-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
தைபிறந்தால் வழிபிறக்கும்
தடைகளெலாம் அகன்றுவிடும்
மெய்வருந்தி உழைப்போரை
மேதினியே பாராட்டும்!
கைநிறையக் காசுவர
கெளரவமாய் நாமிருக்க
கடவுளது நினைப்புடனே
கடினமாய் உழைத்துநிற்போம்!
பொய்யுரைக்கும் எண்ணமதைப்
பொசுக்கிவிட முயன்றிடுவோம்
ஐயனது குறள்வழியே
அனைவருமே நடந்திடுவோம்!
செய்கின்ற அத்தனையும்
சீராகச் செய்துநிற்போம்
வையகத்தில் வன்முறைகள்
வரவிடாமல் தடுத்திடுவோம்!
உறவுநிலை பேணிடுவோம்
ஊர்போற்ற உயர்ந்திடுவோம்
அறவழியைத் தேர்ந்தெடுத்து
அனைவருமே வாழ்ந்திடுவோம்!
தைமகளை வரவேற்போம்
தைரியத்தைக் கையெடுப்போம்
உய்யும்வழி தோன்றிவிடும்
உவப்புடனே நாமிருப்போம்!
மார்கழி மறையும்போது
மலர்ந்துவரும் தைதன்னை
வாவென்று அழைத்துவிடின்
வாழ்வெல்லாம் மங்கலமே!
இழுபட்ட திருமணங்கள்
இன்பமாய் நிறைவுபெற
எப்போதும் எங்களுக்குத்
தைபிறந்தால் வழிபிறக்கும்!
தைபிறந்தால் வழிபிறக்கும்
தாலிவரும் வேலைவரும்
தைபிறக்கும் வேளைதனைத்
தரணியே காத்திருக்கும்!

Leave a Reply