை, களவாடப் பட்ட அவர்களது உழைப்பை, நலம் கெட புழுதியில் வீசப்பட்ட அவர்களது அறிவுச் செல்வத்தை, இரா. நடராசன், மூதாதையருக்கான கடமை ஆற்றல் போன்ற பொறுப்புணர்வோடு வழங்கி இருக்கும் எழுத்துக்கள் அசாத்தியமானவை.
அவரது வாசிப்பும், தேடலும், பன்முக அக்கறையும் எப்போதும் வியக்க வைப்பது. பாரதி புத்தகாலயத்தின் “புத்தகம் பேசுது” மாத இதழின் ஆசிரியராக அவரது பங்களிப்பு, தமிழ் வாசக உள்ளங்களைப் பரவசப்படுத்தவும், எட்டு திக்கும் சென்று இலக்கியச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்து பெருமைப்படுத்தவும், சலனப்படுத்தவுமாக அமைந்திருப்பதை வாசகர்கள் உணரமுடியும். வாசிப்பின் இன்பத்தை மகத்தான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து ஓயாது மேற்கோள் காட்டும் வற்றாத அருவி அவரது தலையங்கங்கள். “ஏகாதிபத்திய போர்வெறியர்களை சர்வதேச நீதிமன்றத்தின்முன் கொலையாளிகளாக நிறுத்துங்கள்” என்று துணிவோடு பேசிய ஹெரால்ட் பின்ட்டர் உள்ளிட்டோரின் நோபல் பரிசு ஏற்புரைகளை இரா.நடராசனின் எழுதுகோல் நமக்குப் பரிமாறி உணர்வூட்டியது.
“விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகளுக்காக” பால சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கும் அவரை தமிழ் வாசகர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும் கொண்டாட முடியும். பெண் அறிவியலாளர்கள் குறித்த ஆயிஷாவின் கேள்வி அவரையும் துரத்தியதில் உலக பெண் விஞ்ஞானிகள் குறித்தும் எழுதியவர் அவர். கணிதம் குறித்த ஆர்வத்தை “மலர் அல்ஜீப்ரா” முன்வைத்தது. ஆயிஷா உள்ளிட்டு அவரது கதைகள் சில குறும்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. “ஆயிஷா ” தமிழில் லட்சம் பிரதிகளுக்கு மேல் மக்களைச் சென்றடைந்ததோடு, இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடையது.
மிக அண்மையில் வந்திருக்கும் அவரது “டார்வின் ஸ்கூல்”, பரிணாம வளர்ச்சி குறித்த விஷயங்களை சிறுவர்கள் இலகுவாகச் சென்றடையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் அரிய புனைவு.
சில ஆண்டுகளுக்குமுன், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழின் ஆசிரியர் குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்ற கூட்டத்தில், குழந்தைகள் குறித்தும், கல்வி முறை பற்றியும் படக் காட்சிகளுடன் மிகுந்த தயாரிப்போடு வந்திருந்தார். பயணச் செலவு குறித்துக் கேட்கையில், தமக்கு உடனே தேவைப்படும் இயல்பியல் புத்தகம் ஒன்றை எப்படியாவது வாங்கி அனுப்புமாறு கேட்டுக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.
தனியார் கல்வி நிலையத்தின் புகழ் வாய்ந்த முதல்வராக இருந்தவண்ணம் அவரது அசாத்திய வாசிப்பும், எழுத்தாக்கமும் ஏற்படுத்தும் பிரமிப்பு, யாரிடத்தும் “எனக்கு நேரம் கிடைப்பதில்லை” என்று சொல்லவே கூச வைத்துவிடுகிறது. அவரது அயல்மொழி அலமாரி வசீகரமானது. சரளமான மொழியில் கவிதைகளைத் தொட்டுத் தொடங்கும் அவரது உரைகளின் வேகமும், ஆவேசமும் அவரது படைப்புலகத்தின் பேச்சு மொழியாக உருவெடுத்து விடுகிறது.
இன்னுமின்னும் எங்களைத் திண்டாட விடுங்கள், அலைக்கழியுங்கள், ஆவேசம் கொள்ளச் செய்யுங்கள், வாளாவிருக்க விடாதீர்கள் என்றே கேட்டுக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது அவரை!
**********************
நன்றி: தீக்கதிர் – இலக்கியச் சோலை (நவம்பர் 24, 2014)
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல், ஆயிஷா கதை என்னுள்ளும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நம் சிறார்களின் கூர்மையான அறிவும், சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் காலங்காலமாகப் பின்பற்றப்படும் நம் கல்விமுறையாலும் ஆசிரியர்கள் பலரின் அடக்குமுறையாலும் எப்படி மழுங்கடிக்கப்படுகிறது, முனையிலேயே எப்படிக் கிள்ளி எறியப்படுகிறது என்பதற்கு ஆயிஷா கதை நல்ல உதாரணம்! அவரது மற்ற ஆக்கங்களை நான் வாசித்ததில்லை. அவரது மற்ற எழுத்துக்களையும் வாசித்தாக வேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கும் வகையில் எழுதியிருக்கும் எஸ்.வி. வேணுகோபால் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்! ‘ஆயிஷா’ எழுத்தாளரின் மற்ற படைப்புகளை அறிமுகம் செய்ததற்கு என் நன்றி!